சென்னையின் முதல் பெண்கள் கல்லூரி!



இன்று திரும்பிய இடமெல்லாம் மகளிர் கல்லூரிகள் இருக்கலாம். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது, 1914ம் ஆண்டில் சென்னையில் இருந்தது ஒரே ஒரு மகளிர் கல்லூரிதான். அது ராணி மேரி கல்லூரி. அன்று இந்தியாவில் இருந்த மூன்றே மகளிர் கல்லூரிகளில் சென்னை ராணி மேரியும் ஒன்று. தற்போது தனது நூறாவது பிறந்த நாளையொட்டி கொண்டாட்டக் கோலம் பூண்டிருக்கிறது இந்தப் பாரம்பரியக் கல்லூரி.

‘‘1914ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி துவங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தனது 50ம் ஆண்டு பொன்விழாவை 1964ம் ஆண்டு கொண்டாடியது. அப்போது சிறப்பு அழைப்பாளராக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தாராம். இப்போது இந்த நூற்றாண்டு விழாவை கல்லூரி நிர்வாகம் மட்டுமல்லாது, இங்கு பயின்ற பழைய மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது துவக்க விழாதான்.

வரும் டிசம்பர் மாதம் பிரமாண்ட நிறைவு விழா நடைபெறும். அதுவரை ஒவ்வொரு மாதமும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எனப் பயனுள்ள வகையில் கல்லூரி நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளோம்’’ என்றபடி நம்மை வரவேற்றார் கல்லூரி முதல்வர் அக்தர் பேகம்.

துவக்க விழாவின் ஹை லைட்டாக சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட, கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருமதி கே.ஜெகதாம்பாள் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், கல்லூரியின் பர்த் டே மகிழ்ச்சிப்பெருக்குடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்தக் கல்லூரியில் இசைத்துறையில் பயின்ற முன்னாள் மாணவிகளும், சினிமா பாடகிகளுமான வாணி ஜெயராம், அனுராதா ஸ்ரீராம், கிரேஸ் கருணாஸ், சுனந்தா ஆகியோரும் வந்திருந்து இந்நாள் மாணவிகளை வாழ்த்தியது ரொம்ப ஸ்பெஷல். ‘‘நான் இன்று இந்த நிலைக்கு உயர இந்தக் கல்லூரியும் ஆசிரியர்களும்தான் காரணம்’’ என கிளாப்ஸ் அள்ளினார் அனுராதா ஸ்ரீராம்.

‘‘நான் இங்கு படித்தபோது பேச்சுப் போட்டிக்காக எல்லா கல்லூரிகளுக்கும் போயிருக்கிறேன். டிராமா, மியூசிக் போன்ற போட்டிகளில் வெற்றி வாகை சூடி வந்திருக்கிறேன். அந்த வெற்றிக்கு மட்டுமல்ல... எனது வாழ்வில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம், நான் குயின்மேரி கல்லூரியில் தயாரானதுதான்’’ எனப் பூரித்தார் வாணி ஜெயராம்.

‘‘பெண் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத காலத்தில் உருவாகி, இன்று நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் எங்கள் கல்லூரியின் விழாவில் பங்கெடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி யடைகிறோம்!’’ என நெகிழ்ந்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தோள் கொடுத்த முன்னாள் மாணவிகள். ஒரு தோப்புக் குயில்கள்!

- எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்