உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உன்னதத் தொடர்
நெருக்கடி தந்த நேர்முகத் தேர்வை நெஞ்சுறுதியோடு சமாளித்துவிட்டீர்கள். வாகாகப் பேசி அதில் வாகை சூடிவிட்டீர்கள். அடுத்து? ‘அப்புறமென்ன சார்... ஆபீஸ் போக வேண்டியதுதானே!’ என்கிறார்கள் பலரும். ஆனால், இன்டர்வியூ வெற்றிக்கும் ஜாயினிங் டேட்டுக்கும் இடையில் இருக்கிறது ஆயிரம் நெளிவு சுளிவுகள். ‘‘இன்டர்வியூவில் வெற்றி பெற்றுவிட்டால் உங்களை அவர்களும் அவர்களை நீங்களும் தேர்ந்தெடுத்தாச்சு என்பது பொருள். ஆக, இனி பெரிதாக ஒன்றை சாதிக்கும் வரையோ, அடுத்த லெவலுக்கு செல்லும் வரையோ நீங்கள் அங்குதான் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். சுற்றி அமர்ந்து உங்களை கேள்வி கேட்ட அதிகாரிகள்தான் இனி உங்கள் மேலதிகாரிகள்.

ஆக, அவர்கள் மனதைக் குளிர வைப்பதும் மனங்கோணாமல் பேசி பத்து மார்க் வாங்குவதும் மிக முக்கியம்’’ என்கிறார்கள் ஹெச்.ஆர் நிபுணர்கள். அதற்காக அவர்கள் பரிந்துரைக்கும் துருப்புச் சீட்டுதான் நன்றி மடல். அதாவது, கார்ப்பரேட் மொழியில் Thank You Mail. ‘‘இது ஒன்றும் கட்டாயம் அல்ல. ஜெயித்துவிட்ட இன்டர்வியூக்களில் இப்படியொரு நன்றி மடல் தேவையா என்றால், நிச்சயம் தேவை. கதவைத் தட்டி எக்ஸ்கியூஸ் மீ கேட்டு உள்ளே வருவது மாதிரி, இது ஒரு நல்ல பழக்கம். பல வகைகளில் நமக்கு சாதகமான பழக்கமும் கூட!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெச்.ஆர் வல்லுனரான ஷெர்ஃப்ராஸ்.
‘‘ஆனால், நார்மலாக நாம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் கொடுக்கும் விடுப்புக் கடிதம் மாதிரியில்லை இது. இப்படிப்பட்ட நன்றிக் கடிதம் எழுதுவதில் நிறையவே ரிஸ்க் உண்டு. தப்பாகப் பயன்படுத்தப்படும் ஒரு சின்ன வார்த்தை கூட முதலுக்கே மோசமாய்ப் போய்விடும்!’’ என எச்சரிக்கும் அவர், ஒரு நன்றி மடலுக்கான இலக்கணங்களை வரையறுக்கிறார்...
‘‘பொதுவாக நீங்கள் ரெஸ்யூம் அனுப்பிய மின்னஞ்சல் முகவரிக்குத்தான் நன்றி மெயிலையும் அனுப்ப வேண்டும். அது தவிர உங்களை நேர்முகத் தேர்வு செய்த நபர்களின் பெயரும் பதவியும் தெரிந்திருந்தால், நிறுவனத்தின் வலைத்தளத்தில் அவர்களின் மின்னஞ்சல் முகவரியையும் தேடலாம். அலுவல் ரீதியிலான நன்றியை தனிப்பட்ட முறையில் சொல்வதும் தவறாகாது. இன்னும் பிளானிங் மூளை உள்ளவர்கள், இன்டர்வியூக்களில் நல்ல ரிசல்ட் அறிவிக்கப்பட்ட உடனேயே அங்கிருக்கும் அதிகாரிகளிடம், ‘கேன் ஐ ஹேவ் யுவர் கார்ட் சார்!’ எனக் கேட்டு அவர்களின் தொடர்பைப் பெற்றுக்கொள்வார்கள்.
நன்றி மடலைப் பொறுத்தவரை தாமதம் கூடாது. இன்டர்வியூ மூலம் தினம் தினம் பலரைச் சந்திக்கும் அதிகாரிகளுக்கு, ‘ஒரு வாரம் முன்னாடி, ஒரு நாள் ப்ளூ ஷர்ட் போட்டுட்டு வந்தேனே...’ என நம் மின்னஞ்சல் அடையாளம் சொல்லிக் கொண்டிருக்காது. ஆக, முடிந்தவரை அன்றே அல்லது அடுத்த நாளே அனுப்பப்படுவதுதான் வீரியம் மிக்க தேங்க்ஸ் மெயில். கால தாமதமானால் அது கூட்ஸ் வண்டிதான். அப்படிப்பட்ட கடிதங்கள் ஒன்று படிக்கப்படாது... அல்லது, படித்தும் புரியாமல் டெலிட் தட்டப்படும்.
‘ஐயா, என்னைப் போயி செலக்ட் பண்ணினீங்களே... உங்களுக்கு கோடிப் புண்ணியமய்யா’ என்பது போல ஒரு நன்றி மடல் காக்காய் பிடிக்கக் கூடாது. ‘எனக்காக நேரம் ஒதுக்கி பொறுமையாகப் பேசியதற்கும் எனது எண்ணங்களைத் திறமையாக வெளிப்படுத்த வாய்ப்பளித்ததற்கும் நன்றி’ என சுயமரியாதை குன்றாமல் எழுத வேண்டும். ‘நல்ல பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் காட்டும் கவனமும் அக்கறையும் என்னை மிகவும் கவர்ந்தது’ என்றும் சொல்லலாம். இந்த வாக்கியம், அவர்களைப் புகழ்வது மாதிரித் தெரிந்தாலும் நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல பணியாளர் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறது. கிட்டத்தட்ட இப்படித்தான் தற்பெருமையைத் தொட்டுவிடாத தன்னம்பிக்கை வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்’’ என்கிறவர், ஒரு நன்றி மடலில் தொட்டுக் காட்ட வேண்டிய அம்சங்களைப் பட்டியலிடுகிறார்...
‘‘இந்தப் பணியில் நீங்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் கனவு வேலையில் கால் பதிக்க அந்த அதிகாரிகள்தான் காரணமாக இருந்தார்கள் என்பதையும் கண்டிப்பாக குறிப்பிட்டு விடுங்கள். நீங்கள் எந்த விதத்தில் அந்த வேலைக்குத் தகுதியானவர் என்பதையும் மீண்டும் ஒருமுறை அழுந்தச் சொல்லிவிடுங்கள். உங்களின் சிறப்புத் தகுதிகள் சிலவற்றை ஹைலைட் செய்து, ‘இதையெல்லாம் பயன்படுத்தி, நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்’ என உறுதியளிப்பது நன்று!
இன்டர்வியூவில் நீங்கள் சொல்ல மறந்த சில தகவல்கள் இருக்கலாம். அல்லது வாய்ப்புக் கிடைக்காமல் சில பாயின்ட்டுகள் விடுபட்டுப் போயிருக்கலாம். அவற்றைக் குறிப்பிட இந்த மடலை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்கிறார் அவர். சரி, வெற்றி பெற்ற இன்டர்வியூக்களில் மட்டும்தான் நன்றி மடல் போட வேண்டுமா? வேறெதற்கும் இது பயன்படாதா? என்றால், மறுக்கிறார் ஷெர்ஃப்ராஸ்.
‘‘சில இடங்களில் உறுதியாக முடிவு அறிவித்திருக்க மாட்டார்கள். ‘எல்லாம் திருப்திகரமாத்தான் இருக்கு. நீங்க போங்க, நாங்க போன்ல கான்டாக்ட் பண்றோம்’ என மாப்பிள்ளை வீட்டார் மாதிரி சொல்வார்கள். இன்னும் சிலர், ‘யூ ஆர் செலக்டட்’ எனச் சொல்லிவிடுவார்கள். ஆனால், ‘என்றைக்கு பணியில் சேர வேண்டும் என்பதெல்லாம் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும்’ என்பார்கள். ஆனால், சொன்ன அவகாசத்தில் தகவல் வராது. இப்படிப்பட்ட தருணத்தில், ‘தம்பி... டீ இன்னும் வரல’ என்பது போல அவர்களிடம் விட்டேத்தியாகப் பேச முடியாது. வட்டிக்காரன் மாதிரி குத்திக் குடையவும் முடியாது. ஆனாலும், ஒரு ஃபாலோ அப் கடிதம் போட்டே ஆக வேண்டும்.
நன்றி மடலையே ஃபாலோ அப் கடிதமாக்குவது இந்த இடத்தில் ஸ்மார்ட் மூவ். நேர்முகத் தேர்வில் வென்றவர் நன்றி தெரிவிப்பது போல நைஸாக நாசூக்காக அவர்களுக்கு உங்கள் நிலையைப் பற்றி நினைவுறுத்த முடியும்’’ என்கிறவர், ஆங்கிலத்தில் ஒரு நன்றி மாடலை உங்களுக்காக இங்கே கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருப்பவர்கள், இதிலிருக்கும் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்டர்வியூக்களின் எல்லா கட்டத்திலும் எம்.என்.நம்பியாராக வந்து நிற்பது வேறு யாருமல்ல... நம் சொந்தப் பதற்றமும் டென்ஷனும்தான்! அதைக் கட்டுப்படுத்துவது...
அடுத்த இதழில்...
கோகுலவாச நவநீதன்