இருப்பிடம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் பெறுவது எப்படி?



ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் அவன் அட்ரஸ்தான். ‘‘நீ யார்?’’ எனும் ஒற்றைக் கேள்விக்குப் பின்னால், ‘எங்கே பிறந்தாய்? எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விகள் ஒளிந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அத்தாட்சிகள்தான் இருப்பிடம் மற்றும் பிறப்பிடச் சான்று! அரசு வழங்கும் எந்தச் சலுகையைப் பெறவும் இந்தச் சான்றுகள் அவசியம். அதற்குத்தான் ‘குடும்ப அட்டை’ இருக்கிறதே! என நீங்கள் நினைக்கலாம். ‘‘குடும்ப அட்டையை எல்லாம் நம்ப முடியாது’’ என நிராகரிக்கும் இடங்களிலும் கை கொடுப்பவைதான் இருப்பிடச் சான்றும் பிறப்பிடச் சான்றும்!  இவற்றைப் பெறுவது எப்படி? அதற்கான வழிகள் என்ன? விளக்கங்கள் இங்கே...

ஒருவர் எங்கே வசிக்கிறார் என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் ‘இருப்பிடச்’ சான்றிதழ். ஆனால், ஒருவர் எங்கு பிறந்தார், அப்போது அவரின் குடும்பம் எங்கே வசித்தது? என்பதைத் தெளிவுபடுத்துவது ‘பிறப்பிடச்’ சான்றிதழ். இரண்டு சான்றிதழும் ஒன்று போல் இருந்தாலும் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு சான்றிதழையும் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்திலேயே கிடைக்கின்றன. இரண்டிலுமே ஒரே தகவல்கள்தான் கேட்கப்பட்டிருக்கும்.

 விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், ஆணா - பெண்ணா, இருப்பிட முகவரி, குடும்ப அட்டை எண், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் எண், பெற்றோருக்கு உள்ள அசையாச் சொத்து விவரம் ஆகியவற்றை நிரப்பி தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு சான்றிதழும் ‘சாதித்சான்றிதழ்’ போல் கட்டாயம் வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இல்லை. எப்போது ஒருவருக்குத் தேவைப்படுகிறதோ, அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

முதலில் இருப்பிடச் சான்றிதழ்...


* ஒருவர் இந்த மாநிலத்தில், இந்த மாவட்டத்தில், இந்த ஊரில் வசிக்கிறார் என்பதை தெளிவுபடுத்தும் சான்றிதழ் இது. இதனைப் பெற, ஒரு வருடத்திற்கு மேல் ஓர் ஊரில் வசித்தால் போதும். அவர் தகுதியானவர் ஆகிறார். இதன்மூலம் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு இருந்தால் அதனைப் பெற முடியும். அதோடு இதர வேலைகளுக்கும் இந்தச் சான்றிதழைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இந்தச் சான்றிதழ் ஆறு மாதம் வரையே செல்லுபடியாகும். அதன்பிறகு தேவைப்பட்டால் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

* அனைவருமே குடும்ப அட்டை வைத்திருக்கிற காரணத்தால் பெரும்பாலும் இந்தச் சான்றிதழ் தேவைப்படுவதில்லை. இப்போதைக்கு கல்வி நிறுவனங்களில் சேர மட்டுமே இது அவசியமாகிறது.

* குடும்ப அட்டை இல்லாதவர்கள் முதலில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு பிறகு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிறப்பிடச் சான்றிதழ்...


* நேட்டிவிட்டி சர்டிபிகேட் எனப்படும் பிறப்பிடச் சான்றிதழ் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைகள் போன்ற பல இடங்களில் முக்கியத் தேவை. தொழில்நுட்பக் கல்லூரி கவுன்சிலிங்கில் தனியாக ஒரு நேட்டிவிட்டி விண்ணப்பமே இணைத்து தருகிறார்கள்.

* ‘மாணவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளவே இந்தச் சான்றிதழ்’ என்கின்றன கல்வி நிறுவனங்கள். அதோடு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர், வேறு நாட்டைச் சேர்ந்தவர் ஆகியோருக்குள்ள இட ஒதுக்கீடு பெற இந்தச் சான்றிதழ் பயன்படும்.

* பிறந்த ஊரில்தான் இந்தச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஒரு ஊரில் வசித்தால் அவர் இந்தச் சான்றிதழ் பெறத் தகுதியானவர் ஆகிறார். எனவே, ஐந்து வருடங்களுக்கு மேல் எந்த ஊரில் வசிக்கிறோமோ அங்கே இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

* இந்தச் சான்றிதழை ஒருமுறை பெற்றால் போதும். காலம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு இந்தச் சான்றிதழ் அவசியமான ஒன்று. பாஸ்போர்ட் எடுக்கவும், வங்கிகளில் கடன் பெறவும் இது பயன்படுகிறது.
 
என்ன செய்ய வேண்டும்?

* முதலில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களை தெளிவாக நிரப்ப வேண்டும்.

* குடும்ப அட்டை, பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ், அசையாச் சொத்து விவரத்திற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை எடுத்து நிரப்பிய விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.

* முதலில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோரின் கையெழுத்தைப் பெற்று தாசில்தாரிடம் கொடுக்க வேண்டும். இவருடைய ஒப்புதல் பெற்ற பிறகு, அது ஆவணமாக மாறும்.

* பத்து நாட்களுக்குள் இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியும் என நம்பிக்கை அளிக்கிறார்கள் அதிகாரிகள்.

- பேராச்சி கண்ணன்