இந்தியாவில் உயர்கல்வியின் தரம் பற்றி பல எதிர்மறை விமர்சனங்கள் உண்டு. நிர்வாகக் குளறுபடிகள், உலகத்தரத்தை எட்டாத கற்பித்தல் முறை, நவீனத்தை நெருங்காத பாடத்திட்டங்கள் என இந்திய பல்கலைக்கழகங்கள் தம் மதிப்பீட்டை தொடர்ந்து இழந்து வருகின்றன. இந்த நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இதழ் வெளியிட்டிருக்கும் ‘ஆசியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியல்’ நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. அப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் பெருமை, நம் சென்னை ஐ.ஐ.டி 76வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜிபிணி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இதழ் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான உலக அளவிலான தரவரிசைப்பட்டியலும் ஆசிய அளவிலான பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகள், சர்வதேசத் தரம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டங்கள், இருப்பிடச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் இடப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடியும், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு யுனிவர்சிடியும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை. ஆனால் ஆசிய அளவிலான பட்டியலில் 10 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் யுனிவர்சிடி இப்பட்டியலில் 40.2 புள்ளிகள் பெற்று 32வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட பலரைத் தந்த பல்கலைக்கழகம் இது. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனங்களுக்கு இப்பட்டியலில் கௌரவமான இடங்கள் கிடைத்துள்ளன.
கரக்பூர் ஐ.ஐ.டி 33.9 புள்ளிகள் பெற்று 45வது இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி 31.9 புள்ளிகள் பெற்று 55வது இடத்தையும் பெற்றுள்ளன. 30.1 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி ஐ.ஐ.டியும் ரூர்க்கீ ஐ.ஐ.டியும் 59வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 27.9 புள்ளிகள் பெற்று ஜப்பான் ஹிரோஷிமா யுனிவர்சிடியோடு 74 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது கவுகாத்தி ஐ.ஐ.டி. 27.6 புள்ளிகள் பெற்று கொரியாவில் உள்ள ஈஃவா பெண்கள் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் 76வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் யுனிவர்சிடி 27.2 புள்ளிகள் பெற்று 80வது இடத்தையும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 25.3 புள்ளிகள் பெற்று 90வது இடத்தையும் பெற்றுள்ளன.
‘‘கடந்த ஆண்டு ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 30வது இடத்தை கரக்பூர் ஐ.ஐ.டியும், 33வது இடத்தை மும்பை ஐ.ஐ.டியும், 56வது இடத்தை ரூர்க்கீ ஐ.ஐ.டியும் பெற்றிருந்தன. இந்தாண்டு மும்பை ஐ.ஐ.டி. பட்டியலில் இடம்பெறவில்லை. மற்ற இரண்டு ஐ.ஐ.டிக்களும் சற்று பின்னால் சென்றிருக்கின்றன. ஆனால் பிற 7 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்திருப்பது இந்தியாவுக்கு மிகவும் நல்ல செய்தி’’ என்று குறிப்பிட்டுள்ளார் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இதழின் ஆசிரியர் ஜான் ஹில்.
- வெ.நீலகண்டன்