படிக்கலாம் எழுதலாம் தகவல் அறியலாம்



கலக்கும் கல்விச்சோலை

இன்று நடந்துகொண்டிருக்கிற, நாளை நடக்கப்போகிற முக்கிய சம்பவங்கள், நிகழ்ச்சிகள், கல்வி தொடர்பான அப்டேட் அரசாணைகள், 10ம் வகுப்பு, +2, டி.ஆர்.பி, டி.இ.டி, டி.என்.பி.எஸ்.சி, பி.எட், எம்.எட் ஸ்டடி மெட்டீரியல்கள், கேள்வித்தாள்கள், நடக்க இருக்கிற தேர்வுகளின் டைம் டேபிள்கள், கல்வித்துறை தொடர்பான முழுமையான செய்திகள்.. இன்னும் என்னவெல்லாம் வேண்டுமோ அத்தனையும் கிடைக்கிறது கல்விச்சோலையில் (www.kalvisolai.com).

விழுப்புரம் மாவட்டத்தில், அரசுப்பள்ளி முதுநிலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றும் கே.கே.தேவதாஸ் என்ற தனிமனிதரின் உழைப்பில் விளைந்தது இந்த இணைய தளம். உள்ளே நுழைந்தால் தகவல் சுரங்கமாக மலைக்க வைக்கிறது. இதில் 10ம் வகுப்பு, +2 மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளை எழுதலாம். தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்கள் தயாரித்த அனைத்துப் பாடங்களுக்கான ஸ்டடி மெட்டீரியல்களை டவுன்லோடு செய்யலாம்.

சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அவற்றைத் தயாரித்த ஆசிரியர்களின் மொபைல் போன் நம்பரும் உண்டு. 2006 முதல் 2013 வரை வெளிவந்துள்ள அரசு கேள்வித்தாள்கள் அனைத்தும் விடைகளோடு இருக்கிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும் எஜுகேஷன் வீடியோக்கள், டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி தேர்வுகளுக்காக ஆசிரியர்கள் தயாரித்த ஆடியோ புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த இணையதளம். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் கருத்தை இந்த இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். 2 கோடியே 30 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளார்கள். 46 ஆயிரம் பேர் 'சப்ஸ்கிரைப்’ செய்திருக்கிறார்கள்.

கல்விச் செய்திகள், கட்டுரைகள், ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கைகள், ஆசிரியர்களுக்கான சர்க்குலர்கள், அதிகாரிகளின் முகவரிகள், தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க செயற்திட்டங்கள், தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் லிங்க்ஸ், பத்திரிகைகளின் இணையதள லிங்க்ஸ், புதிதாக அறிமுகமாகும் படிப்புகள், +2 மாணவர்களுக்கான மேற்படிப்பு ஆலோசனை, நுழைவுத்தேர்வுகள் பற்றிய தகவல்கள், ஆசிரியர் பொது மாறுதல் செய்திகள், கல்வி தொடர்பான இணையதளங்கள் என இந்த கல்விச்சோலை தகவல் சுரங்கமாக இருக்கிறது. போதாக்குறைக்கு, ‘காய்கறி வாங்குவது எப்படி?’, ‘லேப்டாப் வாங்குவது எப்படி?’, ‘ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?’, ‘உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி’ என்றெல்லாம் கூட இங்கு பாடம் படிக்கலாம்.

‘‘தகவல் தொழில்நுட்ப உலகம் இது. மற்றவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இணையம் அறிமுகமான காலத்தில் இருந்தே நிறைய தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வேன். ஒரு கட்டத்தில், எனக்குப் பயன்பட்ட தகவல்கள் மற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இந்த இணையத்தைத் தொடங்கினேன். இதற்காக என் சம்பளத்தில் ஒரு பகுதி செலவாகிறது. இதற்குக் கிடைக்கிற வரவேற்பு என்னைக் கூடுதலாக உழைக்கத் தூண்டுகிறது. பிற ஆசிரிய சகோதரர்களும் ஒத்துழைப்புத் தருகிறார்கள்’’ என்கிறார் தேவதாஸ்.

வெ.நீலகண்டன்