அதிகரிக்கும் பள்ளி இடைநிற்றல்... காரணம் என்ன?



அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக உருவான கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. இந்தியக் கல்விச்சூழலையே மாற்றிவிடும் என்றெல்லாம் சிலாகிக்கப்பட்ட அந்தச் சட்டம் நிகழ்த்திய விளைவுகளைப் பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புப்படி 27,400 குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்ற அவலம் வெளிவந்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் மட்டும் 1,156 குழந்தைகள். அதிகபட்சமாக விழுப்புரத்தில் 2,794 குழந்தைகளும், காஞ்சிபுரத்தில் 2,225 குழந்தைகளும் பள்ளியில் இருந்து இடை நின்றிருக்கிறார்கள். ‘‘இந்தக் கணக்கெடுப்பில் இடம் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கும்’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்திய கல்வி உரிமைச் சட்டம், ‘6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி யளிப்பது கட்டாயம்’ என்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படும் அனைவருக்கும் கல்வி இயக்கமும், பள்ளிக் கல்வித்துறையும் இடைநிற்றலைக் குறைக்கவும், பள்ளிக்கு வராத குழந்தைகளை பள்ளி நோக்கி ஈர்க்கவும் பல திட்டங்களை வைத்திருக்
கின்றன. அத்திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் செலவும் செய்யப்படுகிறது. ஆனால் இன்றளவும் பள்ளி இடைநிற்றலையும், பள்ளி வராக் குழந்தைகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியவில்லை.
என்னதான் நடக்கிறது?

‘‘குழந்தைகள் இடைநிற்றல் அல்லது பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது குடும்பச் சூழ்நிலைகளாலும் நிர்வாகங்களின் அலட்சியத்தாலும் ஏற்படுகிற ஒரு சிக்கல். கடந்த ஆறு ஆண்டுகளில், ‘குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை’ என்று காரணம் சொல்லி 56 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை நோக்கி குழந்தைகளை ஈர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் நிரந்தரத் தீர்வாக பள்ளிகளை மூடிவிடுகிறார்கள். பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது...’’ என்று வருந்துகிறார் குழந்தை உரிமைக்கான செயற்பாட்டாளர் தேவநேயன். 

‘‘அரசின் கொள்கை முடிவுகள் பெரும்பாலும் குழந்தைகளின் கல்வி உரிமைக்கு எதிராகவே இருக்கின்றன. குடிசை இல்லா சென்னையை உருவாக்குவதாகச் சொல்லி, சென்னைக்குள் இருந்த குடிசைப்பகுதிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற ஒதுக்குப்புறங்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். நகரத்துக்குள் இருந்த பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் இதனால் துண்டாடப்பட்டு விட்டன. 6700 குடும்பங்கள் வசிக்கிற செம்மஞ்சேரியில் ஒரே ஒரு தொடக்கப்பள்ளியும், ஒரே ஒரு உயர்நிலைப்பள்ளியும்தான் இருக்கின்றன.

மேல்நிலைப்பள்ளியே இல்லை. 15 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிற கண்ணகி நகரிலும் போதிய பள்ளிக்கூடங்கள் இல்லை. நகருக்குள் வந்து படிக்க வேண்டும் என்றால் போதிய பேருந்து வசதி இல்லை. கடந்த ஆண்டு உரிய நேரத்தில் பள்ளி செல்ல வேண்டும் என்ற வேகத்தில் பேருந்தில் தொங்கிக்கொண்டு வந்த 4 மாணவர்கள் உயிரிழந்தார்கள். குடிசைவாழ் மக்களை குப்பைகளைப் போல ஒதுக்குப்புறமாக குடியேற்ற நினைக்கிற அரசு, அப்பகுதிகளில் குறைந்தபட்சம் கல்வி வாய்ப்புகளைக்கூட உருவாக்கித் தரவில்லை. அதனால் அப்பகுதிகளில் பெரும்பாலான மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள்.

பள்ளி இடைநிற்றலுக்கு பள்ளிச்சூழலும் முக்கியக் காரணம். சுவாரசியமற்ற பயிற்றுவிப்பு முறை, இருண்மையான பாடத்திட்டங்கள், உளவியல் புரியாத ஆசிரியர்களின் அணுகுமுறை என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கல்வி மேல் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையும் கூட இடைநிற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. படிப்பு என்பது இப்போது வயிறு கழுவுவதற்கான வழியாக மாறியிருக்கிறது. ‘டிகிரி முடிச்சுட்டு வேலை இல்லாமல் இருக்கிறதுக்கு பள்ளிக் கூடமே போகாம ஒரு தொழிலைக் கத்துக்கோ’ என்ற மனநிலைதான் இன்று அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு இருக்கிறது.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்களே பள்ளியில் இருந்து அதிகம் இடைநிற்கிறார்கள். பாதுகாப்பில்லாத பள்ளிச்சூழல், தூரம் என அதற்கு பல காரணங்கள் உண்டு. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கவும் இந்த இடைநிற்றல்தான் காரணமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாக்கும் கல்வி உரிமைச்சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பற்றியே கவலைப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான குழந்தைகள், மற்றும் 14 முதல் 18 வயதிலான பிள்ளைகளின் கற்றல் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த எந்த சட்டமும் இல்லை.

பள்ளி இடைநிற்றல் என்பது பல்வேறு பிரச்னைகளுக்கான தொடக்கம். அதைத் தடுக்க தீவிரமான கண்காணிப்பு ஏற்பாடுகள் வேண்டும். 1ம் வகுப்பில் ஒரு குழந்தை சேரும்போதே அக்குழந்தைக்கு ஒரு காமன் ஐ.டி. தரப்பட வேண்டும். அந்த ஐ.டியின் மூலம் குழந்தையின் கல்விநிலையை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கல்வித்துறையோடு சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை என தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்’’ என்கிறார் தேவநேயன்.

‘‘குழந்தைகள் என்பது யார் என்ற கேள்விக்கே நம்மிடம் தெளிவான விளக்கம் இல்லை. ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு வயதைத் தீர்மானிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் 14 வயது வரை இருப்பவர்களை குழந்தை என்கிறது. இன்னொரு சட்டம் 16 வயது வரை குழந்தை என்கிறது. மற்றொரு சட்டம் 18 வயது வரை குழந்தை என்று சொல்கிறது. உண்மையில் 18 வயதுக்குப் பிறகுதான் ஒருவரால் சுயமாக சிந்திக்க முடியும். கல்வி உரிமைச்சட்டம் வந்த கடந்த 4 ஆண்டுகளில் 8ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் குறைந்திருக்கிறது.

15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் இடை நிற்கிறார்கள். அவர்களின் உழைப்பும் பால்யமும் கடுமையாக சுரண்டப்படுகிறது. சுமங்கலித் திட்டம் போன்ற பல திட்டங்களில் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளே அதிகம் பணிபுரிகிறார்கள். பெரிய கம்பெனிகளில் ‘அப்ரண்டீஸ்’ என்ற பெயரில் வதைபடுவதும் இந்தக் குழந்தைகள்தான்.

செங்கல் சூளை, கல் உடைத்தல், ஹோட்டல், பின்னலாடை போன்ற அமைப்பு சாராத் தொழில்களில் பணிபுரியும் 60% பேர் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. ஆட்டோ டிரைவர், சித்தாள், கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகளே இப்படி வதைபடுகின்றன’’ என்று வருந்துகிற குழந்தை உரிமை முன்னேற்ற மையத்தின் நிறுவனர் தாமஸ் ஜெயராஜ், இப்பிரச்னைக்கான தீர்வையும் முன் வைக்கிறார்.

‘‘கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை’ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன் முகப்புரையிலேயே, ‘18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகளே’ என்று மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் ஷரத்து 4.9, ‘பொருளாதாரம் உள்பட அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது.

தற்போது பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு அந்தக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, கல்வி உரிமைச் சட்டம் உள்பட அனைத்து சட்டங்களையும் திருத்த வேண்டும். அப்படித் திருத்தி நடைமுறைப்படுத்தினால் மட்டுமே குழந்தைகளுக்கான உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும்.

 பள்ளி இடைநிற்றலையும் தடுக்க முடியும்’’ என்கிறார் அவர். 86களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளே தொடக்கப் பள்ளிகளை நிர்வகித்தன. உள்ளூரைப் பற்றி நன்கு புரிதல் கொண்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் பள்ளி இருந்ததால் பள்ளி செல்லாக் குழந்தைகளை எளிதாக அடையாளம் கண்டு வகுப்பறைக்குக் கொண்டு வரமுடிந்தது. 86க்குப் பிறகு ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.

உள்ளாட்சிப் பிரதிநிதி களுடன் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து விட்டது. அதுவும் இடைநிற்றல் அதிகரிக்க ஒரு காரணம் என்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து இடைநிற்றலை இல்லாது ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்!

பள்ளியில் இருந்து இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில் அதிகபட்சமாக தர்மபுரியில் 10,125 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். இவர்களில் ஆண்கள் 6,622. பெண்கள் 3,503. சென்னை மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,799. இவர்களில் 484 குழந்தைகள் மிகவும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 5,616 குழந்தைகள் மீட்கப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பிச்சை எடுக்க அனுப்பப்பட்டவர்கள்.

வெ.நீலகண்டன்