வீட்டுக்கு வீடு விண்ட் மில்!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

‘மின்விசிறி ஓட மின்சாரம் தேவை... அது இல்லையே’ என எல்லோரும் ஏங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், அந்த மின்விசிறியைப் பயன்படுத்தியே மின்சாரம் எடுக்கலாம் என மாற்றி யோசித்திருக்கிறார்கள் கும்பகோணம் அன்னை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். ஒரு டேபிள் ஃபேன் சைஸுக்கு இவர்கள் தயாரித்திருப்பது வீட்டுக்கு வீடு வைக்கக் கூடிய மினி விண்ட் மில்!

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்கும் கதிரேசன் மற்றும் கார்த்திகேயனின் இறுதியாண்டு ப்ராஜெக்ட்தான் இது. ‘‘என்னடா ப்ராஜெக்ட் பண்றதுன்னு நாங்க குழம்பி நின்னப்போ, எங்க பேராசிரியர்தான் சார் இந்த ஐடியாவைக் கொடுத்தார். பெரிய விண்ட் மில்களில் மின்சாரம் தயாரிக்கிற மாதிரி, சின்ன லெவல்ல செய்யலாமேன்னு சொல்லி அவரே எங்களுக்கு வழி காட்டவும் செய்தார்’’ - என ப்ராஜெக்ட் உருவான ஆரம்பப் புள்ளியை விவரிக்கிறார் கதிரேசன்.

‘‘இது ரொம்ப சிம்பிள் கான்செப்ட்தான் சார். சாதாரண ஃபேன் பிளேடு ஒன்றை எடுத்துக்கிட்டோம். உயரத்துக்காக இரும்பு ஆங்கிள்கள்ல மேடை போல உருவாக்கினோம். அந்த மேடை மேல ஃபேன் பிளேடைப் பொருத்தி அது கூட ஒரு டைனமோவை இணைச்சோம். 12 வோல்ட் மின்சாரத்தை உருவாக்கக் கூடியது அந்த டைனமோ. அதுல இருந்து உற்பத்தியாகுற மின்சாரத்தை சேகரிச்சு வைக்க 12 வோல்ட் பேட்டரி ஒண்ணையும் இணைச்சிருக்கோம்.

வீட்டுக்கு வெளியிலோ, மாடியிலயோ... காத்தடிக்கிற இடமா பார்த்து இதை வைக்க வேண்டியதுதான் வேலை. வீசுற காத்துல இந்த ஃபேன் பிளேடு சுத்தும். டைனமோ மூலமாக மின்சாரமும் பேட்டரியில சேமிக்கப்படும். கரன்ட் இல்லாத நேரத்துல இந்த பேட்டரியில பல்பை இணைச்சு, எமர்ஜென்சி லைட்டாவும் பயன்படுத்திக்கலாம்’’ என்கிற கார்த்திகேயன், டைனமோவிலிருந்து வரும் வயரை பல்ப் ஒன்றில் இணைத்து, நமக்கும் டெமோ காட்டுகிறார். காற்றின் வேகத்தில் மின்விசிறியின் பிளேடு சுழலுகிறது. அதில் உருவாகும் மின்சாரத்தால் மெல்ல மெல்ல பல்ப் ஒளிர்கிறது. காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க... முழு பிரகாசத்தை எட்டுகிறது.

‘‘வீட்டோட யு.பி.எஸ் பேட்டரி சார்ஜ் ஆகுற மாதிரி கூட இதை கனெக்ட் பண்ணிக்கலாம். விண்ட் மில்னு சொன்னாலே பிரமாண்டமா, எக்கச்சக்க செலவுல உருவாக்குறதுன்னு பலரும் நினைக்கறாங்க. ஆனா, இந்த மாதிரி காம்பேக்ட்டான விண்ட் மில் வீட்டுக்கு வீடு இருந்தா, இலவசமா கிடைக்கிற காத்தை கரன்டாக்கிக்க முடியும்’’ என உற்சாகம் பூக்கிறார்கள் இருவரும்.  நம் நாட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இளைஞர்கள் கொண்டு செல்வார்கள் என்பது இவர்களைப் பார்த்தால் தெரிகிறது!

- எம்.நாகமணி
படம்: சி.எஸ்.ஆறுமுகம்