யாருக்குப் பொருந்தும் பொறியியல் படிப்பு?



+2 தேர்வுகள் முடிந்து விட்டன. தேர்வு முடிவுகள் வருவதற்குள்ளாகவே அடுத்து என்ன என்ற கேள்வி மாணவர்களையும், பெற்றோர்களையும் பதைபதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோரின் சாய்ஸாக மருத்துவமும், எஞ்சினியரிங்கும் இருக்கின்றன. எப்படியாவது ஒரு பி.இ. படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு வேலையைப் பெற்று விடலாம் என்கிற எதிர்பார்ப்பு. உண்மையில், இந்த இடம்தான், சறுக்கல் தொடங்கும் இடம். எல்லா மாணவர்களுக்கும் பொறியியல் படிப்புகள் பொருந்துவதில்லை.

 யாருக்குப் பொருந்துமோ அவர்களால் மட்டும்தான் படித்து நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடியும். பல லட்சம் பொறியாளர்கள் தகுந்த வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். அதற்காக பொறியியல் படிப்பதே வீண் என்று புரிந்து கொள்ளக்கூடாது. படிப்பை தேர்வு செய்வதில்தான் வெற்றி சூட்சுமம் இருக்கிறது. பொறியியல் படிப்பு யாருக்கெல்லாம் பொருந்தும்? - விரிவாக விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வியாளரும், ஹெலிக்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மனுமான பு.செந்தில்குமார்.

‘‘பிள்ளைகளின் உயர்கல்வியைத் தேர்வு செய்வதில் பெற்றோருக்கு மிகப்பெரும் பொறுப்புகள் உண்டு. ஆனால், அது ஒரு எல்லைக்கு உட்பட்டது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ, தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலோ பிள்ளைகளின் படிப்பை முடிவு செய்யக்கூடாது. பொறியியல் மிகவும் கடினமான படிப்பு என்பதால், குறிப்பிட்ட துறையில் மாணவனுக்கு ஆர்வமும், செயல்திறனும் இருக்கிறதா என்பதைப் பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும். பிள்ளைகளின் கருத்தறிந்தே முடிவெடுக்க  வேண்டும்.

இந்தியாவில் 80-க்கும் மேற்பட்ட துறைகளில் பொறியியல் படிப்புகள் உள்ளன. ஆண்டுக்காண்டு பல புதிய படிப்புகளும் அறிமுகமாகிக் கொண்டே வருகின்றன. பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யும்போது நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுக்கக்கூடாது. எதிர்காலத்தை கணிக்க வேண்டும். பிள்ளையின் மனநிலை அறிந்து, அவர்களது செயல்திறனுக்கு எது பொருந்தும் என்று மதிப்பீடு செய்ய வேண்டும்.

பிள்ளைகளின் விருப்பமறியாமல் பொறியியல் படிப்பில் சேர்த்தால் நிச்சயமாக பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும். படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். இன்றுள்ள போட்டி நிறைந்த சூழ்
நிலையில், ஆர்வமும் உழைப்பும் இருந்தால் மட்டுமே பொறியியல் துறையில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். இன்று பி.இ. படிப்பு என்பது அடிப்படை கல்வித்தகுதியைப் போலாகி விட்டது. பொறியியல் படிப்புக்கு பொருத்தமான செயல்திறன்கள் சில உண்டு.

* சிந்தனைத்திறன்
* ஆக்கத்திறன்
* முடிவெடுக்கும் திறன்
* பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்
* தொடர்பாற்றல்
* வரைகலைத்திறன்
* நுண்ணறிவுத் திறன்
* ஆய்ந்தறியும் திறன்

இத்தகைய செயல்திறன்கள் உங்கள் பிள்ளைக்கு இருக்கிறதா என்று மதிப்பீடு செய்த பின்னரே பொறியியலை தேர்வு செய்ய வேண்டும். மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் எந்த அளவிற்கு ஈடுபாடு உள்ளது என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், முதல் இரண்டு வருடங்களுக்கான அடிப்படை விஷயங்கள் இம்மூன்று பாடப்பிரிவுகளைச் சார்ந்தே இருக்கும். இம்மூன்று பாடப்பிரிவுகளில் போதுமான அளவு ஆர்வம் இல்லாதவர்கள் பொறியியல் கல்வியை விலக்குவது நலம்.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உண்டு. லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்தக் கல்லூரிகளில் இடம் உண்டு. விண்ணப்பித்த அத்தனை பேருக்கும் இடம் கிடைக்கும். ஆனால், பொதுவாக, கட்-ஆஃப் 170க்கு கீழே உள்ள மாணவர்கள் பொறியியலை தவிர்க்கலாம் என்பதே கல்வியாளர்களின் அறிவுரை. கட்-ஆஃப் 170க்கு கீழே இருக்கும் மாணவர்கள் கணிதத்திலும் இயற்பியலிலும் மதிப்பெண்கள் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.

நிச்சயம் சிரமப்பட நேரிடும். மேலும், கட்-ஆஃப் 170க்கு கீழே எடுத்த மாணவர்களுக்கு சி/டி லெவல் கல்லூரிகளே கிடைக்கும். ஏற்கனவே மேற்கண்ட பாடங்களில் பின்தங்கியிருக்கும் மாணவர்களால் சி/டி லெவல் கல்லூரிகளில் புரிதலோடு படிக்க முடியாது என்பதே யதார்த்தம். படிப்பைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதும் முக்கியம்.

பொறியியல் படிப்பதென்று தீர்மானித்து விட்டால் என்ன படிப்பது என்பதையும் உடனடியாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆர்வத்தையும் செயல்திறனையும் பொறுத்து 5 படிப்புகளை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அதைப்போல நீங்கள் விரும்பும் 5 கல்லூரிகளையும் வரிசைப் படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* பள்ளிக் கல்விக்கும், பொறியியல் கல்விக்கும் உண்டான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். பள்ளிக்கல்வியானது பெரும்பாலும் பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுகளில் அப்படியே எழுதும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் பொறியியல் கல்வியில் மாணவர்கள் அடிப்படைக் கருத்துக்களைப் (Concepts) புரிந்துகொண்டு நடைமுறை சாத்தியங்களை விவரிக்கும் விதமாக தேர்வுகளில் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

* பொறியியல் கல்வியில் குறிப்பிட்ட பாடங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அசைன்மென்ட்ஸ், செமினார், சிறப்புப் பயிற்சி வகுப்புகள், ப்ராஜக்ட் என பல்வேறு செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கும். எனவே பொறியியல் கல்விக்கு ஆசைப்படும் மாணவர்கள் சிறந்த நேர நிர்வாகிகளாக இருத்தல் வேண்டும்.

* முதலில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து விட்டு, பின்னர் அத்துறை சிரமமாக உள்ளது என்று வருத்தப்படுவதைவிட, முதலிலேயே மாணவர்களின் விருப்பமறிந்து அவர்களின் திறனுக்குத் தகுந்தவாறு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

* இத்தகைய துறைசார் அறிவை எட்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளின் கடமையாகும். மேலும் பெற்றோர்கள் தம் குழந்தைகளின் துறைசார் முடிவுகளை எடுப்பதற்கு முன் தகுதி வாய்ந்த கல்வி ஆலோசகர்களைக் கலந்துகொண்டு விருப்பத்திறன் சோதனை   (Interest Profile), சுயதிறன் மதிப்பீடு (Self Skill Assessment) செய்துகொள்வது நலம்...’’ என்கிறார் செந்தில்குமார்.

சரி, பொறியியல் படிப்பதென்று தீர்மானித்து விட்டீர்கள்... எந்தெந்த படிப்புகளுக்கு எதிர்காலம் இருக்கிறது..? அடுத்த இதழில் பார்க்கலாம்.
- வெ.நீலகண்டன்