கலாம்கள் தயாராகிறார்கள்!



அசத்தும் அறிவியல் முகாம்!

‘‘மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருத்தி... இயற்கையின் அதிசயம் ஒன்றை கவனித்தாள். அவளது பாட்டி வீட்டில் எல்லா பழைய பொருட்களையும் கரையான் அரித்திருக்க, தர்ப்பைப் பாய் ஒன்று மட்டும் அப்படியே இருந்திருக்கிறது. இதை அவள் தன் ஆசிரியையிடம் சொல்ல,

தர்பைப் புல்லை சோதனைக்கூடத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார் அவர். கரையானுக்கு எதிரான ஏதோ ஒரு வேதிப்பொருள் தர்ப்பைப் புல்லில் இருப்பதாக ரிசல்ட் வந்தது. இதன் அடிப்படையில் இன்று, அமெரிக்க பேப்பர் கம்பெனிகளில் தயாரிப்பின் போது கொஞ்சம் தர்ப்பைப் புல் சேர்க்கப்படுகிறது.’’ - என்று சுவாரஸ்ய சம்பவம் சொல்லி ஈர்க்கிறார் எஸ்.ஹேமா. தமிழ்நாடு உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் சயின்ஸ் சிட்டியின் சீனியர் சயின்டிஃபிக் ஆபீஸர் இவர்.

‘அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விழிப்புணர்வு முகாம்’ சென்னை பிர்லா கோளரங்கத்தையே கோலாகலப் படுத்திவிட்டது. சென்னை முழுவதுமிருந்து வந்திருந்த மாணவ மாணவிகளுக்கு பொறுமையாக அறிவியல் விளக்கங்கள் தந்துகொண்டிருக்கிறார்கள் ஹேமா உள்ளிட்ட அதிகாரிகள். ‘‘டெல்லியில் உள்ள ஐஆர்ஐஎஸ் (Initiative for Research and Innovation in Science) தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்தான் இது. சென்னையில் இது நடப்பது முதல் முறை. நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய விழிப்பு உணர்வு மிகக் குறைவு.

புதிதாக ஒரு அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்தால் கூட அதை யாரிடம் சொல்ல வேண்டும், எப்படி காப்புரிமை பெற வேண்டும் என்பதெல்லாம் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் இந்த முகாம். தேசிய அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும்அத்தனையும் மாணவர்களின் படைப்புகள். தங்கள் கண்டுபிடிப்புகள் சிறிதெனினும் புதுமையாகவும் அறிவார்ந்ததாகவும் சொந்த கண்டுபிடிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை இங்குள்ள பங்கேற்பாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.

மேலும், இந்தக் கண்காட்சியில் பங்கெடுத்துக்கொள்ள மொழி ஒரு தடையில்லை. மாணவர்களின் அறிவு எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழியாக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகள் இங்குள்ளது. ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு டாகுமென்ட் தயாரிப்பது எப்படி? விளக்கவுரையாற்றுவது எப்படி என்பதெல்லாம் இங்கு பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு இப்போதே செய்முறை விளக்கமாகக் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. வருங்காலத்தில் அறிவியல் துறையில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க பல அப்துல்கலாம்கள் இங்கே உருவாகிறார்கள்!’’ என்கிறார் ஹேமா நம்பிக்கையுடன்.

‘‘ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட கண்காட்சிகளில் வெற்றி பெரும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறது ஐஆர்ஐஎஸ். இந்த முறை மே 9ம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள இந்த சர்வதேசக் கண்காட்சியில், இந்தியாவில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்!’’ என்கிறார் ஐஆர்ஐஎஸ்ஸின் ஒருங்கிணைப்பாளர் ஹேனா. 
தொடர்புக்கு: 044-24454054/ 24452034
எம்.நாகமணி
படம்: ஏ.டி.தமிழ்வாணன்