பாதி படிப்பிலும் பிரகாசிக்கலாம்!



வாழ்வுக்கு வழிகாட்டும் உன்னதி ஃபவுண்டேஷன்

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு பள்ளி மாணவனின் படிப்பு பாதியில் நின்று போவது ஆர்வமின்மையால் மட்டுமல்ல... வறுமை, குடும்பச்சூழல் என எத்தனையோ காரணங்கள் அதற்கு உண்டு. அப்படி சூழ்நிலைகளால் படிப்பை இழந்தவர்கள், கடைசி வரை அடிமட்டத் தொழிலாளர்களாகத்தான் வாழ வேண்டுமா? அவர்களின் ‘கூலி’க்கு, ‘சம்பளம்’ என்ற அந்தஸ்து கிடைக்க வழியே இல்லையா? இந்தக் கேள்விகளை முன் வைத்து இவற்றுக்கு பதிலாகவும் இருக்கிறது ‘உன்னதி ஃபவுண்டேஷன்’. படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவே செயல்படும் இந்த அமைப்பு, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது மட்டுமல்ல... பிரபல தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அவர்களை வேலையிலும் அமர்த்தி விடுகிறது.

‘‘பெங்களூருவில் உள்ள ஸ்ரீகுருவாயூரப்பன் பஜன் சமாஜ் டிரஸ்ட்டின் ஒரு பகுதிதான், ‘உன்னதி ஃபவுண்டேஷன்’. இதற்கு இந்தியா முழுவதும், பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. இதுவரை 4,000க்கும் மேற்பட்டோருக்கு, எங்கள் அமைப்பின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்’’ என அறிமுகம் கொடுக்கிறார் இந்த அமைப்பின் சென்னை கிளை மேலாளர் பிரியதர்ஷினி.

‘‘படிப்பு இல்லை என்பதற்காக சாதாரண கூலி வேலைகளில் சேர்ந்து சோகத்தை சுமக்கும் இளைஞர்களுக்கு உதவுவது தான் எங்களின் நோக்கம். தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மட்டுமின்றி, அனைத்து வகையிலும் அவர்களை முன்னேற்ற நாங்கள் பலவித பயிற்சிகளை வழங்குகிறோம். அடிப்படை ஆங்கிலம், பேச்சாற்றல் திறன், அடிப்படை கணினி பயிற்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதன் மூலம் அலுவலகப் பராமரிப்பு, கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் போன்ற வேலைகளில் இவர்களால் சேர முடியும். பெரும் நிறுவனங்கள் பலவற்றோடு எங்களுக்கே தொடர்புகள் இருப்பதால், இங்கு பயிற்சி பெறுகிறவர்களுக்கு ஏற்ற வேலையை நாங்களே நேரடியாகப் பெற்றுத் தந்துவிடுகிறோம்’’ என்கிற பிரியதர்ஷினி, இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்படும் வேறு சில தொழிற்பயிற்சிகளையும் விவரிக்கிறார்...

‘‘பொதுவாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தங்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்ள போதிய வாய்ப்பும் வசதியும் கிடைப்பதில்லை. இதனால், டிகிரி வரை படித்திருந்தாலும் வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை. அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல் மேனேஜ்மென்ட், சில்லரை விற்பனை, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பல பயிற்சிகளை உன்னதி ஃபவுண்டேஷனில் இலவசமாக அளிக்கப்படுகின்றன’’ என்கிறவர், இதற்கான கல்வித் தகுதியையும் தெளிவுபடுத்துகிறார்...

‘‘இங்கு பயிற்சியில் சேர அடிப்படைக் கல்வித் தகுதி அதிகம் தேவையில்லை. 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மேலும், பத்தாம் வகுப்பு முதல் பட்டயம், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்குக் கூட இங்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். இங்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கென தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், இலவசம் என்றால் அதை சரியாக மதிக்காத தன்மை இருக்கிறது. எனவே, பயிற்சி பெற்றவர்கள் பணியில் சேர்ந்த பிறகு 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என விதி வைத்திருக்கிறோம். அதை அவர்கள் நான்கைந்து தவணைகளில் கூட செலுத்தலாம்’’ என்கிறவர், தமிழகத்தில் உள்ள கிளைகள் பற்றியும் தகவல் பகிர்கிறார்...

‘‘தமிழகத்தில் எங்களுக்கு இரண்டு கிளைகள் உள்ளன. இதில், சென்னை கிளை துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. கோவையில் இன்னொரு கிளை கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள எங்களின் மையத்தில் பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு இலவசமாக தங்கும் இடமும், உணவு வசதியும் செய்து தரப்படும். ஆனால், தற்போதைக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் வசதி மட்டும் இல்லை. சென்னையில் இதுவரை 8 பேட்ச் பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ளன. பயிற்சி எடுத்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பும் வாங்கித் தரப்பட்டுள்ளது’’ என்கிறார் அவர் பெருமிதத்தோடு.

இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவது எப்படி? அதை விளக்குகிறார் உன்னதி ஃபவுண்டேஷனின் பயிற்சி யாளர் டேவிஸ்...
‘‘இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனை, நட்சத்திர ஹோட்டல்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு நாங்கள் ஆங்கிலம், கணினிப் பயிற்சி, ஆளுமைத்திறன், தொழில்நுட்பம், நல்லொழுக்கப் பயிற்சிகள் என 70 நாள் பயிற்சி அளிக்கிறோம். பாடமாகவும், நேரடியாகவும் நிறுவனங்களுக்கே சென்று களப்பயிற்சி கொடுத்து சான்றிதழும் வழங்குகிறோம்.

பெரிய பெரிய துணிக்கடைகளில் விற்பனைப் பிரிவு, வாடிக்கையாளர் சேவை, நட்சத்திர ஹோட்டல்களில் ரிசப்ஷனிஸ்ட், அலுவலக உதவியாளர், கார் ஓட்டுனர், செக்யூரிட்டி சர்வீஸ், பி.பி.ஓ எனப் பல்வேறு வேலைவாய்ப்புகளை இவர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளோம். இவை தவிர, தற்போது பிரபல கடிகார நிறுவனத்தில் பணிபுரியவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகள் வழங்கி வருகிறோம்’’ என்கிறார் அவர் உற்சாகமாக. இது வழிகாட்டி மரம் மட்டுமில்லை; வளர்ச்சிக்கும் உரம். இந்த உதவிகளை உபயோகப்படுத்திக் கொள்ள நீங்க ரெடியா?

தொடர்பு கொள்ள:
உன்னதி ஃபவுண்டேஷன்
139, கோதண்ட பெருமாள் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
செல்போன்: 99440 84682

- எம்.நாகமணி
படம்: ஏ.டி.தமிழ்வாணன்