வேலைக்கு வெல்கம்!



கோகுலவாச நவநீதன்

உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உன்னதத் தொடர்

ஃபேஸ்புக்ல ஒரு பையன்... காலேஜ் ஸ்டூடன்ட்... நல்ல நல்ல விஷயத்தையெல்லாம் ஷேர் பண்ணுவான்... ரொம்ப நாளா எனக்கு ஃப்ரெண்ட்... திடீர்னு ஒரு நாள், ‘உங்க ஆபீஸ்ல ஓபனிங் இருந்தா சொல்லுங்க’ன்னு பி.எம் (பிரைவேட் மெசேஜ்) பண்ணான். வரச் சொல்லி பார்த்தேன். பரவாயில்ல... நல்லாவே பர்ஃபார்ம் பண்ணான். இப்ப அவன் எங்க கம்பனி எம்ப்ளாயி!’’ - பேச்சுவாக்கில், நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது. ‘ஃபேஸ்புக் என்றால் வெறும் அரட்டை கிளப்’ என நமக்குள் இருந்த பொதுக்கருத்து அப்போது பொடிப்பொடியானது.

ஒரு காலத்தில், மிகப் பெரும் மனிதர்களை சாதாரணமானவர்கள் அத்தனை சீக்கிரம் அணுகிவிட முடியாது. அப்பாயின்ட்மென்ட், அல்லக்கை என ஆயிரம் விஷயங்களைக் கடக்க வேண்டும். அந்த நிலைமையை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டன இன்றைய சமூக வலை தளங்கள். ‘அமிதாப் என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கார்’ என அம்பாசமுத்திரம் ஆஃப் டிரௌசரை சொல்ல வைக்கிறது ஃபேஸ்புக். முக்கியமானவர்கள் மூச்சு விட்டால் கூட நாடு முழுக்க செய்தி பரப்பிவிடுகிறது ட்விட்டர். இன்னும் கூகுள் ப்ளஸ், லின்க்டு இன் என ஏராளமான தளங்களும் ஏராளமான வலைப்பதிவு சேவைகளும் சேர்ந்து இந்த உலகை இணைக்கின்றன. வேலை வாங்கித் தருவதில் இவை எந்த அளவு பங்காற்றுகின்றன?

‘‘சமூக வலைதளங்கள் நிச்சயம் இன்று தவிர்க்கவே முடியாதவை. எல்லாவற்றுக்கும் அது தேவைப்படுகிறது. தகுந்த வேலையைப் பெறுவதிலும், நிறுவனங்களுக்கான சிறந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட சமூக வலைதளங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. வருங்காலத்தில் நிச்சயம் இது வளரும். பெரும் நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தங்கள் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காலம் உறுதியாக வரலாம்!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெச்.ஆர் வல்லுனர் ரகுநாத் ராமசுவாமி. சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள், நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் இவர்.

‘‘சமூக வலைதளங்கள் எல்லாமே மனிதர்களை வரைமுறையின்றி இணைக்கிறது. அடுத்தவரிடம் ஒரு ஹலோ சொல்ல பயந்த காலம் போய், ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம், 10 ஆயிரம் என நண்பர்கள் எண்ணிக்கை மிரட்டுகிறது. ஆனால், கத்தியின் கூர்மையைப் போலத்தான் இந்த வளர்ச்சியும் வசதியும். சரியாகப் பயன்படுத்திக் கொண் டால், சுகம்... இல்லாவிட்டால், ஆறாக்காயம்!’’ என்கிற ரகுநாத், முழுக்க முழுக்க அலுவல் ரீதியாகப் பயன்படக் கூடிய சமூக வலைதளம் என ‘லின்க்டு இன்’ தளத்தைப் பரிந்துரைக்கிறார்.

‘‘இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் வேலை நிமித்தமான தொடர்புக ளுக்கென்று ஒரு லின்க்டு இன் கணக்கை கட்டாயம் வைத்திருக்கிறார்கள். அது பற்றித் தெரியாதவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுகிறேன். லின்க்டு இன் என்பதும் ஃபேஸ்புக் போலவே ஒரு சமூக ஊடக வலை தளம்தான். ஆனால், ‘குப்புசாமி... இவருக்கு ஆயிரம் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்... இப்போது இவர் சத்யம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் இந்தத் தளம் உங்களை அறிமுகப்படுத்துவதில்லை.

‘குப்புசாமி... இந்தப் பள்ளியில் படித்தார்... இந்தக் கல்லூரியில் டிகிரி பெற்றார்... இப்போது  இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்... இவருக்குத் தெரிந்த வேலைகள் இது இது... இவர் செய்த சாதனைகள் இவை இவை...’ என உங்களை பொறுப்பாக முன்னிறுத்துகிறது லின்க்டு இன். மற்ற சமூக வலைதளங்களிலும் இப்படிப்பட்ட தகவல்கள் கிடைக்கும் என்றாலும், அதைத் தேடிப் பெற வேண்டும். லின்க்டு இன்னில் சும்மா ஒரு லுக் விடுபவர்கள் கூட உங்களைப் பற்றி நல்ல தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்வார்கள். அதுதான் இங்கே ஸ்பெஷல். ஆனால், எத்தனை நல்ல வலைதளமாக இருந்தாலும் சரி, நாம் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பலன் தரும். ஒரே லின்க்டு இன் தளத்தில் ஒருவரின் சுய விவரம் அதிகம் பேரால் படிக்கப்பட்டிருக்கும். இன்னொருவரின் பயோடேட்டா படிக்க ஆளில்லாமல் தவிக்கும். இதற்கெல்லாம் காரணம், சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததுதான்’’ என்கிறவர், பொதுவாக சமூக வலைதளங்களை வேலை பெற்றுத் தரும் சாதனமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தை இங்கே பட்டியலிடுகிறார்...

* வீட்டுக்கு வாசல் ரொம்ப முக்கியம். லின்க்டு இன் போன்ற தளங்களில் உங்களின் தனிப்பட்ட பக்கமும் சுயவிவரக் குறிப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். தெளிவான பெயர், கோணல்மாணலற்ற புகைப்படம், ரசனையான லே-அவுட் நிறத் தேர்வு போன்றவை, வசீகரிக்க மட்டுமல்ல... உங்களைப் பற்றி நல்ல எண்ணத்தை பார்த்ததுமே ஏற்படுத்தவும்தான்.

* நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் காட்டுங்கள். புதிதாக நீங்கள் கண்டெடுத்தவரோ, அல்லது உங்களை நாடி வந்தவரோ... அவரை நண்பராக்கும் முன், அவரின் சுய விவரங்களைப் படியுங்கள். அவர் உங்கள் துறைக்கோ, பணிக்கோ சம்பந்தப்பட்டவரா? அவரால் உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சின்ன அளவிலாவது துணை நிற்க முடியுமா என்றெல்லாம் யோசியுங்கள். முடிந்தவரை ஒரு நிறுவனத்தில் முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருப்பவர்களை நட்பாக்கிக் கொள்ளுங்கள்.

* நண்பர்கள் உயர்ந்தவர்களாக இருக்கும்போது உங்கள் நடவடிக்கைகளும் அதற்கேற்றபடி இருக்க வேண்டும். உங்களுக்கென இருக்கும் ஜாலியான பகுதியை இங்கே காட்டாமல், தனியே வையுங்கள். அஃபீஷியலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் 100 சதவீதம் பணி நிமித்தமான விஷயங்களையே பேசட்டும். உதாரணத்துக்கு, நீங்கள் ஐ.டி படித்தவராக இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஜெயித்தார் என்பதை விட, நோக்கியா நிறுவனம் எப்போது கை மாறப் போகிறது என்பதே உங்கள் செய்திப் பகிரலில் இருக்க வேண்டும்.

* எல்லா சமூக வலைதளங்களிலும் நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது செய்கிறீர்கள் என அடிக்கடி அடுத்தவருக்குத் தெரிவிக்கும் வசதி இருக்கும். இதில், ‘தோசை சாப்பிட்டேன்... உப்பு கம்மி’ என்றெல்லாம் எழுதாமல், பணியிடத்திலோ கல்லூரியிலோ குறிப்பிடும்படியாக நீங்கள் செய்த சாதனையை மட்டும் குறிப்பிடுங்கள். அப்படிக் குறிப்பிடும்போதும் ‘நானே... நான் மட்டுமே செஞ்சேனாக்கும்’ என்பது போன்ற தற்பெருமை டோன் வேண்டாம்.

* மற்றவர்கள் எழுதும் விஷயங்களுக்கு நீங்கள் கமென்ட் போடும் வசதியையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் செய்யும் காரியம் பிடிக்கவே இல்லை என்றாலும், ‘சூப்பர் ஜீ... சூப்பர் ஜீ’ என்று தட்டிக் கொடுத்துவிட்டு, ‘ஆனால்...’ என்று ஆரம்பிப்பதுதான் நிர்வாக வகுப்பில் முதல் பாடம். ஆக, இந்த மாதிரி தளங்களிலும் நெகட்டிவ் வார்த்தைகள் வேண்டாம்.

* லின்க்டு இன் போன்ற தளங்களில் ஒரு கல்லூரி இருக்கிறதென்றால், அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எத்தனை பேர் இந்தத் தளத்தில் இணைந்திருக்கிறார்கள்
உலகெங்கிலும் அவர்கள் எங்கெங்கே வசிக்கிறார்கள், என்ன வேலை பார்க்கிறார்கள், எந்தப் பாடப் பிரிவு வகுப்பில் படித்தவர்கள் அவர்கள் என்கிற தகவலெல்லாம் வரிசையாக வந்து கொட்டும். எனவே, படித்த / படிக்கும் கல்லூரி,  வேலை பார்த்த நிறுவனம் என எல்லாவற்றோடும் நீங்களும் இணைந்திருப்பது கட்டாயம். படித்த கல்லூரியைப் பற்றி தெரிந்துகொள்ளத் தேடுகிறவர்கள் கூட, உங்கள் சுயவிவரத்தைப் பார்த்து, உங்களை நாடி வர இந்தத் தொடர்புகள் வழிவகுக்கும்.

* வேலை தரும் நிறுவனங்கள், தங்களுக்கு வேண்டிய பணியாளர்களைத் தேடும்போது தங்களுக்குத் தேவையான வேலைத் திறன் யாரிடம் இருக்கிறது என்றுதான் தேடிப் பார்ப்பார்கள். உதாரணத்துக்கு, ‘நெட் தெரிந்தவர்கள்... சென்னையில் வசிக்கிறவர்கள்’ என்று தேடினால் அப்படிப்பட்டவர்களை ஒரு சமூக வலைதளம் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தும்.

ஒருவேளை நீங்கள் உங்களின் திறன்கள் அனைத்தையும் சுய விவரத்தில் குறிப்பிடவில்லை என்றால், இப்படிப்பட்ட தேடல்களில் தவறவிடப்படுவீர்கள். எனவே, சுயவிவரத்தில் கேட்கப்பட்டிருக்கும் எல்லா தகவல்களையும் சிரமம் பார்க்காமல் நிரப்பிவிடுங்கள். அடிப்படைப் பயன்பாட்டுக்கு எல்லா சமூக வலைதளங்களுமே இலவசம்.

 நாம் செலவிடப் போவது நம் நேரத்தையும் அறிவையும்தான். அதை முழுதாகச் செய்வோமே! உங்களை இன்டர்வியூவுக்கு அழைத்துப் போகவும் வெற்றி பெறச் செய்யவும் இன்னும் சில நுட்பங்கள் மிச்சமிருக்கின்றன. அவை...
அடுத்த இதழில்...

சமூக வலைதளங்களில் ‘தோசை சாப்பிட்டேன் உப்பு கம்மி’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ் போடாமல்உங்கள் சாதனைகளை பட்டியலிடுங்கள்!