18 இந்திய ராக்கெட்டின் சரித்திரம்



ஆகாயம் கனவு அப்துல் கலாம்

சி.சரவணகார்த்திகேயன்

பிரகாச ஜோதி


எஸ்எல்வி-3 உருவாக்கும் பணிகள் 1970ம் ஆண்டின் மறுபாதியில் வேகமெடுத்தன. இதன் ஏவுகலம், நான்கு அடுக்கு (Stage) ராக்கெட். ஒவ்வொரு அடுக்கையும் வடிவமைக்கும் பொறுப்பை சாராபாய் துறையின் வெவ்வேறு ஜாம்பவான்களிடம் ஒப்படைத்தார். முதல் அடுக்கு, வி.ஆர்.கோவரிகர்; இரண்டாம் அடுக்கு, எம்.ஆர்.குருப்; மூன்றாம் அடுக்கு ஏ.ஈ.முத்துநாயகம்; நான்காம் அடுக்கு, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். இவற்றை ஒருங்கிணைத்து ஏவுகலத்தை உருவாக்கும் பொறுப்பு ஒய்.ஜெ.ராவிடம் அளிக்கப்பட்டாலும், அவர் திட்டத் தலைவர் அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆனால் இதனால் நடந்த பக்க விளைவு ஒன்றுண்டு. அப்படி திட்டத் தலைவர் என ஒருவர் இல்லாததால், அவ்வேலைகள் சாராபாயின் தலையில்தான் விழுந்தன. நாட்டின் அணுசக்தித் துறையையும் விண்வெளித் துறையையும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில் அவருக்கு இது கூடுதல் சுமை. நெடுநாள் அது தொடரவில்லை!

இந்த நால்வருமே ஒவ்வொரு விஷயத்தில் தம்மை நிரூபித்திருந்த அனுபவஸ்தர்கள். ஏவுகலத்தின் ஒவ்வொரு அடுக்கை அமைக்கவும் தேவைப்படும் திறமைக்கும் இந்த அனுபவத்துக்கும் தொடர்பிருந்தது. கலவை செலுத்துபொருளில் (Composite Propellant) சாதனைகள் புரிந்தவர் கோவரிகர். செலுத்துவியலிலும் (Propulsion) வாணநுட்பத்திலும் (Pyrotechnics) தேர்ந்தவர் எம்.ஆர்.குருப். நான்காவது அடுக்கில் கட்டுருவாக்கத்தில் (Fabrication) புது உத்திகளைக் கையாளும் ஆசாமி தேவை. அதனால் அப்துல் கலாம்.

இது போக, வெப்பக் கவசம் (Heat Shield) அமைக்கும் பொறுப்பு எம்.கே.முகர்ஜியிடம் அளிக்கப்பட்டது. செலுத்தி (Launcher) சி.எல்.அம்பா ராவ்; வழிநடத்தி (Guidance Package) எஸ்.சி.குப்தா; தடம் தொடர்தல் (Tracking) ஆர்.ஆராவமுதன்; தொலைப்பதிவு (Telemetry) பி.ராமகிருஷ்ண ராவ் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆட்கள் அமர்த்தப்பட்டனர்.

சாராபாய் பணிக்கு ஆளைத் தேர்ந்தெடுக்கும் பாணி அலாதியானது. அனுபவத்துக்கு மதிப்பளிக்கும் அதே நேரம் துடிப்பான இளைஞர்களையும் ஊக்குவித்தார். எஸ்எல்வி-3 திட்டத்தின் தொலைக்கட்டளையை (Telecommand) அமைக்க ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அப்போது இருவர் அதற்குப் பொருத்தமாய் இருந்தனர். ஒருவர், பல்லாண்டு ஆழமான அனுபவம் கொண்ட யூ.ஆர்.ராவ்; மற்றவர், சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த - அப்போது பிரபலமற்ற - மாதவன் நாயர்.

ஒருமுறை சாராபாயிடம் மாதவன் நாயர் தான் வடிவமைத்த தொலைக்கட்டளைச் சாதனத்தைக் காட்டிச் செயல் விளக்கம் அளித்தார். அதன் நம்பகத்தன்மை அவரைக் கவர்ந்தது. சாராபாய் கொஞ்சமும் தயங்காமல் மாதவன் நாயரை எஸ்எல்வி-3யின் தொலைக்கட்டளைக்குப் பொறுப்பாக நியமித்தார். அது அன்று இஸ்ரோவில் எவரும் எதிர்பாராதது. அனுபவம் மிக்க யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோளுக்குப் பொறுப்பேற்றார்.

இப்படி பலப்பல திசைகளில் எஸ்எல்வி-3 என்ற ஒற்றைப் பறவை சிறகடித்தது. கலாமின் குழு நான்காவது அடுக்கை உருவாக்கும் பணியில் தீவிரமாய் இறங்கியிருந்தது. திட்டம் தொடர்பான எல்லாத் தகவல்களும் குழுவினருக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் கலாம். ஆனாலும் அவர்களுக்கு உபயோகமான வழிகாட்டியாக, உத்வேகமூட்டும் உந்துசக்தியாகச் செயல்படுமளவு போதிய நேரத்தை அவரால் ஒதுக்க முடியவில்லை. அது அவருக்குப் பெரும் மனக்குறையாக இருந்து வந்தது.

அப்போது பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான CNESன் தலைவராய் இருந்த பேராசிரியர் குரியன் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது பிரான்ஸில் டயமன்ட் (Diamont) என்ற ஏவுகலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஏவுகணை தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் குரியனுக்கு அத்துபடி. அவரும் சாராபாயும் இணைந்து கலாமின் நேர மேலாண்மைப் பிரச்னைக்கு வழிகாட்டினார்கள். சவாலற்ற சில்லறை வேலைகளில் இருந்து கலாம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டியது, சாதிக்கும் வாய்ப்பு கொண்ட பணிகளை மட்டும் எடுத்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.

குரியன் ஓர் உதவி கேட்டார். டயமன்ட் ராக்கெட்டின் நான்காவது அடுக்கை இஸ்ரோ செயல்படுத்தித் தர முடியுமா என! சாராபாய் அதை ஒப்புக் கொண்டார். எஸ்எல்வி-3யின் நான்காவது அடுக்கை வடிவமைத்த கலாமிடம் அந்தப் பொறுப்பும் வந்து சேர்ந்தது. ஆனால் இரண்டின் அளவுகளும் வேறு வேறு. வடிவமும் வெவ்வேறு. ஒன்றுக்கொன்று பொருத்தமுடையதாக மாற்ற சில புதுமைகளைச் செய்ய வேண்டி இருந்தது. கலாம் தன் குழுவின் முழுத் திறமையை இதில் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். புதிதாய் ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வமாய் இருப்பவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினார். அவர்களின் அபிப்பிராயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார். பிறகு வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொடர்பான குறிப்புகளை எழுதி அவர்களிடம் கொடுத்து ஐந்து அல்லது பத்து நாட்களில் அதைச் செய்து முடிக்க வேண்டும் எனக் கேட்டார். இப்பழக்கத்தை விடாமல் பின்பற்றினார்.

இந்தச் சூத்திரம் நல்ல பலனை அளித்தது. ஐரோப்பாவில் இதே தரத்திலான திறமை கொண்டவர்கள் மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கும் வேலையை ஒரே ஆண்டில் இக்குழு முடித்திருப்பதாக குரியன் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். வாரம் ஒரு முறையேனும் குழுவினைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கலாம். அது நேரத்தையும் உழைப்பையும் தின்பதாக இருந்தாலும் அவசியமெனக் கருதினார். அதிகார அடுக்குகளில் கீழேயும் மேலேயும் இருப்பவர்கள் இப்படி இணைந்து பணியாற்றியது சாதகமான அம்சம். குழுவில் ஒவ்வொரு நிலையிலும் தலைமைப் பண்புள்ளவர்கள் உண்டு என அடையாளம் கண்டுகொண்டார் கலாம்.

இப்படி எஸ்எல்வி-3ன் நான்காம் அடுக்கும், டயமன்ட் ஏவுகலத்துக்கான நான்காம் அடுக்கும் முழுமையாகப் பிறவி எடுத்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக பிரான்ஸ் டயமன்ட் திட்டத்தை ரத்து செய்தது. கலாம் இதனால் மிக வருத்தமுற்றார். எஸ்எல்வி-3 திட்ட வளர்ச்சி பற்றி ஆராய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சாராபாய். ஜூன் 1970ல் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் முதல் மூன்று அடுக்குகளின் விளக்க நிகழ்வுகளும் எந்தச் சிக்கலுமின்றி சிறப்பாக முடிந்தன. கடைசியாய் நம் நாயகன் கலாமின் நான்காம் அடுக்கு.

கலாம் தன் குழுவின் ஐந்து விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தம் வேலைப் பகுதியைத் தெளிவாகவும் செறிவாகவும் விளக்கினார்கள். கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இறுதியில் முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதாக முடிவெடுத்தனர். அப்போது சாராபாய்க்கு நெருக்கமான ஒரு விஞ்ஞானி எழுந்தார். ‘‘எல்லாம் சரிதான். குழு உறுப்பினர்கள் அவரவர் செய்த வேலைகளை விளக்கினர். இதில் உங்கள் பங்கு என்ன கலாம்?’’ எனக் கேட்டார்.
 
விக்ரம் சாராபாய் பொதுவாய் கோபப்படுபவர் அல்ல. ஆனால் அக்கேள்விக்கு அவர் சட்டெனச் சினமுற்றார். ‘‘திட்ட நிர்வாகம் என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் அதற்கு ஓர் அற்புதமான உதாரணத்தைப் பார்த்தோம். குழுப் பணியின் ஓர் அபாரமான செயல் விளக்கக் காட்சி இது. ஒரு திட்டத்தின் தலைவர் என்பவர் எப்போதுமே தன்னுடன் உள்ளவர்களை ஒருங்கிணைப்பவர். இதை கலாம் கச்சிதமாகச் செய்திருக்கிறார்’’ என்றார். கேட்டவர் வாயடைத்துப் போனார்.

ஒருமுறை சாராபாய் தும்பா வந்திருந்தார். ஏவுகலம் ஒவ்வொரு அடுக்காகப் பிரிந்து போகும் அமைப்பின் இயக்கத்தை அவருக்கு நிகழ்த்திக் காட்டும் நோக்கில் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்ட கடிகைச் சுற்றை (Timer Circuit) இயக்கி வைக்கும்படி கலாம் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். சாராபாய் புன்னகையுடன் பட்டனை அழுத்த, ஒன்றும் நடக்கவில்லை. அதை வடிவமைத்த பிரமோத் காலே அதிர்ந்தார். கடிகைச் சுற்றை அகற்றி விட்டு எரிபொருளில் பொறி கிளப்பும் பைரோ சாதனத்துடன் நேரடித் தொடர்பு கொடுத்தனர். எரிபொருள் பற்றி, ஏவுகல அடுக்குகள் சரியாய்ப் பிரிந்தன. கலாமையும் காலேவையும் பாராட்டினாலும் சாராபாய் முகத்தில் மாறுதல் தென்பட்டது. அன்றிரவு சாராபாயைச் சந்திக்க கலாமுக்கு அழைப்பு வந்தது.

லேசான கலக்கத்துடன்தான் கலாம் சென்றார். யாரையும் குறை சொல்லவில்லை. அறிவு அல்லது திறமையை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அவர் கேட்டது ஒரே கேள்வி:  ‘சவாலாகத் தோன்றாத வேலையில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமா?’ அந்த விவாதத்தில் பிரச்னையின் நாடியைத் துல்லியமாய்ப் பிடித்தார் சாராபாய். ராக்கெட்டின் வெவ்வேறு அடுக்குகளை ஒரே இடத்தில் உருவாக்கி இணைக்கும் வசதி அன்று இல்லை. அதனால் மின்சாரவியல் மற்றும் இயந்திரவியல் வேலைகளின் ஒருங்கிணைப்பில் சிக்கல்கள் இருந்தன. இதை எடுத்துச் சீராக்க ஏவுகணைப் பொறியியல் பிரிவு அமைப்பதென மறுநாள் காலை தீர்மானித்தார் சாராபாய்.

அதன்பின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒவ்வொரு முறை ஏவுகணைப் பொறியியல் பிரிவின் கூட்டம் நடந்து முடிந்ததும் அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சாராபாய்க்குத் தகவல் அளிப்பது கலாமின் வழக்கம். 1971 டிசம்பர் 30. அன்று ஏவுகணைக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கலாம் அதில் கலந்து கொண்டு வெளியே வந்ததும் சாராபாய்க்கு போனில் பேசி கூட்டம் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சாராபாய் தும்பா வந்திருந்தார். வந்த வேலை முடிந்ததால் மும்பை திரும்ப திருவனந்தபுரத்தில் அன்றிரவே விமானம் ஏறுவது அவர் திட்டம். கலாம் அன்று தும்பா திரும்ப டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் ஏறினார். நேரில் பேசி விரிவாய்ப் புரிந்துகொள்ள கலாமை திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே காத்திருக்கச் சொன்னார் சாராபாய்.

ஆனால் திருவனந்தபுரத்தில் கலாமை ஒரு மாபெரும் அதிர்ச்சிதான் வரவேற்றது!

ஒரு விஞ்ஞானி எழுந்தார். ‘‘எல்லாம் சரிதான். குழு உறுப்பினர்கள் அவரவர்  செய்த வேலைகளை விளக்கினர். இதில் உங்கள் பங்கு என்ன கலாம்?’’ எனக்  கேட்டார்.

(சீறிப் பாயும்...)