இறுதிச்சுற்று விமர்சனம்



விளையாட்டு அரசியலால் பதக்க வாய்ப்புகளை இழந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் - இந்நாள் முரட்டுப் பயிற்சியாளர் மாதவன், குத்துச்சண்டை களத்தின் அரசியல், பிற்போக்குத்தனம்... இத்தனை பிரச்னைகள் தாண்டி ஒரு வெற்றிகரமான, இளம் குத்துச்சண்டை வீராங்கனையை உருவாக்க முடிந்ததா என்பதே ‘இறுதிச்சுற்று’!

வேலை இல்லாத, அவசியமான வசதிகள் கூட இல்லாத மீனவப் பெண்ணாக ரித்திகாவும், அவரது குடும்பமும். அதே நேரத்தில் டெல்லியின் குத்துச்சண்டை அரசியலில் சிக்கி, தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்பும் விதமாக சென்னைக்கு வருகிறார் மாதவன். வந்த இடத்தில் ரித்திகாவிடம் திறமை இருப்பதை உணர்ந்து, அவரை சாம்பியன் ஆக்க மாதவன் முயல்வதும், அது பலித்ததா என்பதுமே மீதி சுவாரஸ்யம்.

மிகவும் அரிதான உணர்வு பூர்வமான காட்சிகளுடன், சிரிப்பு வசனங்களைக் கூட சிந்திக்க வைக்கிற  விதமாக மாற்றியிருக்கும் ஒரு தெளிந்த சினிமா... இயக்குநர் சுதா கோங்கரா பிரசாத் உடனடியாக நம்பிக்கை இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார். ‘இறுதிச்சுற்று’வின் சிறப்பு, அதன் இயல்பான கதையாடலில் அமைகிறது. பூமியில் காலூன்றி நடக்கும் கதாபாத்திரங்களை நாம் உள்ளது உள்ளபடி அணுக சௌகரியமாக இருக்கிறது. அதன் இயல்பான பிரச்னைகளின் சுவாரசியத்தில் நம்மை ஒரு நேர்க்கோட்டில் இணைத்துவிடுகிற வேலையை பக்குவமாகச் செய்திருக்கிறார் சுதா.

விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசுகிறது படம். அதே நேரத்தில் மனித உணர்வுகளை நம் மீது ஏற்றிச் சொல்லியும் நம்மை வழியனுப்புகிறார்கள். மாதவன் கடந்து வந்த பாதையில், ‘அலைபாயுதே’வுக்கு நேர் எதிர்ப் பயணத்தில் வந்து  பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய கேரியரில் காலாகாலத்திற்கும் நிற்கும் பதிவு. விளையாட்டின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளாது இருக்கும் மாணவியை நிந்திப்பதும், கருணை காட்டுவதும், பாராட்டுவதும், கோபப்படுவதுமாக பல்முகம் காட்டுகிறார் மாதவன். ஜெயித்த பிறகு கெத்துப் பார்வை பார்த்து சிலிர்ப்பதும், தவற விடும் குத்துகளை சகித்துக்கொண்டு கோபத்தை அடக்கிக்கொண்டு அடுத்த ரவுண்டுக்கு வருவதுமாக ஜொலிக்கிறார்.

நம்ப முடியாத ஆச்சரியமும் வியப்பும் ஒருசேர வருவது ரித்திகாவிடம். ஆட்டம், பாட்டம், குத்துச்சண்டையில் தீர்க்கம், மாதவனின் அர்ப்பணிப்பில் கரையும் காதல், கோபக்காரர் மாதவனுக்கே சவால் விட்டு திமிறும் இடங்கள் என ஒவ்வொரு செயலும், சொல்லும், நடிப்பும், இயல்பும் செம!

இரண்டு வரிகளோ, ஒற்றை வார்த்தையோ அல்லது பொரிந்து தள்ளும் சொற்பெருக்கோ... எல்லாமே பளிச் சிந்தனையையும், தேசத்தின் சோகத்தையும் கொண்டு வந்து தருகின்றன. அருண் மாதேஸ்வரனின் வசனவரிகள் பக்குவம். கொஞ்சம் கூடிப்போயிருந்தாலும், காதல் கதையாகி இருக்க வேண்டிய படத்தை, சுருதி குறையாமல் நேர்ப்போக்கில் செலுத்துகிறார் இயக்குநர். விளையாட்டு ஆணையர்களின் அரசியலை, பிற்போக்குத்தனத்தை, ஊழலின் ஊற்றுக்கண்ணாக, சிபாரிசின் விளைநிலமாக விளையாட்டு அமைப்புகள் இருப்பதை பல கதைகளாக பேசிச் செல்கிறது திரைக்கதை. நாசர், ராதாரவி, காளி வெங்கட், மும்தாஜ் என அத்தனை நடிகர்களும் எளிய அன்பையே பேசுகிறார்கள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு மொத்த படத்தையும் கண்களுக்குள் நிற்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் எல்லாமே சுறுசுறு. புதுக் குரலில் ‘தீ’ பின்னியெடுக்கிறார். ‘ஏ... சண்டக்காரா...’,  ‘உசுரு நரம்புல...’ கேட்கக் கேட்க சுகம். எளிய மனிதர்களை, அவர்களின் திறமையை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்ற பாஸிட்டிவ் சிந்தனை பளிச்சிடுவதால், கனிந்த அன்பில் நம் கரம் பற்றுகிறது ‘இறுதிச்சுற்று’!

- குங்குமம் விமர்சனக் குழு