தலை வேலன்டைன்ஸ்டே!



தயாராகும் திரை ஜோடிகள்

முதல் கா தல், முதல் முத்தம் போல மறக்க முடியாத அழகான விஷயங்களில் ஒன்று, கல்யாணத்துக்குப் பிறகு வரும் முதல் வேலன்டைன்ஸ் டே. இந்த வருடம் தலை வேலன்டைன்ஸ் டே மூடில் இருக்கும் ஜோடிகள் இவர்கள்...

ஆரி,நதியா

‘‘ரொமான்ஸ் குறைஞ்சா லைஃப் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்காது. ஒவ்வொரு தருணத்தையும் காதலோடு ரசிச்சா மட்டுமே வாழ்க்கை இனிக்கும்!’’ - ரசனையாக ஆரம்பிக்கிறார் ஆரி.

‘‘பேச்சுலருக்கு கல்யாணம் நெருங்கும்போது இருக்குமே... அது மாதிரி ரொம்ப ரொம்ப எக்ஸைட்டிங்கா, த்ரில்லா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் ப்ரப்போஸ் பண்ற தருணம் முக்கியமானது. கல்யாணத்துக்கு அப்புறமும் அந்தக் காதல் இன்னும் ஃப்ரெஷ்ஷாதான் இருக்குனு நிரூபிக்கற ஒரு சந்தர்ப்பமா பிப்ரவரி 14 கிடைச்சிருக்குதுனு நினைக்கறேன். அவங்களை எப்படி இம்ப்ரஸ் பண்றது, என்ன கிஃப்ட் கொடுத்தா சந்தோஷப்படுவாங்கனு யோசனையும் குழப்பமும் இருந்துக்கிட்டே இருக்கு.

‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?’னு மிஸஸ்கிட்ட ச்சும்மா நூல் விட்டுப் பார்த்தேன். ‘நீங்க என் பக்கத்துல இருந்தாலே போதும்’னு வழக்கமா, கவிதையா ஒரு பதில் சொன்னாங்க. ‘உண்மையா? சும்மா சொல்றாங்களா?’னு கூட கண்டுபிடிக்க முடியல. ‘மாயா’வுக்குப் பிறகு நான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களோட ஷூட்டிங் இருந்ததால வீட்ல நேரம் செலவழிக்க முடியல. ஒருவேளை அதை நினைச்சுக் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம். இந்த வேலன்டைன்ஸ் டேவுக்கு என் மனைவிக்கு கிஃப்ட் பண்றதுக்கு மூணு, நாலு சாய்ஸ் யோசிச்சு வச்சிருக்கேன். எப்படி சர்ப்ரைஸ் பண்ணினா மார்க் ஸ்கோர் பண்ணலாம்னு இப்போ வரை ப்ளான் போயிட்டிருக்கு!’’

விதார்த்,காயத்ரி

‘‘நானும் என் மனைவியும் இயற்கை உணவு முறைகளைத் தெரிஞ்சுக்கறதுக்காக இப்போ கோவை வந்திருக்கோம். இந்தக் காதலர் தினத்தை இயற்கையோடு இணைந்து கொண்டாடறதுக்கான முன்னோட்டம் இது. கல்யாணம் ஆனதிலிருந்து என் மனைவி காயத்ரியை தீவிரமா காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் அவங்க மேல வச்சிருக்க காதலை விட, அவங்க என் மேல் வச்சிருக்கறது பவர்ஃபுல் லவ். அவங்களுக்கு அடிக்கடி சர்ப்ரைஸா ஏதாவது பரிசளிக்கணும்னு விரும்புவேன். சமீபத்துல அவங்க பிறந்த நாள் வந்தது. அன்னைக்கு ஸ்வீட் சர்ப்ரைஸா அதிகாலையே அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனேன். அழகான ஒரு மோதிரம் பரிசா கொடுத்தேன். அதை இன்னமும் ஆச்சரியமா சொல்றாங்க.

இப்போ சட்டம் படிக்கிறாங்க. பிரமாதமான படிப்பாளி. நல்ல சினிமாக்களைத் தேடித் தேடி அவங்க பார்த்து ரசிக்கிறாங்க. இது அவங்ககிட்ட எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். இந்த லவ்வர்ஸ் டே அன்னிக்கு அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தர்ற மாதிரி ஒரு பிரமாதமான கிஃப்ட் குடுக்கலாம்னு ஐடியா பண்ணி வச்சிருக்கேன். காதலர் தினத்துக்கு முன்னாடியே ‘குங்குமம்’ கடைக்கு வந்திடும். ஸோ, என்ன கிஃப்ட் குடுக்கப்போறேன்னு இதுல சொல்லிட்டா அப்புறம் அவங்களுக்கு சஸ்பென்ஸ் போயிடும்..!’’ என்கிறார் விதார்த் குறும்பாக!

- மை.பாரதிராஜா