நான் சமூகப் பொறுப்புள்ள இளைஞன்!



மிருதன் ரவி!

‘‘எல்லாருமே என்னை ரொமான்டிக் ஹீரோனு சொல்வாங்க. ஆனா, நிஜத்தில் நான் அப்படி இல்ல. மனைவி ஆர்த்திகிட்ட கூட கல்யாணத்துக்கு முன்னாடி நான் லவ் ப்ரபோஸ் பண்ணினது கிடையாது. அவங்களுக்கு கொடுத்த கிஃப்ட்னு நினைச்சுப் பார்த்தாகூட க்யூட்டான ஒரு பொக்கே, அழகான ஒரு ஷால்னு விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்கே அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்படிப் பழகிட்டாங்க. இந்த ‘வேலன்டைன்ஸ் டே’க்குக்கூட சின்ன ரிங் வாங்கிக் குடுத்தேன். விலை ஆயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். சாதா மெட்டல்தான். ரியாலிட்டில நான் ரொம்ப non ரொமான்டிக்!’’ - வெளிப்படையாகப் பேசுகிறார் ஜெயம் ரவி. ‘வேலன்டைன்ஸ் டே’ ஸ்பெஷலாக ‘மிருதன்’ ரிலீஸ். ஹாட்ரிக் ஹிட் ஹீரோ, கொஞ்சம் பரபரப்பும், கொஞ்சம் புன்னகையுமாக வரவேற்கிறார்!

‘‘என்னோட படங்களுக்கு டப்பிங் பேசணும்னா குறைஞ்சது ஒரு வாரமாவது தேவைப்படும். சில படங்களுக்கு பத்து நாள் கூட டப்பிங் பேசியிருக்கேன். ஆனா, ‘மிருத’னுக்கு ஒன்றரை நாள்லயே முடிச்சிட்டேன். ‘டப்பிங் ஓவர்’னு  இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் சொன்னதும் எனக்கே ஸ்வீட் ஷாக். வசனங்கள் அவ்வளவு கம்மி. விஷுவலுக்குத்தான் அவர் எக்கச்சக்கமா மெனக்கெட்டிருக்கார். சினிமாவின் மொழியே விஷுவல்தானே!’’

‘‘எப்படி வந்திருக்கு ‘மிருதன்’?’’

‘‘என் படங்கள்லேயே குறைஞ்ச நாட்கள்ல நடிச்சு முடிச்ச படம் இது. 55 நாட்கள். ஸோம்பி என்பது தமிழுக்கு புது ரகம். ஸோம்பின்னா தமிழ்ல ‘ரத்தக் காட்டேரி’னும் சொல்லலாம். ஆனா, இது ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் கதை. ஹாலிவுட்ல ஸோம்பி டைப் படங்கள் நிறைய வந்திருக்கு. இயற்கை நமக்கு எதிரா திரும்பினா, என்ன விளைவுகள் ஏற்படும்ங்கறதை சொல்லியிருக்கோம். படத்துல நான் டிராஃபிக் போலீஸ். வாழ்க்கையில ரிஸ்க்கே எடுக்கக் கூடாதுனு நினைக்கற எனக்கு, ஒரு மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிய தருணம் வருது.  லவ், த்ரில்லர், ஹாரர், ஆக்‌ஷன்னு எல்லா அம்சமும் இருக்கற படமா இதைப்  பார்க்கறேன். ஹீரோயின் லட்சுமி மேனன். இதுல அவங்க டாக்டர்.

படத்துல ஸோம்பீஸ் தத்ரூபமா இருக்கணும்னு  நிறைய உழைச்சிருக்கோம். அமெரிக்காவில் இருந்து மேக்கப் மெட்டீரியல்கள் வரவழைச்சோம். 50  மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள். 300 ஃபைட்டர்கள், 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள்னு ஷூட்டிங் ஸ்பாட்டே ஒரு புது உலகத்துக்குள்ள போன உணர்வைத் தந்துச்சு. ஒவ்வொருத்தருக்கும் மேக்கப் போடவே 12 மணி நேரத்துக்கு மேல ஆகும். ஸோம்பி கெட்டப்னு ஷூட்டிங்ல எப்பவும் என்னைச் சுத்தி நூற்றுக்கணக்கானவங்க இருப்பாங்க. ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’னு  இதுக்கு முன்ன வித்தியாசமான களங்கள்ல படங்கள் பண்ணின சக்தி சௌந்தர்ராஜன், இப்போ ஸோம்பியைத் தொட்டிருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னும் உயரம் தொடுவார்!’’

‘‘லட்சுமி மேனன்..?’’

‘‘முதல் தடவையா லட்சுமி மேனன் கூட நடிச்சிருக்கேன். ரொம்ப திறமைசாலி. பழகுறதுக்கு இனிமையான பொண் ணு. ஒரு சீன்ல ரெண் டு பக்க டயலாக்கை ஒரே டேக்ல பேசி யூனிட்ல கைதட்டலை அள்ளிட்டாங்க. இந்தப் படத்துல நான், லட்சுமி மேனன், காளி வெங்கட், ரவீந்திரன் சார், ஆர்.என்.ஆர்.மனோகர் சார்னு மொத்தமே அஞ்சு ஆர்ட்டிஸ்ட்கள்தான். ஸோ, ஷூட்டிங்கில் ஒவ்வொருத்தரோடவும் பேசிப் பழக நிறைய வாய்ப்பு கிடைச்சது!’’

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’னு ஒரே வருஷத்தில் ஹாட்ரிக் வெற்றி... எப்படி எடுத்துக்குறீங்க?’’

‘‘நான் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குனு இந்த வெற்றி உணர்த்துச்சு. சின்ஸியரா வேலை செஞ் சா, வெற்றி நிச்சயம் னு இந்த மூணு படங்களும் புரிய வச்சிருக்கு. ‘சகலகலா வல்லவன்’ சேர்த்து போன வருஷத்தில் மொத்தம் 4 படங்கள். எல்லாத்தையும் சமமா நினைச்சுதான் வேலை செஞ்சேன். நல்ல ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுத்திருக்கேன்ங்கற சந்தோஷம் எனக்கு எப்பவுமே இருக்கு. இன்னும் பெரிய சந்தோஷம்... ‘ரோமியோ ஜூலியட்’ லக்‌ஷ்மண், ‘பூலோகம்’ கல்யாண் கிருஷ்ணன்னு ரெண்டு நல்ல அஇயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் இன்னும் பெருமையா, சந்தோஷமா உணர்றேன்!’’

‘‘ ‘பேராண்மை’ல ஆரம்பிச்சு ‘பூலோகம்’ வரை தொடர்ந்து கோபக்கார இளைஞனா இருக்கீங்க. நிஜத்துல நீங்க எப்படி?’’

‘‘கோபக்கார  இளைஞன்னு சொல்றதை விட, நான் சமூகப் பொறுப்புள்ள இளைஞன். நம்மளோட இனம், மொழினு எல்லாமே ஏற்கனவே இங்கே தீர்மானிக்கப்பட்டிருக்கற மாதிரி, நாம இந்த சமுதாயத்துல ஒருத்தன் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். இந்த சமுதாயத்துக்குள்ளதான் நாம வாழ்ந்தாகணும். நான் நடிச்ச பல படங்கள் வெளி உலகத்துக்கு நம்மளோட நிலையை சுட்டிக் காட்டியிருக்கு. காலேஜ் படிக்கும்போது ‘வாக்கிங் பில் போர்டு’னு ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கேன். அதாவது, டி-ஷர்ட், தொப்பி, ஷூ மூலமா ஏதோ ஒரு நிறுவனம் நம்மை விளம்பரமா பயன்படுத்திக்கறது. இதுக்கான முழு அர்த்தத்தை ‘பூலோகம்’ல நடிக்கும்போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன். இங்கே நாம சுத்தமா இருக்கறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம்ம  சமுதாயமும் சுத்தமா இருக்கணும்.
அப்போதான் நிம்மதியான வாழ்க்கை சாத்தியமாகும்!’’

‘‘அடுத்து அண்ணன் மோகன்ராஜாவின் படமா?’’

‘‘இல்ல! அண்ணன் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கார். ‘மிருதன்’க்கு  அப்புறம் நாலஞ்சு ப்ராஜெக்ட்ஸ் பேச்சு வார்த்தையில இருக்கு. உடனடியாக  ஆரம்பிக்கப் போறது ‘ரோமியோ ஜூலியட்’ லக்‌ஷ்மண் டைரக்‌ஷன்ல பிரபுதேவா  ஸ்டூடியோஸ் தயாரிக்கற படம்தான்!’’

- மை.பாரதிராஜா