ஐந்தும் மூன்றும் ஒன்பது



 மர்ம தொடர்-56

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்

‘‘நான் சிரித்ததைப் பார்த்த அந்த ஈ என்பவன், ‘சாமி! இப்படி சிரிச்ச ரொம்ப பேரை நான் பாத்துட்டேங்க. அப்புறம் அவங்க பட்ட பாட்டைப் பார்த்து நான் சிரிச்சிருக்கேன்’ என்றான்.

அந்த பதில் என்னைக் கொஞ்சம் மிரட்டவே செய்தது. இருந்தும் என் பகுத்தறிவு, ‘அவனை விடக் கூடாது’ என்றது. ‘யப்பா... நான் ஏன் சிரிச்சேன்னு தெரியாம பேசாதே. இந்தப் பாறை மேல நின்னு நான் ‘சிவசிவா’ன்னா சித்தர் வந்து கூட்டிப் போவார்னு சொன்ன பாரு... அதுக்காக சிரிச்ேசன். ‘சிவசிவா’ன்னு சிவ பக்தர்கள்தான் சொல்வாங்க. அதுக்காக ‘ஒரு லட்சம் தடவை அதை விடாம சொல்லணும்’னு ஒரு அளவுகோல் வச்சதெல்லாம் ரொம்ப தப்பு.

எக்ஸிபிஷன் பாக்க வர்றவங்க கட்டணம் வசூலிக்கற மாதிரிதான் இதுவும். இதுக்கு பேசாம ‘இவ்வளவு பணம் கொடுங்க’னு சொல்லிடலாம். பக்திங்கறது இயல்பா உருவாகணும். இப்படி நிர்ப்பந்தப்படுத்தி வர வைக்கக்கூடாது...’என் கருத்துக்கு அந்த ஈயும் பதில் கூறினான். ‘அய்யா... இங்க எல்லாமே கணக்குங்க! ஒரு லட்சம் தடவைங்கறதும் கணக்குங்க. நான்கூட உள்ள இருக்கற சாமிகிட்ட ‘இது என்ன கணக்கு சாமி’னு கேட்டேன். அதுக்கு சாமி, ‘ஒரு லட்சத்துக்கு எவ்வளவு பூஜ்ஜியம்னு உனக்குத் தெரியுமா’னு கேட்டாரு. ‘தெரியாது சாமி’ன்னேன். ‘அஞ்சு பூஜ்ஜியம்’னு சொன்னாரு. ‘சரி சாமி! அதுக்கென்ன’னு கேட்டேன்.

‘அந்த அஞ்சு பூஜ்ஜியமும் பஞ்ச பூதங்களைக் குறிக்குது. ஒரு பூதத்துக்கு ஒரு பூஜ்ஜியம்னு கணக்கு. அந்தப் பாறை சாதாரண பாறை கிடையாது... அதுல இரும்புக் கனிமம் இருக்கு. கனிமப்பாறை மேல் சூரிய வெளிச்சம் படும்ேபாது வெப்பம் அதிகமா இருக்கும். அந்த வெப்பத்தைத் தாங்கி மனசை ஒருநிலைப்படுத்த நிறைய ஆத்மசக்தி தேவை. அது குறைவா உள்ளவங்களால இந்த காலாலங்கிரி கணக்கைப் படிச்சுப் புரிஞ்சுக்க முடியாது.

ஊர் உலகத்தைப் பொறுத்தவரை அஞ்சோடு மூன்றைக் கூட்டினா எட்டு வரும். ஆனா, இங்க மட்டும் ஒன்பது வரும். இது தப்புக் கணக்கும் கிடையாது; அது எப்படினு தெரிஞ்சிக்கவும் புரிஞ்சுக்கவும் சூட்சம அறிவு வேணும். சூட்சம அறிவு யாருக்கு இருக்கும்னா, தன் உடம்புல உள்ள அஞ்சு பூதத்தையும் சம பலத்துல வச்சிருக்கிறவனுக்குத்தான் இருக்கும்’னு சொன்னாரு.

லட்சம் தடவை சொல்ல முடியாம சில ஆயிரம் தடவை சொல்லிட்டு ‘போதும்டா சாமி’னு திரும்பிப் போனவங்க பலர் உண்டு. ‘மீறிப் போனா என்னாயிடும்’னு உள்ள போனவங்க யாருமே அதன் பிறகு வாழலை. நான்லாம் சாமியால தீட்சை கொடுக்கப்பட்டு இந்த காலாலங்கிரில சேவை செய்யறவன். சாமிங்க பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டோம்’ என்று ஒரு பெரிய விளக்கமே கொடுத்தான். நான் அதன் பிறகு மிகவே யோசித்தேன். அப்போது வனத்துறை அதிகாரி ஒருவர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். ‘சார்! நீங்கதானே கணபதி சுப்ரமண்யன்’ என்று கேட்டார். நான் ஆச்சரியத்தோடு தலையசைக்க, ‘சார், உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்காங்க. உங்க வீட்ல இருந்து எனக்குத் தகவல் வந்தது. நீங்க இந்தக் காட்டுக்குள்ள எங்க இருந்தாலும் உடனே கூட்டிக்கிட்டு வரச் சொல்லி கவர்னர் ஆபீஸ்ல இருந்தே போன் வந்தது. போகலாமா?’ என்று கேட்டார்.

எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சி; ஒருபுறம் தடுமாற்றம். நான் தயங்குவதைக் கண்டவர், ‘காலாலங்கிரிக்கு போய் சாமிகளைப் பாக்கணுமா?’ என்று கேட்டார். ‘ஆமாம்... ஒரு ஆய்வாளனாக எனக்கு இது மிக அவசியம். ஆனால் இதன் பின்புலத்தில் ஒரு த்ரெட் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது’ என்றேன்.

‘அச்சுறுத்தல் எல்லாம் எதுவுமில்ல சார். தொடக்கத்துல நான் கூட அப்படி நினைச்சிருக்கேன். காலாலங்கிரி சாமிங்க ரொம்ப நல்லவங்க. ‘எப்ப மழை வரும்’, ‘எப்ப நல்லா வெயில் அடிக்கும்’னு எங்களுக்குச் சொல்லி விடுவாங்க. ஒரு தடவை கூட பொய்யானதேயில்லை. அதே போல அவங்க சொன்ன பல விஷயங்கள் அப்படியே நடந்திருக்கு.

குறிப்பா கும்பகோணத்துல பிஞ்சுக் குழந்தைகள் தீயில கருகி இறந்த சம்பவத்துக்கு முதல் நாள் அவங்கள்ல ஒருத்தர் ஒத்தக்கால்ல நின்னு தவம் செய்தார். ‘எந்த வரத்துக்காக சாமி இப்படி நிக்கறீங்க’ன்னு கேட்டேன். ‘நீயெல்லாம் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக’ என்றார். எனக்குப் புரியல... அதே சமயம் ஐம்பது, அறுபது, எழுபதுனு எண்ணிக்கையை மட்டும் கூட்டிக்கிட்டே போனார். கடைசியா அவர் ஒரு எண்ணை மட்டும்தான் சொன்னார். அதே அளவு குழந்தைகள் இறந்தும் போனாங்க. நான் அப்புறமா சாமிகிட்ட கேட்டேன். ‘எல்லாம் கருவுலயே உயிரை அழிக்கறதால வந்த வினை. அந்த பாவமெல்லாம் ஒண்ணா சேர்ந்து இப்படி ஆகிடுச்சு’ன்னார். ‘யார் தப்பு பண்ணாங்களோ, அவங்கதானே தண்டனை அனுபவிக்கணும். இந்தக் குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க’ன்னு நான் கேட்டேன்.

‘இதுக்குப் பின்னால ஒரு கணக்கு இருக்குப்பா! உனக்குச் சொன்னா புரியாது’ன்னார் சாமி. நானும் அதுக்குப் பிறகு எதுவும் பேசலை. அவங்ககிட்ட பேச முடியாது சார். ‘ஒரு சாதாரண கை தட்டுக்கு கூட ஒரு எதிர்வினை இருக்கு. அந்த சப்த அதிர்வு வெளில பரவி வானத்துல மேகம் வரை ேபாய் மழை பெய்யும்போது ஒரு துளி கூடவோ அல்லது குறையவோ காரணமா இருக்கு’ன்னார் அந்த சாமி. என்னால மறுக்கவும் முடியல; ஏத்துக்கவும் முடியல. அதே சமயம் அவங்களால எந்தப் பிரச்னையுமில்ல. சொல்லப் போனா நன்மைகள்தான். ஆனாலும் எனக்குள்ள இந்த மலையும் இங்குள்ள சாமியார்களும் சித்தர்களும் புதிரானவங்கதான்’ என்றார். எனக்கு கிடைத்த பத்ம விருதை எண்ணியபடியே, ஜோசப் சந்திரனைப் பார்க்காமலே நான் திரும்பினேன்.”

- கணபதி சுப்ரமண்யனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

சதுர்வேதியும் விபாவும் செல்வதை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. ஆனாலும் வள்ளுவர் உடல் மின்சாரத்தைத் தொட்டது போல தூக்கி அடித்தது. அப்போது அவர் கையில் ஏடும், பெண்டுலமும் இருந்தது. அந்த அதிர்ச்சியில் கையிலிருந்த சோழிகள் சிதறின. வள்ளுவர் காரினுள் சிதறிய சோழிகளை எடுத்து பெட்டிக்குள் போட்டார்.

அவர் அதிர்ந்ததை ப்ரியா கவனித்தாள். ‘‘அய்யா! என்னய்யா ஆச்சு?’’ என்று தலையைத் துவட்டியபடியே கேட்டாள். ‘‘ஒண்ணுமில்லம்மா... சமயங்கள்ல உடம்புல வர்மப்புள்ளி மேல அடிபடும்போது உடம்புல மின்சாரம் பாய்ந்த மாதிரி இருக்கும். அப்படி இருந்தது!’’ என்றார்.

‘‘இப்ப நீங்க எங்கேயும் அடிபட்டுக்கலையே..?’’ என்று திரும்பவும் கேட்டாள் ப்ரியா. ‘‘அடிபட்டாலும் அப்படி ஆகும். துஷ்ட சக்திகள் கடந்து போனாலும் அப்படி ஆகும்மா!’’ ‘‘எங்களுக்கு எதுவும் ஆகலையே..?’’ ‘‘உடம்புல யோக உடம்பு, போக உடம்புனு இரு வகை. யோக உடம்பா இருந்தாதாம்மா அதை உணர முடியும்!’’

‘‘அப்படின்னா இங்க ஏதாவது கெட்ட சக்தி கடந்து போனதா? இந்த மழைல யாரோ ரெண்டு பேர்தான் போனாங்க...’’ ‘‘விடும்மா! இந்தப் பேச்சு பேசப் பேச கிளை விடும். நமக்கு அதுக்கு நேரமில்லை. நாம வந்த இடத்துல மழைல நனைஞ்சு சுத்தமாயிட்டோம். பஞ்சபூத உடம்புக்கு தலை நனையறதுதான் கணக்கு. நதி, கடல், குளம், அருவின்னு நான்கு வித நீர் நிலைகள்ல ஒரு மனுஷன் குளிக்கும்போது, அவன் உடம்புல பெரிய மாற்றங்கள் ரொம்ப நுட்பமா ஏற்படுது. நதில கால் முதல்ல நனையும், கடல்லயும் குளத்துலயும் கூட கால்தான் நனையும். அருவில மட்டும்தான் தலை முதல்ல நனையும். இதனால உடம்புல உள்ள சக்கரங்கள்ல ஒரு வேகம் உருவாகும். எங்கேயும் முதல்ல தலையை நனைச்சுட்டுத்தான் உடம்பை நனைக்கணும். மழைல இயல்பாவே அது நடந்துடுது. இந்த நிலைல மனசை ஒருமுகப்படுத்தறது சுலபம். உடம்பு ரொம்பவே ஒத்துழைக்கும்.

 நாம இப்ப மனசை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனை செய்வோம். வந்த காரியம் நல்லவிதமா முடியணும். ‘எந்தப் பாவங்களையும் தெரிஞ்சும் தெரியாமலும் நாங்க செய்துடக் கூடாது’னு உருக்கமா பிரார்த்திப்போம். நாம நம்ம பயணத்தோட இறுதிக் கட்டத்துக்கு வந்துட்டோம். வர வைக்கப்பட்டோம்னும் சொல்லலாம். என் கைல உள்ள ஏடுல ரெண்டு ஏடு மட்டும்தான் இருக்கு. அது என்ன சொல்லுதோ, அதன்படி நடப்போம். முதல்ல பிரார்த்தனை...’’ என்று அவர்களைப் பார்க்க, அவர்கள் இருவரும் தயக்கத்தோடு கைகளைக் கூப்பினர்.

‘‘கை கூப்பாம பிரார்த்திக்கக் கூடாதானு கேட்கலாம். கை கூப்பும்போது வலது, இடது இரண்டும் சேர்ந்து, பிரமிடு போல ஒரு மேல்நோக்கின கூர்மை வந்துடுது. அந்தக் கூர்மைக்கு நல்ல விஷயங்களை ஆகர்ஷிக்கற சக்தி உண்டு. கோயில்ல வணங்கும்போது கை கூப்பறது இதை வச்சுதான். பெரிய மனிதர்களை வணங்கும்போது, அவங்களோட நல்ல விஷயங்களை நம் கைகள் ஆகர்ஷிக்குது. அதனால தயங்காம கூப்புங்க.

அப்படியே உருக்கமா பிரார்த்தனை செய்யுங்க. இஷ்ட தெய்வத்தையோ, இல்ல... ஒரு ஈ, எறும்பையோ கூட நினைச்சு செய்யலாம். மண்ணால் செய்யப்பட்ட பொம்மைல எந்த பாகத்தைத் தொட்டாலும் மண்ணைத் தொட்டதாதான் பொருள். அது போல நாம எதை நினைச்சாலும் அதுல இறை சக்தி இருக்கு!’’ என்று ஒரு புதிய கோணத்தைக் காட்டினார். அந்த பிரார்த்தனை இரண்டு நிமிடங்கள் நீடித்தது. அடுத்து ஏட்டை எடுத்துப் பிரித்தார். அதில் பாடலாய் வரிகள்... எறும்பு ஊர்வது போல எழுத்துக்கள்!

வள்ளுவர் காரின் கூரையில் உள்ள மைய விளக்கின் கீழ் அந்த ஏட்டைப் படிக்கத் தொடங்கினார். ப்ரியாவும் வர்ஷனும் தங்கள் செல்போனில் அதை பதிவு செய்து கொள்ளத் தயாராயினர்.

‘வருணாபிஷேக வேளை, கிரியடி வாயு மூலை - ஆங்கே
சரணார விந்த தேவி அரனோடு சேர்ந்த பாகதிசை நோக்கி
மனதார நாமம் சொல்லி, மலை மீது நாலு காதம்
வருஷனொடு பிரியாவும் வள்ளுவனும் நடக்க
உயிரெழுத்தில் நான்கதை கொண்டவனால் உதவி
உதிரம் சிந்தக் கிட்டும். உந்தி வரும் வெள்ளமதும்
அள்ளிச் சென்று காட்டும் - காலாலகிரி வாழும்
நூலான பலகணியும் கோடிக்கணக்கில்
நாடிக்கணக்காய் நான்கது மட்டும்
நானிலம் நோக்கும்.
மற்றதை காலம் காக்கும். சந்திர நந்தி என்பானும்
வந்தே விந்தியம் நோக்கிட பலகணியும் செல்லும்
ஈதென்ன கணக்கென்றே ஈத்துவக்கும் நெஞ்சம்
ஐந்தும் மூன்றும் கூட்டினால் எட்டும் கூடினால்
ஒன்பதும் வருவதே மாயம். ஞானியர் காயமே
அறியும் இம்மாயம். அரிஅர சிவசிவ ஓம் ஓம்!’

- வள்ளுவர் வரிவரியாக அழகாய்ப் படித்து முடித்தார். அவ்வளவும் செல்போனிலும் ரெக்கார்ட் ஆகியது.

‘‘வள்ளுவரே... நீங்க படிச்ச பாட்டுல நம்ம பேரெல்லாம் கூட இருக்கே! எப்படி வள்ளுவரே?’’ என்று கேட்டான் வர்ஷன். ‘‘அதான் இந்த ஏட்டோட சிறப்பு. என் தாத்தா இங்க வந்து காலப் பலகணியைப் பார்த்தபோது, இங்க இருக்கற யாரோ ஒரு சித்தரோ, இல்ல சாமியாரோதான் இதைக் கொடுத்திருக்கணும். அப்பவே இன்னிக்கு நாம இங்க வரப் போறதை அவர் கணக்குப் போட்டுப் பார்த்து எழுதிட்டார்னா, அவருடைய தீர்க்கதரிசனத்தை என்னனு சொல்றது?’’ - வள்ளுவர் வியந்தார்.

‘‘வள்ளுவரே! இது எப்படி சாத்தியம்? லாஜிக் ரொம்பவே இடிக்குதே?’’ - வர்ஷன் தனக்குள் தோன்றியதைக் கேள்வியாகக் கேட்டான். ‘‘பூமியோட இரவு பகல் மாதிரிதான் தம்பி லாஜிக்கும் மேஜிக்கும். பாக்க முடிஞ்சா லாஜிக், முடியாட்டி மேஜிக்! ஆனா பூமி இரவுலயும், பகல்லயும் அப்படியேதான் இருக்கு!’’

‘‘இந்த பதில் எனக்குப் புரியல...’’ ‘‘போகப் போக தானா புரியும். எல்லாத்தையும் கேள்வி கேட்டு மட்டும் புரிஞ்சிக்க முடியாது. ரத்தமும் சதையுமா அனுபவிக்கும்போது பல ரகசியங்கள் தானா புரியும். அப்படிப் புரியறதை எல்லாம் விளக்கிச் சொல்ல முடியாது. ‘அது மாதிரி... இது மாதிரி’னு உதாரணம் காட்டித்தான் பேச முடியும். நீ இப்ப இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்காதே!

நாம இந்த ஏட்டில் உள்ளபடி இதைப் புரிஞ்சிக்கிட்டு நடக்க முனைவோம். ‘வருணாபிஷேக வேளை, கிரியடி வாயு மூலை - ஆங்கே சரணார விந்த தேவி அரனோடு சேர்ந்த பாக திசை நோக்கி’ங்கற ஆரம்ப இரண்டு வரிகளுக்கு பொருள் என்னனு பார்ப்போம். வருணாபிஷேகம்னா மழை... இப்ப மழை ெபய்துக்கிட்டிருக்கு... அடுத்து கிரியடி வாயு மூலை... அதாவது ‘இந்த மலை அடிவாரத்தின் வாயு மூலை’னு இதுக்கு பொருள். வாயு மூலைங்கறது வடமேற்குப் பகுதியைக் குறிக்கும். அனேகமா இந்த இடமாத்தான் இருக்கணும்... இருங்க, அதையும் பாத்துடுவோம்’’ என்று திசைமானியைப் பார்த்தார்.

மிகச் சரியாக அது வடக்கு திசையைக் காட்டியது. அதை வைத்து வடமேற்கைத் துல்லியமாக அனுமானிக்க முடிந்தது. ‘‘இந்த இடம்தான் தம்பி! காலம் நம்ம மூணு பேரையும் இந்தப் பாடல் வரிகளின்படியே அழகா கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. இங்க இருந்துதான் நாம் பயணத்தைத் தொடங்கணும்.

எந்தப் பக்கம்ங்கறது ரொம்ப முக்கியம். அதை அடுத்த வரிகள் சொல்லுது. ‘சரணார விந்த தேவி அரனோடு சேர்ந்த பாக திசை நோக்கி...’ ஈசன்தான் அம்மா பார்வதிக்கு தன் இடது பகுதியைக் கொடுத்தவன். அப்ப நாமும் இடது பக்கம் போகணும். இப்ப இங்க இருந்து நாம போகப் போற திசை முடிவாயிருச்சா?’’ - என்று வள்ளுவர் கேட்க, ப்ரியா முகம் சுளித்தாள்.

‘‘என்னம்மா... இவ்வளவு விளக்கமா சொல்லியும் முகம் சுளிக்கறே?’’ ‘‘பல கேள்விகள் இங்க உருவாகுது அய்யா. முதல்ல வர்ஷன் கேட்ட கேள்விக்கே நீங்க சரியா பதில் சொல்லலை. ‘போகப் போக புரிஞ்சிப்பே’ன்னுட்டீங்க. அதாவது பரவாயில்லை. இங்க வாயு மூலைன்னா வடக்கும் மேற்கும் சந்திக்கற இடம். இங்க இடதுபக்கம்னா, மேற்கு பார்க்க நாம நிற்கும்போது இடது பக்கமாங்கறது முக்கியம் இல்லையா? அடுத்து, எதுக்கு இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடணும்? பளிச்னு வேற அடையாளக் குறிப்புகளை குழப்பமில்லாம சொல்லலாமே?’’ - ப்ரியா கேட்க, வள்ளுவர் அவளை ஆனந்தமாகப் பார்த்துச் சிரித்தார்.

‘‘பரவால்லம்மா! நீ சரியான கேள்வியைத்தான் கேட்டுருக்கே... நீ எங்க கேக்காம போயிடுவியோன்னு நான் கூட எனக்குள்ள தவிச்சேன். இதுக்கு விடை சொல்லணும்னா நாம இப்ப அந்த நாவலூர், நாவல் மரத்தடி பிள்ளையார் கோயில் மந்திரப் பாட்டு கிட்ட போகணும். அது உனக்கு ஞாபகமிருக்கா?’’

ப்ரியா அடுத்த நொடி செல்போன் திரையில் புகைப்படமாய் எடுத்து வைத்திருந்த அந்த பாடல் வரிகளைத் தன் போன் கேலரிக்குச் சென்று எடுத்து படிக்கத் தொடங்கினாள்... ‘‘ ‘காலாலங்கிரி கல்லுடைத்து லட்சியத்தோடு உனைப் படைத்த பாலா சித்தர் பாதம் பணிந்தே லட்சுமி கடாட்சம் பெறுவேனே கணிப்பூட்டு இப்பாட்டு சாவிலிருந்தே காப்பாற்றுமே!’ - இந்தப் பாட்டுதானேய்யா?’’ ‘‘இதேதான்... இதுல கணிப்பூட்டு இப்பாட்டுங்கற வரிக்கு நாம அப்ப அர்த்தம் கண்டுபிடிச்சோமா?’’

‘‘இல்லன்னுதான் நினைக்கறேன். நீங்க அந்தக் கோயில் கோபுர சிலைகளை வச்சே ‘அடுத்து நாம போக வேண்டிய இடம் சதுரகிரி’ன்னு சொல்லிட்டீங்க!’’ ‘‘அருமை... அருமை... அப்ப சொல்லத் தேவைப்படலை. இப்ப பொருள் சொல்றேன். இதுதான் அந்தக் கணிப்பூட்டு. அதாவது விடையை கணிச்சிப் பூட்டி வச்சிருக்காங்க. நாமதான் அந்தப் பூட்டைத் திறக்கணும். நீ என்ன கேட்டே? வடமேற்கு மூலையில் நாம நிக்கறோம். இப்ப வடதிசை பார்த்து நிற்க இடது பக்கம் போகணுமா? இல்லை, மேற்கு திசைப் பார்த்து நிற்கும்போது வரும் இடது பக்கம் போகணுமானுதானே?’’

‘‘ஆமாம்!’’ ‘‘இந்தக் கேள்விக்கு பெண்டுலம் பதில் சொல்லிடும். வட திசை, மேற்கு திசைனு ஒரு பேப்பர்ல எழுது. ேபப்பர் பேனா இல்லன்னா உன் ஒரு கையை வடக்காவும் ஒரு கையை மேற்காவும் வச்சுக்கோ... நீட்டு கையை. வலது கையை என்னனு நினைச்சே?’’ ‘‘வடக்கு திசை...’’ ‘‘அப்ப இடது கை மேற்கு திசை. சரிதானே?’’ ‘‘சரிய்யா!’’ அவர் பெண்டுலத்தை இரு கைகளின் உள்ளங்கை பரப்புக்கு மேல் தொங்க விட்டார். இடது கை மேல் பெண்டுலம் ஆடியது. வலது கை மேல் அப்படியே நின்றது.

‘‘அம்மாடி... மேற்கு பார்த்து நிற்கும்போது நமக்கு எது இடதுபுறமோ அந்தப் பக்கம்தான் நமது திசை. அதாவது இந்தப் பக்கம்!’’ என்று காருக்குள் அமர்ந்துகொண்டே திசையைக் காட்டினார். ‘‘சரிய்யா! இப்படி ஏன் தலையை சுத்தி மூக்கைத் தொடணும்!’’ ‘‘ஒரு பேச்சுக்கு சொல்றேன்... நான் உங்ககூட இருக்கேன். என் அனுபவம் உங்களுக்குப் பயன்பட்டுக்கிட்டு இருக்கு. இது வேற யார் கைலயாவது கிடைச்சா? குறிப்பா, அந்த சதுர்வேதி கைல கிடைச்சு அவன் இங்க வந்திருந்தா, இவ்வளவு நுட்பமா இதை உணர்ந்திட முடியுமா? மறைவா பூட்டி வச்சதாலதானே பாதுகாப்பா இருக்கு?’’

‘‘உங்க பதில்ல பாதிய ஒத்துக்கறேன். பாதி இப்பவும் புரியல. நம்ம பேரே இதுல இருக்குன்னும்போது, நாமதான் வரப் போறோம். அப்புறம் இது எப்படி சதுர்வேதி கைக்குப் போக முடியும்? நாமதான் இங்க வரப்போறோம், அடையப் போறோம்னு தெளிவா இருக்கற விஷயத்துக்கு எதுக்கு இவ்வளவு பூடகம்?’’

ப்ரியாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று வள்ளுவர் யோசித்தபோது கணபதி சுப்ரமண்யனிடமிருந்து அழைப்பு. ‘‘ஹாய் ப்ரியா குட்டி! நான் பேசறது கேட்குதா?’’ ‘‘கேட்குது தாத்தா! நாங்க இப்ப சதுரகிரி மலை அடிவாரத்துல, அதோட வடமேற்கு பாகத்துல இருக்கோம். மழை கொட்டிக்கிட்டிருக்கு. காருக்குள்ள இருந்துதான் பேசறோம். இங்க இருந்து எந்தப் பக்கம் போகணும்னும் தெரிஞ்சிடுச்சு. வள்ளுவர் மட்டும் இல்லன்னா நிச்சயம் இதெல்லாம் தெரியவே வராது. இன்ஃபாக்ட், ஏட்டுல எங்க மூணு பேர் பெயர்கூட இருக்குது. அதாவது, இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம்...’’

‘‘ஆமாம்! அதனாலதான் அந்த மலைக்கு நான் ஒரு முறைக்கு இருமுறை போயும் என்னால நெருங்க முடியல. அப்புறம், ஒரு முக்கியமான விஷயம்! அந்த சதுர்வேதி இங்க என்னைப் பாக்க வந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். நான் அவன்கூட பேசாம தூங்கற மாதிரி நடிச்சு தவிர்த்ததும் தெரியும். அந்த ராஸ்கல் என் ரூமுக்கு வந்தப்ப ஒரு மைக்ரோ வாய்ஸ் ரிசீவர் சிப்பை என் ரூமோட கதவு பின்னால ஒட்டிட்டுப் போயிட்டான். இங்க இருந்து நான் உங்களோட பேசறத எல்லாம் இதன் மூலம் ஒட்டுக் கேட்டிருக்கான்.

கொஞ்சம் முந்தி என்னைப் பார்க்க வந்த ஒரு போலீஸ் ஆபீசர் கிட்ட வயர்லெஸ் போன் இருந்தது. அது இப்ப ரொம்ப அட்வான்ஸா உருவாக்கப்பட்ட போன்! அது இந்த மாதிரி உளவு பார்க்கும் ரிசீவர் பக்கத்தில் வந்தா, ரெட் சிக்னல் சவுண்டோட அணைஞ்சு எரியுமாம். அவர் என் அறைல இருந்து யார்கூடவோ பேசினார். அப்ப சப்தம் வந்தது.

உடனே அவர் என்னை முறைச்சுப் பார்த்து, ‘என்ன சார்! உங்க அறைல வாய்ஸ் ரிசீவர் இருக்கா? இப்ப நான் பேசினதை யாரோ கேட்டுக்கிட்டிருக்காங்க’ன்னார்! எனக்கு பக்குனு ஆயிடிச்சு. ‘சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது’ன்னேன் அவர் நம்பாம ரூமை சல்லடை போட்டு சலிச்சப்ப, கதவு பின்னால ஒரு ரூபா சைஸுக்கு அந்த ரிசீவர் ஒட்டப்பட்டிருந்தது. அதை அப்பவே கால்ல போட்டு நசுக்கி சிதைச்சுட்டோம். நானும் ‘இது சதுர்வேதி வேலையாதான் இருக்கணும்’னு சொன்னேன். அவர் நம்பியும் நம்பாமதான் போனார். அவர் போகவும் நான் உடனே தொடர்பு கொள்றேன். எனக்கென்னவோ, உங்களுக்குத் தெரிஞ்ச அவ்வளவும் நாம பேசப் பேச அந்த சதுர்வேதிக்கும் தெரிஞ்சிக்கிட்டே இருந்திருக்கு. இப்ப நாம பேசற இந்த விஷயத்தைத் தவிர...’’ - என்றார்.

அதைக் கேட்ட ப்ரியா வாயடைத்துப் போனாள். வர்ஷன் மட்டும், ‘‘அந்த சதுர்வேதி சாமியாரா? விஞ்ஞானியா?’’ என்று கேட்க, வள்ளுவர் ப்ரியாவைப் பார்த்தார். ‘‘ப்ரியா! ‘எதுக்கு இவ்வளவு பூடகம்’னு கேட்டியே... இப்ப புரியுதா? நமக்கு இருக்கற அளவு அதே பலம் எதிரிக்கும் இருக்கு... பார்த்தியா?’’வள்ளுவர் கேட்கவும், ப்ரியாவிடம் ஒரு ஆழ்ந்த மௌனம். கூடவே முதல்முறையாக ஒரு அபார பிரமிப்பு. இருந்தும் இங்கேயும் ஒரு கேள்வி.‘அந்த எதிரி பற்றியும் இதில் குறித்திருக்கலாமே... அந்த சதுர்வேதி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

ஐந்தும் மூன்றும் கூட்டினால் எட்டும் கூடினால் ஒன்பதும் வருவதே மாயம். ஞானியர் காயமே அறியும் இம்மாயம்!

அவளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிய பின்பேஎன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது உலகம்!

இவ்வுலகில் மனிதர்கள்இரு பிரிவுகள் மட்டுமே...காதலைச் சொன்னவர்கள்,சொல்லாதவர்கள்!

அவள் மனதின் ஏதோ ஓரிடத்தில் என் எழுத்து இருக்கக்கூடும் என் எழுத்தின் ஏதோ ஓரிடத்தில் அவள் இருப்பதைப் போல...

பேனாவைக் கவிழ்த்தியதுமேகாகிதமெங்கும் கொட்டியதுஉனக்கான என் மனது!

புழுவைத் தின்றுவிட்டஇரு மீன்கள் அவள் இமைக்குள்ளேபுழுவைத் தவறவிட்டதூண்டில் முட்கள் இமைக்கு மேலே!

நிலவுக்கும் எனக்குமான காதல் வெளியில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களாக சொல்லப்படாத காதல்கள்!

- தொடரும்...