அரண்மனை 2 விமர்சனம்



அரண்மனை மாதிரியிருக்கும் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்து பழிவாங்கும் பேயைக் கண்டுபிடித்து அதை வீட்டை விட்டு விரட்டுவதுதான் ‘அரண்மனை 2’.

ஊரில் மிகப் பெரிய கோயில். அரிதாக நடக்கிற கும்பாபிஷேகம். பிரமாண்டமான அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வைக்கும் வரையில் அம்மனுக்கு சக்தி இருக்காதாம். அந்த வேளையை பயன்படுத்திக் கொண்டு ஊருக்குள் உலவுகிற ஆவிகளைச் சிறைப் பிடித்து, கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிய ஆவி ஒன்று வீட்டிற்குள் நுழைந்துவிட, பாடாய்ப்படுத்தும் அந்த ஆவியின் திருவிளையாடல்களே படம். ‘அது’ எங்கே, எப்படி, யாருடன் இருக்கிறது எனக் கண்டுபிடித்து அழிப்பதே பரபரக்கும் க்ளைமேக்ஸ்.

பேய் வீடு, பயமுறுத்தும் இசை, திடீர் பகீர் திருப்பங்கள் என்று பல தடவை சுவைத்த தோசையையே திருப்பிப் போட்டு புதுப் பேய் கண்டுபிடித்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஆனாலும் பேய்களின் சலசலப்பு கியாரன்டி. ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், சதி, வியூகம் என ஷிஃப்ட் போட்டு கதை போனாலும் அதிக திருப்பம் இல்லாத திரைக்கதையால் தடுமாறுகிறது.

மொத்தக் குடும்பத்தையே பேயின் கொடூரக் கைகளிலிருந்து காப்பாற்றுபவராக சுந்தர் சி... கொஞ்சம் கூட மெனக்கெடாத நடிப்பில் அனாயாசமாக வந்து போகிறார். பேயின் பக்கத்திலிருந்தே பார்த்த மாதிரி, அதன் நடமாட்டங்களை கணித்துத் தருவதால் அவரையே குடும்பம் நம்பி இருக்கிறது. படம் மொத்தத்தையும் நகைச்சுவையில் உருளச் செய்துவிட்டு, சுந்தர் சி. மட்டுமே சிரிக்காமல் சீரியஸ் காக்கிறார். பூனம் பாஜ்வாவை இன்னும் கூடப் பயன்படுத்தியிருக்கலாம். சித்தார்த் தனி கதாநாயகன் அம்சத்தை விட்டு முக்கியமான கேரக்டர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அவரின் நடிப்புக்கும் எந்த அவசியமும் இல்லை என்பதால் விடுமுறைக்கு வந்தவர் மாதிரி படம் முழுவதும் நடமாடுகிறார்.

அரண்மனைக்குள் சூரி நுழைந்ததும் படம் நகைச்சுவைக்கு முழுமையாக தடம் மாறுகிறது. அவரையே நினைத்து நினைத்து திருமணத்தையே மறுத்திருக்கும் கோவை சரளா(!) ஜோடியின் ரகளை, சிரிப்பு வெடி. வயதில் மூத்தவரான சரளாவை வகைதொகையில்லாமல் கிண்டல் செய்யும்போதெல்லாம் சிரிப்புச் சத்தம் அள்ளுகிறது. ஆனால், நகைச்சுவையின் தரம் தாழ்கிறது. ஒரே மாதிரி வசனம் பேசுவது, போங்கு காட்டுவது, பல்பு வாங்குவது என எத்தனை படங்களில் இப்படியே நடிப்பீர்கள் சூரி?

புது ஆவியாக வந்து சேர்கிறார் த்ரிஷா. அந்தச் சின்ன முகத்திற்கு பயம் காட்டுவதெல்லாம் அதிகமாய் ஒட்டவில்லை. ஆனால், அந்த பயத்தை உருவாக்க முயல்வதில் வெற்றி பெறுகிறார். வெளிநாட்டுப் பாடல் காட்சிகளில் கவர்ச்சியின் ஆழத்திற்குப் போயிருக்கிறார் த்ரிஷா. பயத்தில் இருந்த ரசிகர்களுக்கு குட்டி உடைகளில் த்ரிஷா தருவது எதிர்பாராத போனஸ்!

கொஞ்ச நேரமே வந்தாலும் திகில் ஊட்டுகிறார் ஹன்சிகா. அவர் கொல்லப்படும் பின்னணி, படத்தின் பெரிய திருப்பம். செம பில்டப்போடு முடியும் முன்பாதி போலில்லாமல் பின்பாதியில் சீனி வெடியே வெடிக்கிறது. உணர்வைக் கடத்துவதிலும் பயமுறுத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறது யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு. விறுவிறு திருப்பத்தை எதிர்பார்க்கும் சமயம் தடக்கென முளைக்கும் பாடல்கள் ரொம்பவும் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், பின்னணியில் பக்கா ஹாரர் சேர்க்கிறார்கள் ஹிப் ஹாப் தமிழா இளைஞர்கள்.

‘அரண்மனை 2’ நகைச்சுவையில் திகில்... கவனிக்க வைக்கிறது!

- குங்குமம் விமர்சனக் குழு