யார் இந்த சரிதா நாயர்?



இனி கேரள அரசியலை சரிதா நாயர் என்ற பெயரின்றி எழுத முடியாது போலிருக்கிறது. ‘சாதாரண சோலார் பேனல் ஊழல்தானே’ எனக் கூலாகத்தான் ஆரம்பத்தில் சரிதா வழக்கு கையாளப்பட்டது. ஆனால், ‘வக்கீல் வண்டு முருகன்கிட்டதான் கொடுத்து வச்சிருக்கேன்’ என்ற ரேஞ்சில் சரிதா கோர்ட்டில் கோர்த்துவிட்ட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம்... கேரள முதல்வர் உம்மன்சாண்டி உட்பட! யார் இந்த சரிதா நாயர்? அரசியல்வாதிகளுக்கு கொட்டிக் கொடுக்க கோடிகளும் அதை கோர்ட்டில் சொல்லும் தைரியமும் இவருக்கு எங்கிருந்து வந்தன? இதோ ஒரு ப்ரொஃபைல்...

சரிதா பிறந்தது கேரளத்தின் செங்கன்னூர் என்ற பேரூரில். தந்தை சோமசேகரன் நாயர், நாயர் சேவா அமைப்பில் கடை நிலை ஊழியர். குடும்பச் சுமை தாளாமல் அவர் தற்கொலை செய்துகொள்ள, சரிதாவின் அம்மாவுக்கு அதே வேலை தரப்பட்டது. வீட்டில் இரண்டாம் மகளான சரிதா, அழகி மட்டுமல்ல... படிப்பிலும் சூரப்புலி. பத்தாம் வகுப்பில் 600க்கு 535 மதிப்பெண்கள்   பெற்றவர். பிளஸ் 2  முடித்ததும்  எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்தார். 18 வயதில் திடீர் திருமணம். வரனுக்கு   வளைகுடா நாட்டில் வேலை. ஆனால், ஏனோ திருமண வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை.

சரிதா  சாதுர்யமாகப் பேசுவார். எந்தச் சூழ்நிலையையும் லாகவமாக சமாளிப்பார். இந்தத் திறமை, பங்கு வர்த்தகம் மற்றும் கிரெடிட் கார்டு  தொடர்பான வேலைகளில் அவரை நிலை நிறுத்தியது. 2005ல்  ஒருமுறை நிதி மோசடி செய்ததாக கைதாகி மீண்டவர்தான் சரிதா. அந்தச் சமயம் அறிமுகம் ஆனவர்  பிஜு ராதாகிருஷ்ணன்.  இருவரும் இணைந்து ‘டீம் சோலார்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். சரிதா மூலம் டீம் சோலாருக்கு ஆர்டர்கள் குவிந்தன. சூரிய சக்தியால் மின்சாரம்  தயாரிக்கும்  சோலார் பேனல்களைப் பொருத்துகிறோம்   என்று  பொதுமக்களிடம் நிதி திரட்ட, கோடிகள் குவிந்தன.

இதற்கிடையில் ஷாலு மேனன்  என்ற சின்னத்திரை  நடிகையிடம் நெருக்கமானார் பிஜு. ‘டீம் சோலார்’  நிறுவன நிதியை  அவர் தன் பெயரிலும், ஷாலுவின் பெயரிலும் மாற்ற... சரிதாவுக்கும் பிஜுவுக்கும் சண்டை மூண்டது. மக்கள் சரிதா மீது மோசடிப் புகார் தர, ‘‘நான்  வாங்கிய பணத்தை  பிஜு ஏப்பம் விட்டுவிட்டார்’’ என்று சரிதா கை காட்ட,  2013ல் இருவரும் கைதானார்கள்.

இதற்கிடையே பிஜு தன் மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது விஜிலன்ஸ்  கோர்ட் தவிர,   விசாரணைக் கமிஷன் ஒன்றும் சோலார் ஊழல் குறித்து  விசாரித்து  வருகிறது. விஜிலன்ஸ் கோர்ட்டில்  ‘‘கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்காக ரூ.1.9 கோடி பணம்  கொடுத்தேன்’’  என்று வாக்குமூலம் கொடுத்த சரிதா நாயர், பிப்ரவரி 1 அன்று    விசாரணைக் கமிஷனிடம் மூன்று ஆதார சி.டிக்களை  ஒப்படைத்திருக்கிறார். ‘இந்த வழக்கில் உம்மன் சாண்டி பற்றிப் பேசக் கூடாது’ என சாண்டி சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் தொழில் அதிபர் ஒருவரும் கேட்டுக்கொண்ட ஆதாரங்கள் அந்த சி.டிகளில் உள்ளனவாம்!

சரிதாவின் புகார்களை உம்மன் சாண்டி மறுத்தாலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு உடன்படாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற  உறுப்பினர் அப்துல்லா குட்டி தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்று ஆரம்பத்தில் சரிதா குற்றம் சாட்டிவந்தார். ஆனால் இப்போதோ, ‘பொது மக்களின் கவனத்தை  சோலார் ஊழலிலிருந்து திசை திருப்ப,  காங்கிரஸ் தலைவர் ஒருவர்தான் அப்படிப் புகார் கொடுக்கச் சொன்னார்’ என அதிர வைக்கிறார் சரிதா.
 
சரி, இவ்வளவு டேமேஜ் செய்கிறார் என்றால் இவர் எதிர்க்கட்சி ஆளாக இருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‘‘உம்மன் சாண்டி மீது  ஊழல் புகார்  சொன்னால்  பத்து கோடி வரை பணம்  தருவதாக இடது கம்யூனிஸ்ட்  தலைவர் ஒருவர் சொன்னார்!’’ எனக் கேஷுவலாக ஒரு குண்டைத் தூக்கி அந்தப் பக்கமும் போட்டிருக்கிறார் சரிதா.

இந்த வழக்கு களேபரங்களால் ‘சோலார் சரிதா’ என்ற பெயரில் அம்மணி இப்போது படு பாப்புலர். மலையாள சேனல்களின்  பல நிகழ்ச்சிகளில்  கலந்துகொள்கிறார். ‘லவ் பேர்ட்ஸ்’ என்று அவர் வழங்கிய  தொடர், பெரும் வரவேற்பைப் பெற்றது. குறும்படங்களில் நடித்திருக்கும் சரிதா, ‘வய்யாவேலி’ என்ற முழுநீள  காமெடிப் படத்தில்  போலீஸ்  அதிகாரியாக நடிக்கிறார். சரிதாவுக்கு இரண்டு மகன்கள். முதல் கணவர்தான் மூத்த மகனின் அப்பா. ‘‘என் இரண்டாம் மகனின் அப்பா ஒரு இளம் அரசியல்வாதி; அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை’’ என்று சரிதா தொடர்ந்து சொல்லி வருகிறார். யார் அந்த இளம் அரசியல்வாதி என்பது ‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன்?’ என்பதைவிட கேரளத்தின் பாப்புலர் சஸ்பென்ஸ்!

எது எப்படியோ... இன்றைய தேதிக்கு சரிதா கொட்டாவி விட வாய் திறந்தாலே குலை நடுங்கிப் போகிறது கேரள அரசியல். ஊழல், அரசியல் பழிவாங்கல், மீடியா திருப்பல் என திரைமறைவு நுண் அரசியல்கள் பலவற்றை வெட்டவெளிச்சம் ஆக்கியிருக்கிறது சரிதாவின் ஸ்டேட்மென்ட்ஸ்.

‘‘என் இரண்டாம் மகனின் அப்பா ஒரு இளம் அரசியல்வாதி; அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை’’ என்று சரிதா தொடர்ந்து சொல்லி வருகிறார்.

- பிஸ்மி பரிணாமன்