முகங்களின் தேசம்



ஜெயமோகன்


கரைந்த நிலம்கடல் நடுவே உள்ள நிலப்பகுதிகளைத்தான் தீவுகள் என்பார்கள். நதிக்குள் உள்ள நிலப்பகுதிகள் ‘ஆற்றிடைக்குறை’ எனப்படும். காவிரியில் அப்படி நிறைய ஆற்றிடைக்குறைகள் உள்ளன. பெரும்பாலும் பெரிய மணல்திட்டுகள் அவை. நாணல்கள் மட்டும் முளைத்து காற்றில் அலைபாய்ந்து நின்றிருக்கும். பெரிய ஆற்றிடைக்குறைகளும் உண்டு. ஸ்ரீரங்கம் ஓர் ஆற்றிடைக்குறைதான். ஆனால் சில ஆற்றிடைக்குறைகள் மிகப்பெரியவை. அவற்றை தீவு என்றே சொல்லமுடியும். வேண்டுமென்றால் ‘நதித்தீவு’ என்று சொல்லலாம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நதித்தீவு அசாமில் பிரம்மபுத்திரா நதிக்குள்ளே இருக்கிறது. அதற்கு மாஜிலி என்று பெயர். சென்ற 2015 பிப்ரவரி பதினைந்தாம் தேதி நானும் நண்பர்களும் ஒரு வடகிழக்குப் பயணம் மேற்கொண்டோம். அசாம் சென்று அங்கே காடுகளையும் கோயில்களையும் பார்த்தபடி மாஜிலி நோக்கிச்சென்றோம்.

மாஜிலிக்குச் செல்ல பெரும்படகுகள் அல்லது இரும்புத்தெப்பங்கள் உள்ளன. படகுத்துறையே ஒரு பெரிய படகுதான். ஏனென்றால், நீர்மட்டம் வருடத்தில் ஐம்பது முறைக்குமேல் மாறக்கூடியது.  ஆகவே அதை மிதக்கும்படி அமைத்திருக்கிறார்கள். சேறா, மணலா எனத் தெரியாத கரைமுழுக்க சிறிய கடைகளில் வடை, பொறை, கேக், டீ விற்றார்கள். எங்கும் மீன் வாசனை.

மாலை நான்கு மணிக்கு கடைசிப்படகு. அதன்பிறகு படகுப் போக்குவரத்து இல்லை. அந்த மணல்கரையிலேயே இரவு தங்க வேண்டியதுதான். ஏனென்றால் பிரம்மபுத்திராவில் இரவில் படகுகள் செல்லமுடியாது. மணல்திட்டுகளும் சுழிகளும் பகலிலேயே அபாயகரமானவை. பார்த்துப் பார்த்து ஓட்ட வேண்டும். அப்படியும் வருடம்தோறும் பலிகள் உண்டு. ஆகவே ஷிவ்சாகரிலிருந்து காரில் வழியிலெங்கும் நிற்காமல் வந்தோம். மதிய உணவு சாப்பிடவில்லை. படித்துறையில் இருந்த கடைகளில், பழகிப்போன புண்ணாக்கால் செய்யப்பட்ட கேக்கையும் டீயையும்தான் சாப்பிட்டோம். நேராக வந்திறங்கி மூச்சு வாங்க படித்துறைக்கு வந்தபோதுதான், மேலும் இருபது நிமிடம் இருப்பது தெரிந்தது. ஆறுதலாக மேலே ஏறிச்சென்று நின்றுகொண்டோம்.

மாஜிலி என்றால் நடுநிலம் என்று பொருள். முன்னர் ஒரு மணல்மேடாக இருந்திருக்கிறது. ஐந்நூறாண்டுகளுக்கு முன்னர்தான் இது விரிந்து பெரிய தீவாக ஆகியிருக்கிறது. 1661 முதல் 1696 வரை நடந்த தொடர் பூகம்பங்கள் அசாமின் நில அமைப்பையே மாற்றியமைத்தவை என்கிறார்கள். அதன்பின் அசாமின் பண்பாட்டிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அசாமின் நிலப்பகுதியைத் தீர்மானிக்கும் முதன்மையான சக்தியாகிய பிரம்மபுத்திரா திசைமாறி ஒழுகத்தொடங்கியது.  அதன் வேகம் குறைந்தது. சமமான நிலப்பரப்பில் ஓடத் தொடங்கியபோது அதன் வண்டல்வெளி உயரமாக ஆகத் தொடங்கியது. மாஜிலி உருவானது.
 
அதன் பின் 1750ல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து பொழிந்த மழையும் பெருவெள்ளமும் பிரம்மபுத்திராவை இரண்டு பெரிய பெருக்குகளாகப் பிளந்தன. நடுவே இருந்த மாஜிலியில் பிரம்மபுத்திரா கொண்டுவந்த குப்பையும் தடிகளும் சேர்ந்து சேறு மூடி வீங்கியது. மாஜிலி பெரிய தீவாக ஆகியது. பிரிட்டிஷ் கணக்குகளின்படி 1250 சதுர கிலோ மீட்டராக இருந்த இதன் பரப்பு, பல முறை பிரம்மபுத்திராவால் விழுங்கப்பட்டு, அரிக்கப்பட்டு, இப்போது 421 சதுர கிலோ மீட்டராக இருக்கிறது. 2001ல் வந்த வெள்ளத்தில் மாஜிலியின் மூன்றில் ஒரு பங்கு கரைந்து கடலுக்குச் சென்றுவிட்டது.

படகுத்துறையில் நீண்ட வரிசை. ஒரு படகில் ஐந்நூறுக்கும் மேல் மனிதர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பத்துப் பதினைந்து கார்கள், மலை மலையாக பொதிகள் ஏற்றப்பட்டபின்  பிளிறியபடி கிளம்பியது. அது கிளம்பக் காத்திருந்தவர்கள் போல, படகின் மேல்மாடிப் பரப்பில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சீட்டாடத் தொடங்கினர். கூச்சல்கள், சண்டைகள், பான்பராக் போட்டு புளிச் புளிச் என்று துப்பி விட்டு மீண்டும் சண்டைகள். தெரியாத மொழியில் கேட்டால் எது சண்டை, எது கொஞ்சல் என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்தான்.

பிரம்மபுத்திராவை மாலை வேளையில் கடந்து செல்வது வாழ்வின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. சூரியன் முன்னரே எழும் நிலம் என்பதனால், அங்கே மாலை நான்கு மணி என்றால் நமது ஊரில் ஐந்தரை மணி போல. வானை நிறைத்து விழுதுகளாக இறங்கி நின்ற மஞ்சள் வெயில். தெளிந்த நீலநீர்வெளி. இளம் குளிர். ஓசையே இல்லை. அவ்வப்போது செல்லும் பயணப்படகுகள். இருகரைகளிலும் கிராமங்கள் இல்லை. ஆற்றிடைக்குறைகளின் மணல்மேடுகளும் கரைக்காடுகளும் மட்டுமே.

படகின் மேல் கூரையில் நின்றபடி சென்றோம். பெரிய உருத்திராட்ச மாலை போல நீரில் வளைந்து சென்றன நீர்க்காகங்கள். நீரிலிருந்து கனத்த புகை என எழுந்து வளைந்து சென்றன நாரைக்கூட்டங்கள். வாத்துக்கூட்டங்கள் நீரில் நீந்தும்போது உருவாகும் அலை வடிவம், நீர்வலை போல அவற்றைச் சூழ்ந்து சென்றது. மோனம் மிகுந்த தருணம். முழு விடுதலைக்கு அண்மையில் செல்லும் தருணம்.

இந்தியாவிலேயே பிரமாண்டமான நதி என்றால் பிரம்மபுத்திராதான். ஒரு நதியில் மறுகரை கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் அனுபவம், அதில் மட்டுமே அமையும். உண்மையில் சில சமயம் திகிலூட்டுவது அது. பெரிய படகுகள் அதன்மேல் சருகுகள் போலத்தான் மிதந்து செல்லும். மனித உடலளவுக்குப் பெரிய மீன்கள், உறைவிட்டு உருவப்படும் வாள் என எழுந்து ஒளிவிட்டு அமையும். நீரற்ற நதிகளைக் கண்டு பழகிய தமிழர்களுக்கு, சொல் மறந்து போய் நெஞ்சம் அசைவிழக்கும்.

மாஜிலியில் இறங்கிச் சென்றோம். நதிக்கரையே ஒரு பஸ் நிலையமாக இருந்தது. பயணிகளை படித்துறையிலிருந்து நகருக்குள் கொண்டு செல்லும் பேருந்து காத்திருந்தது. ஓடிச் சென்று ஏறி டிக்கெட் எடுத்தோம். அதுதான் கடைசி பஸ். உறுமியபடி மெல்ல மேலேறியது. சாலை என ஏதுமில்லை. பிரம்மபுத்திராவின் மணல் கரையே ஐந்து கிலோமீட்டருக்கு மேல் அகலமானது. சாலை போட முடியாது. மென்மையான மணல். கட்டுமானத்துக்கும் உதவாது. மணல் மேல் யானைப்புல்லை அடர்த்தியாகப் பரப்பி பரப்பி சாலையாக்கியிருந்தனர்.

ஓரிடத்தில் பஸ் மணலில் சிக்கிக்கொண்டு சக்கரம் சுழன்று ஓலமிடத் தொடங்கியது. அனைவரும் இறங்கித் தள்ளினோம். தள்ளியபோது அது மேலும் புதைந்தது. ‘பேருந்தை சற்று பின்னால் எடுத்தபின் முன்னால் கொண்டு செல்லலாம்’ என்று எங்கள் நண்பர் கே.பி.வினோத் அளித்த ஆலோசனைதான் கடைசியில் வென்றது.
 
தள்ள உதவிய பையன்களில் ஒருவன், சென்னையில் பொறியியல் படிப்பதாகச் சொன்னான். சிவக்கச் சிவக்க பான்பராக் போட்டிருந்தான். அசாமிய அரை மஞ்சள் முகம். கொகோய் என்று பெயர் சொன்னான். பொதுவாக வடகிழக்கிலிருந்து சென்னைக்கு வந்து பொறியியலோ, மருத்துவமோ படிப்பது, நாம் அமெரிக்கா சென்று படிப்பதைப் போல உச்சகட்ட மதிப்பு கொண்டது.மாஜிலியில் 144 கிராமங்கள் உள்ளன. மிசிங் என்ற அருணாசலப் பிரதேசத்து பழங்குடிகளே இங்கு அதிகம். மஞ்சள் கலந்த செம்பு நிறமும் மங்கோலிய முகமும் கொண்டவர்கள். யானைப்புல்லையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்டு, களிமண் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். வீடுகளெல்லாமே தூண்கள் மேல் கட்டப்பட்டவை.

மாஜிலியின் பெண்கள் ஜாக்கெட் அணிந்து மேலே நம்மூரில் பெண்கள் குளிக்கையில் கட்டுவதுபோல மார்பின்மேல் துணியை கட்டிக்கொண்டிருந்தார்கள். மரங்களில் குடைந்த சிறிய படகுகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை பல இடங்களில் சேற்றில் நின்றன. ஏனென்றால் இது இங்கே கோடைக் காலம். பிரம்மபுத்திரா பாதியாகக் குறைந்துவிட்டிருந்தது. இருட்டு விழுந்த பின்னர் நாங்கள் மாஜிலிக்குள் நுழைந்தோம். அந்தி விளக்குகள் எரிய, மாஜிலி நம்மூர் போலத்தான் இருந்தது. சர்க்யூட் ஹவுஸுக்கு வந்து சேர்ந்தோம். மாலையுணவு அங்கே நேரமாகும் என்றார்கள்.

வெளியே உணவு வேண்டுமென்றால் முன்னரே சொல்லியனுப்பவேண்டும், சொல்லியனுப்பியபின் ஒரு சுற்றுலா விடுதியில் சாப்பிடச் சென்றோம். ஏழரை மணிக்கே கூரிருள். ஓலைக்கொட்டகையில் அமர்ந்து சாப்பிட்டோம்இப்பகுதியின் அரிசி மிகச்சுவையானது. ‘கோமல் சால்’ என்கிறார்கள். துணியில் கட்டி கொதிநீரில் பதினைந்து நிமிடம் போட்டு எடுத்தால் சோறு. சற்று ஒட்டும் தன்மை கொண்டது. இங்கே இன்னொரு சிறப்புணவு, பட்டாணிக்கடலையை விட கொஞ்சம் பெரிய உருளைக்கிழங்கு. அதை சுண்டல் போலச் செய்த பொரியல் நான் சமீபத்தில் சாப்பிட்ட மிகச்சிறந்த உணவு. சிறந்த மீன் கிடைக்கும். ஆனால் உணவுக்கு ஆணையிட்ட சைவ உணவுக்காரரான கிருஷ்ணன், ‘‘அனைவருக்கும் சைவமே போதும்’’ என எங்களுக்குத் தெரியாமல் சொல்லிவிட்டிருந்தார் மாஜிலியின் குளிர் ஏறி ஏறி வந்தது. இமயக்குளிர் போல வறண்ட குளிர் அல்ல. நீராவி நிறைந்த குளிர் இது. விடுதியின் குமாஸ்தா அங்கேயே தங்கியிருந்தார். மின்சாரம் போய்விட்டது. இருட்டில் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அருகே சென்று நாங்களும் அமர்ந்தோம். அவர் சுருட்டை ஆழமாக இழுத்து இருட்டுக்குள் புகைவிட்டார். ‘‘நல்ல குளிர்’’ என்றேன். ‘‘கோடைக்காலத்தில் மிகக்கடுமையாகப் புழுங்கும்’’ என்றார்.

‘‘வியர்வை ஊறி ஆடைகள் நனைந்து வழியும்!’’ 2001ல் வந்த வெள்ளத்தில் அந்த விடுதியிலேயே இடுப்பளவு நீருக்குள் இருந்தது என்றார்.  அதாவது மொத்த மாஜிலியே நீருக்குள் இருந்திருக்கிறது.  அங்குள்ள அத்தனை வீடுகளும் மூங்கில் கால்கள்மேல் எழுப்பப்பட்டவை. ஆகவே அவை மூழ்கியிருக்காது. ஆனால் நிலமில்லாமல் எப்படி வாழ முடியும்? ‘‘நாங்களெல்லாம் படகில் கிளம்பிச் சென்றுவிட்டோம். ஒரு மாதம் கழித்துத்தான் திரும்பி வந்தோம்’’ என்றார்.

‘‘வீடுகள் இருந்தனவா?’’ என்றேன். அவர் சுருட்டை இழுத்துக்கொண்டு பேசாமலிருந்தார். ‘‘இந்த வீடுகள் பெரும்பாலும் மூங்கிலாலும் யானைப்புல் தட்டிகளாலும் கட்டப்பட்டவை. எளிதில் திரும்பக் கட்டிவிடலாம்’’ என்றார் நண்பர் ராஜமாணிக்கம்.  விடுதி குமாஸ்தா சுருட்டை சாம்பல் தட்டியபின் இருமினார். ‘‘உங்கள் ஊர் மாஜிலிதானா?’’ என்றேன். ‘‘இல்லை, அக்கரை. அங்கேதான் குடும்பம்’’ என்றார். ‘‘இங்கே வாரம் ஒருமுறை வந்துசெல்வேன்... பிள்ளைகள் அங்கே படிக்கிறார்கள்!’’

இருட்டுக்குள் கொசுக்கள் ரீங்காரமிட்டன. அவர் தானாகவே, ‘‘ஆனால் நான் இங்கேதான் இருந்தேன். வெள்ளத்திற்குப் பின்புதான் அங்கே குடி போனேன்’’ என்றார். ‘‘ஏன்?’’ என்றேன். ‘‘என் ஊரே இல்லை!’’ கொஞ்ச நேரம் அச்சொற்களைச் சிந்தித்து உள்வாங்கிய பின்பு, ‘‘இல்லை என்றால்?’’ என்றேன். ‘‘வெள்ளத்தில் போய் விட்டது’’ என்றார். ‘‘மூழ்கிவிட்டதா?’’ என்றேன். அவர், ‘‘இல்லை, கரைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது...’’ என்றார்.

ஒரு கணம் கழித்து நான் திடுக்கிட்டேன். மூழ்கிய ஊர்கள் உண்டு. அழிந்த ஊர்கள் உண்டு. கைவிடப்பட்ட ஊர்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் மிச்சங்கள் அங்கே இருக்கும். கரைந்து மறைந்த ஊர் என ஒன்றைக் கற்பனை செய்யவே முடியவில்லை. மறைந்த ஊர் என்றால் எத்தனை வாழ்க்கைகள் அங்கே நிகழ்ந்திருக்கும், எத்தனை நினைவுகள் எஞ்சியிருக்கும்? அந்த நினைவுகளெல்லாம் எந்த மண்ணைச் சார்ந்திருக்கும். மாஜிலியின் அந்த சிற்றூர் இப்படிச் சிலர் நினைவுகளில் மட்டும்தான் எஞ்சியிருக்கும். வாழ்ந்த நிலம் மறைந்து போவது எவ்வளவு பெரிய கதை. யாராவது நாவலாக எழுதியிருப்பார்களா?

காலையில் பறவைகளின் ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன். முதலில் வந்த எண்ணம், அந்த மறைந்த நிலத்தில் வாழ்ந்த பறவைகளைப் பற்றித்தான். வெள்ளத்தைக் கண்டு பறந்து போன அவை திரும்பி வந்ததும் நிலத்தைக் காணாமல் சுற்றிச் சுற்றிப் பறந்திருக்குமா என்ன?

ஒரு நதியில் மறுகரை கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் அனுபவம், பிரம்மபுத்திராவில் மட்டுமே அமையும். உண்மையில் சில சமயம் திகிலூட்டுவது அது. மூழ்கிய ஊர்கள் உண்டு. அழிந்த ஊர்கள் உண்டு. கைவிடப்பட்ட ஊர்கள் உண்டு.  அவற்றுக்கெல்லாம் மிச்சங்கள் அங்கே இருக்கும். கரைந்து மறைந்த ஊர் என  ஒன்றைக் கற்பனை செய்யவே முடியவில்லை.

(தரிசிக்கலாம்...)

ஓவியம்: ராஜா