நினைவோ ஒரு பறவை 3



தெய்வம் வாழும் வீடு

‘‘இருப்பதற்காக வருகிறோம் இல்லாமல் போகிறோம்!’’
- கவிஞர் நகுலன்

(இந்தத் தொடரில் ‘நான்’ நானாகவும், சில சமயம் அவனாகவும், சில சமயம் இவனாகவும் கூடு விட்டுக் கூடு பாய நேரலாம். சில பாரங்களை, சில தூரங்களைக் கடக்க நேர்கையில் இளைப்பாறுவதற்கு இந்தப் பறவைக்கு வெவ்வேறு கிளைகள் தேவைப்படுகின்றன. வாசகர்கள் புரிந்து
கொள்வீர்களாக!)

காற்றில் மிதக்கும் மேகங்களைப் போல் இவன் அடிக்கடி கலைந்து விடுவான். ஏதோ ஒரு பூச்சியின் சிறு கால் இடறலில் தன் ஆன்மாவை விட்டுக் கொடுக்கும் பனித்துளிகளைப் போல் உடைந்தும் விடுவான். அப்போதெல்லாம் இவனை அள்ளி எடுத்து ஒட்ட வைப்பது மகனின் பிஞ்சுக் கைகளே.

‘என் ெசல்லமே!
நீ பிறந்த பிறகுதான்
என் அப்பாவின் அன்பை
அதிகமாக உணர்கிறேன்!
உனக்கு ஒரு மகன் பிறந்ததும்
என் அன்பை அறிவாய் நீ!’

என்று மகனைப் பற்றி இவன் கவிதை கூட எழுதியிருக்கிறான்.ஒவ்வொரு நாளும் இரவில் களைத்துப் போய் இவன் வீடு திரும்புகிறபோது இவனது உலகம் வேறு உலகமாகி விடும். மகன் இவன் மார்பின் மீது படுத்துக் கொண்டு கதைகள் கேட்பான். இருவருக்கும் உறக்கம் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் இவன் மகனுக்குத் தாலாட்டு பாடுவான். முதலில் கண்ணதாசனின் ‘கண்ணே கலைமானே’, பிறகு ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்’, அடுத்து பட்டுக்கோட்டையின் ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’. பெரும்பாலும் இந்த மூன்று பாடல்களுக்குள்ளேயே அப்பாவும் பிள்ளையும் உறங்கிப் போயிருப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு இவன் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் கீழ்த் தளத்து குழந்தைகளுடன் மகன் விளையாடிக் கொண்டிருந்தான். தொலைக்காட்சியில் ஒரு பேய்ப் படத்தின் டிரெய்லர் ஓடிக் கொண்டிருந்தது. ‘‘டேய், பேய்ப் படம்டா! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா’’ என்று மகனிடம் ஒரு பையன் சொல்ல, பதிலுக்கு மகன் ‘‘வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க. உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க!’’ என்று ராகத்துடன் பாடிக் காட்ட,  இவன் ஆச்சரியப்பட்டுப் போனான்.

அன்றிரவு ஆழ்துயிலிலிருந்து இவனை மகன் எழுப்பி, ‘‘அப்பா! உண்மையிலேயே பேய் இருக்காப்பா?’’ என்று கேட்க, ‘‘என்ன ராஜா கேட்ட?’’ என்றான் இவன் அரைத்தூக்கத்தில். ‘‘உண்மையிலேயே பேய் இருக்காப்பா?’’ சட்டென்று இவன் மகன் கண்களைப் பார்த்தான். அந்தக் கண்களுக்குள் இவன் ஐந்து வயது குட்டிப் பையனாக, 36 வருடங்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.

வேகவதி ஆற்றங்கரையில் கால்களால் கோடுகள் வரையப்பட்டு, சிறுவர்கள் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சின்னஞ்சிறு கால்களுக்குத்தான் எத்தனை வேகம்! ஏதோ இந்த பூமிப்பந்தையே எட்டி உதைப்பது போல எத்தனை ஆவேசம்! ‘கபடிக்கபடி’ என்று பாடியபடி எதிர் அணியின் வியூகத்திற்குள் நுழைந்து, இவன் மூன்று பேரை அவுட் ஆக்கி விட்டு, கோட்டைத் தொடுகிறான்.

அப்போது ஒரு பையன் சத்தமாகச் சொன்னது, இப்போதும் இவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘‘டேய், இவன் ஏன் தெரியுமா பேய் மாதிரி ஆடறான்...’’ தொடர்ந்து அவன் சொன்ன வார்த்தைகள், இவனுக்குக் கண்ணீரை வர வைத்தன.பின்பு ஒரு நாள், வெளிர் மஞ்சள் நிறத்து பூக்களுடனும் முட்களுடனும் நெருஞ்சிகள் நிறைந்து கிடக்கும் மைதானத்தில்...

ஆடாதொடை குச்சிகள் ஸ்டம்ப்பாக, தென்னை மட்டை ‘பேட்’டாக, சைக்கிள் டியூப்பை சுருள் சுருளாக வெட்டிச் செய்த பந்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. அன்று காற்று இவன் பக்கம் வீசியது. அடி பின்னிக் கொண்டிருந்தான். தொட்ட பந்தெல்லாம் சிக்ஸர். அப்போது எதிரணியைச் சேர்ந்த பந்து வீசியவன் இவனைப் பார்த்து சொன்னான். ‘‘டேய், இவன் ஏன் தெரியுமா பேய் மாதிரி அடிக்கிறான்...’’ அதன் பிறகு அவன் சொல்லிய வார்த்தைகள் இவனை அழ வைத்தன.

இவன் வசித்தது ஒரு சிறிய ஓலைக் குடிசை வீடு. பனை வாரைகள் மீது தென்னங்கீற்றுகள் வேயப்பட்டிருக்கும். மேலே பென்னம் பெரிய மூங்கில் மரம் உத்தரமாய் குடிசையைத் தாங்கிக் கொண்டிருக்கும். பென்சில், பலப்பம், மயிலிறகு, ஆக்கர் குத்துப்பட்ட பம்பரம், உண்டியலில் குச்சி விட்டு திருடிய சில்லறைகள் என கட்டில் மீது ஏறி நின்று அந்த உத்தரத்தின் சந்துகளில்தான் தன் பொக்கிஷங்களை இவன் ஒளித்து வைப்பான்.

பின்புக்கும் பின்பு ஓரிரவில் இவன் அப்பாவின் மார்பு மீது படுத்துக் கொண்டே அவரிடம் கேட்டான். ‘‘அப்பா! அம்மா எப்பிடிப்பா செத்துப் போனாங்க?’’ ‘‘அதுவாடா? அவங்களுக்கு தீராத வயித்து வலிடா!’’ என்றார் அப்பா. ‘‘என் ஃபிரண்ட்ஸ் எல்லாம், அவங்க தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்றாங்களேப்பா’’ என்று இவன் கேட்க, அப்பா மௌனமானார்.

‘‘தூக்கு போடறதுன்னா என்னப்பா?’’ என்றான் ஆர்வமாக. அப்பாவின் கண்ணீர்த் துளிகள் இவன் முதுகை நனைத்தன. ‘‘கழுத்துல கயிற மாட்டிட்டு தொங்குவாங்களாமே? அம்மாவுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல?’’ என்று இவன் மீண்டும் கேட்க, அப்பா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். ‘‘உங்கம்மாவுக்கு கர்ப்பப் பையில பிரச்னைடா. அதனால அடிக்கடி வயித்துவலி வரும். அதெல்லாம் உனக்குப் புரியாது ராஜா. ஏதோ ஒரு வேகத்துல முடிவெடுத்துட்டா’’ என்று அப்பா சொல்ல, ‘‘அம்மா எங்கப்பா செத்தாங்க?’’ என்று இவன் கேட்டதும், அப்பா கை நீட்டி மேலே நீண்டிருந்த மூங்கில் உத்தரத்தைக் காட்டினார்.

மெளனம் ஒரு கரிய இருளைப் போல இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்தது. இவன் உரையாடலைத் ெதாடர்ந்தான். ‘‘அப்பா, நம்ம வீடு பேய் வீடாப்பா?’’
அப்பா பதறிப் போய் ‘‘ஏன் ராஜா?’’ என்றார். ‘‘இல்லப்பா! என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க. நம்ம வீடு பேய் வீடாம். அம்மாதான் பேயாம். நம்ம வீட்டைத் தாண்டிப் போகும்போது வேகமா ஓடிடுவாங்களாம். நான் வெளையாடும்போதெல்லாம் கிண்டல் பண்றாங்கப்பா. உண்மையிலேயே அம்மா பேயாப்பா?’’
அப்பா இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அப்பா இவனுக்குப் பெரியாரைப் பற்றிச் சொன்னார். அவர் எழுதிய புத்தகங்களை விளக்கிச் சொன்னார். ‘‘கடவுளே இல்லாதபோது பேய் எப்பிடி இருக்க முடியும்?’’ என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும், இவன் முதுகிற்குப் பின்னால் கிண்டலும் கேலியும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன.

ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் இவன் கண்களைப் பார்த்து அப்பா சொல்லுவார். ‘‘வாழ்க்கைல என்ன கஷ்டம் வந்தாலும், தற்கொலை மட்டும் பண்ணிக்காத!’’
இந்த அறிவுரையை வாழ்வின் பல தருணங்களில் அவரிடமிருந்து இவன் எதிர் கொண்டிருக்கிறான்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இவன் பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தான். அப்பா இவனிடம் வந்து, ‘‘ஃபெயில் ஆனா பரவாயில்லடா.

அதுக்காக தற்கொலை பண்ணிக்காத’’ என்பார். இப்படித்தான் கல்லூரி முடித்து, இவன் ஆசை ஆசையாய் சினிமாவில் காலடி வைத்து உதவி இயக்குனராய் வேலை செய்த முதல் படம் முக்கால்வாசி முடிந்தநிலையில் பொருளாதாரப் பிரச்னையால் நின்று போய், ஆறேழு மாதங்கள் இவன் வேலையில்லாமல் அலைந்தபோது, இவன் அறைக்கு வந்த அப்பா சொன்னார். ‘‘வாழ்க்கைல வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம்டா. எந்த நிமிஷத்துலயும் மனச தளர விடக்கூடாது. போராடணும். தற்கொலை எண்ணத்த மட்டும் மனசுல நுழைய அனுமதிக்கக் கூடாது!’’

அம்மாவின் தற்கொலை அவரை அப்படி மாற்றியிருந்தது. அம்மா இறந்த அன்று, ஆசிரியரான அவர், பள்ளியிலிருந்து ஓடி வந்து வீட்டிற்குப் பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் தற்கொலை எண்ணத்துடன் தலையை பலமுறை மோத, உறவினர்கள் சேர்ந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அந்த மோதலின் வீக்கம், ஒரு எலுமிச்சம்பழம் அளவிற்கு அவர் இறக்கும் வரை அவரது நெற்றியில் இருந்து கொண்டிருந்தது.

அப்பாவை சிதையில் ஏற்றும்போது அந்த நெற்றி வீக்கத்திற்கு இவன் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான். அருகில் இருந்த இவன் தாய் மாமன், ‘‘டேய் முத்து, இந்த வீக்கம் எப்படி வந்ததுன்னு தெரியுமாடா? அப்ப நீ சின்னப்புள்ள’’ என்றார் கண்ணீருடன். இவன் அழுகையினூடாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். அந்த உள்ளங்கை வெப்பம் ‘இவனுக்கும் தெரியும்’ என்பதை அவருக்குத் தெரியப்படுத்தியது.

இன்றைக்கும் வெட்டவெளியில் ஆகாயத்தைப் பார்க்கும் தருணங்களைத் தவிர வீடுகளிலோ அல்லது விழா மண்டபங்களில் இருக்கும்போதோ இவன் தலை குனிந்து கொண்டுதான் இருப்பான். நிமிர்ந்து உத்தரத்தைப் பார்த்ததில்லை. வரவே வராத இவனது அரிய பொக்கிஷம் தொலைந்து போன இடம் அது.

எல்லாவற்றுக்கும் மேல், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு அப்பா இறப்பதற்கு முந்தைய தினம் மருத்துவமனையில் படுக்கைக்கு அருகில் சைகையால் இவனை அழைத்தார். சுற்றிலும் டியூப் டியூப்பாக செருகப்பட்டு, ஏதேதோ அவரது உடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தன. செயற்கை சுவாசக் கருவியை தன் முகத்திலிருந்து அகற்றி மூச்சுத் திணறலுடன் அப்பா இவனிடம் சொன்னார்.

‘‘வாழ்க்கைல எந்த விஷயத்துக்காகவும் தற்கொலை பண்ணிக்காதடா!’’ஒளியின் வேகத்தை விட நினைவின் வேகம் கணக்கிட முடியாதது. சில நொடிகளில் முப்பத்தாறு வருடங்களைக் கடந்து வந்து இவன் நிகழ்காலத்துக்குள் நுழைகிறான். எதிரே இவன் மகன் இவனை உலுக்கியபடி, ‘‘அப்பா, உண்மையிலேயே பேய் இருக்காப்பா?’’ என்று கேட்கும் கேள்வி காதில் ஒலிக்கிறது.

இவன் மகனை பூஜையறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு இவனது அப்பா மற்றும் அம்மா படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த புகைப்படங்களைக் காட்டி இவன் மகனிடம் சொன்னான். ‘‘இந்த உலகத்துல பேய் எல்லாம் இல்ல.

சாமி மட்டும்தான் இருக்கு. இவங்கதான் நம்ம சாமி. கும்புட்டுக்கோ.’’
அப்பாவும் மகனும் கண் மூடி கும்பிட்டார்கள்.பென்சில், பலப்பம், மயிலிறகு, ஆக்கர் குத்துப்பட்ட பம்பரம், உண்டியலில்  குச்சி விட்டு திருடிய சில்லறைகள் என அந்த  உத்தரத்தின் சந்துகளில்தான் தன் பொக்கிஷங்களை ஒளித்து வைப்பான்.இந்த உலகத்துல பேய் எல்லாம் இல்ல. சாமி மட்டும்தான் இருக்கு!

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்்கள்: மனோகர்