விவசாயத்துக்கு மண்ணே வேண்டாம்!



இது அல்ட்ரா மாடர்ன் அக்ரிகல்ச்சர்

‘‘விவசாயம் எல்லாம் நிலத்தில் நடக்கும் என்பது பழங்கதை. விவசாயத்துக்கு மண்ணே தேவை இல்லை என்பதுதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி!’’ என வியக்க வைக்கிறார் ராம் கோபால். ஒரு ஐ.டி கம்பெனியில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், மண்ணில்லாமல் நடக்கும் நவீன விவசாயத்தில் தன்னை கரைத்துக்கொண்டிருக்கிறார்.சென்னை கொட்டிவாக்கத்தில் ‘ஃபியூச்சர் ஃபார்ம்ஸ்’ என்ற பெயரில் இவர் செய்துவரும் மண்ணில்லா விவசாயத்தின் மாதிரியைப் பார்க்கும் விழிகள் எல்லாம் விரிகின்றன.

‘‘நான் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். தனியா ஒரு ஐ.டி. நிறுவனத்தையும் நடத்திக்கிட்டு இருந்தேன். ஒருநாள் யூ டியூப்ல வந்த ஒரு வீடியோ கிளிப்பிங்ஸைப் பார்த்தேன். அது ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறையில் நடக்கும் விவசாயம். அதாவது மண்ணில்லாமல் நேரடியா நீர் மூலமா செடிகளை வளர்க்கும் முறை. 

உடனே ஆர்வமாகி ‘இது மாதிரி ஏன் நம்ம வீட்டுலயும் வளர்த்துப் பார்க்கக் கூடாது’னு எங்க அப்பாகிட்ட  கேட்டேன். அப்பா போட்டோ பிரின்டிங் துறைக்கான மெஷின்களைத் தயாரிப்பதில் நல்ல அனுபவம் உள்ளவர். நவீனமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் அவருக்கும் ஆர்வம் அதிகம்!’’ என்கிற ராம் தன் ஃபார்மைக் காட்டுகிறார்.

அடுக்கடுக்காக சரியான இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் பி.வி.சி பைப்களில் கீரை வகைகள், துளசிச்செடிகள், முள்ளங்கி எல்லாம் செழித்து வளர்ந்திருக்கின்றன. பிளாஸ்டிக் வாளிகளில் வெள்ளரிச் செடிகளின் வளர்ச்சி ஆச்சர்யமூட்டுகிறது. செடிகளுக்கு அடியில் பார்த்தால் வெறும் வேர்தான் இருக்கிறது; மண் இல்லவே இல்லை.

 ‘‘இதுதாங்க ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம். இதில் என்னை கைடு பண்ண இங்கே யாரும் இருக்காங்களானு தெரியல. யூ டியூபின் உதவியோடு இதைப் பத்தி ஆராய்ச்சி செய்து பார்த்தேன். பி.வி.சி பைப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ ஓட்டைகளைப் போட்டு, அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைக்கணும்.  அந்த பைப் வழியா தண்ணி போய் வரணும். அதுக்காக தண்ணீரை சுழற்சி முறையில அனுப்ப சின்ன பம்ப் வைக்கணும்.

செடியோட வேர் சல்லடை பிளாஸ்டிக் கப்ல நிற்க ஒரு விதமான களிமண் உருண்டைகள் தேவை. இது சீனாவுல கிடைக்குது. இந்த களிமண் உருண்டையை ஆயிரம் டிகிரி ஃபாரன்ஹீட்ல சுட்டு தயார் செய்வாங்க. இது தண்ணியில கரையாது. ஈரத்தை இருத்தி வைக்கும். இந்தக் களிமண் உருண்டைகளை பிளாஸ்டிக் சல்லடை கப்ல போட்டு வட்ட வடிவ ஓட்டைகள்ல பொருத்தி வச்சு, செடிகளை நட்டுட்டா போதும். அந்தச் செடி வேர் வழியா தண்ணியை உறிஞ்சி நல்லா வளரத் தொடங்கிடும்.

இது போக, செடிகளுக்குத் தேவையான நுண்சத்துகளை சர்க்குலேட் ஆகுற தண்ணியில தேவையான அளவு கலந்துட்டா போதும். செடி நல்லா செழிச்சு வளரும். செடிகளுக்கு மண்ல சத்துகளைத் தேடுற வேலை இல்லை. இதனால செடிகளோட வளர்ச்சி, மண்ணில் வளரும் தாவரங்களைவிட அதிகமா இருக்கும்.  மண்ணின் மூலமா பரவுற பூச்சி, நோய் தொந்தரவுகளும் இருக்காது. பைப்கள்ல வளர்றதால தேவையில்லாத களைகளுக்கும் இடமில்ல.

ஆரம்பத்தில் இதை சின்ன அளவுல செய்து பார்த்தேன். வெளிநாடுகள்ல, குளிர்ப் பிரதேசங்கள்ல செய்யப்படுற இந்த முறையிலான விவசாயத்தை சென்னையில செய்யிறது சவாலாவே இருந்தது. தொடர்ந்த முயற்சிக்குப் பிறகு  வெற்றிகரமா செடிகள் வளரவே, இதை ஏன் இந்தியாவுல தொழில்முறையா செய்யக் கூடாதுங்கற ஆராய்ச்சியில இறங்கினேன். நீண்ட கால ஆராய்ச்சியின் விளைவே  ‘ஃபியூச்சர் ஃபார்ம்ஸ்’.

இந்த விவசாயத்தின்படி குறைவான நிலத்தில் அதிகளவில் மகசூல் பெற முடியும். தண்ணீர் 90 சதவீதம் மிச்சமாகும். நல்ல தரமான காய்கறிகளைப் பெறலாம்.  சின்ன வேர்கள் வரும் கீரை ரகங்களை பைப்களிலும், பெரிய வேர் வரும் காய்கறிச் செடிகளை பக்கெட்கள்லயும் வளர்க்கலாம்.

தண்ணீர் விடுறது முதல் நுண்ணூட்ட கரைசல்களை கலப்பது வரை அத்தனையையும் ஆட்டோமேடிக் முறையில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பராமரிக்க சிஸ்டம்ஸ் இருக்கு. அதை நாம செட் பண்ணி வச்சிட்டா போதும். விவசாயம் தானா நடக்கும். குறித்த நேரத்துல நாம போய் அறுவடை செய்தா மட்டும் போதும். வீடுகளுக்கான சின்ன அளவு விவசாயத்துக்கு இது பெஸ்ட். மொட்டை மாடிகள்லயோ, பால்கனியிலயோ, வேற ஒரு சின்ன இடத்துலயோ கீரைகள், கொத்தமல்லி, புதினா, மிளகாய், தக்காளினு அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை இதன்மூலம் அளவா விளைய வச்சிக்க முடியும். ஆரம்பகட்ட செலவு கொஞ்சம் அதிகம்னாலும் நீண்டகால லாபம் தரும்  விவசாய முறை இது’’ என்கிற ராம், எதிர்காலத்தில் பெரும் அளவிலான விவசாயமும் இந்த முறைக்கு மாறும் என்கிறார் தீர்க்கமாக!

‘‘இந்தியா  நிலப்பரப்பு அதிகம் உள்ள நாடு. அதனால பாரம்பரிய விவசாயிகள் இதை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா, தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தி, குறைந்த எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு வெற்றிகரமா விவசாயம் செய்யிற இந்த முறைதான் எதிர்காலத்தில் கை கொடுக்கும். இப்பவே கோவை, பெங்களூரூ முதலான இடங்கள்ல இந்த ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்திற்கு நிறைய பேர் மாறி வர்றாங்க.

அதுக்கான தொழில்நுட்ப உதவிகளை நாங்க செய்து தர்றோம். இதில் இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம். இதை நாங்கள் ஆரம்பிச்சிருக்கோம் என்பதே பெருமைதானே!’’ என்கிறார் அவர் உற்சாகமாக!மொபைல்தான் அப்கிரேடு ஆகணுமா... விவசாயமும் ஆகுது அப்... அப்... அப்கிரேடு!பிளாஸ்டிக் வாளிகளில்  செடிகளின் வளர்ச்சி ஆச்சர்யமூட்டுகிறது. அடியில் பார்த்தால்  வெறும் வேர்தான் இருக்கிறது; மண் இல்லவே இல்லை.

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்