தூங்காவனம்
மகன் பணயக் கைதியாகிவிட, போதைக்கடத்தல் தடுப்பு அதிகாரி கமல்ஹாசன் அவனை சாகசங்களுடன் மீட்பதே ‘தூங்காவனம்’.ஓர் இரவுக்குள் நடக்கும் பரபர சம்பங்களால் நிறைந்திருக்கிறது படம். துணிச்சல் மிகுந்த அதிகாரி கமலுக்கு, திரைமறைவாக போதை கும்பலுக்கு உதவியாக இருக்கும் போலீஸ் அதிகாரியைக் கண்டுபிடிப்பது டார்கெட். அதற்காக விடியற்காலை, நடுச்சாலையில் அதிரடி தாக்குதல் நடத்துகிறார்.
அங்கே பிடிபடும் போதைப் பொருளைக் கேட்டு கடத்தல் ஏஜென்ட் பிரகாஷ்ராஜ் அதிரடியாக கமலின் மகனைக் கடத்துகிறார். ஒப்படைக்கப் போகும் இடத்தில் போதைப் பொருள் காணாமல் போகிறது. அடுத்து எழும் சவால்களை கமல் எப்படி சமாளிக்கிறார் என்பதும், பிரகாஷ்ராஜிடமிருந்து மகனை மீட்க முடிந்ததா என்பதும் மீதிக்கதை. படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு போன வகையில் நல்ல அறிமுகம் தருகிறார், இயக்குநர் ராஜேஷ் ம செல்வா.
போதை தடுப்பு அதிகாரி, முறுக்கு மீசை, இரண்டு வார தாடி, லேசர் பார்வை, இரும்பு உடம்பு, சிறுத்தை ஓட்டம், துப்பாக்கி சீற்றத்தில் பின்னுகிறார் கமல்ஹாசன். அதிகாலை பயணத்தில் எதிர் வரும் கும்பலை மடக்கி ஜஸ்ட் லைக் தட் சுட்டுவிட்டு, அவசர அவசரமாக தடயங்களை அழித்துவிட்டு புறப்படு வதோடு ஆரம்பமாகிறது பரபரப்பு ஓட்டம். அனேகமாக முழுப் படமும் ஒரு நைட் கிளப் சூழலில் பயணிப்பதும், சண்டைக் காட்சிகள் படு பிஸி சமையல் அறைகளில் நடைபெறுவதும் புதுசு.
தில் ஹீரோ, கல் நெஞ்சம் கொண்ட வில்லன் என க்ரைம், ஆக்ஷன், த்ரில்லரை ஹைவே பரபரப்பு ஓட்டம் மாதிரி நடத்தியிருக்கிறார்கள். முதல் ஃப்ரேமிலேயே படத்தை துவக்கி, பிரதான பாத்திரங்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி, ஐந்தாவது நிமிடத்திலேயே படத்திற்குள் நம்மை இழுப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். கேரக்டருக்கு ஏற்றவாறு அமைந்த ஆக்ஷன் த்ரில்லரில் அதிகம் பேசாமல் சடசடவென முடிவெடுத்துக் காரியம் சாதிக்க முயலும் கமல், ஆஹா அண்டர்ப்ளே. அவர் அடிப்பது மட்டுமில்லாமல் அடி வாங்குகிற விதமும் இயல்பாக அமைகிறது. அவரது நிறைய யோசனைகள் தவறிப் போக, யதார்த்தமாக புது ஐடியாக்களுடன் அடுத்த கட்டத்திற்கு உருமாறுவது மதியூகம்.
அதிகபட்ச நகைச்சுவையோடு கொடூர வில்லனாகவும் பதற்றத்தை கச்சிதமாக ப்ளே செய்கிறார் பிரகாஷ்ராஜ். அவருக்கு பிரஷர் தரும் சம்பத், உள்ளே இருந்தே ‘குழி’ பறிக்கும் கிஷோர், யூகி சேது என எல்லோருமே அவரவர் பாத்திரத்துக்கு உயிர் தருகிறார்கள். த்ரிஷா ஆச்சரிய என்ட்ரி. ஒரு இளம் பெண் அதிகாரிக்கு அத்தனை பொருத்தம். கமலோடு மோதும் ஒரு சண்டைக் காட்சி... கமலுக்கே சவால் விடுகிற மாதிரி ‘நச்’ ரகம்.
பரபரப்பு நிமிடங்களை அழகும், அதிர்ச்சியுமாய் பதிவு செய்கிறது சானுவின் கேமரா. ஜிப்ரானின் இசை, பின்னணியில் சேஃப் கேம்! அவசர கணங்களிலும் ஈர்க்கிறது சுகாவின் வசனம்.முதல் பாதியில் தெரியும் பரபரப்பு, இரண்டாம் பாதியில் குறைந்து போனதேன்? அத்தனை விரட்டல், மிரட்டல், பில்ட் அப்போடு வரும் இடைவேளைக்குப் பிறகு ஏன் அவ்வளவு குழப்பம்? பையனை மீட்பார்களா என்ற நமது பரபரப்பை ஆறப் போடுவது ஏன்? அவ்வளவு வெயிலிலும் சூட் கோட்டோடுதான் விசாரணை செய்வார்களா அதிகாரிகள்? இப்படி ஈர்ப்பை தளர்த்திவிடாமல் திரைக்கதையிலும் பின்னியிருந்தால், ‘தூங்காவனத்’தில் இன்னும் ஆழ்ந்திருக்கலாம்!
- குங்குமம் விமர்சனக் குழு
|