குட்டிச்சுவர் சிந்தனைகள்



இந்த வாரம் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக்ல எல்லாம் ஒரே மேட்டர் வேற வேற விதமா வந்திருக்கும், நம்மில் பல பேரு அதை பார்த்திருப்போம். ‘வேதாளம் கலெக்‌ஷன் 20 கோடி, தூங்காவனம் கலெக்‌ஷன் 20 கோடி, டாஸ்மாக் கலெக்‌ஷன் 372 கோடி’ - இதுதான் அந்த மேட்டர். ஒரு வருட டாஸ்மாக் விற்பனையின் ஒரு சதவீதத்தை ஒரே நாளில் எட்டியிருக்கிறோம்.

 ‘டாஸ்மாக் தீபாவளி விற்பனைக்கு தொலைநோக்குடன் திட்டம் தீட்டிய முதல்வர், மழை வெள்ள சேதம் தவிர்க்க திட்டமிடாதது ஏன்?’ என அரசியல் கட்சிகள் வறுத்தெடுக்கும் அளவுக்கு தமிழக அரசு இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்ததா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ‘தூங்காவனம்’, ‘வேதாளம்’ படங்களுக்குக் கூட நிமிடத்துக்கு ஒரு முறை டி.வி விளம்பரம், எஃப்.எம் விளம்பரம், பேப்பர் விளம்பரம் எல்லாம் வருகின்றன. எந்த விளம்பரமும் இல்லாத டாஸ்மாக், இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது.

உண்மையில் கொண்டாட்டத்தின்போது குடிக்க ஆரம்பித்த மக்கள், இப்பொழுது குடிப்பதையே கொண்டாட்டமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் என  கூடும்போது குடித்தவர்கள், இப்ப குடிப்பதற்காகவே கூடுகிறார்கள். பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் கடைப்பிடிக்கும் பங்க்சுவாலிட்டியை விட, காலையில் பத்து மணிக்கு டாஸ்மாக் திறக்கும்போது குடிகாரர்கள் காட்டும் பங்க்சுவாலிட்டி பிரமிக்க வைக்கிறது.

‘தீபாவளி அன்னைக்கு என்ன செய்வ? பொங்கல் அன்னைக்கு என்ன செய்வ?’ என கேள்விகள் கேட்டால், ‘சரக்க போட்டுட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதான்’, ‘சரக்க போட்டுட்டு சினிமாவுக்கு போக வேண்டியதுதான்’, ‘சரக்க போட்டுட்டு வீட்ல படுக்க வேண்டியதுதான்’ என ஒரே அர்த்த பதில்கள் வேறு வேறு வகையில் வரும்.

உண்மையாகவே புரியவில்லை, இந்தத் தலைமுறையினர் குடியை எப்படிப் பார்க்கிறார்கள் என. முன்பெல்லாம் ட்ரீட் என்றால் குடிப்பதும் அதில் அடக்கம்; இன்று குடிப்பது மட்டும்தான் ட்ரீட். உண்மையாகக் கணக்கிட்டால், தமிழகமெங்கும் இருக்கும் பொதுக் கழிப்பிடங்களை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் எனலாம். இரண்டுக்கும் எண்ணிக்கை முன்ன பின்ன இருந்தாலும், அரசு சுத்தம் - சுகாதார விஷயத்தில் பாரபட்சம் காட்டவில்லை. பொதுக் கழிப்பிடங்களுக்கும் டாஸ்மாக் பாருக்கும் பெரும் வித்தியாசமில்லை.

வழக்கமா, கோயில் திருவிழாக் கூட்டத்தில் சிக்கித்தான் உயிர் இழந்தார்கள் எனக் கேள்விப்படுவோம். ஆனால் கடந்த வாரத்தில் திருவான்மியூரில் டாஸ்மாக் நெரிசலில் சிக்கி ஒரு பிரைவேட் கம்பெனி செக்யூரிட்டி இறந்திருக்கிறார் என செய்தி வருகிறது.

‘மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக கோவனை கைது செய்த தமிழக அரசு, ஓப்பன் த டாஸ்மாக் பாடலுக்காக அனிருத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்’ என ட்விட்டரில் அசோக் (@ashokiie) என்பவர் போட்ட பதிவு  உண்மையில் சிரிப்பு மூட்டுவதாகத் தெரிந்தாலும், உள்ளே இருக்கும் உண்மையின் சோகம் சுடுகின்றது.

வேலைக்குப் போகும் முன் குடித்து விட்டுக் கிளம்புகிறவர்களும், குடிப்பதற்காக எப்படா வேலை முடியும் எனக் காத்திருப்பவர்களும் அதிகமாகிவிட்ட தேசம் இது. குடிக்கிறதை நிறுத்துங்க என ஒலிக்கும் குரல்கள் கூட குடித்துவிட்டு ஒலிப்பதாய் நினைக்கும் நாட்டில் டாஸ்மாக்கை மூட முடியுமா என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய விஷயம். ஆனால், குடிப்பதைக் குறைக்கலாம்.

அதற்கான வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரவரே அவரவர் மனதில் கொண்டு வரலாம். எதற்கு சொல்கிறோம் என்றால், ‘தனி ஒருவன்’ படத்தில் சொல்வதைப் போல, முதல் பக்க செய்திக்கும் மூன்றாம் பக்க செய்திக்கும் எப்பொழுதும் சம்பந்தம் இருக்கும். இப்ப முதல் பக்கத்தில் ‘டாஸ்மாக் விற்பனை 372 கோடி’ என செய்தி இருக்கு. மூன்றாம் பக்கத்தில் ‘குடிபோதையில் விபத்து’ என பல செய்திகள் இருக்கு.

‘நீ சொல்லி குடிக்கமாட்டேன், எனக்கா தோணுனா குடிப்பேன்’ என்கிற ‘போக்கிரி’ விஜய் மோடுலதான் பாதி பேங்க் ஆபீசர்ஸ் வேலை செய்வாங்களோனு சில சமயம் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன்.

பேங்க்ல வேலை செய்பவர்கள் எல்லாம் அசால்ட்டா இருக்காங்கனு சொல்ல மாட்டேன். ஆனா, ரொம்பவே அசால்ட்டா வேலை செய்யறவங்க எல்லாருமே  பேங்க்லதான் இருக்காங்கன்னு தைரியமா சொல்லுவேன். கம்ப்யூட்டரைக் கூட கால்குலேட்டர் போல ஒரு விரலால் டைப் அடித்து கடுப்பேற்றும் பல வகையான பில்கேட்ஸ்களை ஒவ்வொரு பேங்கிலும் பார்க்கலாம்.

பள்ளிக்கூட வாத்தியாருங்க கூட பேச பயப்பட்ட நான், அதற்குப் பிறகு பின்லேடன் வந்தாக்கூடா பாத்திடலாம் ஒரு கைனு இருந்தேன். ஆனாலும் பேங்க் ஆபீசர்களோட பேச கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. இருக்கும் ஊழியர்களில் சரி பாதி நம்பிக்கை நட்சத்திரங்களும், மீதி பாதி கொஞ்சம் எரிந்து விழும் எரிநட்சத்திரங்களும்தான் ஒவ்வொரு பேங்கிலும் இருப்பாங்கன்னு தோணுது.

உலகத்துலயே மிக அழகான பெண்ணிடம் காதல் சொல்ல க்யூவில் நிற்பவர்களை விட, ஒவ்வொரு பேங்கிலும் கவுன்ட்டர்களின் கியூவில் நிற்பவர்கள்தான் அதிகம். சென்னை மாநகராட்சிக்குப் பிறகு அதிக டேக் டைவர்ஷன் சொல்றது ஸ்டேட் பேங்க் ஆபீஸ்தான் என்றால் அது நகையுமாகாது; மிகையுமாகாது. 

அரசு சம்பந்தமா இருக்கிற செட்டில்மென்ட்கள்,  பென்ஷன்கள், உதவித் தொகைகள், பரிசுத் தொகைகள் எனப் பல வகையான பரிவர்த்தனைகளும், பொதுவான வங்கிப் பரிவர்த்தனைகளும் என எப்பொழுதும் பிஸியாக இருக்கும் பல ஊழியர்கள் பணிவா இருக்காங்க... அதே போல கொஞ்சம் கனிவா இருந்தா இன்னமும் சந்தோஷம் என்பதே எங்களின் ஆசை!

ஏழை செத்துப்போனா எமனுக்குக் கூட தெரியல; அதுவே பணக்காரன் செத்தா படியளக்குற பெருமாள் கூட பக்கம் பக்கமா பேப்பர்ல விளம்பரம் தராரு. ஏழை செத்துப்போனா தோளு மேல ஒரு பூமாலை மட்டும்தான்; அதுவே பணக்காரன் செத்துப்போனா நகரத்தின் சாலைகள் கூட ரோஜாப்பூ மாலை போட்டுக்குதுங்க. ஏழை செத்துப்போனா தகவல் தெரியாத மாதிரி மறையிறவன் கூட, பணக்காரன் செத்துப்போனா பொணம் கோவிச்சுக்கக் கூடாதுனு கைகட்டி கும்பிடு போட்டு குட்மார்னிங் சொல்லிட்டு வர்றான்.

இதையெல்லாம் எதுக்குச் சொல்றோம்னா, இந்தியாவில் வறுமையை, ஊழலை, இன்ன பிற விஷயங்களைக் கூட அழித்தும் ஒழித்தும் விடலாம்... ஆனால் க்யூவை மட்டும் எந்நாளும் ஒழிக்க முடியாது. எத்தனையோ இணைய வசதிகள் வந்தாலும், பர்த் சர்டிஃபிகேட்ல இருந்து டெத் சர்டிஃபிகேட் வாங்குற வரைக்கும், டெலிபோன் பில் கட்டுறதுல இருந்து கரன்ட் பில் கட்டுற வரைக்கும், படம் பார்க்கிற சினிமா தியேட்டர்ல இருந்து பிரசவம் பார்க்கிற ஆபரேஷன் தியேட்டர் வரைக்கும் எல்லா இடத்துலயும் இந்த 3G, 4G காலத்துல கூட காந்திஜி கால கியூதான்.

இந்த வாரம் கண்ணால பார்த்த நிகழ்வு, மின் மயானங்களில் கூட பணக்காரப் பிணம் எரிந்து முடிய, ஏழைப் பிணம் காத்திருக்கிறது. அதனால என்ன சொல்றோம்னா, ஏழையா பிறக்கிறது தப்பில்ல, ஏழையா இருக்கிறதும் தப்பில்ல... ஆனா சாகறப்ப பணக்காரனா செத்துடணும். இல்லன்னா, பொணமா இருந்தாலும்
பிரச்னைதான்!   

ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்