ரயில் டிக்கெட் எடுப்பதே இனி சூதாட்டம்!
மாற்றம்... ஏமாற்றம்... இந்திய ரயில்வே
நவம்பர் 12 முதல், ரயில் பயணச் சீட்டுகளை கேன்சல் செய்யும் விதிமுறைகளை மாற்றி, கட்டணங்களை ஏற்றி, பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறது இந்திய ரயில்வே. இடம் கிடைக்க வேண்டுமே என இரண்டு மாதம் முன்பே முந்திக்கொண்டு ரிசர்வேஷன் செய்யும் பயணிகளுக்கு கடைசி நேர பயண மாறுதல் ஆயிரம் வரும்.
அப்போதெல்லாம் கைகொடுத்துக்கொண்டிருந்தது டிக்கெட் கேன்சலேஷன் முறைதான். ஆனால், இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது என்பது பெருந்தொகையை இழக்கும் தியாகச் செயல்! இந்த மாற்றம் தேவையா? இது பயணிகளுக்கு நன்மை தருமா? தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமை தீர்வகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரான ராஜ்குமாரிடம் பேசினோம்...
‘‘ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை சமாளிக்க அரசு உருப்படியான பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும். ஆனால் இந்த டிக்கெட் ரத்து கட்டணங்கள் பயணிகளை மேலும் தொல்லைப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.
‘ஏஜென்ட்கள் சிலர் ஏராளமான டிக்கெட்களை ரிசர்வ் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்கிறார்கள். இதனால் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. கடைசி நேர கேன்சல்களால் ரயிலும் காலியாகப் போகிறது. இதையெல்லாம் தடுக்கத்தான் இந்த விதி மாற்றம்!’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், பயணிகள்தான் இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படப் போகிறார்கள்’’ என்கிறார் ராஜ்குமார்.
‘‘குறிப்பாக, இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படப் போவது வெயிட்டிங் லிஸ்ட் மற்றும் ஆர்.ஏ.சி டிக்கெட்காரர்கள்தான். இவர்கள் கடைசி நேரத்தில், ஏதாவது சீட், பர்த் கிடைக்குமா என்று டி.டி.ஆரிடம் வேண்டுதல் வைப்பார்கள். கிடைக்காத பட்சத்தில் அன்ரிசர்வ்டு பெட்டியில் தொற்றிக்கொண்டு செல்வார்கள். அங்கேயும் இடமில்லாமல் கூட்டம் வழிந்துகொண்டிருந்தால், கட்டக் கடைசியில்தான் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்வார்கள்.
முன்பிருந்த விதிப்படி ரயில் கிளம்பிய பின்பு மூன்று மணி நேரம் வரை இந்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம். பணம் திரும்பக் கிடைக்கும். இப்போதோ ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பே இந்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், முழுப்பணமும் சுவாகா. நம்மூரில் கேன்சலேஷனுக்காக க்யூவில் நின்றாலே கவுன்ட்டரை நெருங்க அரை மணி நேரம் ஆகும் என்பது நிதர்சனம். ஒரு வெயிட்டிங் லிஸ்ட் பயணி, கடைசி நேரம் வரை ரயிலில் இடம் பிடிக்க முயற்சிப்பாரா, இங்கே வந்து வரிசையில் நிற்பாரா?
மற்ற ரிசர்வ்டு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. 24 மணி நேரத்துக்கு முன்புவரை பிடித்தம் இல்லாமல் ரத்து செய்யலாம் என்ற காலக்கெடு, 48 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான நிர்ப்பந்தம் யாருக்குமே கடைசி நேரத்தில்தான் தெரியவரும். 2 நாட்களுக்கு முன்பே அதைத் தெரிந்துகொள்ள பயணிகள் தீர்க்கதரிசிகளா என்ன?
புதிய விதிமுறைகளின்படி, ரயில் புறப்பட்ட பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்யவோ, பணத்தை திரும்பப் பெறவோ முடியவே முடியாது. ஏதோ காரணங்களால் தாமதமாக வந்து ரயிலைத் தவற விட்டவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பயணியின் கடைசி முயற்சிகளுக்கு, கடைசி நிமிடத் தீர்மானங்களுக்கு ஆப்பு வைப்பது போலத்தான் இந்த விதிகள் உள்ளன. இனி, கேன்சல் பற்றி யோசித்து ஒவ்வொரு பயணியும் ரயில் டிக்கெட் எடுக்கத் தயங்குவார். இதனால் வருங்காலத்தில் ரயில் டிக்கெட் எடுப்பதே ஒரு சூதாட்டம் போல ஆகிவிடும்!’’ என்கிறார் அவர் காட்டமாக!எங்கே... வாழ்வதே சூதாட்டம் ஆகிடும் போலிருக்கே!
- டி.ரஞ்சித்
|