ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 45
‘‘மொத்தத்தில் நாங்கள் எதைப் பற்றிப் பேசினாலும் முடிவில் அந்தப் பேச்சு ஒரு சித்தரிடம்தான் வந்து நின்றது. அதைத் தொடர்ந்து சதுரகிரி செல்லத் தீர்மானித்தோம். ஜோசப் இம்மட்டில் நமது துறை சார்ந்த எந்த ஒரு ஆயுதத்தையும் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். ‘இரவில் பார்க்க முடிந்த கேமரா, ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் க்ராக்கர்ஸ், விஷம் தோய்ந்த கத்தி, சத்தமில்லாமல் சுடும் துப்பாக்கி,
சூரிய ஒளியில் சார்ஜ் ஆகி செயல்பட முடிந்த போர்ட்டபிள் ஆன்டெனா, மிக மட்டமான வெளிச்சத்திலும் படம் பிடிக்க முடிந்த வீடியோ கேமரா, ஒரு மெடிக்கல் கிட் பேக், இது போக ஒரு ஷோல்டர்பேக்கில் நூறு மீட்டர் உயரத்திற்கு ஏற உதவுகிற மலையேறும் சாதனங்கள், பூமியில் மூன்று மீட்டர் தூரம் துளையிட்டு உள் மண்ணை எடுத்துச் சேகரிக்க உதவுகிற போர் ட்ரில்லர்... இப்படி நாங்கள் வழக்கமான பயணங்களில் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு உபகரணத்தையும் இம்முறை எடுத்து வரக்கூடாது என்று கூறிவிட்டார் ஜோசப் சந்திரன்.
மாறாக, ‘காவி வேட்டி கட்டிக்கொண்டு, ஷேவ் செய்யாமல் முடியை வளர்த்துக்கொண்டு, ஒரு யாத்ரிகன் போலத்தான் அந்த மலையை மிதிக்க வேண்டும்’ என்றார். மானசீகமாகவும் உருக்கமாகவும் சித்த தரிசனம் கிடைக்க பிரார்த்தனையும் செய்துகொள்ளச் சொன்னார்.‘வேஷம் போடச் சொல்கிறீர்களா?’ என்று நான் திருப்பிக் கேட்கவும், அவருக்கு கோபம் வந்துவிட்டது.
‘வேஷம் போடச் சொல்லவில்லை கணபதி... அசலான யாத்ரிகனாக மாறச் சொல்கிறேன். சித்தர்கள் வரையில் நாம் உண்மையாக இருந்தால் போதும். மற்றவை அவசியமில்லை’ என்ற அவர் கருத்தை ஏற்க எனக்கு சிரமமாக இருந்தது.‘அது எப்படி ஜோசப்... அந்த சித்தர்கள் பற்றி எந்த அனுபவங்களும் நமக்கு இல்லாத நிலையில், எப்படி அவர்கள்பால் பக்தி வைக்க முடியும்? கடவுள்மேல்கூட நாம் பூரண பக்தி வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் பக்திக்கு இங்கே யாருக்கும் பொருளே சரியாகத் தெரியாது’ என்றேன் நான். அதை ஜோசப் சந்திரன் மறுக்கவில்லை.
‘நீங்கள் சொல்வதுதான் உண்மை... பக்தி ஒரு அற்புதமான விஷயம். அது மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். மற்ற உயிரினங்களுக்கெல்லாம் பசி, பாசம், பயம், சந்தோஷம் என்கிற உணர்வுகளே சாத்தியம். மனிதர்களில்கூட எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பக்தி என்பது கல்வியைப் போன்றது. ‘கல்வியின் அருமை ஒருவருக்குத் தெரிய வந்தபின் அவர் படித்துக்கொள்ளட்டும்’ என்று நாம் மனிதர்களை விட்டுவிடுவதில்லை. குழந்தைப் பிராயத்திலேயே அழுதாலும், அடம் பிடித்தாலும், நாம் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தியே கல்வி கற்க வைக்கிறோம். அதன்பின் அது பழக்கமாகிவிடுகிறது. அதன் மதிப்பு ஐம்பது, அறுபது வயதில்தான் ஒருவருக்குப் பூரணமாகத் தெரியவும் வருகிறது.
இதே பாணியில்தான் பக்தியும் புகட்டப்படுகிறது. ‘கடவுளைக் கண்ணால் பார்த்தபிறகு நான் பக்தி செலுத்துகிறேன்’ என்று ஒருவர் கூறினால் அவரால் அவர் வாழும் நாளில் பக்தி செலுத்தவே முடியாது. போலியாகவாவது பக்தி செலுத்தத் தொடங்கினாலே அம்மட்டில் அந்த அற்புதத்தால் மெல்ல பயன் பெற முடியும்’ - என்று ஒரு நீண்ட விளக்கம் தந்தார் ஜோசப்.
கல்வியையும் பக்தியையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்து அவர் சொன்ன கருத்தை என்னால் மறுக்க முடியவில்லை. அதேசமயம் பெரிதாக எனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை. நம் கண்ணெதிரில் தவறானவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் மிக நல்லவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கும்போது எப்படி கடவுள் இருப்பதாகக் கருதமுடியும்? அதேசமயம் பரந்த இந்த உலகம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று, மழை, இரவு, பகல் என்கிற அமைப்பை எல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் எப்படி தானாக வந்திருக்க முடியும் என்கிற கேள்வியும் எழும்பும்.
எனவே, கடவுள் நம்பிக்கை மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் நான் குழப்பமானவனே! கிட்டத்தட்ட என்னைப் போலவேதான் நான் எல்லோரையும் நினைக்கிறேன். இதில் ஜோசப் சந்திரன் மாறுதலாகக் காட்சி தந்தது எனக்கு ஆச்சரியமே! இ்ந்த பக்தி விஷயத்தில் மட்டுமா... அவர் எல்லா விஷயங்களிலும் எனக்கு ஆச்சரியம் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.அதன்பின் யாத்ரிகர் கோலத்தில் நாங்கள் சதுரகிரி நோக்கிப் புறப்பட்டோம். ெதற்கே ராஜபாளையம் சென்று அங்கிருந்து குட்டி மலையாள தேசம் என்றழைக்கப்படும் வத்திராயிருப்பு எனும் ஊருக்குச் சென்று, பின் அங்கிருந்து தாணிப்பாறை எனும் மலையடிவாரப் பகுதிக்குச் சென்று, அங்கே இருந்து கையில் ஒரு கோலுடன் தோளில் தொங்கும் ஒரு பையுடன் நடந்தோம்.
ஜோசப் சந்திரன் மலையடிவாரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். நான் பாசாங்காக குனிந்து நிமிர்ந்தேன். அதன்பின் நடந்தோம்... எந்த இலக்கும் இல்லை - கால் போகும் போக்கு என்பார்களே அப்படி ஒரு போக்கு. சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் எங்களோடு ஒரு கறுப்பு நாயும் வந்து கொண்டிருந்தது! நாங்கள் ஓய்வெடுக்க ஏதாவது மரத்தடியில் அமர்ந்தால் அதுவும் அமர்ந்தது. ஒரு கட்டத்தில் ஜோசப் அந்த நாயைக் கும்பிட்டார்!”- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதன்பின் அவர்களுக்கு ஊசியும் போடப்பட்டது. கூடுதலாக நிலவேம்புக் கஷாயம் ஒரு பிளாஸ்டிக் தம்ளரில் தரப்பட்டது. அதைக் குடிக்கவும், உச்சியிலிருந்து பாதம் வரை ஒரு புரட்டு புரட்டியது அதன் கசப்பு. உடல் ரோமங்கள் அவ்வளவும் நிமிர்ந்துகொள்ள, சதைப்பகுதியை அனிச்சையாக ஒரு இறுக்கம் கவ்விக்கொண்டது.
வள்ளுவர் அவர்கள் அளவுக்கு சிரமப்படவில்லை. ஏதோ தேனீர் குடிப்பதைப் போலக் குடித்தார். பின் தீர்க்கமாக யோசிக்கத் தொடங்கினார். வர்ஷன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நாவல் மரத்தடி பிள்ளையார் இருக்கும் பக்கமாக நடக்க, ப்ரியாவும் பின் தொடர்ந்திட வழியில் வீடுகளில் அங்கங்கே கொத்துக் கொத்தாக அமர்ந்திருந்தனர். அவையெல்லாமே சாவு வீடுகள்!பார்க்க கண்ணைக் கரித்தது.
வர்ஷனும் ப்ரியாவும் தங்கள் வாழ்நாளில் சாலைகளில் செல்கையில் அவ்வப்போது சவ ஊர்வலங்களைப் பார்த்துள்ளனர். ஆனால் வரிசையாகப் பார்ப்பது இதுதான் முதல்முறை. ப்ரியா நடந்தபடியே வள்ளுவரை கவனித்தாள். அவர் முகத்தில் ஒரு விரக்திச் சிரிப்பும் தெரிந்தது. ‘‘அய்யா...’’‘‘என்னம்மா...’’‘‘பலமா யோசிக்கற மாதிரி தெரியுதே?’’
‘‘என் யோசனை எப்பவுமே பலமாதாம்மா இருக்கும். நீ கூட கொஞ்சம் முந்தி கேட்டே... எதுக்கு இந்த ஏடுங்க நம்மை ஊர் ஊரா சுத்த வைக்குதுன்னு..? அதுக்கு எனக்கு இப்ப விடை கிடைச்சிருக்கு. அதை நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை!’’‘‘அந்த விடை என்னன்னு...’’‘‘சொல்றேன். மனுஷன் எவ்வளவுதான் அறிவாளியா இருந்தாலும், இயற்கை அவனை அடக்க தொடர்ந்து யுத்தம் நடத்திக்கிட்டே இருக்குது...’’‘‘இங்கு பாதிச்சிருக்கற எபோலா கிருமியை வெச்சு சொல்றீங்களா?’’
‘‘ஆமாம்மா... இப்ப இதுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிங்க போராடுவாங்க. மருந்தை கண்டும் பிடிச்சிடுவாங்க. அதேசமயம் புதுசா இன்னொரு கிருமி வந்து, தன்னோட வேலையைக் காட்டும். அப்புறம் அதுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒரு போராட்டம். ஆக மொத்தத்துல இயற்கையை மதிக்காம, அதை அனுசரிக்காம வாழ்ந்தாலே எப்பவும் போராட்டம்தான்! மனுஷன் செவ்வாய்க் கிரகத்துக்கு போய் என்ன புண்ணியம்? இதோ இந்த ஊர்ல செத்துட்டவங்களை காப்பாத்த முடியல, பாத்தியா?’’
‘‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கய்யா?’’‘‘எப்படி வாழணும்னு நம்ம பெரியவங்க தெளிவா சொல்லிட்டுப் போயிருக்காங்கம்மா... அதன்படி வாழாம நாம இப்ப நம்ம நோக்கத்துக்கு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அதுக்குக் கொடுக்கற விலைதாம்மா இந்த மரணங்கள்!’’‘‘நீங்க விஞ்ஞான வசதிகளைக் கூடாதுங்கறீங்களா? இல்லை, அதை தப்பா பயன்படுத்தறோம்னு சொல்றீங்களா?’’‘‘விஞ்ஞான வளர்ச்சி கூடாதுன்னு நான் சொல்வேனாம்மா? புராண காலத்துலகூட விஞ்ஞானம் இருந்து, அது வளர்ந்துகிட்டேதான்மா இருந்துருக்கு! என்ன, நம்ப முடியலையா..? விவரமா அப்புறமா சொல்றேன். இப்ப நம்ம வாழ்க்கைக்கு வருவோம்.
வாழ்க்கைங்கறது என்ன? அசைவுதானே? ஒரே மாதிரி அசைஞ்சா அதுவும் போரடிச்சிடுமே..? அதனால மாறி மாறி அசையறோம். ஆக, மாறிக்கிட்டே இருக்கறதே வாழ்க்கை! மாற்றம் நின்னா மனுஷனும் நின்னுடுவான். ஆகையால மாற்றம்தான் மாறாம நடந்துகிட்டு இருக்கு. இதுல நல்ல மாற்றம், கெட்ட மாற்றம்னு இரண்டு இருக்கு. இரவு - பகல், இனிப்பு - கசப்பு மாதிரி... அதுல நம்ம மாற்றம்ங்கறது கெட்ட மாற்றமாவே அதிகம் இருக்கு. அதாம்மா சிக்கலே!’’
‘‘வயசானவங்க எல்லாரும் இப்படித்தான் பேசறீங்க. நாங்க பாக்க உலகமும் சுயநலமாதான் இருக்கு. ஆனா அதுக்காக நல்லதே இல்லை... அது நடக்கறதே இல்லைன்னு சொல்லிட முடியுமா?’’‘‘கரெக்டா சொன்னே! இப்ப நாம இந்த ஊருக்கு வந்திருக்கறது கூட நல்லது நடக்கணும்ங்கறதுக்காகத்தான். நல்லது செய்யத்தான் வந்துருக்கோம். இன்னிக்கு இந்த ஊரைத் தாக்கியிருக்கற கிருமி வேகமா பரவி நம்ம நாட்டையே தாக்க எவ்வளவு ேநரமாயிடும். அதை அழிச்சாதானே ஊரும் உலகமும் ஆரோக்கியமா வாழ முடியும்!’’‘‘அதுக்கு நாம என்ன செய்ய முடியும் அய்யா..?’’
‘‘என்னம்மா, இப்படிக் கேட்டுட்டே? நீ யாரோ, நான் யாரோ... அதோ முன்ன நடக்கற வர்ஷன் யாரோ! ஒரு நாள் இந்த காலப் பலகணி விஷயம் நம்மை சந்திக்க வெச்சது. அதைத் தொடர்ந்து எவ்வளவு சம்பவங்கள்? யோசிச்சுப் பாரு... அதுல ஒரு சம்பவத்தையாவது நீ யோசிச்சுப் பார்த்திருப்பியா? ஒவ்வொண்ணா நடக்குது. நாமளும் அதுல நடந்துக்கிட்டே போறோம். மலையேறும்போது பாதை வளைஞ்சு வளைஞ்சு போகும். பாதைன்னு ஒண்ணு கண்ணுக்கே தெரியாது. ஆனா போகப் போகத் தெரியும். அப்படித்தானே நம்ம பயணமும்!’’
‘‘நீங்க எங்கேயோ தொடங்கி எங்கேயோ போயிட்டீங்கய்யா!’’‘‘இல்லம்மா... தெளிவாத்தான் பேசிக்கிட்டிருக்கேன். நாம என்ன செய்ய முடியும்னு கேட்டியே... அதுக்குதான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். சில மணி நேரம் முந்தி வர்ஷன் கூட ஒரு அழகான கேள்வி கேட்டதையும் நினைச்சுப் பார்... இந்த காலப் பலகணியை நாம பாத்து என்ன பண்ணப் போறோம்னு ஒரு கேள்விய கேட்டானே..? அதுக்கும் சேர்த்தே பதில் சொல்றேன். இந்த ஊர் சாவுகளுக்கும் சாகடிச்ச கிருமிக்கும் காலப் பலகணிக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அதை நாம பலகணியை நெருங்கும்போது தெரிஞ்சுக்குவோம்!’’ ‘‘ஓ... பலகணில இதுக்கான மருந்து பற்றின குறிப்புகள் இருக்குமா?’’
‘‘இருக்கலாம்... ஆனா ஏதோ ஒண்ணு அதுல இருக்கு. ஏன்னா, இந்த பூமில மனிதன் இன்னும் பல நூற்றாண்டுகள் நல்லபடியா வாழ்ந்தாகணுமே?’’ - வள்ளுவர் கூறி முடிக்கவும், நாவல் மரத்தடி பிள்ளையார் கோயில் வரவும் சரியாக இருந்தது. அழகான பிள்ளையார்! மரத்தடியில் கம்பீரமாகக் காட்சி தந்தார். வள்ளுவர் கண்கள் பனிக்க வணங்கத் தொடங்கினார். பிள்ளையாரைச் சுற்றி ஒருவரும் இல்லை. நாவல் மரம் காற்றில் அசைந்தபடி இருந்தது. தரையில் அதன் பழுப்பு இலைகள்!
சூரியன் அஸ்தமிக்கத் தயாராகிக் கொண்டிருந்தான்.‘‘அய்யா... பிள்ளையார்கிட்ட வந்துட்டோம். ‘சேவல் கொடியோன் உடனுறை தரிக்கும் கோயில் மந்திரம் மற்றது உரைக்கும்’ங்கற ஏட்டுல வந்த வரிகளுக்கு ஏற்ப கோயில் மந்திரம் இப்ப நமக்குத் தெரியணும். ஆனா இங்க யாருமே இல்லையே..?’’ என்ற வர்ஷனைப் பார்த்த வள்ளுவர் நிதானமாகச் சொன்னார்... ‘‘பொறுமையா இரு வர்ஷன்! அதுக்கும் வழி தானா பிறக்கும். இந்த பிள்ளையாரைப் பார்... எவ்வளவு அழகு?’’
‘‘அய்யா! பிள்ளையாரே அழகுதான்யா. சின்னக் குழந்தையா இருக்கும்போது இருந்தே எனக்கு பிள்ளையார், அனுமார் இவங்கள ரொம்ப பிடிக்கும்...’’ ‘‘சரியா சொன்னே... சின்னப் பிள்ளையா இருக்கும்போதே பக்தி நுழையணும்னுதான் இப்படிப்பட்ட வடிவங்கள் ஏற்பட்டன. உருவ வழிபாட்டுல இது ஒரு உளவியல்பூர்வமான வழிமுறை. அதுலயும் பிள்ளையார் ஒரு அற்புதம். பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வைப் பாட்டியும் ஞாபகத்துக்கு வருவாங்க. அந்தம்மா எழுதி வெச்சதும் ஞாபகத்துக்கு வரும். ‘அறம் செய விரும்பு, ஆறுவது சினம்’னு ஆனா, ஆவன்னாவைக் கொண்டே அவங்க சொன்ன கருத்தை கடவுள் மறுப்பாளர்களாலகூட மறுத்துப் பேச முடியாது. அவ்வளவும் அற்புதமான கருத்துக்கள்!
பிள்ளையார்கூட ஒரு அற்புதமான கருத்தைத் தோற்றம் மூலமாகவே சொல்றவர்தான். சின்ன கண்கள் கூர்மையா பாக்கணும்னு சொல்லுது. பெரிய காதோ கேட்கறதுதான் பெரிசுன்னு சொல்லுது. ஒரு கைல ஒடிஞ்ச கொம்பு... அதை வெச்சுதான் மகாபாரதம் எழுதினார். அது, ‘பேனாதான்டா உலகத்துல ெபருசு’ன்னு சொல்லிடுச்சு. மறு கைல கொழுக்கட்டை... உள்ளுக்குள்ள பூரணம்ங்கற இனிப்பு.
கூர்மையா கவனிச்சு, காது கொடுத்துக் கேட்டு, அறிவாளியா திகழ்ந்தா நீ பூரணம்ங்கற இனிப்பை அடையறது நிச்சயம் என்பதுதான் இந்தத் ேதாற்றம் சொல்லும் பொருள். இதை சிறு வயசுல இருந்தே பார்த்து பக்தியோட வணங்கும்போது மனசுலயும் ஆழமா பதிஞ்சிடுது...’’ - என்று சொல்லிக் கொண்டே நடந்தவர், பக்கத்தில் கோயில் சுவற்றில் ஒரு மந்திரம் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.
‘காலாலங்கிரி கல்லுடைத்து லட்சியத்தோடு உனைப் படைத்த ப ாலா சித்தர் பாதம் பணிந்தே லட்சுமி கடாட்சம் பெறுவேனே கணிப் பூட்டு இப்பாட்டு சாவிலிருந்தே காப்பாற்றுமே!’
- என்கிற அந்த பாடல் வரிகளை வாசித்தவருக்கு திகைப்பு ஏற்பட்டது. வர்ஷனும் ப்ரியாவும் கூட புரிந்து கொண்டனர்.‘‘அய்யா... இதுதானா அந்தக் கோயில் மந்திரம்?’ - என்று கச்சிதமாய் கேட்டாள் ப்ரியா.‘‘ஆமாம்... ஆனா இதை சரியா படிக்கணும். இதுல ஒவ்வொரு வரியோட முதல் எழுத்தும் பெரிய எழுத்தா இருக்கறத பாருங்க... அதை மேல இருந்து கீழ வாசிச்சா ‘கால பலகணி சாவி’ன்னு ஒரு வார்த்தை கிடைக்கறதையும் பாருங்க...’’ என்றார் வள்ளுவர்.
ப்ரியாவும், வர்ஷனும் அதைப் பார்த்து வியந்தனர். ‘காலப்பலகணி குறிப்பு சரி... சாவி என்கிற சொல் எதற்காக?’ அவர்களுக்குள் கேள்வி... எந்தப் பூட்டைத் திறக்க இந்த சாவி?
‘‘தலைவர் அடிக்கடி கட்சி தாவுறார்னு அவரை இப்படியா கிண்டல் பண்ணி பேனர் வைக்கணும்...’’ ‘‘ஏன்? எப்படி வச்சாங்க?’’ ‘‘அரசியல் கங்காருவே வருக வருகன்னுதான்!’’
‘‘உங்களுக்கு குடிக்கற பழக்கம் இருக்கா?’’ ‘‘முன்னாடி இல்ல டாக்டர்! உங்ககிட்ட வந்ததும், ‘என் நிலைமை இப்படி ஆகிடுச்சே’ன்னு வருத்தத்துல குடிக்கிறேன்...’’
மாறிக்கிட்டே இருக்கறதே வாழ்க்கை! மாற்றம் நின்னா மனுஷனும் நின்னுடுவான். நல்ல மாற்றம், கெட்ட மாற்றம்னு இரண்டு இருக்கு. அதுல நம்ம மாற்றம்ங் கறது கெட்ட மாற்றமாவே அதிகம் இருக்கு. அதாம்மா சிக்கலே!
‘‘நம்ம தொகுதி மக்கள் ரொம்ப விவரமானவங்க...’’‘‘எப்படிச்சொல்றே..?’’ ‘‘வரப்போற தேர்தலுக்கு இப்பவே ஓட்டை ரிசர்வ் பண்றாங்களே..!’’
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்
|