இன்னும் ஒரு மாதத்துக்கு விடாது ஜுரம். பெருமிதம், வியப்பு, வேதனை, த்ரில் என உணர்வுகளின் கலவையாக இருக்கப் போகிறார்கள் இந்தியர்கள். துவங்கிவிட்டது போட்டி... யாருக்கு கோப்பை? பிரபலங்களிடம் கேட்டோம்...
அசின்
இந்தியாவுக்குத்தான் வேர்ல்ட் கப். முன்னெல்லாம் நம்ம பிளேயர்ஸ்கிட்ட, விளையாடும்போது சின்ன பதற்றம் இருக்கிறதைப் பார்த்திருக்கோம். ஆனா டோனி வந்ததுக்குப் பிறகு கான்பிடன்ஸ் லெவல் அதிகமாகியிருக்கு. டோனியோட அணுகுமுறையும் ஒரு டிசிப்ளினைக் கொடுத்திருக்கு. இதுக்கு உதாரணமா ஆஸ்திரேலியா கூட இந்தியா விளையாடிய பயிற்சி ஆட்டத்தைச் சொல்லலாம். அதில ஸ்ரீசாந்த் அபாரமா பௌல் பண்ணினார். ஆனா பாண்டிங்கிட்ட ஏதோ தப்பா பேசிட்டார்னு அதுக்குப் பிறகு ஸ்ரீசாந்தை பௌல் பண்ணவே அனுமதிக்கலை டோனி. ‘பெஞ்ச் ஸ்ட்ரெங்த்’ன்னு சொல்ற சப்ஸ்டிட்யூட் பிளேயர்களும் திறமையானவங்களா இருக்கறது இதுதான் முதல்முறை.
அஜித்
விளையாட்டுப் போட்டிகள்ல இதுதான் நடக்கும்னு முடிவு பண்ணிட்டா என்ன த்ரில் இருக்கும்..? போராடி ஜெயிக்கிறதுதான் ஸ்போர்ட்ஸ்ல இருக்க சவாலே. இருந்தும் நம்ம தேசத்தோட வெற்றியின் பக்கம்தான் நாம நிக்கணும். அந்த வகையில இந்தியா ஜெயிக்கணும்னுதான் ஒவ்வொருத்தரும் நினைக்கணும். அதேபோல, நாடே கொண்டாடற இந்த அளவுக்கு மக்களும், விளம்பரதாரர்களும் கிரிக்கெட் பக்கமே நிக்கறதை மாத்தி, இதே முக்கியத்துவத்தை எல்லா ஸ்போர்ட்ஸ்களுக்கும் தரணும். அதுதான் ஆரோக்கியமான விஷயமா இருக்கும்.
த்ரிஷா
இந்தியா டீம் சமீபகாலமாவே நல்ல நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இப்ப இருக்கிற டீம் லைன் அப் பிரமாதமா இருக்கு. இதை சமீபத்தில நடந்த தென் ஆப்ரிக்கா டூர்லயும், ட்ரையல் மேட்ச்கள்லயும் பார்த்தோம். சச்சின் கலந்துக்கற கடைசி வேர்ல்ட் கப்ங்கிறதும், ‘எப்படியும் கப்பைத் தட்டிடணும்’ங்கிற மனோபாவத்தை பிளேயர்ஸுக்குக் கொடுத்திருக்கு. சமீபத்தில என்டிடிவி நடத்திய ‘இண்டியன் ஆஃப் தி இயர்’ அவார்ட் நிகழ்ச்சியில சுனில் கவாஸ்கரையும், சச்சினையும் பார்த்துப் பேசினேன். அந்தப் பேச்சிலேயே அவங்ககிட்ட பாஸிட்டிவ் எனர்ஜி பலமா தெரிஞ்சது. நமக்குத்தான் வேர்ல்ட் கப்ங்கிற நம்பிக்கையோட மேட்ச்சை எஞ்ஜாய் பண்ணலாம்.
வெங்கட்பிரபுஹோம்பிட்ச்ல இந்தியா ஆடப்போறாங்கன்றது பெரிய பலம். நம்ம ஸ்பின்னர்களை இந்திய கிரவுண்டுகள்ல எதிர்கொள்றது மத்த டீம்களுக்கு சிம்மசொப்பனம். எல்லாத்துக்கும் மேல இந்த வேர்ல்ட் கப்பை சச்சினுக்கு டெடிகேட் பண்ணப்போறதா டோனி அறிவிச்சிருக்கிறது நம்ம பசங்களுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுத்திருக்கு. கண்டிப்பா கப்பை எதிர்பார்க்கலாம். நம்ம பையன் அஸ்வின் பின்னிடுவார்னு எதிர்பார்க்கலாம். எங்களோட ஸ்லோகன்தான் இண்டியன் டீமுக்கும். ‘இது எங்க ஏரியா, உள்ள வராதே..!’
ஆதி
காலம் ரொம்ப மாறிடுச்சு. யார் ஜெயிச்சாலும் பெருந்தன்மையோட ஏத்துக்கிற ரசிகர்கள் வந்துட்டாங்க. அப்படிப் பார்த்தாலும் இந்தியாதான் ஸ்ட்ராங்கா இருக்கு. தோல்வியோ, வெற்றியோ அதைக் கூலா எடுத்துக்கணும்ங்கிற டோனியோட அப்ரோச் பிளேயர்ஸை தைரியமா ஆட வச்சிருக்கு. சென்னைல நடக்கற மேட்ச்களுக்கு இப்பவே டிக்கெட் ப்ளாக் பண்ணிட்டேன். ஃபிரண்ட்ஸோட கேலரில உக்காந்து ட்ரம்பெட் ஊதி, டி.வி. கேமராவுக்கு டேக்லைன் காண்பிச்சு தொண்டை கிழிய கத்தற நேரத்துக்குக் காத்திருக்கேன். வின்னிங் ட்ரீட்டுக்குக் கூப்பிடறேன்..!
லக்ஷ்மிராய்
எல்லா பிளேயர்ஸும் நல்ல ஸ்ட்ரெங்க்த்லயும், ஃபார்ம்லயும் இருக்கிறதைப் பாக்கும்போதே நமக்குதான் கப்ங்கிற அறிகுறி தெரியுது. ஒட்டுமொத்த இந்தியாவோட சப்போர்ட்டும் லைவ்வா கிடைக்கிற அளவில, இந்த மேட்சுகள் இங்க நடக்கிறதும் நல்ல விஷயம். தொடர்ந்து ஃபாரீன் டூர்லயே நம்ம பிளேயர்ஸ் இருந்தனால அவங்களுக்கு கப்பை வெல்ல வாழ்த்து சொல்லக்கூட முடியலை. மும்பைல நடக்கிற மேட்ச்சை எப்படியும் பார்த்துடறதுன்னு இருக்கேன். அப்ப சொல்லிக்கலாம் டோனிக்கு வாழ்த்து..!
ஸ்ரீமதுமிதா பாடகி கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு ப்ளஸ் பாயின்ட் இருக்கும். நம்ம அணிக்கோ ஒவ்வொரு பிளேயருமே ப்ளஸ்தான்! சச்சின் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கார். அவர் அணியின் மிகப்பெரிய பலம். டோனி எந்த சூழ்நிலையிலயும் டென்ஷன் ஆகாம, நிதானமா திட்டமிட்டு அணியை வழி நடத்துற லக்கி கேப்டன். நம்மூர் அஸ்வினும் அணியில இருக்கார். சும்மா சொல்லணும்ங்கிறதுக்காக சொல்லலே... நிச்சயமா உலகக்கோப்பை நமக்குத்தான். நாடே அந்த எதிர்பார்ப்பிலதான் இருக்கு!
ஆறுமுகம்டி.ஐ.ஜிஇப்போதுள்ள அணிகளில் இளமையும் ஆர்வமும் துடிப்பும் வெற்றிவாய்ப்பும் கொண்டது இந்திய அணி மட்டுமே. அண்மைக்காலமாக பல போட்டிகளில் இளம் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. மூத்த வீரர்களும், இளம் வீரர்களின் திறமையை சரியாகப் பயன்படுத்தி ஆடுகிறார்கள். உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவிலும், இந்தியாவை ஒட்டிய பகுதிகளிலும் நடப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் நம் அணிக்குக் கிடைக்கும். இதையெல்லாம் பார்க்கிறபோது கோப்பை நமக்குத்தான்!
பட்டுக்கோட்டை பிரபாகர் கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்தது ட்வென்ட்டி20தான். ஒன்டே போட்டிகளில் இந்தியா& பாகிஸ்தான் மோதும் போட்டிகளை மட்டும் ஈடுபாட்டோடு பார்ப்பேன். ஒரு பார்வையாளன் என்ற அளவீட்டைத் தாண்டி, வெற்றிபெறும் அணியைக் கணிக்கும் அளவுக்கு அந்த விளையாட்டில் எனக்குப் பரிச்சயம் இல்லை!
தொகுப்பு:வேணுஜி, நீலகண்டன்