கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு 2010 மறக்க முடியாத ஆண்டு. அப்போதுதான் இப்பள்ளி முதன்முதலாக மாநில ரேங்க் பட்டியலில் தனது பெயரைப் பொறிக்கச் செய்தது. அந்தப் பெருமையை எட்டிப்பிடித்து பள்ளியின் பெயரை செய்தித்தாள்களில் இடம்பெறச் செய்தவர் ஜெனிஷா. இப்போது குலசேகரத்தில் எம்.பி.பி.எஸ். முதலாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். பாட்டனி டாப் ஸ்கோரர் ஜெனிஷாவின் மொத்த மதிப்பெண்கள் 1126.
தாவரவியலில் இருநூறுக்கு இருநூறு வாங்கிய ரகசியம் என்ன?‘‘மொத்தம் ஆறே பாடம்ங்கிறதால மூணு நாள் கேப் கிடைச்சாக்கூட திருப்பிப் பார்த்துடலாம். முந்தின நாள் எழுதுன பரீட்சை பத்திய நினைப்பைத் தூக்கி எறிஞ்சுட்டு ரிலாக்ஸா படிக்கணும். படங்கள் வரையக் கேட்கப்படற பேப்பர்ங்கிறதால பென்சில், ரப்பர்னு தேர்வு ஹாலுக்குள்ள ஆயத்தமா போகணும்’’ என்கிற இந்த மருத்துவ மாணவியிடமிருந்து மளமளவென வந்து விழுகின்றன பாயின்ட்ஸ்!
புத்தகத்துல அடிக்கோடிட்டு வச்சிருக்கிறதை, ‘முக்கியம்’னு டீச்சர் குறிச்சுக் கொடுத்த பகுதிகளை, பாடங்களுக்குப் பின்னால இருக்கிற ஒரு மார்க் கேள்வி பதில்களை கடைசி நேரத்துல பார்த்துக்கோங்க.
பழைய கேள்வித்தாள்களை வாங்கி 10 மார்க் கேள்விகளைப் பார்த்தீங்கன்னா சில கேள்விகள் திரும்பத் திரும்ப வந்திருக்கும். அந்தக் கேள்விகள் மேல கூடுதல் கண் வச்சுப் படிச்சுடணும்
.
பெரிய கேள்விகளை (10 மார்க்) முதல்ல எழுதாதீங்க. எல்லாக்கேள்விகளுமே தெரிஞ்சதா இருந்தா, அந்தச் சின்ன சந்தோஷத்துலயே அடித்தல், திருத்தல் இல்லாம அடிக்கோடிட்டு அழகுபடுத்தி நிறுத்தி நிதானமா எழுதச்சொல்லும். முடிச்சுட்டுப் பார்த்தா முக்கால்வாசி நேரம் போயிருக்கும். அதுக்குப் பிறகு அரண்டு புரண்டு அவசரப்படறதுல பிரயோஜனமில்லை.
தாவரவியல் பெயர்களை மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க. ஒரு மார்க், ரெண்டு மார்க் கேள்விகள்ல நிறைய மதிப்பெண்களை அள்ளலாம்.
பூவோட படம் வரைஞ்சு பாகங்களைக் குறிக்கச் சொல்ற கேள்விகள்ல படம் அழகா இருக்கணும்னு மெனக்கெட வேண்டியதில்லை. ஓரளவுக்கு பூ போல இருந்து பாகங்களைச் சரியா குறிச்சாலே முழுமார்க் கிடைச்சிடும். புல்லி வட்டம், அல்லிவட்டமெல்லாம் குழப்பாம பார்த்துக்கிடணும்.
ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் பகுதிகள்ல இருந்து வருஷாவருஷம் கேள்விகள் இருக்கு!
ஜெனிஷா ரேங்க் வாங்கியதில் எல்லோரையும் விட அதிகம் மகிழ்ந்தது அவரது தாவரவியல் ஆசிரியை டெல்ஃபி ரோஸ்லெட்தான்.
‘‘போன வருஷத்தோட ரிட்டையர்ட் ஆகிட்டேன். சர்வீஸ் முடியறப்ப என்னைப் பெருமைப்படுத்தி அனுப்பிட்டா அந்தப் பொண்ணு. பசங்க ஸ்டேட் ரேங்க் வாங்கற பெருமை எல்லா டீச்சர்களுக்கும் கிடைக்கிறதில்ல’’ என்று நெகிழ்கிறார் அவர். தாவரவியலில் சென்டம் அடிக்க டீச்சர் தரும் டிப்ஸ்...
முக்கியப் பாடங்கள்னு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன். ஆனா முன்னுரிமை தர்ற பாடங்கள்னு எடுத்துக்கிட்டு சில பாடங்களைப் படிக்கலாம். வகைப்பாட்டியல், ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், பயோடெக்னாலஜி பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.
10மார்க் கேள்விகள்ல மார்க் குறைய வழி இருக்கு. அதனால நல்லா தெரிஞ்ச கேள்விகளை மட்டும் சாய்ஸ்ல எடுங்க.
பூச்சித்திரங்களை மறக்காம பார்த்துட்டுப் போகணும்.
தாவரக் குடும்பங்கள் பத்தியும் அவற்றோட பொருளாதாரப் பயன்கள் பத்தியும் தவறாம கேள்விகள் வந்திட்டிருக்கு.
வாழ்த்துக்கள்! அய்யனார் ராஜன்
படங்கள்: மதன்குமார்