நோய்களை உருவாக்குது ரெடிமேட் இட்லி, தோசை மாவு!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         ரண்டு நாள் வேலையை இரண்டே நிமிடத்தில் முடித்து விடுவதால் இல்லத்தரசிகளின் ஏகோபித்த ஆதரவோடு கொடி கட்டிப்பறக்கிறது ரெடிமேட் இட்லி&தோசை மாவு பிசினஸ். மூலைக்கு மூலை முளைத்துவிட்ட மாவுக்கடைகளில் விற்கும் மாவுகளில் நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அதிகமிருப்பதால் ஆபத்து அதிகம் என அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 கடைகளில் வாங்கப்பட்ட மாவு மாதிரிகளை ஆய்வு செய்தது ‘கான்சர்ட்’ அறக்கட்டளை. அவற்றில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

‘‘எளிதா கிடைக்குதா, விலையும் குறைவா இருக்குதாங்கிறதை மட்டும்தான் மக்கள் பார்க்கறாங்க. தரத்தைப் பற்றி அக்கறை இல்ல. அன்றாடம் பயன்படுத்துற இந்த உணவுப்பொருளான மாவில் அலட்சியம் காட்டக்கூடாது’’ என்கிறார் ‘கான்சர்ட்’ அறக்கட்டளை இயக்குநர் சந்தானராஜா.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘மக்கள் அதிகமா வாங்கிப் பயன்படுத்துற மாவுவகைகளை பாதுகாப்பான முறையில தயாரிக்க வேண்டியது ரொம்ப அவசியம். மாவு அரைக்கப் பயன்படுத்தற தண்ணீர், கிரைண்டர் இயந்திரங்கள், இயக்குறவங்களோட சுகாதாரம் எல்லாமே சேர்ந்துதான் தரத்தை தீர்மானிக்குது. மாவோட தரத்தை அதிலுள்ள பாக்டீரியாக்களோட தன்மையை வச்சு சோதிச்சு பார்த்தோம். ஹைட்ரஜன் சல்பைடு டெஸ்ட்ல 55 சதவிகிதம் நோய் வரவழைக்கிற கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டுபிடிச்சோம். உணவுப்பொருட்கள்ல நோய் உருவாக்குற பாக்டீரியாக்கள் இருப்பது பாதுகாப்பற்றது. இதனால வயிற்று வலி, குடல்வலி, வாந்தி, பேதி ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு.

சின்னக்கடைகள்லதான் இந்த மாவுகளைத் தயாரிக்கிறாங்க. அவங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதில்ல. கிரைண்டரை பழைய அழுக்கு சாக்குகளை வச்சு மூடுறாங்க. மறுநாள் கழுவாமல் அப்படியே பயன்படுத்துறாங்க. முதல்நாள் மீந்துபோன மாவையும் மறுநாள் அரைக்கற மாவோட சேர்த்துடுறாங்க. பெரும்பாலான கடைகள் ரோட்டோரங்கள்ல இருப்பதால, தூசிகள் கலக்க அதிக வாய்ப்பிருக்கு. மாவை புளிக்க வைக்கிறதே நல்ல பாக்டீரியாக்கள்தான். அதில் கெட்ட பாக்டீரியாக்களும் சேரும்போதுதான் பிரச்னை.  

இட்லியாகவோ, தோசையாகவோ வேக வைக்கும்போது பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்பார்கள்.  சரியான விதத்தில் வேக வைக்கவில்லை என்றாலும் பாக்டீரியாக்கள் அழிய வாய்ப்பில்லை. வேக வைக்கும்போது பாக்டீரியாக்கள் அழிந்து விடும் என்பதற்காக குப்பையோடு மாவுகளை வாங்கிப்போக முடியுமா?’’ என்கிறார் சந்தானராஜா.இட்லி மாவு தயாரிக்கும் தாயார் ஃபுட் நிறுவனத்தின் உரிமையாளர் மகாதேவனிடம் பேசினோம்.

‘‘நல்ல தண்ணீரில், சுகாதாரமான முறையில தயாரிக்கும்போது நோய் வரவழைக்கிற பாக்டீரியாவுக்கு வாய்ப்பில்ல. அந்த அடிப்படையிலதான் மாவு வகைகளைத் தயாரிக்கிறோம். தயாரிக்கிற நாள்ல இருந்து மாவுகளை மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தலாம். அதையும் ஃப்ரிட்ஜ்ல வைச்சுதான் விற்கணும். அப்படி இல்லைன்னா பாக்டீரியாக்களால நொதித்தல் தன்மை அதிகமாகி மாவு புளிக்க ஆரம்பிச்சிடும். அதனால நாங்களும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில்தான் கடைகளுக்கு சப்ளை பண்றோம். ஆனா, நிறைய கடைகள்ல ஃப்ரிட்ஜ் வசதிகள் இல்லாம இருக்கு. அப்படிப்பட்ட கடைகளுக்கு நாங்க விநியோகம் செய்யுறது இல்ல. மூன்று நாட்களுக்குள் விற்காத மாவை, நாங்களே ரிட்டன் வாங்கிடுவோம். நாளான மாவில் சமைக்கிற உணவுகளால வயிற்றுப்பிரச்னைகள் ஏற்படும்.

மற்ற உணவுகளை விட டாக்டர்கள் இட்லி சாப்பிடத்தான் சிபாரிசு பண்ணுவாங்க. இட்லிய வேக வைச்சு சாபிடுறதால பாக்டீரியா பிரச்னை இருக்காது. அதே நேரத்துல இந்த ஆய்வு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்’’ என்கிறார் மகாதேவன்.

‘‘அன்றாடம் விற்பனையாகுற அளவுக்குத்தான் மாவை அரைச்சு விற்கிறோம். அந்தந்த நேரத்துல வித்துடுறதால மாவு மீதமாகுறதுக்கு வாய்ப்பு இல்ல. கடைக்குப் பக்கத்துல இருக்குற வீட்டுக்காரங்கதான் எங்க கஸ்டமர். மாவு சுத்தமா இல்லாவிட்டாலோ பாதிப்பு வந்தாலோ நிச்சயமா எங்களை வந்து கேட்பாங்க. அதனால கவனமா, சுத்தமான முறையிலதான் தயாரிக்கிறோம்’’ என்கிறார் மாவை அரைத்து விற்பனை செய்யும் சிறிய கடைக்காரர் கிருஷ்ணகுமார்.

தமிழக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியனிடம் பேசினோம்.

‘‘இப்பதான் இந்தப் பிரச்னை கவனத்துக்கு வந்தது. அடுத்த வாரம் மாவு சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ய இருக்கிறோம். எங்க டிபார்ட்மென்ட்ல ஃபுட் இன்ஸ்பெக்டர்கள் ரொம்ப குறைவு. 400 பேர் பணியாற்ற வேண்டிய சூழல்ல இப்ப 150 பேர்தான் இருக்காங்க. இருந்தாலும் விரைவில் மாவுக் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்’’ என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

ஆவி பறக்கும் இட்லி அப்பாவிகளை ஆவியாக்குவதற்கு முன் நடவடிக்கை அவசியம்!
 ஆர்.எம்.திரவியராஜ்    
படங்கள்:புதூர் சரவணன்