‘‘போற இடங்கள்ல எல்லாம் இன்னும்கூட, ‘ஏஏ...ஏ... மலருப்புள்ள...ள...ள..!’ன்னுதான் என்னை ரசிகர்கள் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. ஒரு படத்தோட கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி அது. அதெல்லாம் ‘வம்சம்’ டைரக்டர் பாண்டிராஜுக்குதான் போய்ச்சேரும்..!’’ என்று நெக்குருகிப் பேசும் சுனேனா, அதற்கு எதிர்முனையில் நின்று அடுத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது பேரரசுவின் ‘திருத்தணி’.
‘‘சொன்னா நம்பமாட்டீங்க. இதுவரைக்கும் சீரியஸான ரோல்கள்லயே நடிச்சுக்கிட்டிருந்த நான் ‘திருத்தணி’ல இப்படி ஒரு கேரக்டரை எதிர்பார்க்கவேயில்லை. சொல்லப்போனா முதல் ரெண்டு நாள் ஷூட்டிங்ல, நான் என் கேரக்டருக்குள்ள வர முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்னு சொல்லலாம். ஏன்னா இதுல எனக்கு இதுவரை நடிக்காத காமெடி கேரக்டர். காமெடில நடிக்கிறது அவ்வளவு ஈஸியில்ல. ஆனா என் கேரக்டரை எனக்குள்ள பேரரசு கொண்டுவந்துட்டபிறகு அப்படியே அதுல ஜெல்லாயிட்டேன். அதுக்கு அவருக்கு நன்றி...’’ என்ற சுனேனாவுக்கு படத்தில் ‘சுதிஷா’ என்று பெயரிட்டிருக்கிறார் பேரரசு. அது அவரது மகள் பெயர்.
‘‘பரத் கூட எனக்கு முதல் படம். ஆனா பரத்துக்கு பேரரசுகூட ரெண்டாவது படம். அவங்க கெமிஸ்ட்ரி ஒத்துப்போன அளவுக்கு என்னால சீக்கிரம் ஒத்துப்போக முடியலைன்னாலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாரும் ரொம்ப ராசியாயிட்டோம். இதுவரை எடுத்த காட்சிகளை எல்லோருக்கும் போட்டுக் காட்டினார் பேரரசு. சான்ஸே இல்லை, நான் அந்த அளவுக்குக் காமெடி பண்ணியிருக்கேன். என் அம்மாகூட, ‘உனக்கு இத்தனை காமெடி வருமா’ன்னு ஆச்சரியப்பட்டுக் கேட்டாங்க. இந்தப்படத்தில இன்னும் ஒரே சாங். அதுக்காக பிரான்ஸ் போறோம்...’’ என்கிற சுனேனாவுக்கு அடுத்து தமிழில் ‘கதிர்வேல்’ படம் ரெடியாக இருக்கிறது.
‘‘அதுக்குப் பிறகு ஒரு பெரிய படத்தில பேசிக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் சொல்றேன்...’’ என்றார் சுனேன்ஸ்.சினிமாவை விட்டு வீட்டுக்கு வந்தால், ‘கிச்சன் ராணி’ என்று சுனேனாவுக்கு பட்டமே கொடுக்கலாம் போலிருந்தது, அவருக்கு சமைக்கத் தெரிந்த டிஷ்களைக் கேள்விப்பட்டு. அதிலும் பனீர் சம்பந்தப்பட்ட அயிட்டங்கள் என்றால் டைனிங் டேபிளுக்கு வரும் முன்பே பாதி காலியாகி விடுமாம். ‘‘நான் ஒரு பனீர் பைத்தியம்...’’ என்றவரை ஏதாவது விஷயத்துக்கு ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டுமென்றால் ‘பனீர் பட்டர் மசாலா’வை கண்ணில் காட்டினால் போதும், பொண்ணு கிளீன் போல்ட்.
‘‘சாப்பாட்டில எனக்கு வேண்டியது வேண்டாததுன்னு எதுவுமே கிடையாது. சாப்பிட உக்காந்தா ஒரு கட்டு கட்டிட்டுத்தான் எழுந்திருப்பேன்...’’ என்றவரிடம், ‘‘அப்புறம் இந்த ஜீரோ சைஸ் உடம்பு எப்பூடி..?’’ என்றதற்கு தொடந்தார்.
‘‘குழந்தையிலேயே நான் குண்டு பாப்பாதான். பிளஸ் 2 படிக்கும்போது என்னோட எடை 63 கிலோ இருந்ததுன்னா நம்புவீங்களா..? அதனாலதான், ‘நான் நடிக்கப்போறேன்’னு சொன்னதும் ஃபிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணினாங்க. ஆனா அவங்களே, ‘எப்படி இத்தனை ஸ்லிம் ஆனே?’ன்னு ஆச்சரியப்படறாங்க.
அதுக்கு என்னோட வழி ஓட்டமும், ஜாக்கிங்கும்தான். காலைல எது மறக்கிறேனோ இல்லையோ, ஓட மறக்க மாட்டேன். அதேபோல ரெண்டு நாளைக்கு ஒரு தடவை யோகா பண்ணுவேன். ஓட முடியாத சூழ்நிலைகள்ல தினமும் யோகா பண்ணுவேன். மத்தபடி வாயைக் கட்டற டயட்டெல்லாம் எனக்கு ஒத்துவராத விஷயம். என்கிட்ட டிப்ஸ் கேக்குறவங்களுக்கும் இதையேதான் சொல்வேன்... சாப்பாட்டில எதையும் விலக்காதீங்க. ஆனா சாப்பிடற அளவுக்கு உடற்பயிற்சி செய்ய மறக்காதீங்க. அதுல ஜாக்கிங் எல்லாராலும் பண்ணக்கூடிய எளிய வழி. ஓடுங்க... ஓடுங்க... ஓடிக்கிட்டே இருங்க..!’’
வேணுஜி