சமையல் கலைஞர்களுக்குத் தனி வாரியம் அமைத்து உத்தரவிட்டிருக்கிற தமிழ்நாடு அரசு, சமையல் கலைஞர் ஒருவருக்கும் ‘கலைமாமணி’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது.
1966. கன்னியாகுமரி மாவட்டம் புளியூர்குறிச்சி கிராமம். அப்பா, அம்மா, வளர்த்த பாட்டி எல்லோரும் இல்லாமல்போக, நிராதரவாக நின்ற அந்தச் சிறுவனிடம், ‘டவுனுக்குப் போனா ஏதாச்சும் வேலை செஞ்சு பொழைச்சுக்கலாம்’ என்கிறார்கள் அக்கம்பக்கத்தார். தலையாட்டி, சென்னைக்கு வண்டியேறுகிற சிறுவனுக்கு வயது 13. மறுநாள் சென்னையில் இறங்கினால் போகவேண்டிய இடம் என்று எதுவும் தெரியாது.
ரமேஷ் என்றழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், இன்று ரமேஷ்வர சர்மா. பல பேருக்கு வேலைகொடுக்கும் ‘ஹர்ச்சனாஸ் கேட்டரிங்’ உரிமையாளர். காரும் பங்களாவும் ஏற்கனவே வாய்க்கப்பெற்றவருக்கு இப்போது ‘கலைமாமணி’ கௌரவம்!
‘‘போட்டுக்க சட்டையும் தங்க இடமும் இல்லாட்டிக்கூட நாலு நாளைக்குத் தாக்குப் பிடிக்கலாம். வயித்துக்கு? தாங்க முடியாமத்தான் ஒரு ஓட்டல்ல வேலை கேட்டுப் போனேன். முதல்ல ஏற இறங்கப் பார்த்தவங்க, என்ன நினைச்சாங்களோ சேர்த்துக்கிட்டாங்க. சாப்பாடு, தங்கறதுக்கு இடம், ஒரு வேலைன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா அடிச்ச சந்தோஷத்துல அன்னிக்கு கத்துக்க ஆரம்பிச்சேன் தொழிலை. வளர வளர சமையல் ஆர்வமும் அதிகரிச்சது. முதலாளிகிட்ட நல்லபேர் வாங்குறதைப் பொறுக்கமுடியாத சிலரோட சதியால ஓட்டலை விட்டு வெளியேற வேண்டி வந்திச்சு.
சமையல் மேல உள்ள பிடிப்புல, வேற வேலை தேடிப் போகலை. பிரபலமான இன்னொரு ஹோட்டலைத் தேடித்தான் போனேன். அங்க கொஞ்சகாலம் பொழைப்பு ஓடுச்சு. அப்போ நடந்த ஒரு விபத்து என் வாழ்க்கையில அடுத்த மைல்கல்...
ஒருநாள் அடுப்படியில திடீர் தீ. வலது கை முழுசா வெந்திடுச்சு. முதலாளி தரப்புல இருந்து உடனே செய்ய வேண்டிய அவசர உதவியைக் கூட செய்யலை. கூட வேலைபார்த்தவங்கதான் உதவினாங்க. கத்துக்கிட்ட தொழில் இருக்க, இப்படிப்பட்ட இடத்துல ஏன் இருக்கணும்ங்கிற வைராக்கியத்தோட வெளியேறுனேன்’’ என்கிறவர், ஆசுவாசப்படுத்தித் தொடர்கிறார்...
‘‘விசேஷங்களுக்கு ஆர்டர் கேட்டு, பழக்கப்பட்டவங்ககிட்ட நடையா நடந்தேன். ஆரம்பத்துல அவ்வளவு சுலபமா கிடைக்கலை. மாம்பலத்துல தங்கியிருந்த அறைக்கு 15 ரூபாய் வாடகையைக்கூட கொடுக்க முடியாத அளவு நிலைமை இருந்திச்சு. மனம் தளராத முயற்சிதான் என்னை தொடர்ந்து இயக்கிட்டிருந்திச்சு.
இதுக்கிடையில நம்பிக் கழுத்தை நீட்டினாங்க மனைவி ராஜலட்சுமி. தொழில்ல நம்பிக்கை தந்து ஊக்கப்படுத்த எஸ்.வி.பிரதர்ஸ் நட்பு கிடைச்சது. அதுக்குப்பிறகு மள
மளன்னு கல்யாணங்கள் புக் ஆச்சு. சாப்பிடுறவங்க
வாய் நிறையப் பாராட்டிட்டுப் போறதோட, நாலுபேர்கிட்டச் சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்துவிட்டாங்க. கைப்பக்குவத்துக்குக் காரணம், ‘தொழில் பக்தி’ங்கிற ஒரே விஷயம்தான். பந்தியில போய் யார்கிட்டயும் ‘சாப்பாடு நல்லா இருக்கா’னு கேக்கறது எனக்குப் பிடிக்காது. என் சமையல்ல எனக்கே நம்பிக்கை இல்லாட்டித்தான் அப்படிக் கேக்கணும்.
இப்ப ஆயிரக்கணக்கைத் தாண்டியாச்சு. சமீபத்துல மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுத் திருமணத்துக்கும் நான்தான் சமையல். மனசாரப் பாராட்டினார். தலைமுறை தாண்டி அப்பா கல்யாணத்துக்குச் சாப்பாடு போட்டவனை மகன் கல்யாணத்துக்கும் தேடி வர்றது சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் சர்மா.
‘‘64 கலைகள்ல சமையல் முக்கியமானதுன்னு வலியுறுத்தி ரொம்ப காலமாவே ‘கலைமாமணி’ கேட்டுக்கிட்டிருந்தாங்க எங்க ஆளுங்க. இப்பத்தான் காலம் கனிஞ்சிருக்கு. இது எனக்குக் கிடைச்ச விருது கிடையாது. வெக்கையையும் வேர்வையையும் சட்டை செய்யாம அடுப்படி அனல்ல நிக்கிற ஒவ்வொரு சமையல் தொழிலாளிக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். வருங்காலத்துல அவங்க ஒவ்வொருத்தருக்கும் இந்த விருது கிடைக்கலாம்கிறதை நினைக்கிறபோதே மனசு நிறைஞ்சிடுது’’ என்கிறார் சர்மா.
நவநாகரிக உணவு ஈமுக்கோழிஒரேயொரு இடத்தில்தான் கோழிக்கறி கிடைக்கிறதென்றால் நம்புவீர்களா? நம்புங்கள். இது சாதாரண கோழிக்கறியல்ல. இது கொழுப்பற்ற, அதிகம் புரதச்சத்துள்ள சுவை கொண்ட ஈமுக்கோழி. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அதிகம் விரும்பப்படுகிற இந்த இறைச்சி இப்போது தமிழகத்திலும். ஈமுவை ருசிக்க அழைக்கிற தமிழகத்தின் ஒரே ஈமுக்கோழி ரெஸ்டாரண்டான ‘சுசி ஈமு ருசி ஈமு’ ஈரோடு பெருந்துறையில் உள்ளது. அறிமுகமான சில நாட்களிலேயே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது ஈமு.
கிறிஸ்டல் என்றால் உப்புஇத்தினியூண்டு அளவுதான். ஆனாலும் அதைச் சரியாச் சேர்க்கலைன்னா, ‘ஏதோ மிஸ் ஆகுதே சமையல்ல’ என்பார்கள். ருசிதான் அந்த ‘ஏதோ’. அந்த இத்தினியூண்டு அயிட்டம்... உள்ளளவும் நினைக்க வைக்கிற உப்பு.‘உப்பா, கிறிஸ்டல் என்று சொல்லுங்கள்’ என்கிறார்கள் எஸ்கீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தினர். புகழ்பெற்ற ‘கிறிஸ்டல் அயோடைஸ்டு உப்பு’ தயாரிப்பாளர்கள். ‘தன்னிகரில்லா கிறிஸ்டலின் தரத்துக்குக் காரணம் அவை சுத்திகரிக்கப்படும் முறைதான்’ என்கிறார்கள் இவர்கள். ஆமாம், எட்டு வகை செயல்முறைகளைத் தாண்டியே நமக்கு சுவை, சுத்தம், தரத்தோடு கிடைக்கிறது கிறிஸ்டல்.‘கிறிஸ்டல் என்றால் உப்பு, உப்பு என்றால் கிறிஸ்டல்’ங்கிறது ஏன் பொருந்துதுங்கிறது இப்ப புரியுதா?
அய்யனார் ராஜன்