200 நாடுகள். 500 வகைகள். தினமும் 160 கோடிப் பேர். இப்படி தன்னகத்தே பல்வேறு சாதனைகளை வைத்துக் கொண்டிருப்பது கோக கோலா நிறுவனம். அமெரிக்காவின் அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டது கோக கோலா நிறுவனம். 1886ல், ஒரு சாதாரண மருந்து தயாரிப்பாளரான ஜான் சிஸ்த் சிம்பர்டனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அதிரகசியமான குளிர்பான ஃபார்முலாவைக் கொண்டு இயங்குகிறது. ஃபார்முலாவை ஜான் சிஸ்த் கண்டுபிடித்தாலும், அவரால் குளிர்பானத்தை தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்ய முடியவில்லை. ஜானிடமிருந்து 1889ல் அசா கேண்ட்லர் என்பவர் ஃபார்முலாவை வாங்கினார்.
ரகசிய ஃபார்முலாவை ஜான் சிஸ்த் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதித் தந்துள்ளார். அது அட்லாண்டாவில் பாதுகாப்பு மிகுந்த லாக்கரில் மிகப்பெரிய சொத்தாக பாதுகாக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்புகழ்பெற்ற குளிர்பானமான இதன் ரகசியத்தை அறிய பலரும் ஆர்வம் காட்டினாலும், அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த சிகாகோ பப்ளிக் ரேடியோ சேனல், தன்னுடைய பிரபல செய்தி நிகழ்ச்சியான ‘அமெரிக்கன் லைஃப்’பில், கோக கோலா ரகசியத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஆதாரமாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது.
கோக் ரகசியம் பற்றி ஜான் சிஸ்த் கூறும்போது, அவருடைய நண்பர் ஒருவர் ரகசியமாகக் குறித்து வைத்துள்ளார். இந்த கையெழுத்துப் பிரதியின் புகைப்படம், 1979&ல் அட்லாண்டாவைச் சேர்ந்த
‘அமெரிக்கன் கான்ஸ்டிட்யூஷன்’ பத்திரிகையில் வெளியானது. அப்போது அது பரபரப்பு ஏற்படுத்தாமல் அமுங்கிப்போனது. கோக கோலா ரகசியம் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ந்து, ‘பார் காட், கன்ட்ரி, கோக கோலா’ என்ற புத்தகம் எழுதிய மார்க் பென்டர்கிராஸ்ட் என்பவரின் ஆவணத்துடன் ஆராய்ந்தபோது இப்போது கண்டுபிடித்தது உண்மையானதுதான் என்று தெரியவந்துள்ளதாம்!
‘‘கோக கோலாவின் உட்பொருட்கள் என்று அச்சடிக்கப்பட்ட இடத்தில், காஃபைன், சிட்ரிக் அமிலம், கோகோவின் சாறு, சர்க்கரை, தண்ணீர், காரமெல், எலுமிச்சைச்சாறு, வெனிலா என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இரண்டாவது உட்பொருட்கள் தலைப்பில் 7எக்ஸ் என்ற வார்த்தை மட்டும் இருக்கும். இதில்தான் அதன் ரகசியம் உள்ளது. ஆல்கஹால் மற்றும் ஆரஞ்ச், லெமன், நட்மெக், கொரியாண்டர், நெரோலி, லவங்கம் ஆகியவற்றின் ஆயில்தான் 7எக்ஸின் ரகசியம்’’ என்கின்றனர் ரேடியோ குழுவினர்.
கோக கோலா நிறுவனமோ ‘இதுவும் கட்டுக்கதைகளில் ஒன்றுதான்’ என்று கூறியுள்ளது. உங்களால் முடிந்தால் இந்த ரகசியத்தைப் பயன்படுத்தி கோக கோலா செய்து பார்க்கலாம்!
ஜே.எஸ்.கே.பாலகுமார்