
இயல்பான கதை சொல்லும் படங்களுக்கு மத்தியில் பாசம், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என்று அதிரடியாக வந்திருக்கும் ஜனரஞ்சகப்படம். அண்ணன் & தங்கைக் கதைகள் அதிகமாகப் பார்த்திருக்கும் நமக்கு ஒரு வித்தியாசமாக அக்கா & தம்பியின் பாசக்கதையை முன்வைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.அம்முரமேஷ்.

கல்லூரியில் புரபசராக அறிமுகமாகும் மீனாவை ரவுடி மாணவர்கள் கும்பல் ஒன்று வழிமறித்து முத்தம் கேட்பதில் ஆரம்பமாகிறது படம். முத்தம் தர மீனாவுக்கு அவர்கள் நேரம் கொடுக்க, பதிலுக்கு அவர்களைக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச்சொல்லி மீனா நேரம் கொடுக்கிறார். அந்த தைரியம் மீனாவுக்கு வரக்காரணம் அவரது தம்பி நரேன். அதேநேரம் நரேனோ அந்த மாணவர் கும்பல் தலைவனின் ரவுடி அண்ணனைப் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். அவன் ஓடிவந்து தம்பியை மீனாவிடம் மன்னிப்பு கேட்க வைக்க, முடிகிறது பிரச்னை.
இப்படியாக நரேனின் ஆக்ஷன் அறிமுகம் அமைய, கல்லூரி மாணவரான அவரும் மாணவர்களும் என்.எஸ்.எஸ் கேம்ப்புக்காக தம்பிக்கோட்டை வருகிறார்கள். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அன் கோவால் வன்முறைக்களமாக இருக்கும் தம்பிக்கோட்டை எப்படி இந்தத் தம்பியின் கோட்டையாக மாறுகிறது என்பதை அடித்துத் துவைத்துச் சொல்லியிருக்கிறார்கள். ராஜேந்திரனின் மகள் பூனம் பஜ்வாவுக்கும் நரேனுக்கும் காதல் என்கிற லைன் இன்னொரு பக்கம்.
கல்லூரி மாணவராக நடிப்பதற்குப் பொருத்தமாக உடல் இளைத்து இதுவரை பார்த்திராத இளமையுடன் ‘ஹேண்ட்ஸம்’ நரேன். இயல்பான நடிப்புடன் கூடிய அவரது ஆக்ஷன் இதுவரை இருக்கும் ஆக்ஷன் ஹீரோக்களிலிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அக்கா மீனாவுடனான பாசக் காட்சிகளும், பூனம் பஜ்வாவுடனான காதல் காட்சிகளும் கூட இயல்புத்தன்மையுடன் இருக்கின்றன. நிஜத்தில் திருமணமாகி குழந்தை பெற்ற மீனாவுக்கு, இதில் ஹீரோவுக்கு அக்காவாக பிரமோஷன். இருந்தாலும் ரவுடிகள் ரவுண்டுகட்டும் அளவுக்கு இன்னும் வனப்பு மாறாமலிருப்பது அவரது பலம். பூனம்
பஜ்வாவுக்கு கிராமத்துப்பெண் வேடம். பள்ளி மாணவியாயிருந்து கல்லூரி மாணவி வரையிலான கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார்.
ஃபிளாஷ்பேக்கில் வரும் பிரபு கொள்கையிலும், உடலிலும் வலுவுடன் நிற்கிறார். அவரது நியாயமான கோரிக்கையை ஏற்காத அவருடைய முதலாளி ராஜேந்திரனின் அலட்சியத்தால் விபத்தாகும் பஸ்ஸில் பல உயிர்கள் பலியாக, நிறைமாத கர்ப்பிணியான பிரபுவின் மனைவி விஜயலட்சுமியும் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துபோவது பரிதாபம். தொடர்ந்த ராஜேந்திரனின் பாலத்தகர்ப்பு வேலையில் வெடிகுண்டில் சிக்கி பிரபுவும் மாண்டுபோவது சோகம்.
‘‘நான் போடற பீடா மட்டும் 420 இல்ல, நானே 420தாண்டா...’’ என்று முழங்கியபடி பாண்டியம்மாவாக வரும் சங்கீதா, பீடா போடும் அழகே தனி. ‘‘நீங்க எல்லாம் படிச்சுதாண்டா செக்ஷன்களைத் தெரிஞ்சுக்கறீங்க. ஆனா நான் கொலை செஞ்சே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்...’’ என்று சட்டக்கல்லூரி மாணவர்களிடம் செக்ஷன்வாரியாக குற்றங்களை அடுக்கும் அவரது முடிவு மட்டும் சட்டென நிகழ்ந்துபோகிறது.
ஹீரோக்களின் வழக்கமான நண்பனாக வரும் சந்தானம் இதில் நரேனின் நண்பனாகவும், ஃபிளாஷ்பேக்கில் பிரபுவின் நண்பனாக கஞ்சா கருப்புவும் கலகலப்பு சேர்க்கிறார்கள். தமிழ்ப்பேராசிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் கிடைத்த இடத்தில் சிரிக்கவைக்கிறார்.டி.கண்ணனின் ஒளிப்பதிவு இதம். டி.இமானின் இசை வழக்கம்போல் அதிரடி.
தம்பிக்கோட்டை - ஊருக்கும், உறவுக்கும் உதவும் ஒற்றைப்பாலம்..! குங்குமம் விமர்சனக்குழு