சச்சின்கிட்ட பாடம் படிச்ச ஏகலைவன் நான்!



தமிழ்நாடு கேப்டன் ‘சச்சின்’ சிவா

‘‘கிரிக்கெட்தான் என் சுவாசம், வாழ்க்கை, எல்லாமே!’’ - நம்பிக்கை பொங்கப் பேசும் சிவக்குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கும் மதுரைக்காரத் தம்பி! எல்லோருக்கும் செல்லமாக ‘சச்சின்’ சிவா!  ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’, ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ என பல விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டு அணிக்கு பெருமை சேர்த்திருக்கும் இவர், இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் என பல பொறுப்புகளை வகிக்கிறார். ‘‘அட, இப்படியொரு பேரை பேப்பர்ல படிச்சதில்லையே’’ என்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், சிவா இடம் பிடித்திருப்பது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில்!

வருமானத்திற்காக ‘சச்சின் சிவா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஃப்ளக்ஸ் போர்டு டிசைன் கடையை நடத்தி வருகிறார் இந்த தமிழ்நாடு கேப்டன். எந்த சக்தி வாய்ந்த அமைப்பும், ஸ்பான்சர்ஷிப்பும் இல்லாமல் தடுமாறும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியை அசராமல் வழிநடத்தும் ஆல்ரவுண்டர் இவர்!

‘‘எனக்கு சொந்த ஊரே மதுரைதான். அப்பா பேரு செல்லம். லாரி டிரைவர். அம்மா தமிழரசி. நான், வீட்டுக்கு ஒரே பையன். ஆறு மாசக் குழந்தையிலயே எனக்கு போலியோ அட்டாக். கால்ல நாற்பது சதவீத அளவு ஊனம். அப்பாவும் அம்மாவும் நொடிஞ்சு போயிட்டாங்க. ஆனாலும், எனக்கு எந்தக் கவலையும் தெரியாம வளர்த்தாங்க.

சின்ன வயசுல இருந்தே எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சச்சின் ஆடுறதை டி.வியில பார்த்தா சாப்பாடு, தூக்கம் எல்லாம் மறந்துடும். அவர்தான் என் மானசீக குரு. ஏகலைவன் மாதிரி அவர் விளையாட்டை சி.டியில போட்டுப் பார்த்து ப்ராக்டீஸ் செய்வேன். ஆனா, ‘உன்னால முடியாது’ன்னு சொல்லி நார்மல் பசங்க யாருமே என்னை விளையாட்டுல சேர்த்துக்க மாட்டாங்க. ஆனா நான் ‘முடியும்’னு நிரூபிச்சுக் காட்டினேன். நல்லா ஓட முடியிற பசங்க மத்தியிலயே சரிக்கு சமமா நின்னு அசரடிப்பேன்!

பதினேழு வயசுல ஒரு லோக்கல் டீம்ல சேர்ந்தேன். அங்க என்னை சப்ஸ்டிடியூட்டா வச்சிருந்தாங்க. ஒருநாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வராததால என்னை இறக்கிவிட்டாங்க. அப்போ, 52 ரன் அடிச்சு அதகளப்படுத்திட்டேன். உடனே, என்னை நிரந்தரமா அணிக்குள்ள சேர்த்துக்கிட்டாங்க. ஆனா, வீட்டுல நான் கிரிக்கெட் ஆடுறதே பிடிக்காது. இதுவரை பதினாறு பேட்டை உடைச்சிருக்காங்க. அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நான்?’’ என்கிறார் சிவா சிரித்தபடி!

‘‘2006ல வக்ஃப் போர்டு காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். அந்நேரம், மதுரையில மாற்றுத்திறனாளிகள் அத்லெடிக் பயிற்சியாளரா ரஞ்சித் குமார் சாரை நியமிச்சாங்க. அவரோடு சேர்ந்து ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் த்ரோ எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். அதுலயும், தேசிய அளவுல கோல்ட் மெடல் அடிச்சேன். ஆனா, கிரிக்கெட்தான் கனவா இருந்துச்சு. சென்னையில ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் தலைவர் நாகராஜன் சார் தலைமையில கிரிக்கெட் செலக்‌ஷன் நடந்துச்சு.

அதுக்கு மதுரையிலிருந்து செலக்ட் ஆன மூணு பேர்ல நானும் ஒருத்தன். அதுக்கு அப்புறம்தான் என்னோட கனவு நனவாக ஆரம்பிச்சது. 2007ல ஆந்திராவுல ஸ்டேட் மேட்ச். மதுரைப் பசங்க நாங்க எல்லாருமே சப்ஸ்டிடியூட்டா இருந்தோம். டீமுக்கு பெரிய தோல்வி! இதை நாகராஜன் சார் கவனத்துக்குக் கொண்டு போனேன்.

அவர், ‘இனி மதுரையில நிறைய பேர் எடுப்போம்’னு நம்பிக்கை கொடுத்தார். அப்புறம், மாவட்டங்களை ஒருங்கிணைச்சு ஒரு போட்டி நடத்துனாங்க. இதுல, மதுரை டீம் ‘வின்’ பண்ணுச்சு. நாகராஜன் சார் நேர்ல வந்திருந்து எங்க ஆட்டத்தைப் பார்த்தார். அசந்துபோய், ‘நீங்களே.. தமிழ்நாட்டு டீமை வழிநடத்துங்க’ன்னு சொல்லிட்டார். 2008ல் தமிழ்நாடு டீம் கேப்டன் ஆனேன்.

 பாண்டிச்சேரியில நடந்த தென்னிந்தியக் கிரிக்கெட் மேட்ச்ல ரெண்டாவது பரிசு வாங்கினோம். அடுத்த வருஷம் முழு டீம் கன்ட்ரோலையும் எங்கிட்ட கொடுத்துட்டாங்க. அப்புறம் தொடர்ச்சியா, மூணு தடவை தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வாங்கிச்சு.

இந்த வருஷமும் தமிழ்நாடுதான் சாம்பியன். நான், 32 பந்துல 84 ரன் அடிச்சு ஜெயிக்க வச்சேன். 2010ல இருந்து இப்போ வரை தொடர்ந்து ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’ வாங்கிட்டு வர்றேன். இதனாலதான் இந்த ஏப்ரல்ல இந்திய அணி வாய்ப்பு எனக்குக் கெடைச்சது. உடனே, பாகிஸ்தான் போற சான்ஸ் வேற! ஆனா, பயிற்சி ஆட்டத்தின்போதே அங்க குண்டு வெடிச்சு டூர் கேன்சலாகிடுச்சு. வர்ற டிசம்பர் மாசம் பாகிஸ்தான் டீம் இந்தியா வர்றாங்க. அதுக்கான பயிற்சியில இருக்கேன்’’ என்கிறவர், சில வருத்தமான விஷயங்களைப் பகிர்கிறார்...

“இவ்வளவு தூரம் நான் போய் பேர் வாங்கினாலும் இதுல காசுனு எதுவும் பார்க்கலை. தமிழ்நாடு டீம்னுதான் பேரு… ஆனா, டீம் முழுக்க என்னோட ஒரே ‘கிட் பேக்’கைத்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டுக்குன்னு எந்த அசோஸியேஷனும் கிடையாது. நாங்கதான் அதையும் உருவாக்கினோம்.

மேட்ச்சுக்கு எங்க கைக்காசு போட்டுதான் போவோம். ஆனா, நார்மல் கிரிக்கெட்ல ரஞ்சி விளையாடுற வீரர்களுக்குக் கூட நல்ல பணம் கிடைக்குது. இத, வருத்தமா சொல்லலை. எங்களுக்கு சம்பளமும் கேட்கலை. மேட்ச்சுக்கு போயிட்டு வர்ற செலவுக்குக் காசு கிடைச்சா போதும். அதுவே இல்லங்கிறப்போ கஷ்டமா இருக்கு. ஆதரவு இருந்தா, இன்னும் டீமை முன்னாடி எடுத்துட்டுப் போகலாம். சிறந்த மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியா தமிழ்நாட்டைக் கொண்டு வரலாம்!’’ என்கிறார் சிவா நிறைவாக!

மாற்றுத் திறனாளிகள்  கிரிக்கெட்டுக்குன்னு எந்த அசோஸியேஷனும் கிடையாது. மேட்ச்சுக்கு எங்க கைக்காசு போட்டுதான் போவோம்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஜி.டி.மணிகண்டன்