‘‘ஹாய்... ஐ’ம் தேஜஸ்வினி. படிச்சது சிவில் இன்ஜினியரிங். தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் என் மொழி தமிழ். உயரம் 6 அடிக்கு 2 இன்ச் கம்மி. காலேஜ்ல ஸ்போர்ட்ஸ்ல நம்பர் 1. படிப்புல சுமார்தான். குறிப்பா மேத்ஸ்... நாலு வருஷப் படிப்புல 9 வாட்டி மேத்ஸ்ல நான் ஃபெயில்! என் பேப்பரை திருத்தின புரஃபசர்ஸ் நொந்து போய், வெறுத்துப் போய், போரடிச்சுப் போய், போனாப் போகட்டும்னு பாஸ் போட்டுட்டாங்க. கர்னாடிக் மியூசிக் தெரியும். டான்ஸுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். என் சுண்டுவிரலைக்கூட நான் சொல்றபடி ஆட வைக்க முடியாது. ‘டிசைன் டி.என்.ஏ’ங்கிற பேர்ல இன்டீரியர் டிசைனிங் கம்பெனி வச்சிருக்கேன். மாடலிங், நடிப்புனு விட்டு வைக்காத ஃபீல்டே இல்லை. இப்ப காம்பியரிங்...’’
‘ஹாய்... ஹலோ’ சொன்னதுமே, சுய அறிமுகம் செய்தபடி சினேகமாகிறார் தேஜஸ்வினி. ராடன் டி.வி. தயாரிப்பில் சன் டி.வியில் ஒளிபரப்பாகிற ‘தங்க மழை’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி!
‘‘இன்டீரியர் டெகரேஷன் பண்ணிட்டிருந்தப்ப, திடீர்னு மீடியா ஆசை. ராம்ப் ஷோஸ் பண்ணலாமேனு ட்ரை பண்ணினேன். ராம்ப் வாக், கேட் வாக்கெல்லாம் பண்ணணும்னா அநியாயத்துக்கு ஒல்லியா இருக்கணும். பட்டினி கிடந்து இளைச்சாவது ஒல்லியாகறதெல்லாம் எனக்கு சரிவராது. மூணு வேளையும் சாதத்தை ஒரு பிடி பிடிக்கிற ஆளு நான். வம்பே வேணாம்னு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். தமிழும் தெலுங்கும் பேசற ரிப்போர்ட்டர் கேரக்டர் பண்றியானு கேட்டு திடீர்னு ‘பயணம்’ படத்துல கூப்பிட்டாங்க. பண்ணினேன். அடுத்து ‘தங்கமழை’ புரோக்ராம் ஆடிஷன்... தெலுங்கும் இங்கிலீஷும் மிக்ஸ் பண்ணி நான் பேசற தமிழெல்லாம் சரிப்படாதுனு, பத்து நாள் தினகரன் பேப்பரை கொடுத்துப் படிக்க வச்சு, பெண்டு நிமித்திட்டாங்க. ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப அதோட பலன் தெரியுது... சூப்பர்ப் எக்ஸ்பீரியன்ஸ்...’’ என சிலாகிக்கிறவருக்கு சினிமாவில் ஹீரோயின் ஆசையெல்லாம் கிடையாதாம்!
‘‘சன் டி.வி ‘தங்கமழை’ல என்னைப் பார்த்துட்டு அடக்கமான பொண்ணுனு தப்புக் கணக்கு போட்றாதீங்க. கம்பெனி வச்சு ஏகப்பட்ட ஆட்களை மேய்க்கறேன்ல... சண்டை போடறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரவுடினு வச்சுக்கோங்களேன்... நாலு குத்து, ஆறேழு வெட்டுனு அதிரடியான ஒரு வில்லி கேரக்டர் வந்தா ஓ.கே’’ என்கிறவர், தெருவில் அனாதையாக விடப்படுகிற நாய்களுக்காக ஆதரவு இல்லம் தொடங்குகிறார் அடுத்த மாதம்!
ராட்சசியோ, தேவதையோ? ஆர்.வைதேகி