ஆகாயம் கனவு அப்துல் கலாம்
இந்திய ராக்கெட்டின் சரித்திரம்
1. ஆதிசொப்பனம்
அப்துல் கலாமும் சுஜாதாவும் இணைந்து ‘இந்திய ராக்கெட் இயல்’ பற்றி புத்தகம் எழுத விரும்பினர். அதை வெளிப்படையாகப் பேசியும் இருக்கின்றனர். விரும்பியது போல் எழுதாமலேயே இருவரும் மறைந்து விட்டார்கள். ‘ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கு’ என சிறுவன் அடியேன் அதை எழுதிடப் புகுந்திருக்கிறேன். இதுதான் அவர்கள் எழுத நினைத்ததா என்பதை அறியேன். ஆனால் இதுபோல் ஒன்றை, அல்லது இதை விடவும் மேலான வேறொன்றினை அவர்களின் பாணியில் தந்திருப்பர் என நம்புகிறேன். அந்த இரு மேதைகளுக்குச் செலுத்தும் நினைவஞ்சலியாகவே இதைக் கருதுகிறேன்.
இந்திய ராக்கெட் இயல் என்பது பரந்துபட்ட ஒரு விஷயம். தான் பங்களித்து வந்த ஏவுகணைத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அப்துல் கலாமின் தனிப்பெருங்கனவாக இருந்தது. அவர் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் இத்தருணத்தில், அக்கதையை மக்களுக்கு விரிவாகச் சொல்லும் தேவை இருப்பதாகத் தோன்றுகிறது. குறிப்பாக அடுத்த தலைமுறையை ஆளப் போகும் இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, விஞ்ஞான ஆர்வலர்களுக்கு மற்றும் தேச அபிமானிகளுக்கு!
ராக்கெட் நெருப்பைக் கக்கிக் கொண்டு மேலேறிக் கிளம்புவது, கிரேக்க புராணங்களில் தீயிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையை ஒத்திருக்கிறது. அக்னிச் சிறகுகள் முளைத்த அப்பறவை எப்போதும் மானுட குலத்துக்கு ஒரு மகத்தான ஆச்சரியம்!
நிஜத்தில் ராக்கெட் பற்றிய இந்திய அபிலாஷைகள் எரிந்தடங்கிய சாம்பலிலிருந்து உயிர் பெற்றது போல் அந்நியப் படையெடுப்பு, அயலார் சுரண்டல், அடிமைப்பட்ட மக்கள்... இவற்றை எல்லாம் தாண்டி வலிகளுடன் நிகழ்ந்தேறிய சரித்திரம்தான்.ராக்கெட் என்பது ஏவுகணை. ராக்கெட் என்றதும் நம் மனதில் என்ன தோன்றுகிறது?
முதலில், செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப் பயன்படும் ஏவுவாகனம் (Launch Vehicle). அடுத்து, எதிரி நாடுகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதமான எறிபடை (Missile). மூன்றாவது, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களில் வெடிக்கப்படும் வாணம் (Skyrocket). இவை மூன்றுமே இயங்குவது ஒரே அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில்தான்.
‘ஒவ்வொரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு’ என்பது நியூட்டனின் மூன்றாம் விதி! ராக்கெட்டின் அடிப்புறத்தில் எரிபொருள் வைக்கப்பட்டிருக்கும். அது எரிக்கப்பட்டு வெளிப்படும் வாயுக்கள் கீழ் நோக்கித் தள்ளப்பட, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்பதால் ராக்கெட் மேல் நோக்கி உந்தப்படும். இப்படித்தான் ராக்கெட் எஞ்சின் இயங்குகிறது. அதைத் தடுமாற்றமின்றி நகர்த்தவும், திசையைக் கட்டுப்படுத்தவும், வேகத்தை அதிகரிக்கவுமென வேறு சங்கதிகள் ராக்கெட்டில் இடம் பெறும் என்றாலும், ஆதார இயங்குவிதி இதுதான்.
ராக்கெட் முன் நகர்வதற்குத் தேவையான உந்துசக்தி வெளியிலிருந்து பெறப்படாமல், அதனுள்ளிருக்கும் எரிபொருளிலிருந்தே கிடைக்கிறது. காற்றே இல்லாத வெற்றிடத்திலும் கூட ராக்கெட் முன்னேற முடிவதற்கு இதுவே காரணம். ராக்கெட்டின் எரிபொருள் திட, திரவ, வாயு என எவ்வகையிலும் இருக்கலாம்; அல்லது இவற்றின் கலவையாகவும்!
ராக்கெட் கிளம்புகையில் எழும்பும் ஒலி மிக மிக அதிகமானதாக இருக்கும். ராக்கெட்டின் அளவினைப் பொறுத்து இது மாறும். சுமார் 200 டெசிபல்களைக்கூட தொடும் (நாம் சாதாரணமாக உரையாடுகையில் 60 டெசிபல்; டாய்லெட் ஃப்ளஷ் செய்கையில் 75 டெசிபல்; பட்டாசு வெடித்தால் 145 டெசிபல்). ராக்கெட் புறப்படும்போது ஒருவர் அதனருகில் நின்றால் காது செவிடாவது உறுதி; அல்லது மரணம் கூட நேரும்.
விண்வெளி ஆராய்ச்சி, தாக்குதல் ஆயுதம், பட்டாசு என நமக்குத் தெரிந்த இந்தப் பயன்பாடுகள் தவிர Ejection Seat என்ற உபகரணத்திலும் ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுகிறது. அவசர, ஆபத்துக் காலங்களில் விமானத்திலிருந்து தப்பிக்க உதவும் உபகரணம் இது. இந்த இருக்கை பெரும்பாலும் ராணுவ விமானங்களில் இடம் பெறும்.
விண்வெளி ஆராய்ச்சியிலேயே பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு மட்டுமல்லாது, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) மனிதர்கள் மற்றும் உபகரணங்களை ஏந்திச் செல்லும் மானுட விண்கலங்களைச் செலுத்துவதற்கும், தூரக் கிரகங்கள், நிலவுகள் மற்றும் நட்சத்திரங்களை ஆராயும் திட்டங்களுக்கும் ராக்கெட் பயன்படுகிறது (உதாரணமாய் நிலவுக்கு அனுப்பிய ‘சந்திரயான்’, செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் ‘மங்கள்யான்’).இது போக பொழுதுபோக்காக, ஆர்வத்தின் துணையுடன் விளையாட்டுப் பொருள் போல் சன்னமான ராக்கெட்கள் செய்யப்படுவதும் விற்பனையாவதும் உண்டு.
ராக்கெட் என்ற கருத்தாக்கம் கீழை மரபுக்கு - குறிப்பாக இந்திய மனதுக்குப் புதிதல்ல.நம் புராண இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் விண்ணில் நெருப்புடன் பாய்ந்து எதிரிகளைத் தாக்கும் பல்வேறு அஸ்திரங்களைப் பேசுகின்றன. புறநானூற்றில் நலங்கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் ‘வலவன் ஏவா வானூர்தி’ என்று வருகிறது. அதாவது ஆளில்லா விண்கலம்! ராக்கெட் என்றும் பாவிக்கலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரத்திலும் வானூர்திகள் பேசப்படுகின்றன. சீவகசிந்தாமணியில் மயிற்பொறி விமானம்; கம்பராமாயணத்தில் புஷ்பக விமானம்.
ஆனால் இவை குறித்த போலி இடைச் செருகல்களும் உண்டு. உதாரணமாய் பரத்வாஜ முனிவர் ராக்கெட் உள்ளிட்ட பல்வேறு விமான சூட்சுமங்கள் குறித்து வேத காலத்தில் எழுதியதாய்ச் சொல்லி வெளியிடப்பட்ட ‘வைமானிக சாஸ்த்ரா’ என்ற சமஸ்கிருத நூல், உண்மையில் மிகச் சமீபத்தில், 1900க்குப் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நிறுவுகிறது.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இவை யாவும் படைப்பாளிகளின் கற்பனையே. விமானமோ, ஏவுகணையோ பற்றிய அழகான கனவுகள் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை மட்டும்தான் இதெல்லாம் காட்டுகின்றன. பண்டைக் காலத்திலேயே இந்தியர்களாகிய நாம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்தவர்களாய் இருந்தோம் என்று சொல்வதற்கான சான்றுகளாக இவற்றை எடுப்பதற்கில்லை.
முதன்முறையாக 13ம் நூற்றாண்டில்தான் ராக்கெட்டை நடைமுறையில் உருவாக்கி போரில் பயன்படுத்தும் முயற்சி நடந்தேறியது. 1232ல் மங்கோலியர்களுக்கு எதிராக கை-கெங்கில் நடந்த யுத்தத்தில் சீனர்களால் இது பயன்படுத்தப்பட்டது. இதை நெருப்பு அம்புகள் என அழைத்தனர். அம்பில் வெடிமருந்து அடைக்கப்பட்ட இரும்பு குண்டு கட்டப்பட்டு, அதில் நெருப்பு வைக்கப்பட்டு ஏவப்பட்டது. இது விழுந்த இடத்தில் சுமார் 2,000 அடி சுற்றளவுக்கு சேதாரம் ஏற்படுத்தியது. இதன் வெடிச் சப்தம் 25 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாகச் சொல்லப்படுகிறது. பிற்பாடு மங்கோலியர்கள் சீனாவைப் போர்களில் தோற்கடித்த தன் மூலம் இத்தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டனர்.
மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் மற்றும் அவரது மகன் ஒகோடி கானின் ரஷ்ய, ஐரோப்பியப் படையெடுப்புகளின்போது ராக்கெட் தொழில்நுட்பம் ஐரோப்பாவிலும் பின்னர் மத்திய கிழக்கிலும் பரவியது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புகள் வழி இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. ஆயிரம் இழப்புகள் தாண்டி ஒவ்வொரு அந்நியப் படையெடுப்பும் இந்தியாவுக்கு ஏதோவொரு புதிய விஷயத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ரோஜா எப்படி பாரசீகர்களின் வழி இந்தியாவுக்குள் நுழைந்ததோ, அதேபோல் ராக்கெட்டும் இந்தியாவிற்குள் நுழைந்தது. இரண்டுமே வசீகர இறக்குமதிகள்!
இந்தியாவில் அதற்கு முன் ‘அக்னி பாணம்’ (Tir-a-Hawai) இருந்தது. அதாவது வெடி மருந்துக்கு நெருப்பு வைத்து அம்பின் மூலம் எய்யும் முறை. இதற்கும் ராக்கெட்டுக்கும் இருக்கும் வித்தியாசம், ராக்கெட் சுயமாய் உந்து விசையை ஏற்படுத்திக் கொண்டு பாயும் விஷயம்; ஆனால் அம்புக்கான விசையை எய்பவனே அளிக்கிறான்.
வாய்மொழிக் கதைகள் தவிர்த்து ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், முதன்முதலாக இந்தியாவில் ராக்கெட்டை ஆயுதமாகப் பயன்படுத்தியது தனித்துவம் மிக்க முகலாயப் பேரரசர் அக்பர். இது நடந்தது 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில். ககாக பாணம், சந்திர பாணம் என இரு வகை ராக்கெட்கள் அவர் படையில் முக்கிய இடம் வகித்தன. முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட யுத்த ராக்கெட் ஒன்று கொல்கத்தா விக்டோரியா மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ராக்கெட்டில் 5 செ.மீ. விட்டமும், 25 செ.மீ. உயரமும் கொண்ட வெடிமருந்து நிரப்பிய உருளை வடிவம் 125 செ.மீ. நீள மூங்கில் கழி ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதக் கிடங்கைத் தொலைவிலிருந்து அழிக்கவும், முன்னேறும் எதிரிப் படையை பயமுறுத்திப் பதற்றமடைய வைக்கவும், ரகசியச் செய்திகள் பரிமாறிக் கொள்ளவும், யானை, குதிரை, எருது சேனைகளை சிதறியோடச் செய்யவும்தான் பெரும்பாலும் இந்த ராக்கெட்கள் பயன்பட்டன. (ராபர்ட் க்ளைவ் வெற்றி பெற்ற முதலாம் ப்ளாசி போரிலுமே ஆங்கிலேயர்கள் வங்காள நவாப்பின் ராக்கெட் தாக்குதலில் தடுமாறினர்.)
பின்னர் 1657ல் அவுரங்கசீப் நடத்திய பிடார் முற்றுகையின்போது கோட்டையின் சுவர்களை உடைக்க ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டன. ராக்கெட் தாக்கி கோட்டையின் உள்ளிருந்த பெரிய வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றிக் கொண்டதில் பெருத்த சேதாரம் ஏற்பட்டது. 27 நாட்களில் முகலாயர் படை வென்றது.17ம் நூற்றாண்டின் முடிவு. ஆற்காடு நவாப் தன் ராணுவத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் படையை வைத்திருந்தார்.
மூங்கில்களால் ஆன ராக்கெட்கள் இவை. பெரும்பாலும் தாக்குதலுக்காக அல்லாமல், போர்களின்போது தங்களுக்குள் சமிக்ஞைகள் செய்யப் பயன் படுத்தப்பட்டன. அவரிடம் 50 பேர் கொண்ட ராக்கெட் படைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர் ஃபத் முகமது அலி கான் கோலாரி.
மராத்தியர்களின் வசமிருந்த செஞ்சிக் கோட்டையை முற்றுகையிட அவுரங்கசீப் ஆற்காடு நவாப்பை அனுப்பி வைத்தார். ஃபத் முகமது தன் ராக்கெட் படையுடன் அப்போரில் பங்கேற்றார். அது நிகழ்ந்திராவிடில், இன்று ரஜினி திப்பு சுல்தானாய் நடிக்க எதிர்ப்பு வந்திருக்காது!புறநானூற்றில் நலங்கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் ‘வலவன் ஏவா வானூர்தி’ என்று வருகிறது. அதாவது ஆளில்லா விண்கலம்!
அது நிகழ்ந்திராவிடில், இன்று ரஜினி திப்பு சுல்தானாய் நடிக்க எதிர்ப்பு வந்திருக்காது!
(சீறிப் பாயும்...)
சி.சரவணகார்த்திகேயன்
|