ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 10
‘‘ஒரு சித்தர் நமக்கு உதவ வேண்டும் என்றால், அவர் இருப்பது தெரியவேண்டும்... இந்தக் காலத்தில் சித்தர்களைப் போய் எங்கே என்று தேடுவது? ஒருவேளை கொல்லிமலை, சதுரகிரி மலை போன்ற தலங்களுக்குச் சென்றால் கண்ணில் படுவார்களோ? என் மனதுக்குள் எழும்பிய கேள்விகளோடு நான் ஜோசப் சந்திரனைப் பார்த்தேன். அப்படியே, ‘கஞ்சமலை விஷயமாக என்ன செய்யலாம்?’ என்று கேட்டேன்.
‘இப்போதைக்கு விட்டு விடுவோம். ஆனால் அவ்வப்போது அங்கு போய் வருவோம். குறிப்பாக சித்ரா பௌர்ணமி இரவு கட்டாயமாகப் போய், அன்றைய நிலவொளியில் அந்த இடம் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம். பௌதிகமாய் ஐந்து பூதங்களும் அங்கே சிறந்த நிலையில் மிக வலிமையோடு இருக்க வேண்டும். அடுத்து, தேவர்கள் அங்கு வந்து செல்லக்கூடும். நமக்கு விதியிருந்தால் அவர்களை நாம் பார்க்கலாம்’ என்றார்.
‘தேவர்களா... புராணங்களில் வருவார்களே, அவர்களா?’ என்று நான் ஆவலாகக் கேட்டேன். ‘ஆமாம்... ஏன் அவர்கள் வருவதை உங்களால் நம்ப முடியவில்லையா?’ என்று அவர் என்னிடம் கேட்கவும், எனக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. என் தயக்கமும் மௌனமும் அவருக்கு நான் நம்ப முடியாமல் தவிப்பதை உறுதிப்படுத்தி விட்டன.‘ஜோசப்... நீங்கள் என்னை மிகவே ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்...’ என்றேன். ஆனால் அவரோ, ‘உங்களுக்கு அப்படித்தான் இருக்கும்’ என்றார். இங்கே ‘தேவர்கள்’ என்று ஜோசப் குறிப்பிட்ட விஷயம், மேல்நாடுகளில் ‘ஏலியன்கள்’ என்று குறிப்பிடப்படுவதாக நினைக்கிறேன். எனவே ‘ஏலியன்களைக் குறிப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டேன்.
‘ஏலியன்கள் ஒரு விஞ்ஞானக் கற்பனை. ஆனால் தேவர்கள் அப்படியல்ல. அவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்’ என்றார் அவர்.‘என்றால், ஒரே ஒரு தேவனையாவது இந்த பூமியில் யாராவது பார்த்திருக்க வேண்டுமே... இந்த மண்ணின் ஆன்மிகவாதிகள் கூட ஒரு தேவனை தாங்கள் பார்த்ததாக எனக்குத் தெரிந்து கூறியிருக்காத நிலையில், நீங்கள் எதை வைத்துக் கூறுகிறீர்கள்?’ என்றேன் நான்.‘இந்த பூமியின் இயக்கத்தை வைத்தும், இது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வைத்தும் நான் உணர்ந்துகொண்ட விஷயம் இது. ஒரு பேரறிவு நிச்சயமாக இருக்கிறது. அதை உங்களால் மறுக்க முடியுமா?’ என்று கேட்டார் ஜோசப் சந்திரன்.
‘மறுக்க முடியாதுதான்! எனக்கு வாய்த்த இந்த உடல்... இதனுள்ளிருந்து கொண்டு நான் பேசிடும் பேச்சு... எல்லாமே எனக்கு வியப்பான விஷயங்களே! இந்த உடம்பை நான் வடிவமைத்துக் கொள்ளவில்லை. என் தாய்மொழி, தாய் - தந்தையர், பிறந்த ஊர், இடம் என்று எதுவும் என் விருப்பம் இல்லை. எனவே, என்னைச் செய்த அந்த சக்தியை - நீங்கள் பேரறிவு என்கிற அந்த விஷயத்தை என்னால் எப்படி மறுக்க முடியும்?’ என்று நான் கூறினேன்.
‘இதை உணர்ந்தே சித்தர் பெருமக்கள் தங்களை வடிவமைத்த சக்தியைப் புரிந்துகொள்ள முயன்றனர். அவர்கள் இறுதியில் அதை உணர்ந்தனர். ‘இந்த பஞ்சபூத பௌதிக சக்தியைத் துளியும் செலவழிக்காமல் கட்டுப்படுத்தும்போது அது பேராற்றலாக மாறுகிறது. அப்போது தெரியாததெல்லாம் தெரிகிறது’ என்றனர்’ - என்று சித்தர்களிடம் வந்து நின்றார் ஜோசப் சந்திரன். கஞ்சமலை தங்கம் குறித்த ஒரு ஆரம்பம், இப்படி ஞான விசாரமாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக அவர் எவ்வளவோ விஷயங்களைப் பேசியபோதிலும் நான் அதில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டேன். ஜோசப் சந்திரன் ஆய்வுத்துறையில் நிலத்தை மட்டும் தோண்டவில்லை; தன்னையும் சேர்த்துத் தோண்டி அதில் எங்கெங்கே போய் விட்டார் என்பதே அது! அப்போது நான் அவரிடம் ஒரு கருத்தை மிக அழுத்தமாய் முன்வைத்தேன்.
‘ஜோசப்... ஏதாவது ஒரு அமானுஷ்ய அனுபவத்திற்கு என்னை ஆட்படுத்த முடியுமா? அப்போதுதான் எனக்கு நம்பிக்கை வரும். அல்லாத பட்சத்தில் உங்கள் பேச்சு, அதன் பொருள் என்று எல்லாமே என் வரையில் கற்பனை என்றே கருத வேண்டியிருக்கும்’ என்றேன்.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...வர்ஷன் நகம் கடித்தபடியே யோசிக்க ஆரம்பித்தான்.
வள்ளுவர் ஒரு தோல் பைக்குள் தனது துணிமணிகளை எடுத்து வைத்துக்கொள்ளத் தொடங்கினார். வீட்டில் யாருமில்லை. ஊரிலிருந்து வந்திருந்த மருமகள், மனைவி மற்றும் பேரன் என்று எல்லோரும் திண்டுக்கல் பக்கமுள்ள சிறுமலைக்குப் போய்விட்டிருந்தனர்.வீட்டின் ஒரு மூலையில் கொத்தாக ‘இயேசு அழைக்கிறார்’ நோட்டீஸ் கிடந்தது. வீட்டுச் சுவற்றில் இந்துக் கடவுள்களின் படங்கள். வர்ஷன் அதை எல்லாம் மெல்லப் பார்க்க ஆரம்பித்தான். வியப்பு தோன்றியது அவனுக்கு. வள்ளுவர் தயாரான நிலையில் வந்து நின்றார்.‘இப்போதே புறப்படுவோமா? இல்லை, விடிகாலை புறப்படலாமா?’ என்கிற மாதிரி பார்த்தார். ‘‘அய்யா! இங்க என்னால தூங்க முடியாது. கொசுவும் நிறைய இருக்கு. நீங்க எப்படி தூங்கறீங்க...’’ - என்று கேட்டான்.
‘‘மனுஷன் ஒரு அற்புதமான விலங்குப்பா. எந்த சூழலுக்கும் அவன் செட்டாயிடுவான். நாமெல்லாம் ஆதி காலத்துல மரக்கிளைகள்ல படுத்துத் தூங்கினவங்கதான். அந்தப் பழக்கத் தொடர்புலதான், இப்பவும் தூக்கத்துல சுருண்டு படுத்துக்கறோம். எனக்கும் இதெல்லாம் பழகிடுச்சு.’’
‘‘இது கிட்டத்தட்ட டார்வின் தியரி மாதிரி. டார்வின் தியரிய ஒத்துக்கிட்டா இந்தக் காலப்பலகணி, கடவுள்னு எதையும் யோசிக்கவே முடியாதுய்யா...’’ ‘‘உண்மைதான். நம்ம மதத்தோட சித்தாந்தப்படி, மனுஷன் ஒண்ணும் குரங்குல இருந்தெல்லாம் வரலை. தொடக்கமே பூரணமான ஆரம்பம்தான். அதாவது மகாவிஷ்ணுதான் முதல் தொடக்கம். அப்புறம் அவரால உருவான பிரம்மா... அப்புறம் அவரால உருவான வேதம்... உயிர்கள்...’’ ‘‘தொடக்கத்துலயே வேதம்ங்கற படிக்கற விஷயம் இருந்துருக்குன்னா, எழுத்து, மொழி எல்லாமும் இருந்துருக்கணும் இல்லையா?’’
‘‘நிச்சயமா! சரி... நாம விடியற வரை இப்படியே பேசிக்கிட்டிருக்க போறோமா? இல்ல, இப்பவே புறப்பட்டு வேற எங்கேயாவது போகப் போறோமா?’’ ‘‘நீங்க என்ன சொல்றீங்க?’’ ‘‘எனக்கு எதுவானாலும் சரி...’’
‘‘நாம ேபாற காரியம் வெற்றி கரமா முடியணும்னா, நாம நல்ல நேரத்துக்குள்ள தொடங்கணும். உங்க கணக்குப்படி இந்த இரவுல எது நல்ல நேரம்?’’ ‘‘அப்ப நீ நல்ல நேரம், கெட்ட நேரம்னு காலத்தை இரண்டா பிரிச்சுப் பாக்கத் தொடங்கிட்டேன்னு சொல்லு!’’ ‘‘எல்லாம் உங்களோட தாக்கம்தான்...’’
‘‘கொஞ்சம் இரு, சொல்றேன்...’’ வள்ளுவர் காலண்டர் அருகில் சென்று பார்த்துவிட்டு, பஞ்சாங்கத்தையும் எடுத்துப் பார்த்துவிட்டு, ‘‘சரியா நாலு மணி, எட்டு நிமிஷத்துக்குப் புறப்படுவோம். நம்ம பயணம் தடையில்லாம காலப்பலகணிகிட்டதான் முடியும்’’ என்றார். ‘‘ஓ... அதுவரை பொழுதை எப்படிக் கழிக்கிறது?’’ ‘‘ஒரு தூக்கம் போடுப்பா...’’
‘‘காலப்பலகணிய கண்ணுல பாக்கறவரை தூக்கம்ங்கறதெல்லாம் எனக்கு வராதுய்யா...’’ ‘‘வாஸ்தவம்தான். மனசு அடங்காம தூக்கம் வராது. ஒரு நிமிஷம் இரு. உன்னைத் தூங்க வைக்கறேன்.’’ ‘‘என்னய்யா... ஏதாவது மாத்திரை தரப்போறீங்களா?’’ ‘‘அது எதுக்கு... உன் பிறந்த தேதி எது?’’ ‘‘பதினாறு...’’
‘‘அப்ப நீ ஏழாம் நம்பர் காரன். ஏழுக்கு சந்திரன் மனோ மயக்ககாரகன். அவன் ஜாதகத்துல எந்த வீட்ல இருக்கான்?’’ ‘‘நீங்க கேக்கறதே புரியலய்யா...’’
‘‘விடு. பிறந்த தேதிய சொல்... பிறந்த நேரம் - இடம் ெசால்...’’ ‘‘எனக்கு ஜாதகம் பாக்கப் போறீங்களா?’’ ‘‘பொழுது போகணுமில் லையா?’’ ‘‘அப்ப தூக்கம்?’’
‘‘தூங்குவே... அதுக்கும்தான்!’’ ‘‘இப்படி நினைச்சப்ப எல்லாமா ஜாதகம் பார்க்கறது?’’ ‘‘கணக்குதானேப்பா... அதை எப்ப போட்டா என்ன? நீ உன்னோட விவரங்களைக் கொடு...’’ ‘‘அப்ப நாமெல்லாம் கணக்கு மட்டும்தானா?’’ ‘‘அதுல என்ன சந்தேகம்?’’ ‘‘எல்லாமேவா கணக்கு?’’
‘‘ஆமாம்பா...’’ ‘‘இதை நம்ப எனக்கு சிரமமாயிருக்கு...’’ ‘‘நான் இப்ப உனக்கு ஒரு ஆச்சரியமான கணக்கைச் சொல்லவா?’’ ‘‘என்ன கணக்கு?’’
‘‘நம்ம நாடாளுமன்றமே இப்ப ராகுங்கற நாலாம் நம்பர் பிடிக்குள்ளதான் இருக்கு. தெரியுமா உனக்கு?’’ ‘‘எப்படி?’’‘‘ஆளுங்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 283... கூட்டினா நாலு வரும். அவங்க கூட்டணியான என்.டி.ஏ. கட்சிகளோட எம்.பி.க்கள் எண்ணிக்கை 337... கூட்டினா நாலு! அடுத்து எதிர்க்கட்சிக் கூட்டணி எம்.பி.க்களோட எண்ணிக்கை 58. கூட்டினா நாலு. மத்தவங்க 148... கூட்டினா நாலு!’’ ‘‘நிஜமாவா?’’‘‘சோதிச்சுப் பாத்துக்கோ...’’
‘‘இது ஏன் தற்செயலான ஒண்ணா இருக்கக் கூடாது...’’ ‘‘கணக்குல தற்செயல், தகாத செயல்னு எல்லாம் கிடையாது. சரியா கணக்கு போட்டா, யார் போட்டாலும் ஒரே விடைதான்.’’‘‘அது சரி... இதுக்கு என்ன அர்த்தம்?’’‘‘ஒரே அர்த்தம்தான்... எது எப்ப நடக்கணுமோ, அது அப்ப நடந்துக்கிட்டிருக்கு!’’ ‘‘ஒரு பெரிய விஷயத்தை இப்படி சாதாரணமா சொன்னா எப்படிய்யா?’’
‘‘எப்படிச் சொன்னாலும் அதுதான்யா சரியான பதில்!’’ ‘‘சரி... இப்ப ராகுவோட பிடில இருக்குன்னு எதை வச்சு சொன்னீங்க?’’ ‘‘நாலாம் நம்பர்தான் ராகுவோட எண்...’’
‘‘அப்ப அந்த கிரக ஆதிக்கம்தான் இந்த நாட்டை வழி நடத்துதா?’’ ‘‘அப்படியும் சொல்லலாம்!’’ ‘‘எவ்வளவு காலத்துக்கு?’’ ‘‘வர்ற தேர்தல் வரைக்கும்தான்...’’
‘‘அப்படின்னா, அடுத்து ஐந்தாம் எண் ஆதிக்கம் வருமா?’’ ‘‘அது தெரியாது...’’ ‘‘சரி... இது நமக்குத் தெரிய வந்தது எதுக்காக?’’
‘‘அது எங்க தெரிய வந்தது? நாமதான் கூட்டிப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டோம்...’’ ‘‘சரி... இதைத் தெரிஞ்சுக்கிட்டதால என்ன பயன்?’’‘‘இந்தக் கேள்விக்கு சுலபமா பதில் சொல்லிட முடியாது. ராகு நிழல் கிரகம், பாம்பு கிரகம், பாவ கிரகமும் கூட...’’ ‘‘அதனால..?’’
‘‘எதிர்பாராத விஷயங்கள்தான் நிறைய நடக்கும். தர்ம - நியாயங்கள் கொஞ்சம் சிரமப்படும்...’’‘‘என்னய்யா பதில் இது... இந்த நாட்டுல எந்தக் காலத்துலய்யா தர்ம - நியாயம் நல்லா இருந்துருக்கு?’’‘‘வர்ஷா... வரலாறு தெரியாம சராசரி மனுஷன் மாதிரி பேசாதே. நீ இப்ப வாழ்ந்துக்கிட்டிருக்கற இந்தக் காலமும், வாழ்க்கையும் வரப்ரசாதம். அந்தக் காலத்து மனுஷனுக்கு அவன் கால்களால நடக்க முடிஞ்ச தூரம்தான் அவன் உலகம்.
அவன் வாழற ஊர்ல விளையறது மட்டும்தான் உணவு. அவனைச் சுத்தி உள்ளவங்க மட்டுமே சுற்றம். இன்னிக்கு என்ன அப்படியா? இந்த நொடில நீ உலகம் பூரா தொடர்பு கொள்ளலாம். பணம் மட்டும் இருந்தா போதும்... எதையும் வாங்கலாம். உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும்னு உன் அந்தராத்மா நினைச்சாதான் நீ அதுக்கு மெனக்கெடணும். வேற எதுக்கும் இங்க யாரும் சிரமப்பட இடமில்லை...’’
- வள்ளுவர் பொங்கி வழிந்தார். வர்ஷன் திகைத்தான். ஆன்மிகத்திலிருந்து அப்படியே அவர் விஞ்ஞானத்துக்கு கியர் மாற்றிக்கொண்டு விட்டது போலத் தோன்றியது. வெறித்தான்.‘‘என்ன பாக்கறேப்பா?’’‘‘வார்த்தைக்கு வார்த்தை சரிய்யா... ஆனா எவ்வளவு பெரிய முரண்பாடு தெரியுமா உங்ககிட்ட?’’ ‘‘முரண்பாடெல்லாம் இல்லப்பா! நான் நாலையும் பார்த்தவன். உன்னைவிட நாலு பங்கு கூடுதலா மூச்சு விட்டவன். என் அளவு யோசிக்கவோ, சிந்திக்கவோ உன்னால முடியாது.’’
‘‘அய்யா! பேசிக்கிட்டே என் ஜாதகத்தைப் பாக்க மறந்துட்டீங்களே...’’‘‘அதுக்கு ஒரு பத்து நிமிஷம் ஆகும்!’’‘‘தாராளமா எடுத்துக்குங்க... என் எதிர்காலத்த பத்தி சொல்லுங்க. நான் அதுக்குள்ள டீக்கடை வரை போய்ட்டு வர்றேன்...’’‘‘அந்த உளவாளிய பாக்கவா?’’‘‘ஆமாம்... ெஹல்மெட்டை மூடிக்கிட்டு என்கிட்ட இருந்து தப்பிக்கிற அவன்கூட ஒரு சின்ன கண்ணாமூச்சி விளையாட்டு...’’ ‘‘சரி, போய்ட்டு வா!’’
- அவர் கூற, வர்ஷன் வெளியே வந்தான். இரவு நேர அழுத்தம்... சில்வண்டு சப்தம்... தெருவிளக்கின் சலிக்கப்பட்ட அழுக்கு வெளிச்சம்... டீக்கடை மூடப்பட்டிருந்தது. சுகுமாரைக் காணவில்லை! ஆச்சரியமாகவும் அதிர்ச்சி யாகவும் இருந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்தான். எங்கும் யாரும் இல்லை. நாய் ஒன்று மெல்ல அருகில் வந்து ஏறிட்டது. அவனுக்கு எங்கே அது கடித்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. அதைப் பார்த்தபடியே திரும்பி நடக்கத் தொடங்கினான். வள்ளுவர் வீட்டு வாசலுக்கு வந்து நிறுத்தியிருந்த கார் மேல் சற்று சாய்ந்தான்.
‘‘என்னப்பா... போன வேகத்துல வந்துட்டே?’’ - வள்ளுவர் குரல் உள்ளிருந்து கேட்டது. ‘‘அவன் இல்ல சாமி... போயிட்டான் போல இருக்கு!’’
‘‘விடு... நீ உள்ள வா! அப்புறம் உன் கட்டத்த என்னால பாக்க முடியல. பார்... கம்ப்யூட்டர்ல பவர் இல்ல... பேசாம நாம இப்ப படுப்போம். நாலு மணி ஆகட்டும். கிளம்பலாம்...’’ என்றார். அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை. வர்ஷன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டான். வெளியே அவன் கார் நிற்கும் இடத்திற்கு கச்சிதமாக ஒரு உருவம் வந்து நின்றது!
உங்க பொண்ணு யாரையோ லவ் பண்ணுது தலைவரே...’’‘‘உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்யா! கூட்டணிக் காவது யூஸ் ஆகட்டும்...
இந்த நாய், உங்க மனைவியோட வளர்ப்பா..?’’ ‘‘எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?’’ ‘‘வாலாட்டாம காலாட்டுதே... அதை வைத்துதான்..!
‘‘என் மகன்கிட்ட எந்தக் கேள்வி கேட்டாலும் ஒரே பதில்தான் சொல்வான்...’’ ‘‘என்னன்னு..?’’ ‘‘தெரியாதுன்னு..!’’ - பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்
|