தல புராணம்



*காதல் வழிகிறது
பிரகாரச் சுவர்களில்
எண்ணெய் பிசுபிசுப்போடு
எழுதப்பட்டிருக்கும்
ஆண், பெண் பெயர்களில்.

*மழையில் நனைந்திருக்கும்
அந்த கற்சிலையில் தெரிகிறது
உன் சாயல்

*உயிரைக் கொடுத்தாவது
உன் பிரார்த்தனையை
நிறைவேற்றுவேன்
நந்தி காதில் சொல்லும்
ரகசியத்தை
என் காதில் சொல்.

*அரையிருட்டில் ஆலயம்
அகல் விளக்கொளியில்
அம்மன் முகம் பார்க்கிறாய் நீ.
மூக்குத்தி ஒளியில்
உன் முகம் பார்க்கிறேன் நான்.

*ஆயிரம் வருடம் மண்மூடிக் கிடந்து
அங்கம் சில
சேதாரம் அடைந்திருந்தபோதிலும்
அழகு குறைவின்றிச் சிரிக்கிறாள்
அகழ்வாராய்ச்சியில்
தோண்டி எடுக்கப்பட்ட
அந்தச் சிற்ப அழகி.

*நீ அடிபிரதட்சணம் செய்வது
மிகவும் பிடிக்கும் எனக்கு
நீண்ட நேரம் பின்பற்றலாம்.

*மணியோசை ஓய்ந்த பிறகும்
அதிர்ந்துகொண்டிருக்கிறது
உன் காது ஜிமிக்கி

*சுடரற்ற திரியிலிருந்து
வரும் வெளிச்சம்
நீ சென்ற பிறகு
நான் எழுதும் இந்தக் கவிதைகள்.

பிருந்தா சாரதி

ஓவியம்:இளையராஜா