ஐ.எஸ்.ஓ. அழகிய மயானம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    மரணத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் நாகரிகத்துக்கு உண்டு. இசை, ஒப்பாரி என உறவுகள் கூடி, நண்பர்களின் ஆறுதலுடன் வழியனுப்புதல் நடக்கும். காலப்போக்கில் அதிவேக வாழ்க்கை மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் இறுதிச்சடங்கு நடக்கும் இடங்கள் மிரட்சி ஏற்படுத்துபவையாக மாறின. சேலத்திலோ ஓர் வித்தியாசம்!

முட்புதர்கள், ஏற்கனவே எரிந்து முடிந்த சடலங்களின் மீதி எலும்புகள், பிணம் எரிந்த வாடை என மிரட்டும் மயானத்தின் தோற்றத்துக்கு பயந்து தொலைவிலேயே பெண்கள் நின்றுவிட, ஆண்கள் மட்டுமே இறுதிச்சடங்கை முடிப்பார்கள். சொற்ப வருமானம் மற்றும் பிணவாடை காரணமாக வெட்டியான் தொழில் செய்பவர்கள் எப்போதும் போதையில் இருப்பது வழக்கம். இவையெல்லாம் மாறி, பூங்காவுக்கு நிகராக பிரமாண்டமாக வரவேற்கிறது சேலம் காக்காயன் எரிமேடை. பச்சைக்கம்பள விரிப்பாக புல்தரை, இறுதிச்சடங்குக்கான பிரமிடு அரங்கு, நீராடி உடைமாற்றிக்கொள்ள அறைகள்... இப்படி இறுதிச்சடங்கை சங்கடங்களற்ற சூழலில் செய்ய முடியும். வேலிக்கருவை மரத்துண்டுகளைக் கொண்டு எரிக்கப்படும் சடலத்தில் அஸ்தியை குறித்த நேரத்தில் பெற்றுச் செல்லலாம். இத்தனை வசதிகள் அடங்கிய இந்த மயானத்தின் மதிப்பு ரூ.234 லட்சம்!

ஒரு மயானம் ஐ.எஸ்.ஓ. தரத்தோடு உயிர்பெற்றது எப்படி? சொல்கிறார் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி.

''வாழ்ந்து முடித்த மனிதனின் இறுதிச்சடங்குகள் அமைதியான, சுகாதாரமான சூழலில் நடப்பதற்கு அரசின் திட்டம் உதவியுள்ளது. தமிழக அளவில் சேலம் மயானம் பெயர் சொல்லும் விதத்தில் அமைய திட்டமிட்டோம். மக்கள் ஒத்துழைப்புடன் பசுமைச்சூழலை உருவாக்கினோம். கனக்கும் இதயத்துடன் வருபவர்களுக்கு இந்த இதமான சூழல் கண்டிப்பாக மாற்றம் தரும்’’ என்கிறார் ரேகா.

‘‘இந்த நவீனவசதியைப் பயன்படுத்திக்கொள்ள தொலைபேசியிலேயே புக்கிங் செய்யலாம். மாநகராட்சியில் இறப்புச்சான்று பெறுவதும் எளிது. சடலத்தை ஆம்புலன்சில் எடுத்து வந்து எரியூட்டும் அனைத்துச் சடங்குகளுக்குமாகச் சேர்த்து ரூ.1500 மட்டுமே செலவு. சாதிபேதம் இன்றி மக்கள் இவ்வசதியைப் பயன்படுத்துகின்றனர். பார்க்கிங் வசதியும் இங்கு உண்டு. வளாகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள 10 பேர் பணியில் உள்ளனர்’’ என்கிறார் துணை ஆணையர் பழனிச்சாமி.

குண்டூசி போட்டாலே சத்தம் கேட்கும் அமைதி, சடலம் எரியும் சுவடே இல்லாத நவீன அமைப்பு, பசுமையான சுற்றுப்புறம் ஆகிய காரணங்களுக்காக சேலம் காக்காயன் மயானம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது. நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது!
 ஸ்ரீதேவி