புலி



வேதாளக் கோட்டைக்கே போய் எதிரிகளைப் பந்தாடும் விஜய்யின் வீரதீர ‘புலி’. ஆக்‌ஷன், அதிரடி, ஃபேன்டஸி, காதல் எனப் பட்டை தீட்டிய விஜய்யின் அடுத்த கமர்ஷியல்!வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீ தேவி.

அவரது நம்பிக்கைக்குரிய அடுத்த கட்ட தளபதி சுதீப், ராணியை மந்திரத்தால் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொடுங்கோலாட்சி செய்கிறார். கொடூரங்களுக்கு முடிவு வேண்டுமல்லவா! அணுக முடியாத அந்த வேதாளக்கோட்டைக்கு அதற்காகவே அதிரடிப் பயணம் போகிறார் விஜய். வேதாள வீரர்களால் கடத்தப்பட்ட மனைவி ஸ்ருதி ஹாசனை மீட்டாரா? தளபதியிடமிருந்து ராணியை விடுவித்தாரா? நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததா? அது க்ளைமேக்ஸ்.

பரபரப்பாக காட்சிகளை அடுக்கியதற்கு இயக்குநர் சிம்புதேவனுக்கு தேங்க்ஸ். ஃபேன்டஸி கதையில் முன்பின் பார்த்திராத அளவில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய். ஆற்று வெள்ளத்தில் பிறந்த குழந்தையாக விஜய் வருவதிலிருந்து சிம்புதேவனின் ஃபேன்டஸி உலகம் விரிகிறது. பழகிய கதை என்றாலும் எல்லா ஏரியாக்களையும்...

முக்கியமாக, குழந்தைகளை மயக்குகிற விஷயங்களைத் தெளிவாகத் தெளித்திருக்கிறார். ராஜா காலத்து உடையும், நடையும், சுறுசுறுப்பும் பக்கா. சந்தேகமே இல்லாமல் விஜய்யின் கேரியரில் ‘புலி’ ஒரு முக்கியமான படம். வைரநல்லூரின் மக்களை தன் பக்கம் வைத்திருப்பதிலிருந்து, ஸ்ருதி ஹாசனை காதலில் இழுப்பது வரையிலும் எல்லாமே பியூட்டிஃபுல் விஜய்! மக்களுக்காக போராடி வேதாளக்கோட்டைக்கே சென்று பார்க்கிற துணிவிலும் கனிவுப் பார்வையிலும் தற்காப்புக் கலை சண்டைகளிலும் விஜய் சர்ப்ரைஸ் சந்தோஷம்!

பேசும் கிளி, குள்ள மனிதர்கள், வேதாளக் கோட்டைக்கு வழி சொல்லும் ஆமை, அகல ஆறு தாண்டி பயணப்படும் பாதை, விரிந்த சோலை, மகா உயரக் கோட்டை கொத்தளங்கள் என அகலக்கண் விரிக்க  வைக்கிறார்கள். குழந்தைகளின் ஏரியாவிலேயே கதை அமைத்து, ஆக்‌ஷனில் ரசிகர்களுக்கு நிறைவூட்டி விளையாடியிருக்கிறார் ஹீரோ.

 தமிழ் சினிமாவில் இப்படி பிரமாண்டத்தை சாத்தியப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு ‘முடியும்’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். வேதாள உலகத்திற்கு வழி தேடும் விஜய், தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா குழுவே சுவாரஸ்ய ப்ளஸ். இருந்தாலும் அடுத்தடுத்து என்ன வரும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறதே! திரைக்கதையை கொஞ்சம் செதுக்கி இருக்கலாம் சாரே!

ஸ்ருதி ஹாசன் அப்படியே கண்களுக்குக் குளிர்ச்சி. ஆட்டம், பாட்டம் அத்தனையிலும் சுளுக்கெடுக்கிற அசைவுகளில் பின்னி எடுத்திருக்கிறார். ஹன்சிகாவும் தன் பங்குக்கு இளமை காட்டுவது பளபள பலம். பாடல் காட்சிகளில் அவர் அபார அழகு.தேவி சொல்லி அடிக்கிற மறுவரவு. சும்மா இருந்துவிட்டுப் போகாமல் விஜய், சுதீப் வரைக்கும் நடிப்பில் ஈடு கொடுக்கிறார்! முரட்டு உயரம், பயமுறுத்தும் பார்வை, ராணியை தன் பிடியில் நிறுத்தி வைத்திருக்கும் கடுமை என சுதீப் மிரட்டல் சாய்ஸ்!

‘ஏன்டி... ஏன்டி’, ‘ஜிங்கிலியா’, ‘சொட்டவாலா’ என மூன்று பாடல்களுமே தாளமிட வைக்கின்றன. பின்னணியிலும் தேவிபிரசாத் விட்டு வைக்கவில்லை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய அழகிலும் சரி, பாடல் காட்சிகளில் குளிர் உணர்வை தரிசிக்க விட்டதிலும் சரி... ஒளிப்பதிவாளர் நட்டி சுப்பிரமணியன் ஒவ்வொரு ஃப்ரேமையும் ஸ்கிரீன் சேவர் ஆக்கி மயக்குகிறார். நறுக் எடிட்டிங் கர்பிரசாத் வசம். முத்து ராஜின் கலை படத்தின் ஆன்மா.

பழகிய கதை, அதுவும் பழைய கதை. திருப்பங்களைத் தேடவேண்டியிருக்கிறது. சற்றே அலுப்பூட்டும் நீளம், எடுபடாத நகைச்சுவைக் காட்சிகள் என மைனஸ்கள் இருந்தாலும்... குழந்தைகளின் உலகத்திலும் புகுந்து புறப்படும் விஜய்யின் புது அவதாரம் ‘புலி’!

- குங்குமம் விமர்சனக் குழு