அழியாத கோலங்கள்



லஞ்ச ஒழிப்பு பற்றி தீவிரமாக விவாதம் செய்துகொண்டே கீதோபதேசத்தில் ‘பத்திரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதீ.... தத் அஹம் பக்தி உபஹ்ரிதம் பிர்ஸ்னாமி ப்ரியதாத மநஹ....’ என்பார்கள். அதன் பொருள், ‘இலை, பூ, பழம், நீர் ஆகிய எதை நீ வணக்கத்துடன் கொடுத்தாலும் அதை நான் பிரியத்துடன் ஏற்றுக்கொள்வேன்’.

 அது சமஸ்கிருதம்... இன்றைய மத்திய ஆட்சி மோகத்தால் அதை விமர்சிக்காமல் விட்டுவிடலாம்.  தமிழுக்கு வருவோமே... ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்...’ எனக்கு கணக்கு இடிக்கிறதே!  அவ்வைப் பிராட்டியார் நான் நாலு கொடுத்தால் பதிலுக்கு மூன்றுதான் வாங்கித் தருவாராம். அதுதான் சங்கத்தமிழ் மூன்று!

நேற்றுதான் ராமாயணக் கதை பற்றி விமர்சனம் செய்து முகநூலில் ஒரு நூறு இடங்கள் வரை புது நண்பர்களுக்கு காலி செய்து வைத்தேன். இன்று டெல்லி சமஸ்கிருத யுனிவர்சிட்டி மூலம், 1500 வருடங்களுக்கு முன் மாடு மேய்த்து கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்களை முதலிடத்தில் வைத்து, மொஹஞ்சதரோ-ஹரப்பா இரண்டையும் இரண்டாமிடம் மூன்றாமிடங்களுக்குத் தள்ளியிருக்கிறது. இதுவும் ‘பாலும் தெளி தேனும்’ போல எதையாவது கொடுத்து வாங்கும் பெருமையாகிவிட்டதோ, என்னவோ! வேதங்களை 6000 ஆண்டுக்கு முன்பானதாக ‘கொண்டு வந்ததற்காக’ பி.ஜே.பி. ஆட்சியாளர்களுக்கு ‘ரோம ரிஷிகள்’ சார்பாக நன்றி கூறுவோமா?

பழமைவாதிகள் மட்டுமல்ல... தரமான கல்வி பயின்றவர்களும் கூட மனசாட்சியை வெறும் நீதிமன்ற சாட்சிகளாக்கி... ஒரு குறுக்கு விசாரணையின்றி குகை மனித நியாயங்களை ஒப்புக் கொள்கிறோமே! உண்மைகளைக் காலடியில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு... காலழுத்தும் விசையால் மிதித்து மூடி, பொய்களை வேதங்களாக்கி பல்வேறு மதங்களையும் சாதிகளையும் ஒப்புக்கொள்கிறோமே! இது முன்னேற்றமா?

ஆங்கிலத்தில் ஒரு விஞ்ஞானப் பழமொழி... You cannot go back in time, murder your grandfather and come back to the present என்பது. அதாவது, ‘காலத்தில் பின்னோக்கிச் சென்று உன் பாட்டனாரைக் கொன்றுவிட்டு இன்றைய காலத்துக்கு வர முடியாது’ என்பது விதி. அது இன்று மாற்றப்பட்டுவிட்டது. அதற்காக என்ன செய்ய முடியும்? காலமே பொய்... அதில் முந்தி என்ன பிந்தி என்ன என்று எடுத்துக்கொண்டு மன்னிக்க வேண்டியதுதான்; மறக்க வேண்டியதுதான்.

‘ஒளியின் வேகத்தை நாம் அடைந்தால் காலம் என்ற கடிகாரம் ஓடாமல் நின்றுவிடுகிறது’ என்று சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘உலகம் படைக்கப்படும் நேரமும் உலகம் அழியும் நேரமும் ஒன்றுதான். நம் மனம்தான் அதை வேறுபடுத்திப் பார்க்கிறது’ எனச் சொல்கிறது ஜெர்மனியின் மேக்ஸ் ப்ளாங்க் (Max Planck) இன்ஸ்டிட்யூட்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் வேதாந்தி இமானுவேல் கான்ட் (Immanuel Kant) என்பவர் எழுதினார்... ‘மனித மனம் பலவித சிந்தனைக் கட்டுகளுக்குள் அடைபட்டிருக்கிறது.

அதனால் எது ஒன்றையுமே அது நீளம், அகலம், உயரம் ஆகியவற்றால் அளக்கிறது. ஆனால், SPACE எனும் வானவெளிக்கு ஆரம்பமும் முடிவும் இல்லையே! அதை அளக்க முடியாது!’ என்று. அதே போலத்தான் காலம் என்பதும். காலத்தை நாம் ஒரு கடிகாரத்தால் அளக்கிறோம். அது வெறும் அளவுகோல், அவ்வளவுதான்! முதலும் முடிவும் இல்லாத காலத்தில் வேதம், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகியவற்றை எங்கு வைத்து எங்கு எடுத்தால் என்ன?

இந்த இமானு வேல் காண்ட் என்ற அறிஞர், ‘பகுத்தறிவுச் சிந்தனையில் உள்ள தவறுகள்’ (Critic Of Practical Reason) என்றும்... ‘சுத்த சிந்தனையில் உள்ள தவறுகள்’ (Critic Of Pure Reason) என்றும் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். யாராவது தமிழ் அறிஞர்களில் நாத்திகராயினும் சரி, ஆன்மிகவாதிகளாயினும் சரி... மொழிபெயர்த்துக் கொடுத்து சிந்தனைகளின் முடிவை நம் வருங்கால சந்ததிகளுக்கு விடுமாறு கேட்டு இந்தத் தொடரிலிருந்து விடைபெறுகிறேன்.

வெவ்வேறு வேதங்களை ஓதும் மதங்கள் நிறைந்த ஒரு சமூகத்தின் பலவித வேறுபாடுகளை ஒப்புக்கொள்ளாமல் ‘குங்குமம்’ பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தவன் நான். இதிலே எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே அதிசயம். இதுவரை நான் செய்த - ஆசிரியர்களால் கூட திருத்த முடியாத - மொழிப்பிழை, எழுத்துப் பிழைகளுக்கு என்னை மன்னித்துவிடுங்கள். கருத்துப் பிழைகளுக்கு என்னைக் கண்டித்து விடுங்கள்... சமூகத்துக்கு தவறு இழைத்திருந்தேன் என்றால் தங்கள் மனதார தண்டித்துவிடுங்கள்... அது உங்கள் முடிவு!

(முழுமை பெற்றது)

சாருஹாசன்
ஓவியங்கள்: மனோகர்