சிருஷ்டிக்கு திருஷ்டி!



‘‘எங்களைக் களங்கப்படுத்தும் சமூகம்தான் அழுக்கானது’’ என்ற சிவப்பு விளக்குப் பகுதி பெண்ணின் அபயக் குரல், சமூகத்துக்குச் சரியான சவுக்கடி!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

மனோபாலாவின் தொடர் எடுத்த எடுப்பிலேயே செமயாய் செல்ஃப் ஸ்டார்ட் எடுத்துப் பறக்கிறது. தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளை அதில் தரிசிக்கக் காத்திருக்கிறோம்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

விஷ்ணுப்பிரியா போன்றவர்களின் உயிரிழப்புகள் மூலம் இன்றைய இளைஞர்களின் நேர்மையும் நம்பிக்கையும் வேரோடு அறுக்கப்பட்டுவிடுமோ என அச்சம் பிறக்கிறது.
- கோ.சு.சுரேஷ், கோவை.

ஒரு போட்டோ ஷூட் பண்ணிய குத்தத்துக்காக சிருஷ்டி டாங்கேவிடம் இம்புட்டு கேள்விகளா? ஆனால், அத்தனைக்கும் டாண்... டாண் என பதில் சொன்ன சிருஷ்டிக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘உயிர் பயத்தில் பயணம்’ கட்டுரை, நம் அரசுப் பேருந்துகளின் பரிதாப நிலையை படம் பிடித்துக் காட்டியது. இனி பஸ்ஸில்‘டிக்கெட் வாங்கியாச்சா’ என்றாலே பீதி கிளம்பும்!
- பாபு கிருஷ்ணராஜ், கோவை-2.

கமல்ஹாசன் தனது விளம்பரப் பட வருமானத்தை எய்ட்ஸ் நோயாளிகளுக்காகத் தருவது வரவேற்கத்தக்கது. ‘அவரைப் போல’ என சொல்லிக்கொள்ளும் இளம் நடிகர்கள் இதையும் செய்யலாமே!
- இரா.ஸ்டீபன் சார்லஸ், வந்தவாசி.

‘தாகத்தில் தவிக்கும் சென்னை’ கட்டுரை உடல் நடுநடுங்கச் செய்தது. ‘நீரின்றி அமையாது உலகு’ எனில் நகரம் மட்டும் அமையுமா என்ன?
- எச்.ஆரோக்கியமேரி, நாகை.

என்னது, தலைக்குக் குளிக்க ஒரு மெஷினா? மனிதனை சோம்பேறி ஆக்குவதில் என்னய்யா சோம்பேறித்தனம்? சீக்கிரம் சோறு ஊட்டுற மெஷினைக் கண்டுபிடிங்க!
- சி.டி.மேகலா கிருஷ்ணன், திருப்பூர்.

புது மர்ம ஜுரத்திற்கு மருத்துவம் HFMD என்று பெயர் சூட்டினாலும், சிவப்புக் கொப்பளங்களை பார்த்து நம்ம மெட்ராஸ்ல அதுக்கு ‘தக்காளி ஜுரம்’னு பேரு வச்சுட்டாங்கப்பா. நம்மாளுங்க ரசனையே தனிதான்!
- மல்லிகா அன்பழகன், சென்னை.

‘சரக்குதான் பிரசாதம்’ எனச் சொல்லும் டெல்லியின் ‘கிக்’ கோயிலை இப்படியா காண்பிப்‘பீர்’? அபா‘ரம்’! ஆன்மிகமும் அங்கதமும் அதில் செம மிக்ஸிங். சியர்ஸ்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.