ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!



கொதிக்கும் ஆண்கள் நல சங்கம்

‘‘இந்தியாவுல பெண்களை விட ஆண்கள் தற்கொலையில் ஈடுபடுறது ரெண்டு மடங்கு அதிகம். ஒவ்வொரு 5.84 நிமிஷத்துக்கும் ஒரு ஆண் தற்கொலை செய்துக்கறதா சொல்லுது நேஷனல் க்ரைம் ரெக்கார்டு பீரோ. காரணம், பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகள்தான். ஆண்கள் தற்கொலையில மகாராஷ்டிராவுக்கு அடுத்து ரெண்டாமிடத்துல இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ‘குடும்ப வன்முறை...

பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ன்னு கோஷங்களைக் கேட்டுக் கேட்டே நாம பழகிட்டோம். சொல்லப் போனா, இந்தியாவில் ஆண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை’’ - விரல் நுனி ஆதாரங்களை விவரித்துப் பேசுகிறார் சுரேஷ் ராம். அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் அமைப்பாளர். சமீபத்தில் மேனகா காந்தியுடன் இந்த டேட்டாக்களைச் சொல்லித்தான் பெரும் விவாதத்தைக் கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது இந்த அமைப்பு.

‘‘மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்ங்கற பதவியில உட்கார்ந்துட்டா ஆண்களைத் திட்டுறது கடமையாகிடுது. 2008ல இதே சீட்ல அமர்ந்திருந்த ரேணுகா சௌத்ரி, குடும்ப வன்முறை சட்டங்களைப் பத்தி பேசுறப்ப, ‘இது ஆண்கள் துன்பப்படுறதுக்கான காலம்’னு பெருமையா சொன்னாங்க.

இப்ப ‘எல்லா வன்முறைகளும் ஆண்கள்கிட்ட இருந்துதான் தொடங்குது’ன்னு திருவாய் மலர்ந்திருக்காங்க மேனகா காந்தி. தமிழ்நாட்டுல நடக்குற கொலைகள்ல 40 சதவீதத்துக்கு மேற்பட்டவை பெண்களால் நடக்குதுன்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது. அப்புறம் எப்படி வன்முறை எல்லாத்தையும் ஆண்கள் கணக்குல எழுதினாங்கன்னு தெரியல.

மேனகா காந்தி சொன்ன இன்னொரு திட்டமும் எங்களை எதிர்க்க வச்சிருக்கு. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பெண்கள் கிட்ட மென்மையா, அவங்களுக்கு
உதவிகரமா நடந்துக்குற பையன்களுக்கு அவார்டு கொடுக்கப் போறாங்களாம். பையன்னா பெண்ணுக்கு உதவி செய்யணும், பாதுகாக்கணும். அவளுக்கு எது நடந்தாலும் அதுக்கு இவன்தான் பொறுப்புன்னு சமூகம் தருது பாருங்க ஒரு பிரஷர்... அது தாங்காமதான் ஆண்கள் தற்கொலை அதிகரிச்சிருக்கு. பிஞ்சு வயசுலயே அந்த மன அழுத்தத்தை இவங்க திணிக்கப் பார்க்குறாங்க.

பிரதமர் மோடி கூட ‘உங்கள் தாயும் சகோதரிகளும் வெட்டவெளியில் மலம் கழிக்கிறார்கள். இது ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அவமானம்’னு ஒருதரம் பேசினார். ஏன், ஆண்கள் வெட்டவெளியில் போகலாமா? அது அவமானம் இல்லையா? கழிப்பறை இல்லாததால சுகாதாரம் கெட்டுப் போகுது. அதனால வர்ற நோய்கள் ஆண், பெண் ரெண்டு பேரையும்தான் பாதிக்கும். சுத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை ஆம்பளை - பொம்பளைன்னு இழுத்துவிட்டு பாலிடிக்ஸ் பண்ணி ஆதாயம் தேடப் பார்க்குறாங்க இவங்க!’’‘‘இதில் என்னங்க ஆதாயம்?’’

‘‘நிறைய இருக்கு. பெண்களை தனி ஓட்டு வங்கியா பார்க்குறாங்க அரசியல்வாதிகள். அதோட, இதில் உலக நாடுகளின் சதியெல்லாம் இருக்கு. இந்தியாவின் குடும்ப அமைப்பு மேல அமெரிக்காவுக்குப் பொறாமை. அங்கெல்லாம் முதியோருக்காகவும் வேலையில்லா பட்டதாரிகளுக்காகவும் அரசாங்கம் காசைக் கொட்டி பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கு.

ஆனா, இந்தியாவுல ஒவ்வொரு குடும்பமும் ஒரு அரசாங்கம் மாதிரி. குடும்பத்துல ஒருத்தனுக்கு வேலை கொடுத்தா கூட அந்த வீடே சச்சரவு இல்லாம வாழும். குடும்ப அமைப்புன்னு ஒண்ணு இருக்குற வரை இந்தியா உடையாது. பிரச்னைகள் வராது. அரசாங்கத்துக்கு வீண் செலவுகள் இருக்காது. அதெல்லாம் ஏன்... குடும்பத்துக்கே ஒரு பைக்தான்னு இருக்குற வரைக்கும் நுகர்வுக் கலாசாரம் கூட இங்கே வளராது. அதனாலதான் இந்தியா, சீனா, ஜப்பான் மாதிரியான கிழக்கு நாடுகள்ல குடும்ப அமைப்பை சிதறடிக்க எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா எடுக்குது. சீனாவிலும் ஜப்பானிலும் அதை ஓரளவு சாதிச்சிட்டாங்க. இந்தியாவில் அவங்க எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட் இல்ல. அந்த வெறுப்பைத்தான் ஆட்சியாளர்கள் அடிக்கடி இப்படி வெளிப்படுத்துறாங்க!’’

‘‘இத்தனை நாள் பெண்கள் அடிமைகளா இருந்தாங்களே... ‘இனி ஆண்கள் துன்பப்படும் காலம்’ என்பதில் என்ன தப்பு?’’

‘‘பெண்கள் அடிமைகளா இருந்தாங்களா? இதையே நாம மறுசிந்தனை செய்யணும். ராமாயணம்னா சீதையை தீக்குளிக்கச் சொன்னதை மட்டும்தான் பார்க்கறோமே தவிர, மனைவி கேட்ட வரத்தால செத்துப் போன கணவன், சித்தி வார்த்தைக்காக காட்டுக்குப் போன மகன், தங்கச்சியோட பழிவாங்கலுக்காக வில்லனா மாறின ராவணன்னு அதோட மறுபக்கத்தைப் பார்க்கிறதில்லை. வாழ்க்கையிலயும் இப்படித்தான்.

அந்தக் காலத்துலயும் எத்தனையோ பெண்கள் குடும்பத்தோட டிசைடிங் அத்தாரிட்டியா இருந்திருக்காங்க. என்ன... ‘வீட்டுக்குள்ள நான் பார்த்துக்கறேன்; வெளி வேலைகளை நீ பார்த்துக்கோ’ன்னு பொறுப்புகளைப் பிரிச்சிக்கிட்டாங்க. வெளியே போய் சம்பாத்தியம் கொண்டு வர்ற ஆம்பிளையை உசத்தியாவும் பெண்ணை தாழ்வாவும் நினைச்சது நம்ம தப்பு. மாசம் முப்பது நாளும் வெளியே சாப்பிடுற இன்றைய தம்பதிகளைக் கேட்டுப் பாருங்க. வீட்டில் ஒருத்தர் இருந்து சமைச்சுப் போட்டா அது எவ்வளவு சேமிப்பு... அதுவே பெரிய சம்பாத்தியம்னு சொல்வாங்க!’’‘‘மோடி பேசுவது அமெரிக்க சதி, சரி... சராசரி ஆண்களே ஆக்ரோஷமா பெண்ணியம் பேசுறாங்களே! அதுக்கு என்ன காரணம்?’’

‘‘ஆல்ஃபா மேல் சிஸ்டம்னு ஒண்ணு இருக்கு. ஓநாய்கள் கூட்டத்துல ஆதிக்கம் நிறைஞ்ச ஆண், தன் கூட்டத்தில் இருக்குற எல்லா பெண்ணோடும் தான்தான் இன்பம் துய்க்கணும்னு நினைக்கும். இதனால இளம் ஜோடிகளை சேரவே விடாம பிரிச்சி விட்டுடும். இப்படிப் பிரிக்கிற வேலைதான் ஆண்கள் பேசுற ஃபெமினிஸம். வேணும்னா பாருங்க... இளம் பையன்களை விட மிடில் ஏஜ் ஆண்கள்தான் பெண்ணியம் அதிகம் பேசுவாங்க. கல்யாணம் ஆகிடுச்சு... நம்ம பாலியல் வாழ்க்கை முடிஞ்சுடுச்சுங்கற உண்மையை ஏத்துக்க முடியாம செய்யிற வேலை இது!’’

‘‘நீங்க பேசுறது என்ன? ஆணியமா? இல்ல, ஆண் மேலாதிக்கமா?’’‘‘இது பால் சமத்துவம். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி மதிக்கப்படணும்னு சொல்றோம். ‘அவங்க ஒருத்தருக்கொருத்தர் எதிரி இல்ல... அன்பா காதலிச்சு வாழப் பிறந்தவங்க... அதுக்கு அனுமதிங்க’ன்னு கேட்டுக்கறோம். பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ மெஷின் கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. உதாரணத்துக்கு, சமீபத்துல டெல்லியில நடந்த சம்பவம்.

ஜாஸ்லீன் கவுர்னு ஒரு பொண்ணு... ‘ரோட்ல என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்’னு ஒரு பையன் போட்டோவை நெட்ல போட்ருச்சு. அவனை தீவிரவாதி மாதிரி எல்லாரும் கரிச்சுக் கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் ஸ்பாட்ல ஒரு தம்பதிதான் ‘பையன் மேல தப்பில்ல. இந்தப் பொண்ணுதான் உன்னை போலீஸ்ல சிக்க வைக்கிறேன்னு அவனை மிரட்டுச்சு’ன்னு உண்மையைச் சொன்னாங்க. முதல்ல அந்தப் பையனை ட்விட்டர்ல திட்டின சோனாக்‌ஷி சின்ஹாவே அதுக்கப்புறம் வருந்தி ட்வீட் பண்ணியிருந்தாங்க.

இந்தத் தலைமுறையை ஏமாத்த முடியாது. நாங்க காலேஜ்கள்ல போய் பேசும்போது இளம் பெண்களே ஆண்களுக்கு நேருகிற அநியாயங்களை ஒப்புக்குறாங்க. 2001ம் வருஷத்துல தற்கொலை செய்துக்கிட்ட பெண்கள் 42,310 பேர். அதுவே 2014ல 42,537 பேர்தான். பெரிய வித்தியாசங்கள் இல்ல. ஆனா, ஆண்களோட தற்கொலை அபாயகரமா அதிகரிச்சிருக்கு. 2001ல 66,850 பேரா இருந்தது, இப்ப 89,129 பேரா வளர்ந்து நிக்குது.

சமூக அழுத்தமும் பெண்களுக்கு சாதகமான சட்டங்கள் தவறா பயன்படுத்தப்படுறதும்தான் இதுக்குக் காரணம். இதை இந்தத் தலைமுறைப் பெண்கள் ஏத்துக்கறாங்க. அதனால எதிர்காலம் பத்தின நம்பிக்கை பிரகாசமா இருக்கு!’’ பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ மெஷின் கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு சொல்ற மாதிரி இருக்கு.

- கோகுலவாச நவநீதன்