மீத்தேனுக்காக வஞ்சிக்கப்படுகிறதா காவிரி டெல்டா?



தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்... ‘‘காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது!’’ஒவ்வொரு முறையும் விமானமேறிப் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு ‘தண்ணீர் கொடுங்கள், தண்ணீர் கொடுங்கள்’ என்று தமிழக அதிகாரிகள் கெஞ்சுவதும், ‘எங்களுக்கே போதவில்லை... தரமாட்டோம்’ என்று கர்நாடக அதிகாரிகள் மறுப்பதும், இந்த விளையாட்டைக் கண்டு களித்து மத்திய அரசு அதிகாரிகள் இன்புறுவதும் வாடிக்கையாகி விட்டது.

‘காவிரியில் தமிழகத்திற்குப் பங்கு உண்டு. அதை உறுதிப்படுத்த காவிரி ஒழுங்குமுறை ஆணையமும், கண்காணிப்பு வாரியமும் அமையுங்கள்’ என்று பொட்டில் அடித்தாற்போல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பெழுதிய பின்னரும், அதற்கான சின்ன நகர்வைக் கூட முன்னெடுக்காமல் ‘நடுநிலை’ என நடிக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் செயல்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு வயிற்றில் அடித்து வஞ்சிக்கிறது கர்நாடக அரசு. இருக்கிற பிரச்னையில் எப்போதாவது கடிதம், அவ்வப்போது அறிக்கை என கடமையாற்றி விட்டு மறந்து விடுகிறது தமிழக அரசு. சம்பாவும் போய், குறுவையும் போய், இழப்பதற்கு எதுவுமின்றி நிராதரவாகத் தவித்து நிற்கிறது தமிழகத்தின் தொன்மையான ஒரு விவசாயப் பூர்வகுடி.

தஞ்சை, நாகை, திருவாரூர் அடங்கிய ஒருங்கிணைந்த டெல்டாவின் விவசாயப் பாரம்பரியம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. ‘இருக்கிற வரையில் கிடைப்பதெல்லாம் லாபம்’ என்று அரசியல்வாதிகள் ஓட்டுக்கணக்குப் போட்டுக்கொண்டிருக்க, விவசாய இயக்கங்களோ ஆளுக்கொரு ‘அஜெண்டா’வோடு கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றன.  இறுதி நம்பிக்கையும் பொய்த்து மெல்ல மெல்ல வேறு தொழில் நாடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். வளம் கொழித்த பூமி கல்விக்கூடங்களாகவும், கட்டுமானங்களாகவும் நிறைந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கையற்று வெளிநாடுகளுக்கும், தொழில் நகரங்களுக்கும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். 

‘‘காவிரி விவகாரத்தில் நீதி பெற்றுத்தர வேண்டிய மத்திய அரசு நடுநிலை நாடகம் ஆடி பிரச்னையை நீட்டித்துக் கொண்டிருப்பது, காவிரி டெல்டாவில் விவசாயத்தை அழித்து அம்மக்களை மண்ணில் இருந்து துரத்தும் நீண்ட நெடிய செயல்திட்டத்தின் ஒரு அங்கம்’’ என்கிறார் தமிழக மக்கள் முன்னணி அமைப்பின் தலைவரும், மீத்தேன் வாயுத் திட்டத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான அரங்க.குணசேகரன்.

‘‘பாண்டிச்சேரி முதல் ராமநாதபுரம் வரையிலான நிலப்பரப்பில் மீத்தேன், பெட்ரோல், நிலக்கரி என ஏராளமான கனிம வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வளங்களின் மீது குறியாக இருக்கின்றன. அவற்றைக் கையகப்படுத்துவதற்கு நாள் பார்த்து வருகின்றன. முதலாளிகளைத் தூக்கிப் பிடிக்கும் மத்திய அரசு, டெல்டாவை அவர்களுக்கு கூறுபோட்டுக் கொடுக்கத் துடிக்கிறது. ஆனால், விவசாயத்தை வாழ்க்கைமுறையாகக் கொண்ட மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் போர்க்குணத்தோடு எதிர்க்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த ஒரு பன்னாட்டு நிறுவனம், ஓட ஓட விரட்டப்பட்டது.

கொதிக்கிற பானையை நிறுத்த வேண்டும் என்றால் எரிகிற நெருப்பை அணைக்க வேண்டும். டெல்டா விவசாயத்தின் ஜீவாதாரமே காவிரிதான். அதைத் தடுப்பதன் மூலம் விவசாயம் பொய்த்துப் போகும். விவசாயம் பொய்த்தால் நிலங்களைக் கைவிட்டு மக்கள் வேறு தொழில்களை நாடிச் சென்று விடுவார்கள். எளிதாக 5000 அடிக்கு போர் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு உள்ளே இருக்கிற கனிமங்களை அள்ளிச் செல்லலாம். இப்படியான ஒரு செயல்திட்டம் மத்திய அரசுக்கு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

அதனால்தான் நியாயமாகத் தர வேண்டிய காவிரி நீரை வழங்குமாறு கர்நாடகத்தை நிர்ப்பந்திக்க மறுக்கிறது மத்திய அரசு. ஆணையத்தையும், வாரியத்தையும் அமைப்பதற்கான கடமையையும் புறம் தள்ளுகிறது.  டெல்டாவில் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே போகிறது. கர்நாடகாவில் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவராஜ் அர்ஸ், குண்டுராவ் காலத்தில் இருந்து வெளியில் தெரியாமல் ஏகப்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்து வருகிறார்கள். மத்தியில் ஆண்ட அரசுகள் ஓட்டு வங்கியை மனதில் வைத்து அதைத் தடுக்கவும் இல்லை; தமிழகத்தின் உரிமையைப் பெற்றுத் தரவும் இல்லை. இப்போதுள்ள அரசு வெளிப்படையாகவே தமிழகத்துக்கு விரோதமாக நடந்து கொள்கிறது...’’ என்கிறார் அரங்க.குணசேகரன்.

முன்பு விவசாயத்திற்கு தண்ணீர் கேட்ட தமிழ் மக்கள் இப்போது தாகத்துக்குக் கேட்கிறார்கள். தமிழகத்தின் 80% பகுதிகளுக்கு காவிரிதான் குடிநீர் ஆதாரம். ஆனால் இப்போது டெல்டா மக்களுக்கே குடிநீர் கிடைக்காத அவலம் நிலவுகிறது. ‘‘திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலத்தடி நீரை விஷமாக்கி விட்டது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். ஆய்வு செய்வதாகச் சொல்லி ஆங்காங்கே நிலத்தில் டிரில் செய்து தண்ணீரை வெளியேற்றுகிறார்கள்.

பல ஊர்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டது. தண்ணீருக்காக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு கிலோமீட்டர் கணக்கில் நடக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டிரில் செய்த பகுதிகளில் தண்ணீரை எடுத்து சோதனை நடத்தினால் இந்த அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாம். காவிரி டெல்டாவுக்குக் கீழே புதைந்திருக்கிற நிலக்கரி, பெட்ரோல் மற்றும் மீத்தேன் வாயுவை உறிஞ்சுவதற்காக மறைமுகமாக பல்வேறு செயல்திட்டங்கள் நடக்கின்றன. அதில் ஒன்றுதான், காவிரி நீர் மறுக்கப்படுவது.

கர்நாடகாவின் நயவஞ்சகத்துக்கு மத்திய அரசு துணை போகிறது. இதை மக்கள் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.  அரசுகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மோசமான சூழல் உருவாகும். அப்படியொரு சூழல் உருவாகாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுகளுக்கு இருக்கிறது...’’ என்கிறார் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திருநாவுக்கரசு.

‘ஒரு நதி உருவாகும் இடத்தை விட, அது வழிந்தோடி கடலில் சேரும் இடத்திற்கே அதிக உரிமை’ என்கின்றன உலக சட்டங்கள். பெருமழைக் காலங்களில் தங்களைத் தற்காத்துக்கொள்ள தமிழகத்தைத் தண்ணீரில் தத்தளிக்க விடுகிற கர்நாடகம், தேவைப்படும் நேரங்களில் தார்மீகமாக தர வேண்டிய தண்ணீரையே தர மறுக்கிறது. கண்டும் காணாமல் மத்திய அரசு மௌனம் காக்கிறது. உலகின் ஆகச்சிறந்த ஒரு விவசாய மண்டலம் கண் முன்னால் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது. வரலாற்றின் சாபம் இவர்களை சும்மாவிடப் போவதில்லை!

‘‘பாண்டிச்சேரி முதல் ராமநாதபுரம்  வரையிலான நிலப்பரப்பில் மீத்தேன், பெட்ரோல், நிலக்கரி என ஏராளமான கனிம  வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வளங்களின் மீது  குறியாக இருக்கின்றன.’’

- வெ.நீலகண்டன்