குட்டிச்சுவர் சிந்தனைகள்



மொபைல் திருடர்கள் ஜாக்கிரதை. இந்தத் திருடர்கள்  ‘துப்பாக்கி’ பட ஸ்லீப்பர் செல்களை விட நம்பகத்தன்மையுடன் நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நம்முடனே இருப்பார்கள். சர்க்கரையை எந்த ஜாடியில் போட்டு எத்தனை மூடி போட்டு வைத்தாலும் அதைக் கண்டுபிடித்து தேடிப் போகும் எறும்புகளைப் போல தலையணைக்கு அடியில், பீரோவின் பிடியில், அலமாரியின் மடியில் என எங்கு மொபைல் போனை ஒளித்து வைத்தாலும் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.

இந்த திருடர்களுக்கு மொபைலைக் களவாட விருப்பமில்லை, அதில் விளையாடத்தான் விருப்பம். அந்தத் தித்திப்பு திருடர்கள் வேறு யாருமில்லை. நம்ம வீட்டு சுட்டிக் குட்டிகள்தான். உலகத்தில் கஷ்டமான விஷயம் குழந்தைக்கு சோறு ஊட்டுவது. அதற்குப் பிறகு கஷ்டமான விஷயம்னா அது குழந்தை கைல இருக்கிற மொபைல் போனை வாங்குறது.

குறுகலான திருப்பத்துல வேகமா போற வேனும், குழந்தைங்க கைல சிக்குன போனும் கரெக்டா திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை. நமக்குத் தெரியாம போனை எடுத்து கேம் விளையாடுறவங்க கேடி பில்லான்னா, அதை நாம கண்டுபிடிக்க முடியாதபடி சைலன்ட்ல போட்டு விளையாடுறவங்க கில்லாடி ரங்கா வகையினர்.

‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி ஸ்டைல்ல சொல்லணும்னா, ‘‘எப்பவுமே அவங்ககிட்ட மொபைல கொடுக்காம தப்பிக்க அந்த ஆண்டவனால கூட முடியாது’’. அதே ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி மாதிரி சொல்லணும்னா, ‘‘எப்பவுமே மொபைல ஒளிச்சு வைக்கவே போறவங்க நாம, எப்பவுமே ஒளிச்சு வச்ச மொபைல தேடிப் போறவங்க அவங்க.’’ தெரியாம எடுக்கிறது திருட்டுத்தனம்னா, நமக்குத் தெரியவே நம்மகிட்ட இருந்து போன வாங்க அவங்க யோசிக்கிற யுக்தி எல்லாம் தீவிரவாதத்தனம்.

ஒவ்வொரு அப்பாவையும் தல ஸ்டைல்ல ‘‘என் வாழ்க்கையில ஒவ்வொரு போனும், ஒவ்வொரு மொபைலும், என் புள்ளைங்க உடைச்சதால வாங்கினதுடா’’ன்னு புலம்ப வைக்கிறதே நம்மாளுங்கதான். டாக்கிங் டாம் பூனையோட இவங்க பேசிப் பேசி அதையே செவிடாக்கிடுவாங்க. டெம்பிள் ரன்ல ஓடி ஓடி துரத்துற கரடியவே டயர்டாக்குவாங்க.

ஒளிச்சு வச்ச போன எடுத்துட்டு அவங்க பார்க்கிற பார்வை கிண்டலா இருக்கும்னா, கேண்டி க்ரஷ்ல ஒரு ஸ்டேஜ் முடிச்சுட்டு அவங்க நம்மளப் பார்க்கிற பார்வைதான் படு நக்கலா இருக்கும். நாம குழந்தையா இருக்கிறப்ப, நம்ம கண்ல இருந்து மிட்டாயதான் ஒளிச்சு வைப்பாங்க, இப்ப குழந்தைங்க கண்ல இருந்து மொபைல ஒளிக்க வேண்டியதா இருக்கு.

நம்ம வருமான வரித்துறை அடிக்கடி  ஏன் பிரபலங்கள் வீட்டுக்கு ரெய்டு போய் செக் வைக்குது தெரியுமா? பிரபலங்கள் சரியா வரி கட்டுறாங்க, அவங்களை விளம்பரம் முதல் வாழ்க்கை வரை பின்பற்றும் ரசிகர்களும் தொண்டர்களும் அவர்களைப் போலவே வரி கட்டணும்னு காட்டத்தான். சரி, சப்போஸ் இவங்க வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்தா என்னென்ன கிடைக்கும்னு பார்ப்போம்...

கிராமராஜன் - அரை டவுசர்கள் 38, கால் டவுசர்கள் 58, பால் கறக்கும் படி 65இயக்குனர் டிங்கர் - ஊருல பாக்கு துப்புறவங்க, அசுத்தம் செய்யறவங்க, சிக்னல் மதிக்காதவங்க லிஸ்ட்கள் தமிழிசை சவுண்ட்ராஜன் - fill பண்ணாத 6 கோடி உறுப்பினர் அட்டைகள்எச்.கூஜா - ‘30 நாளில் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?’ புத்தகங்கள் 12000கஜித் - கோட்டுகள் 4525, கூலிங்கிளாஸ்கள் 5475, சூட்டுகள் 5464, சுருட்டுகள் 5648குஜய் - ரவுடிகளை அழிக்க ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது கொண்டு வரும் மஞ்சப்பை 2535அண்ணன் மைக்கோ - ‘மூட்டு வலிக்கு மூலிகை வைத்தியங்கள்’ புத்தகமும் 300 வகை மூலிகை செடிகளும்
தா.போண்டியன் - கிடைக்கும் கூட்டணியை பலமாக ஒட்ட ஓராயிரம் டப்பா ஃபெவிகால்
குருமாவளவன் - தான் எங்கே இருக்கிறோம் எனக் கண்டறிந்து சொல்லும் 234 GPS கருவிகள்
நரேந்திர மூடி - தீபாவளிக்கு இப்பவே தைத்து வைக்கப்பட்ட குர்தாக்கள் 134125
நடிகை குயின்தாரா - எழுதப்பட்ட லவ் லெட்டர்கள் 1242552, எழுதிய லவ் லெட்டர்கள் 2142513
இயக்குநர் கரி - ஆயிரம் அருவாள்கள், நூற்றி சொச்ச டாடா சுமோக்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள்
நாஞ்சில் சர்பத்  - இன்னோவா வாட்டர் சர்வீஸ் பில்கள், பழைய டயர்கள்
தோழர் பூமான் - துவைக்காத கறுப்பு டி ஷர்ட்டுகளும் இதுவரை தண்ணீரில் நனைக்காத கறுப்பு பேன்ட்டுகளும்
நடிகர் வம்பு - ஒரு டாரஸ் லாரியில் ஏற்றுமளவு காதல் கிஃப்டுகள்
இளங்கோபன் - வெண்கலபாலு தோற்றத்தில் எரிக்கப் பயன்படும் ஆயிரம் கொடும்பாவி பொம்மைகள்
விஜய.டி.லாந்தர் - 4 டன் கிளிசரின் பாட்டில்களும் 3300 தலை சீவும் சீப்புகளும்
ஜி.கே.தாசன் - பழைய சைக்கிள்களும் பஞ்சர் ஒட்ட பயன்படும் டியூப்களும்
நடிகை புஷ்கூ - ஜாக்கெட்டுக்கு வைக்க வேண்டிய ஜன்னல்களும்
கதவுகளும்
சுப்ரீம்குமார் - புது தம்பள்ஸும் பழைய இரும்புக்குப் போட்ட பேரீச்சம் பழங்களும்
நடிகர் குசால் - நடிகர் சங்க கணக்கு எழுதி வைக்க ரெண்டு டாடா ஏஸ் நிரம்பு மளவு கணக்கு நோட்டுகள்
கேப்டன் - ஞாபகமறதியைப் போக்கும் வல்லாரைக் கீரை லேகிய டப்பாக்கள்
நவகார்த்திகேயன் - புல்லட் புரூப்களும் உடம்பில் சொருகும் இடிதாங்கிகளும்
வம்புமணி - பாஸ் என்கிற பாஸ்கரன் எழுதிய ‘மது விலக்கும் மண்ணெண்ணெய் விளக்கும்’ தூய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள்
காமெடி நடிகர் பூரி - செல்போன் வந்த காலத்திலிருந்து இன்று வரை வந்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் அடங்கிய சிடிகள்
நடிகை சுமிதா - 2 டன் பழைய ஜீன்ஸ்களும் பத்தாத பாவாடை சட்டைகளும்

கடுப்ப கிளப்பும் நண்பன் எவனாவது இனி கண்ணுலயே படக்கூடாதுன்னா, அவன் ஃபிரண்ட்ஷிப்ப கட் பண்ணி கழட்டி விடணும்னா நாம செய்ய வேண்டியவை.
முதல் முயற்சி, ‘சாமி, உன் சங்காத்தமே வேணாம், காத்து வரட்டும் கிளம்பு’ன்னு கையெடுத்து கெஞ்சி கட் பண்ணலாம். அது பலிக்காத பட்சத்தில், ஏதாவது ஒரு இத்துப்போன காரணத்தை வைத்து அவனைக் கண்டபடி திட்டி, அவன் நட்பை அத்து விடலாம்.

அவனுக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா, ‘அதை நானும் கணக்கு பண்றேன்’னு சொல்லி பயங்காட்டி கழட்டி விடலாம். நாம போற இடத்துக்கு வரச் சொல்லி, நாம போகாம காக்க வச்சு கடுப்பேத்தி கழண்டுக்க வைக்கலாம். நண்பர்கள் கூடும் இடத்தில, கழட்டிவிட வேண்டியவனை மட்டுமே கலாய்த்து வெறுப்பேத்தலாம். எல்லா ட்ரீட்டிலும் அவனையே பில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கழண்டுக்க வைக்கலாம். இது எல்லாத்தையும் விட, அவன் கடன் கேட்கும்போதோ, காசுக்கு வெயிட் பண்ணும்போதோ, வாலன்டரியா கடன் கொடுத்தால் போதும்... அதுக்குப் பிறகு அவன் நம்ம கண்ணுல தட்டுப்படவே மாட்டான்!  

புரட்டாசிகளும்
தமிழக அம்மாக்களும்...

2003: அடுத்த மாசம் புரட்டாசி, அதனால இப்ப இருந்தே மட்டன், சிக்கன் சாப்பிடாம இருக்கணும்!
2005: புரட்டாசி மாசம் நான்வெஜ் சாப்பிடக் கூடாது. அதனால, வீட்டுலயும் கிடையாது. வெளிலயும் சாப்பிடக் கூடாது
2007: டேய், நம்ம வீட்டுல யாரும் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். நீ எங்கேயாவது சாப்பிட்டு வந்தன்னு தெரிஞ்சா, அடி வெளுத்துடுவேன்.
2009: ஏன்டா, நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்தியா? அதெல்லாம் கூடாதுடா கண்ணா, தப்புடா!
2011: தம்பி, நான்வெஜ் சாப்பிடு! ஆனா வீட்ல வாங்கிட்டு வந்து சாப்பிடாத, இது புரட்டாசி மாசம்டா!
2013: டேய், வீட்ல வாங்கிட்டு வந்து நான்வெஜ் சாப்பிட்டா, அதை ஒழுங்கா கவர்ல மடிச்சு குப்பைக் கூடையில போடு!
2015: உனக்காக மட்டன் செஞ்சேன். கிச்சன்லயே சாப்பிடணும், வெளிய எடுத்துக்கிட்டு வந்து ஆடாத!                =

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்