பெண்களுக்கு எதிரான உள்ளே வெளியே ஆட்டம்!



அலட்சிய அரசு அவதியில் மக்கள்

 போலீஸின் இருள்முகம்


திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியாவின் மரணமும், அவரது தோழியும் கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியின் குமுறலும், இதன் தொடர்ச்சியாக வெளி வந்துகொண்டிருக்கிற செய்திகளும், காவல்துறையின் தடுமாற்றங்களும், அரசின் மௌனமும் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

வரும் புகார்களைப் பதிவு செய்வதில்லை; புகார் தர வருபவர்களை மரியாதையாக நடத்துவதில்லை; அலைய விடுகிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட, புகார் தர வருகிற பெண்களை தரக்குறைவாகப் பேசுகிறார்கள்; காவல் நிலையங்களில் மனித உரிமை மீறப்படுகிறது என்றெல்லாம் காவல்துறை மீது புகார்கள் உண்டு.

அண்மைக்காலமாக காவல்துறைக்குள் பணியாற்றும் பெண்களே - அவர்கள் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் - அவமரியாதையையும், நெருக்கடிகளையும், கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. அதை உண்மையாக்குகின்றன அண்மைக்காலச் செய்திகள்.

காவல்துறையின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்து ஆய்வுசெய்து வரும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறார்கள்.
பெண்களிடம் வாக்குமூலம் வாங்குதல், கைது  செய்தல், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தல் போன்ற பணிகளை ஆண்களே  செய்வதில் இருந்த சிக்கல்கள், உரிமை மீறல்களைக் களைய 1972ல் காவல்துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 1 எஸ்.ஐ., 7 காவலர்கள்  அடங்கிய பெண் போலீஸ் பிரிவு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகமானது.  காலப்போக்கில் அதிகாரிகள் மட்டத்திலும் பெண்கள் உள்நுழைந்தார்கள். பிறகு, மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

1981ல் நேரடியாக 125 பெண் எஸ்.ஐ.கள் தேர்வு செய்யப்பட்டார்கள். பந்தோபஸ்து, கைது உள்ளிட்ட சகல பணிகளிலும்  அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். 87க்குப் பிறகு, ‘போலீஸ் தேர்விலேயே பெண்களுக்கு குறிப்பிட்ட பங்களிப்பு வேண்டும்’ என்ற  விதிமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, ‘எஸ்.ஐ. பணி மற்றும் அதற்குக் கீழான காவலர் தேர்வில் 100 போலீஸார் தேர்வு  செய்யப்பட்டால், கண்டிப்பாக 30 போலீஸார் பெண்களாகவே தேர்வு செய்யப்பட வேண்டும்.

 டி.எஸ்.பி பணிக்கு மேல் உள்ள பதவிகளுக்கு திறமை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். 10 பேரில் 6 பெண்கள்  திறமையானவர்களாக இருந்தால் 6 பேரையும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நியதி வகுக்கப்பட்டது. (தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டு விட்டது. புதிதாகப் பெண்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. காலியாகும் இடங்களுக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.)

மிடுக்கும், மரியாதையும் நிறைந்த காவல்துறைப் பணியை பெண்கள் பெரிதும் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள். ஆனால், ஆர்வத்தோடு பணியில் இணையும் பெண்கள் பெரும் மன உளைச்சலையும் வெளியில் சொல்ல முடியாத அவஸ்தைகளையும் எதிர்கொள்வதாகச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘பிற எல்லாத் துறைகளை விடவும் காவல்துறையில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள். பெண்களுக்கே உரித்தான இயல்பான தேவைகளுக்கு எந்த உள்கட்டமைப்பும் காவல்துறையில் இல்லை. தவிர அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் அதிகாரிகளும் கூட குறைவாகவே இருக்கிறார்கள். பந்தோபஸ்துக்காக, விசாரணைக்காக, கைது நடவடிக்கைகளுக்காக, கலவரத்  தடுப்புக்காக என பெண்கள் பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். செல்லும் இடங்கள் அனைத்திலும் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. உதாரணத்துக்கு, முதல்வர்  செல்லும் பாதையில் பந்தோபஸ்துக்காக நிறைய பெண் காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள். குறிப்பிட்ட தூரத்துக்கு ஒருவர் என்ற  அடிப்படையில் இவர்கள் நிற்க வேண்டும்.

முதல்வர் கிளம்புவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பிருந்து பாதுகாப்புப் பணியில்  ஈடுபட வேண்டும். முதல்வர் 10 மணிக்குக் கிளம்புகிறார் என்றால், இவர்கள் நான்கரை மணிக்கு எழுந்து, 5 மணிக்கு கன்ட்ரோல்  ரூமில் அசெம்பிள் ஆகி, ரோல்கால் எடுத்து, 7 மணிக்கு தங்களுக்கான இடத்தில் நின்றுவிட வேண்டும். முதல்வர் பத்தரை  மணிக்கு அந்த இடத்தைக் கடந்தால், அவர் தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும்வரை அங்கேயே இருக்க  வேண்டும்.

 முதல்வர் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். ஒருவேளை மீண்டும் தலைமைச் செயலகம் வருவார் என்றால்,  வந்து திரும்பும் வரை, திரும்பவும் அதே இடம்தான். அங்கேயேதான் சாப்பாடு. டியூட்டி முடிந்து சென்றால் திரும்பவும் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பணியில் இருக்கும் இடைப்பட்ட நேரத்தில்,  சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்? வயிற்று வலி என்றால் கூட கேட்க ஆளிருக்காது. மாதவிடாய்  காலம் என்றால் அந்த அவஸ்தையை சொல்லவே முடியாது. இந்தமாதிரி அவஸ்தைகளைத் தவிர்ப்பதற்காக தண்ணீரே குடிப்பதில்லை என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. பெண் முதல்வர் ஆளும் மாநிலம் இது... இதுபற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

‘முட்டாள்’, ‘யூஸ்லெஸ்’... இதெல்லாம் பெண் காவலர்கள், அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள் தருகிற பட்டங்கள். உருவத்தை கிண்டல் செய்வது; பட்டப்பெயர் வைத்து அழைப்பது; நடத்தையைத் தவறாகச் சித்தரிப்பது என பெண் காவலர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பெண் அதிகாரிகளை ‘ஒண்ணும் தெரியாது’ என்று ஒதுக்கியே வைக்கிறார்கள்.

இதுவரை உள்ளரங்குகளில் நடந்த இந்த அவலங்கள் விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை வாயிலாக வெளியே வந்திருக்கின்றன. சக காவல்துறை அதிகாரி மகேஸ்வரி அதற்கு சாட்சியாக இருக்கிறார்...’’ என்று வெடிக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான கதிர்.

காவல்துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 895. இதில் 12 ஆயிரம் பேர் பெண்கள். பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தகுந்த குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால் நீதியைக் காக்க வேண்டிய காவல்துறையில் அப்படியான குழுக்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு திலகவதி ஐ.பி.எஸ். தலைமையில் பெண் காவலர்கள் நலன்காக்கும் துறை உருவாக்கப்பட்டது. அவர் மாற்றப்பட்ட பிறகு அத்துறை செயலிழந்து விட்டது.

காவல்துறைக்குள் இருக்கும் பெண்களுக்கு இப்படியான நெருக்கடி என்றால் காவல்நிலையத்துக்கு புகார் தருவதற்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு மாதிரி. அதுபற்றியும் விரிவாகப் பேசுகிறார் கதிர்.‘‘காவல்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அப்படியான நம்பிக்கை இப்போது பொய்த்துவிட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் காவல்நிலையத்திற்குச் செல்லவே அஞ்சுகிறார்கள். அங்கே போய் அசிங்கப்படுவதற்குப் பதிலாக எதிரியோடு சமாதானமாகி விடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பலவும் கட்டப் பஞ்சாயத்து நிலையங்களாக மாற்றப்பட்டு விட்டன. முன்பெல்லாம் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிக்கக்கூட மாட்டார்கள்.

இப்போது ஆண் காவலர்கள் பெண்களைத் தாக்கவே செய்கிறார்கள். காவலர்களால் அடித்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களின் பிரச்னைகளை நான் கையாண்டதுண்டு. பரிந்துரை இல்லாமல் கொண்டு வரப்படும் எந்தப் புகாரையும் பெற்றுக் கொள்வதேயில்லை. பெரும்பாலான காவல்நிலையங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள், திருட்டு வழக்குகளைப் பதிவு செய்வதும் இல்லை. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு பெண்களின் பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு எங்களைப் போன்றவர்கள் தலையிட்ட பிறகு பதிவு செய்யப்படுகிறது.

காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏதோவொரு வகையில் குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. 2011ல் தமிழகத்தில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 677. அதுவே 2014ல் 1565. காரணம், நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வு. இந்த 1565 வழக்குகளில் 1110 வழக்குகள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதானவை.

பெண்கள் சார்ந்து சராசரியாக வருடத்துக்கு 7000 வழக்குகள் பதிவாகின்றன. இதில் 1800 முதல் 2000 வரை கொலை வழக்குகள். ஆண்கள் கொலை செய்யப்படும் வழக்குகளில் 40% குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

இதுவே பெண்கள் தொடர்பான வழக்கில் வெறும் 15% குற்றவாளி களே தண்டனைக்கு உள்ளாகிறார்கள். 85% குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். காவல்துறை பெண்கள் விஷயத்தில் காட்டும் அக்கறைக்கு இதுதான் உதாரணம்...’’ என்கிறார் கதிர். கதிரின் குரலையே எதிரொலிக்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.

‘‘இதுநாள் வரை அடிமட்டக் காவலர்கள்தான் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று நினைத்தோம். டி.எஸ்.பி போன்ற உயர் பொறுப்புகளில் உள்ள பெண்களும் காவல்துறையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பது இப்போது வெளிச்சமாகியிருக்கிறது. எந்தப் பதவியில் இருந்தாலும் ‘பெண்தானே’ என்ற இளக்காரம் எல்லா மட்டத்திலும் புரையோடிக் கிடக்கிறது. இந்த எண்ணம் பிற துறைகளைவிட காவல்துறையில் அதிகமாக இருக்கிறது. ஆண் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையில் கால் பங்குகூட பெண் அதிகாரிகளுக்குக் கிடைப்பதில்லை.

அண்ைமயில் ஒரு காவல்துறை அதிகாரி ஒரு பெண் தலைமைக் காவலரிடம் பேசிய பேச்சு வாட்ஸ்அப்பில் வெளியானது. பேசிய அந்த அதிகாரி, அத்துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டதோடு சரி... அவர் மீது வேறெந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறையிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. புகார் கொடுக்க வருகிற பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலைதான் இருக்கிறது...’’ என்கிறார் சிவ.இளங்கோ. இந்த அவலம் மாறுமா..?

‘முட்டாள்’, ‘யூஸ்லெஸ்’... இதெல்லாம் பெண் காவலர்கள், அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள்
தருகிற பட்டங்கள்.

முன்பெல்லாம் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிக்கக்கூட மாட்டார்கள். இப்போது ஆண் காவலர்கள் பெண்களைத் தாக்கவே செய்கிறார்கள். 2011ல் தமிழகத்தில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 677. அதுவே 2014ல் 1565. காரணம், நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வு.

- வெ.நீலகண்டன்