இதுவும் சேமிப்பு



‘‘என்னங்க, உங்க சித்தி பேரனுக்கு காதுகுத்துன்னு பத்திரிகை வந்திருக்கே. என்ன மொய் வைக்கப் போறீங்க?’’

‘‘வழக்கம் போலத்தான் சிந்து. பவுன் வைக்கலாம்!’’கிருபாகரன் எப்போதும் இப்படித்தான். என்ன விசேஷம் என்றாலும் காசைப் போட்டு தங்கம் வாங்கிக் கொடுப்பதில் குறியாக இருப்பான்.‘‘சின்ன ஃபங்ஷன்தானேங்க. தங்கம் விக்கிற விலையில எதுக்கு வீண் செலவு. சும்மா பணத்தை வச்சிட வேண்டியதுதானே!’’ - சிந்து கேட்டாள்.

‘‘ம்ஹும்... சொந்தபந்தம் வீட்டு விசேஷம் வந்தால் தங்கம்தான் வைக்கணும். நண்பர்கள்னா பணம் வைக்கணும்ங்கிறது என் பாலிஸி!’’‘‘என்ன பாலிஸியோ... நாமளும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்கோமே... நாலு காசு சேர்த்து அவளுக்குன்னு தங்கம் வாங்கலாம்னா முடிய மாட்டேங்குது. நீங்க ஊருக்கெல்லாம் தங்கம் வாங்கிக் கொடுக்கறீங்க!’’

‘‘நானும் அந்த அக்கறையில்தான் எல்லாம் செய்யறேன்!’’‘‘என்னங்க சொல்றீங்க?’’‘‘சிந்து, சொந்த பந்தங்களுக்கு இப்ப நம்ம கையில இருக்குற காசைப் போட்டு ஒரு கிராம், ரெண்டு கிராம்னு தங்கமா வாங்கி மொய் வச்சா நாளைக்கு அவங்களும் நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு தங்கமாதான் வச்சாகணும். பணத்துக்கு மதிப்பு குறையும். தங்கம் அப்படியா? மொய் செய்யிறதும் ஒரு வகையான சேமிப்புதான்... தெரிஞ்சுக்கோ!’’ - கட் அண்ட் ரைட்டாக சொல்லி முடித்தான் கிருபாகரன்.                                   

அமுதகுமார்வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி தொடங்கி மொபைல் போன் வரை இன்று நம்மைச் சுற்றிச் சுற்றி ஏராளம் இயந்திரப் பொருட்கள். பிரச்னை என்று வரும்வரை நமக்கு அவற்றைப் பற்றிய கவலை இல்லை.

திடீரென ஒரு பொருள் வேலை நிறுத்தம் செய்யும்போதுதான் ‘வாரன்ட்டி இருக்கா இல்லையா... சர்வீஸ் சென்டர் எங்கே...’ என ஓடுவோம். நம் வீடுகளில் வேறு ‘ரொம்ப பத்திரம்’ என எடுத்து வைத்த வாரன்ட்டி கார்டுகள், பில்கள்தான் காணாமல் போகும். ‘இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த ஆண்ட்ராய்டு ஆப்தான்’ எனக் களமிறக்கப்பட்டிருக்கிறது ப்ராடக்ட்.கோ (produckt.co).

‘‘நீங்கள் ஒரு பொருளை வாங்கிய உடனே இந்த ஆப்பில் அது பற்றிய தகவல்களைப் பதிவிட வேண்டும். பொருளின் பெயர், விலை,  மாடல் நம்பர், வாங்கிய தேதி, வாங்கியதற்கான பில் காப்பி, எங்கு வாங்கப்பட்டது என எல்லா தகவல்களையும் இந்த ஆப்பே கேட்டுப் பெற்றுக்கொள்ளும். அதன் பின் அந்தப் பொருள் தொடர்ந்து சர்வீஸ் செய்யப்பட வேண்டிய தேதி, வாரன்ட்டி முடியும் நாள் போன்றவற்றை இதுவே நினைவுபடுத்தும். பக்கத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கூட தரும்.

வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், கார், பைக் என சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களின் வாரன்ட்டி சர்வீஸ் தகவல்கள் இதில் உள்ளன!’’ என்கிறார் மகேஷ். சென்னையைச் சேர்ந்த க்ரெயோண்ட்.காம் (crayond.com) என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் இவர். இந்த ஆப்பை உருவாக்கி வழங்கியிருப்பது இந்நிறுவனம்தான்.

இந்த ஆப் வேறு என்னென்ன நன்மைகள் செய்யும்?

‘‘பொதுவாக நாம் பழுதடைந்த பொருட்களோடு சர்வீஸ் சென்டர்களை நாடும்போது ‘இதெல்லாம் வாரன்ட்டியில் கவர் ஆகாது’ என சுலபமாகச் சொல்லி தட்டிக் கழிப்பார்கள். ‘ஏன் வராது’ என தட்டிக் கேட்பதற்கு நமக்கு வாய் வராது. காரணம், வாரன்ட்டி கார்டில் இருக்கும் நிபந்தனைகளையும் ப்ராடக்ட் மேனுவலையும் யாரும் படிப்பதில்லை. ஆனால், இந்த ஆப் நமது பொருளின் மாடல் நம்பரை உள்ளிட்ட உடனேயே, அதன் வாரன்ட்டியில் என்னென்ன பாகங்கள் அடங்கும், என்னென்ன பாதிப்புக்கு சர்வீஸ் சென்டர் பொறுப்பேற்காது எனப் பட்டியல் கொடுத்துவிடும்.

சில சமயம் ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்றவற்றின் வாரன்ட்டி ஒரு வருடத்தோடு முடிந்துவிட்டது என நாம் நினைத்திருப்போம். ஆனால், அதில் இருக்கும் கம்ப்ரஸருக்கு 5 வருடங்கள் வரை வாரன்ட்டி இருக்கும். இதையெல்லாம் நமக்கு நினைவூட்டவும், ஏமாறாமல் தடுக்கவும் இந்த ஆப் உதவும். வெறும் தகவல்களை மட்டும் தராமல் இந்த ஆப் மூலம் சர்வீஸ் சென்டர்களைத் தொடர்புகொள்ளவும் முடியும் என்பதே இதன் ப்ளஸ். இதன் மூலமே நம் பிரச்னைகளை சர்வீஸ் சென்டருக்கு தெரியப்படுத்தி அவர்களின் பதிலைப் பெறலாம்!’’ என்கிற மகேஷ், பொருட்களின் வாரன்ட்டி காலம் முடிந்தபிறகும்கூட இந்த ஆப் பயன்படும் விதத்தை விளக்கு
கிறார்...

‘‘வாரன்ட்டி முடிந்தால் என்ன? நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சர்வீஸ் சென்டர்களில் எங்கெல்லாம் இந்த வகைப் பொருளை பழுது பார்ப்பார்கள் என்ற தகவலை இது தரும். தேவைப்பட்டால் நமது பொருளையும் அதில் உள்ள பிரச்னையையும் குறிப்பிட்டு நாம் அனைத்து சர்வீஸ் சென்டர்களுக்கும் ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பலாம். பழுது பார்க்க எவ்வளவு கட்டணம் என்பதை அவர்கள் குறிப்பிட்டு பதில் அனுப்புவார்கள். எங்கே குறைந்த கட்டணமோ, அங்கே நம் பொருட்களை எடுத்துச்செல்லலாம். இதனால், வாடிக்கையாளருக்கு தேவையற்ற அலைச்சலும் பணமும் மிச்சம்.

ஏற்கனவே எங்க நிறுவனம் மூலமாக ரத்த தானம் செய்கிறவர்களையும் ரத்தம் தேவைப்படுகிறவர்களையும் இணைக்கிற ஆப் ஒன்றை உருவாக்கி வெற்றி அடைந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது வாடிக்கையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சர்வீஸ் சென்டர்களையும் இணைக்கிற ஆப்பாக இதை வடிவமைத்திருக்கிறோம். இரண்டு வருடங்களாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களைப் பற்றி தகவல்களை சேகரித்து இதில் சேர்த்திருக்கிறோம்.

இந்த எண்ணிக்கையை 25 ஆயிரம் என உயர்த்துவதுதான் குறிக்கோள்!’’ என்கிற மகேஷ், இந்த ஆப்பை பொதுமக்கள் பதிப்பு, கடைக்காரர்கள் அல்லது சர்வீஸ் சென்டர் உரிமையாளர்கள் பதிப்பு என இரண்டாகப் பிரித்துள்ளார். பொதுமக்கள் பதிப்பு அனைவருக்கும் இலவசம். இரண்டாவது வணிகப் பதிப்பு என்பதால் பணம் செலுத்த வேண்டுமாம்!

‘‘இந்த வணிகப் பதிப்பை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை அதில் குறிப்பிட்டால், அந்தப் பொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் லிஸ்ட் மொத்தமாய் வந்து விழும். அவர்கள் அனைவருக்கும் எக்சேஞ்ச் சலுகை, சர்வீஸ் சலுகை என எந்த அறிவிப்பையும் ஒரு கிளிக்கில் அனுப்பிவிட முடியும். இந்த வசதிக்காகத்தான் கட்டணம்!’’ என்கிறார் மகேஷ்.

ஒருவருக்கு சம்பந்தம் இல்லாத விளம்பரங்கள்தான் அவரைத் தொல்லைப்படுத்தும். அவரைத் தெரிந்து, அவர் பயன்படுத்தும் பொருளையும் தெரிந்து வழங்கப்படும் இம்மாதிரியான அறிவிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பதே இவர்களின் பாயின்ட்!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்