கைம்மண் அளவு



ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு- ‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி? அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள்? புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா?

இரவல் போனாலோ, அனுப்பப்பட்டாலோ, தானாகத் திரும்பி வர இயலும் அல்லவா? ஆனால் திரும்ப வராது என்றால், இரவல் போனவளுக்கு திரும்ப மனசற்றுப் போகும் என்றும் பொருள் கொள்ளலாம். அவள் இதுவரை இருந்த இடத்தை விட, சென்ற இடம் நிறைவாக, மகிழ்ச்சியானதாக இருக்கிறது என்பதல்லவா அதன் பொருள்? அது ஆராயப்பட வேண்டிய விஷயம்.

மனையாட்டி, மக்கள் எனக் குடும்பங் குடும்பமாக அடிமைகளாக இருந்திருக்கின்றனர். அடிமைகளாக இருக்கும் தம்பதியினருக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையும் அடிமையே! அடிமைகளை விற்கலாம், வாங்கலாம், அடமானம் வைக்கலாம், தேவைப்பட்டால் கொல்லவும் செய்யலாம் என்று வாழ்ந்த சமூகங்கள்தான் நாம். உன்னதங்களைப் பேசும் நாம் உன்மத்தங்களையும் பேசித்தானே ஆக வேண்டும்.

பாஞ்சாலியைப் பணயமாக வைத்துச் சூதாடினார்கள் பாரதத்தின் பெரும் புத்திரர்களான பாண்டவர்கள். பாரதியின் மொழியில் சொன்னால், ‘ஆவியில் இனியவளை, உயிர்த்து அணி சுமந்து உலவிடும் செய்யமுதை, ஓவியம் நிகர்த்தவளை, அருள் ஒளியினை, கற்பனைக்கு உயிர் அதனை, தேவியை, நிலத்திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை’ வைத்துச் சூதாடினார்கள்.

பாஞ்சாலி கேட்டாள், ‘என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் மன்னர் இழந்தாரா? மாறித் தமைத் தோற்ற பின்னர் எனைத் தோற்றாரா?’ என்று. அது திரெளபதியைச் சூதில் வைத்து ஆடியிழந்த கதை.இரவல் என்பது சூதாடித் தோற்பதல்ல; பணயம் போவதல்ல; விலை போவதல்ல. இரவல் பொருள் போனால் திரும்ப வேண்டும். ஆனால், இரவல் போன பொருள் மறதியால், கள்ளத்தால், போன இடத்திலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. மனைவியைப் போல புத்தகமும் விலை மதிப்பற்றது என்ற காரணத்துக்காக அந்தப் பழமொழி சொல்லப்பட்டிருக்கலாம். புத்தகம் இரவல் போனால் திரும்ப வராது என்பதை வலியுறுத்தவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

பொன்னாபரணங்களை இரவல் வாங்கிப் போட்டுத் திருமணங்களுக்குப் போய் வந்து கழற்றித் திரும்பக் கொடுப்பதுண்டு. தன்னிடம் நல்ல புடவை இல்லை என்று புடவை இரவல் வாங்குவதுண்டு. ஆத்திர அவசரத்துக்கு வெட்டுக்கத்தி, கோடரி, மாங்காய் முருங்கைக்காய் பறிக்கும் கொக்கி இரவல் கேட்பதுண்டு. சேவை பிழியும் நாழி, புட்டரிப்பு, அப்பக்கல், பெரிய பாத்திரங்களான வெண்கல உருளி, செம்பு நிலவாய், பித்தளைக் குட்டுவம் இரவல் போவதுண்டு. ஒரு உழவு மாட்டுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், உழவு மாடு கேட்டு வாங்கிப் போவதுண்டு. நெல் அளவு மரக்கால் இரவல் போகும்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு, இன்று தாய்நாடே இரவல் தாய்நாடாகிப் போயிற்று. அரசியல் கூலிகளும் காலிகளும் தரகர்களும் துரோகிகளும் ஆட்சி செய்வதைப் பார்க்க, நமக்கே கூட இது இரவல் நாடோ என்று தோன்றும்!‘இரவல்’ எனும் சொல்லுக்கு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ‘யாசகம்’ என்று பொருள் தருகிறது. இரவல் எனும் சொல்லை, யாசகம் எனும் பொருளில் புறநானூறும் பெரும்பாணாற்றுப்படையும் பயன்படுத்தியுள்ளன. பேரகராதி, இரவல் எனும் சொல்லுக்கு, ‘மீண்டு தருவதாகக் கொண்ட பொருள்’ என்றும் பொருள் தருகிறது. அதாவது ‘திருப்பித் தருவேன்’ என்று வாக்களித்து வாங்கிக்கொண்டு போகும் பொருள். என்றாலும் இரவல் எனும் சொல்லுக்குள் இரத்தலின் கேவலம் இருக்கிறது.

சிறு வயதில் பல வீடுகளிலிருந்தும் பல பொருட்கள் இரவல் வாங்கப் போன இழிவு எனது ஆழ்மனத்தில் இன்றும் வண்டலாய்க் கிடக்கிறது. திருக்குறளில் ‘இரவச்சம்’ எனும் அதிகாரமே உண்டு. ‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளி வந்தது இல்’ என்பது அதில் ஒரு குறள்.

‘போற்றிப் பேணிப் பிள்ளை போல் வளர்க்கும் பசு மாட்டுக்குத் தண்ணீர் வேண்டும் என்று இரந்தாலும் கூட, ஒருவன் நாவிற்கு அதை விட இழிவான பிறிதோர் சொல் இல்லை’ என்பது பொருள்.இங்கு நாம் பயன்படுத்தும் இரவல் என்ற சொல்லுக்கு யாசகம் என்று பொருள் கொள்ளாவிட்டாலும், அது இரப்புதான்.

எல்லா மொழிகளுமே ஏராளமான இரவல் சொற்களைத் தம்முள் அடுக்கி வைத்துள்ளன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அருளி தொகுத்து ெவளியிட்ட, ‘அயற்சொல் அகராதி’, இருபதினாயிரத்துக்கும் அதிகமான வேற்றுமொழிச் சொற்கள் தமிழில் புழங்குகின்றன எனும் தகவலைத் தருகின்றது. அரபி, ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, இந்துஸ்தானி, லத்தீன், உருது, எபிரேயம், கன்னடம், கிரேக்கம், சமஸ்கிருதம், ஜப்பானியம், சிங்களம், சிரியாக், சீனம், டச்சு, துருக்கி, துளு, தெலுங்கு, பாரசீகம், பாலி, பிரெஞ்சு, பிராகிருதம், போர்த்துக்கீசியம், மராத்தி, மலாய், மலையாளம் என 27 மொழிகளின் சொற்கள். அவை அனைத்துமே நமக்கு இரவல் சொற்கள்தானே!

மொழியில் மட்டும் என்று இல்லை. கல்வியில், மருத்துவத்தில், உடையில், ஆபரணங்களில், உணவில், இசையில், நடனத்தில், ஓவியத்தில், முடி திருத்துதலில், ஒப்பனையில், கட்டிடக்கலையில் என எங்கு பார்த்தாலும் இரவல் மயமாகிவிட்டது. இரவல் நன்மையும் செய்யும்; தின்மையும் செய்யும். ஆனால் நம் மனப்பாங்கு, சுயத்தைப் புறக்கணித்துவிட்டு இரவலைக் கொண்டாடப் போய்விட்டது.

புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான சனிப்பெயர்ச்சி என்பது, புத்தகங்களை இரவல் கேட்க வருபவர்கள்தான். முகத்தை முறித்துக்கொண்டு எங்ஙனம் புத்தகத்தை நேசிக்கும் ஒருவன் புத்தகத்தை நேசிக்கும் இன்னொருவனுக்கு இல்லை என்று சொல்லவியலும்? இரண்டிருந்தால் ஒன்றை கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் கொடுத்துவிடலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், கம்ப ராமாயணத்துக்கு வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை அச்சில் இல்லாமலும் கிடைக்காமலும் இருந்தது.

தமிழக அரசியல்வாதிகளில் வெகுசிலரே புத்தகம் வாசிப்பவர்கள். அவர்களில் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காளிமுத்து அவர்கள். கோவை விஜயா பதிப்பகத்தில் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். கம்பனுக்கு வை.மு.ேகா உரை தேடிக் கொண்டிருப்பதைச் சொன்னேன். தன்னிடம் இரண்டு செட் இருப்பதாகவும் அவற்றுள் ஒன்றை இரவலாக அல்ல... அன்பளிப்பாகத் தருவதாகவும் சொன்னார். காலம் கை கூடவில்லை. மத்திய அமைச்சராக இருந்த திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் புத்தகங்களைத் தீவிரமாக நேசிப்பவர். அவரது கணவர் திரு.ஜெகதீசன் தேர்ந்து வாசிப்பவர். நல்ல புத்தகங்கள் வாங்கினால் எனக்கும் ஒன்று சேர்த்து வாங்குவார். எனவே, அவரிடம் எனக்கு இரவல் கேட்க நேர்ந்ததில்லை.

புதியதாக வீடு கட்டியபோது எனது எழுத்து வேலைக்கும் புத்தகங்களுக்குமாக ஒரு நூலக அறை அமைத்துக்கொண்டேன். இப்போது என்னிடம் 8000 புத்தகங்களாவது இருக்கும். படித்து விட்டு, ‘இனியெனக்கு ஆகாது’ எனக் கழித்த சில ஆயிரங்கள் போக! கழிப்பனவற்றை வேறு எவருக்கேனும் கொடுத்து விடுவேன். ஞாபகமறதியாகவோ, அவசரமாகத் தேடிக் கைக்கு அகப்படாமற் போனாலோ இரட்டைப் பிரதியும் வாங்கி விடுவதுண்டு. அல்லது, நாம் வாங்கிய பிறகு நூலாசிரியரோ, நண்பர்களோ இன்னொரு பிரதி தந்துவிடுவதுண்டு.

நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை, அனைத்துப் பிரிவிலுமான மொழிபெயர்ப்புகள், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சார்பு நூல்கள், வழி நூல்கள் எனத் திருப்பித் திருப்பி அடுக்கும்போது, நம்மிடம் இருந்து பின்னர் காணாமற் போக்கிய நூல்கள் நினைவில் வந்து அலைக்கழிக்கும். எவரும் என்னிடம் புத்தகம் திருடியதில்லை.

சில சமயம் ‘நல்ல புத்தகம், வாசித்துவிட்டுத் தாருங்கள்’ என நானே தருவேன். சில சமயம்  அவர்களே கேட்டு வாங்கியும் போவார்கள். நாம் இரவல் கொடுக்கும் புத்தகங்களை பேரேடு ஒன்று காத்து, பதிந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை எனக்கு. பிறகு யாரிடம் என்ன கொடுத்தோம் என்று மறந்தும் போய்விடும். கொடுக்காத ஆளிடம் போய், ‘புத்தகத்தைத் திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டு அவமானப்பட முடியுமா! சிலர் வாங்கிப் போய் வாசித்துவிட்டுப் பொறுப்பாகத் திருப்பித் தருவார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த சிறந்த சிறுகதை எழுத்தாளரும் - நவீன இலக்கியவாதி கோணங்கி, நவீன நாடக இயக்கம் சார்ந்த முருகபூபதி ஆகியோரின் அண்ணனுமான ச.தமிழ்ச்செல்வன் ஈராண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு வந்தார். நட்பு நிமித்தம் வந்தார் போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

‘‘எனக்கு பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு இரவல் வேணும். ஒரு கட்டுரை எழுதணும்... பத்திரமா திருப்பித் தருவேன்’’ என்றார். வராதவர் வந்து, கேட்கக் கூடாததை - கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் வேடத்தில் வந்த இந்திரன் கேட்பதைப் போல - கேட்கிறாரே என்று மனதில் எண்ணிக்கொண்டு, ‘‘எங்கிட்டே இருக்குன்னு யாரு சொன்னா?’’ என்றேன்.

‘‘கீரனூர் ஜாகிர் ராஜா சொன்னார்’’ என்றார்.வைத்துக் கொண்டு வஞ்சம் செய்வது நமக்கு வழக்கமில்லை. எடுத்துக் கொடுத்தேன். என்னை நம்புங்கள், இரண்டு மாதங்களில், திடமாகப் பேக்கிங் செய்யப்பட்டு, நன்றிக் கடிதத்துடன், எனது புத்தகம் தூதஞ்சலில் எனக்கு வந்து சேர்ந்தது. எனக்கு ‘உண்டாலம்ம...’ என்று தொடங்கும் சங்கச் செய்யுள் நினைவுக்கு வந்தது. அது தனிமனிதப் பொறுப்பு, நாணயம் சார்ந்த விஷயம்.

கோவையில் கல்லூரியில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். அறிஞர் ஒருவர், அவரும் என்னை நன்கு அறிந்தவர்தான், ஆய்வில் உதவி புரிந்தார். ஆய்வுத் தலைப்பு நினைவில்லை எனக்கு, என்றாலும் தமிழ் நவீன கவிதை சார்ந்தது. மாணவர் மூலம் அறிஞர் எனக்கொரு கடிதம் கொடுத்து அனுப்பினார். ‘நாஞ்சில், கீழ்க்கண்ட சில கவிதை நூல்கள் கோவையில் வேறெவரிடமும் இல்லை.

உங்களிடம் இருக்க வாய்ப்பு உண்டு. இருந்தால் தந்துதவுங்கள். ஆய்வு முடிந்ததும் திருப்பி விடுவேன்’ என்ற வகையில் கடிதம். சி.மணியின் ‘வரும் போகும்’, ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’, பசுவய்யாவின் ‘நடுநிசி நாய்கள்’, நகுலனின் ‘கோட் ஸ்டாண்ட் கவிதைகள்’, ஆத்மாநாம் கவிதைகள், அபியின் ‘அந்தர நடை’ என்று பத்துப் பன்னிரண்டு புத்தகங்கள் கொடுத்து அனுப்பினேன்.மூன்றாண்டுகள் சென்று, பொது நிகழ்ச்சியொன்றில் அந்த மாணவரைச் சந்தித்தபோது, அவர் முனைவர் ஆகியிருந்தார்; நகரத்துக் கல்லூரி ஒன்றில் வேலை பார்ப்பவராகவும்!

‘‘தம்பி, அந்தப் புத்தகங்கள் திரும்பக் கிடைக்கலியே!’’ என்றேன்.‘‘அறிஞர் கொடுத்துனுப்பலையா?’’ என்றார். தம்பி இன்று துறைத் தலைவர். ‘கண்ணே, மணியே, கற்கண்டே, கருந்தேனே’ என்று கொஞ்சிக் குலவி முயங்கிக் களித்த பின்பு, ‘தள்ளிப் படு, காத்து வரட்டும்’ என்று சொல்கிற கதை போல் ஆகிவிட்டது நம் கதை.

 மலையாளத்தில் பழமொழி ஒன்றுண்டு. ‘பாலம் கடக்கும்போழ் நாராயணா! பாலம் கடந்தப்போழ் பூராயணா!’ என்று. அபாயகரமான சேதமடைந்த மரப்பாலம். அதைக் கடந்து போகும்போது ‘நாராயணா, நாராயணா’ என்பார்களாம். பாலம் கடந்து போன பின்பு ‘பூராயணா’ என்பார்களாம். அது மலையாளத்தில் ஒரு கெட்ட வார்த்தை.அந்தக் கவிஞர்களின் முதற்பதிப்பு நூல்கள் அவை. இன்று தேடினாலும் அந்த வெளியீடுகள் கிடைக்காது.

1979 ஆகஸ்ட் 29ம் நாள் எனக்குத் திருவனந்தபுரத்தில் திருமணம் ஆயிற்று. திருமணத்துக்கு என் நண்பர் ஞான.ராஜசேகரன் வந்திருந்தார். ‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

சென்னை கம்பன் கழகம் அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி மு.மு.இஸ்மாயில் பதிப்பாசிரியராக இருந்த ‘கம்ப ராமாயணம்’ மூலம் மட்டும் ஒரே நூலாக வெளியிட்டிருந்தது. மெல்லிய உயர்தரத் தாளில், காலிக்கோ பைண்டிங்கில் நல்ல பதிப்பு. அந்தப் புத்தகம் 36 ஆண்டுகளுக்கு முன்பு 75 ரூபாய். எனக்குத் திருமணப் பரிசாகத் தந்தார்.

இன்று அந்தப் பதிப்பு என் கைவசம் இல்லை. ஆண்டாளைப் பிரிந்த பின்னர் பெரியாழ்வார் பாடினார்- ‘ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்’ என்று. அதுபோல் அந்தப் புத்தகத்தைத் தேடித் தேடிக் களைத்தேன். எளிதாகச் சொல்லி விடலாம், ‘இன்னொன்று வாங்கிக்கொண்டால் போயிற்று’ என்று. ஆனால், சென்னைக் கம்பன் கழகத்தாரிடம் பட்டிமண்டபம் நடத்தப் பணம் உண்டு, மறுபதிப்புச் செய்யக் காசில்லை.

கலைஞன் பதிப்பகம், மூன்று பாகங்களாக, ‘ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்’ என்று வெளியிட்டனர், பதினைந்து ஆண்டுகள் முன்பு. அவற்றுள் என் கதை ஒன்றும் இருந்ததால், ஒரு பாகம் எனக்கு இலவசமாக - மன்னிக்கவும், விலையில்லாமல் - கிடைத்தது. கலைஞன் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி தீவிர இலக்கிய வாசகர்.

எனக்கு வர வேண்டிய ராயல்டி கணக்கை நேர் செய்து, மற்ற இரு பாகங்களையும் தந்தார். கோவைக்குப் பணிமாற்றம் பெற்று வந்த எம் நெருங்கிய உறவு, மூன்று பாகங்களையும் வாசிக்க எடுத்துப் போனார். இரண்டை மட்டுமே திரும்பத் தந்தார். மூன்றாவதை அவர் அலுவலகச் சகபாடியொருவர் வாசித்துக் கொண்டிருந்தாராம். இன்னும் வரவில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

பல்கலைக்கழகம் ஒன்றில் என் படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர் பணிபுரி கிறார். எம்.ஏ. கற்கும் மாணவருக்கு, ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான ‘உதயணகுமார காவியம்’ பாடம் நடத்த வேண்டும் அவர். ‘தமிழ் நிலையம்’ ஐந்து தொகுதிகளாக, ஐஞ்சிறுகாப்பியங்கள் வெளியிட்டிருந்தது. பொறுப்பான ஆய்வாளர், சிறப்பான நண்பர் என்பதால், ‘உதயணகுமார காவியம்’ இடம் பெற்றிருந்த ஐந்தாம் தொகுதி மட்டும் இரவல் கொடுத்தேன்.

சில மாதங்கள் சென்று, புத்தகம் திரும்பி வந்தது. என் புத்தகங்களை நான் மட்டுமே வாசிப்பதால், அவை கருக்கழியாமல் இருக்கும்; சில புத்தகங்கள் கன்னி கழியாமலும்! எனது பேராசிரிய நண்பர், என் புத்தகத்தை அவரது மாணவருக்கு இரவல் தந்திருக்கிறார். புத்தகத்தில் அந்த மாணவர் தன் பெயரை எழுதி, அது கிறுக்கி மறைக்கப்பட்டு, முகப்புப் பக்கத்தில் அரைப்பக்கம் கிழிக்கப்பட்டு, ஆங்காங்கே முனைகள் மடிக்கப்பட்டு, வரிகளில் கோடிடப்பட்டு, ஓரங்களில் குறிப்புகள் எழுதப்பட்டு... பப்படக் கட்டு போலக் காட்சி தந்தது, வயதாகி நோய்ப்பட்ட பாலியல் தொழிலாளி போல. இன்றும் ஏதோ தேவைக்கு அந்தப் புத்தகத்தைப் புரட்ட நேரும்போது, என் வயிற்றில் இஞ்சி, பூண்டு, மிளகு, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்துக் குடித்த சங்கடம் ஏற்படுகிறது.

சொந்தப் புத்தகமே ஆனாலும், முனை மடிப்பது, அடிக்கோடு இடுவது, ஓரங்களில் குறிப்பு எழுதுவது, புத்தகத்தின் முதுகை வளைத்து வைத்துப் படிப்பது எனக்குப் பிடிப்பதில்லை. எந்தப் புத்தகத்தையும் அதன் மரியாதையுடன் வாசிக்க வேண்டும். இடது கையில் முதுகு வளைத்துப் பிடித்த புத்தகமும், வலது கையில் சாளை மீன் குழம்பு ஊற்றிப் பிசைந்த சோறும் தின்றால் அது எமக்கு ஒவ்வாமை.

நான் புத்தகம் இரவல் வாங்குவதில்லையா என்று நீங்கள் கேட்கக் கூடும். முன்னட்டை, பின்னட்டை இல்லாத வங்காள நாவல், ‘ஆரோக்கிய நிகேதனம்’ மற்றும் காகா கலேல்கர் எழுதிய ‘ஜீவன் லீலா’ இரண்டும் நான் ஜெயமோகனிடம் இரவல் வாங்கிப் படித்ததுதான்.

பெருந்தகை டி.பாலசுந்தரம் அவர்களிடமிருந்துதான் மிகமிக அரிதான புத்தகங்களான ‘ஆண்டாள் பிள்ளைத்தமிழ்’ மற்றும் ‘இரணிய வதைப் பரணி’ இரவல் வாங்கினேன். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட, யாழ்ப்பாணத்துக் கதிரைவேல் பிள்ளை தொகுத்த ‘தமிழ்ச் சொல்லகராதி’ நான்கு பாகங்கள்.

அவற்றுள் முதல் பாகம், பேராசிரியர் ஜெயந்த  பாலகிருஷ்ணனிடம் இரவல் வாங்கியது, இன்னும் கொடுக்கவில்லை. உ.வே.சாமிநாதய்யர் நூலக வெளியீடான ‘சீவக சிந்தாமணி’ மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் இன்று அச்சில் இல்லை. அதுவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான டாக்டர் கு.சீனிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ எனும் நூலும் நூலகப் பிரதிகள் என் கைவசம் இருக்கின்றன இரவலாக.இரவல் புத்தகங்கள், வளர்க்கக் கொடுத்த பிள்ளை போல. கொடுக்க மனமில்லாவிட்டாலும், திருப்பிக் கொடுக்காமல் தீருமா?

அடிமைகளை விற்கலாம், வாங்கலாம், அடமானம் வைக்கலாம், தேவைப்பட்டால் கொல்லவும் செய்யலாம் என்று வாழ்ந்த சமூகங்கள்தான் நாம்.

இரவல் எனில், ‘திருப்பித் தருவேன்’ என்று வாக்களித்து  வாங்கிக்கொண்டு போவது. என்றாலும் இரவல் எனும் சொல்லுக்குள்  யாசகத்தின் கேவலம் இருக்கிறது.

ஆங்காங்கே முனைகள் மடிக்கப்பட்டு, வரிகளில் கோடிடப்பட்டு, ஓரங்களில் குறிப்புகள் எழுதப்பட்டு... பப்படக்  கட்டு போலக் காட்சி தந்தது, வயதாகி நோய்ப்பட்ட பாலியல் தொழிலாளி போல.

இடது கையில் முதுகு வளைத்துப் பிடித்த  புத்தகமும், வலது கையில் சாளை மீன் குழம்பு ஊற்றிப் பிசைந்த சோறும்  தின்றால் அது எமக்கு ஒவ்வாமை.


- கற்போம்...

நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது