ராஜதந்திரம்



வசந்த் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்குத்தான் வருவான். வந்ததுமே டீ டைம். 10 நிமிடமே எடுத்துக்கொள்ள வேண்டிய பிரேக்கை

அரை மணி நேரம் நீட்டித்து, அரட்டை அடித்து, ஆடி அசைந்துதான் சீட்டுக்கு வருவான். லஞ்ச், ஈவனிங் டீ டைம்... எல்லாமே இப்படித்தான்.அன்று திடீரென வசந்த்தை ஜி.எம் தன் அறைக்கு அழைத்தபோது மிரண்டுவிட்டான். ‘லேட்டாக வருவது... வேலை செய்யாதிருப்பது பற்றியெல்லாம் கேட்பாரோ?’ பயந்தபடியே அவர் முன் அமர்ந்தான் வசந்த். ‘‘வா வசந்த்! இந்த ப்ரமோஷன் லிஸ்ட்டைப் பார்த்தியா?’’ என மேனேஜர் நீட்டிய லிஸ்ட்டைப் பார்த்த வசந்த் திடுக்கிட்டான்.

அதில் அவன் பெயர் இருந்தது.‘‘வாழ்த்துக்கள் வசந்த்’’ என அவனை அனுப்பி வைத்தார் மேனேஜர்.இப்போதெல்லாம் சரியாக 8.30 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து விடுகிறான் வசந்த். அதிக நேரம் சின்ஸியராக வேலை பார்க்கிறான். தேநீர்கூட அவனைத் தேடி வந்து விடுகிறது. அவன் இப்போது அந்த செக்‌ஷனுக்கு இன்சார்ஜ் அல்லவா!

‘‘சம்பளமும் ஏறாது... அவன் அனுபவித்த சலுகைகள் கட்டாகும்!’’ என தன் ராஜதந்திரத்தை உதவியாளரிடம் சொல்லிச் சிரித்தார் ஜி.எம். ஜாலியாக கேன்டீனுக்கு தேனீர் குடிக்கச் சென்ற நண்பர்கள் குழு, வசந்த்தை பொறாமையாகப் பார்த்தது. இவனோ, அவர்களை ஏக்கத்துடன் பார்த்தான்.    l

ஜி.கவிதா அன்பு