ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 39

ஜோசப் சந்திரன் என்னைப் பார்த்து அப்படிக் கேட்கவும், நான் ஆச்சரியமானேன். அவரே தொடர்ந்து கூறத் தொடங்கினார்.‘கணபதி... இந்த பூமியில் நீங்கள் முதலில் மலைகளின் சிறப்பைப் புரிந்துகொள்ளுங்கள். மலைகள் என்றால் உயரமானவை, பசுமையானவை, குளிர்ந்த தன்மை கொண்டவை என்று மட்டும்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் மலைகள் பூமியிலேயே மிக அதிக சக்தி படைத்தவைகளாக உள்ளன. அதனால் இந்த மலைகளை சித்தர்கள் தங்கள் வசிப்பிடங்களாக ஆக்கிக் கொண்டனர்.

இந்த மலைகளில், இயல்பான தட்பவெப்ப சூழல் கொண்டவை, அதிலிருந்து மாறுபட்டு விசேஷமான  தட்பவெப்ப சூழல் கொண்டவை என்று இரண்டு விதங்கள் உண்டு. இந்த மாறுபட்ட தட்பவெப்ப சூழல் கொண்ட மலைகளில் வெளிப்படும் தாவரங்களில் சில விசேஷ சக்தி கொண்டவை. அவற்றையே ‘கல்பமூலி’ என்று அவர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

அந்த மூலிகைகள் அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் வளராதவையும் கூட... காரணம், அங்கு நிலவும் தட்பவெப்பத்தின் நுட்பமான அளவுதான்.ஒரு மூலிகைக்குப் பெயரே ‘மௌனமிட்டி’. இதற்கு சத்தமே துளியும் ஆகாது. இந்த தாவரம் உள்ள இடத்தில் நாம் நிலம் அதிர நடந்தாலே கூட போதும்...

இது சுருண்டு கொண்டு விடும். அந்த அளவு சத்த அதிர்வின் மிகச் சாதாரண டெசிபல் அளவைக்கூட தாங்காத அந்த தாவரம் முதல், தன் பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வரும் பறவையை தனக்கான உணவாகக் கருதி... அப்படியே பூவின் இதழ்களை மூடிக்கொண்டு தனக்குள் பறவையை அடக்கி, அது இறந்துவிட்ட நிலையில் தனக்கான உணவாக ஆக்கிக் கொள்ளும் புலால் உண்ணும் தாவரங்கள் வரை பலவிதமான தாவரங்கள் உள்ளன.

இவற்றைப் பற்றி நம் வேளாண்மைக் கல்லூரிகள் கூட பெரிதாக ஆய்வு மேற்கொள்ளவில்லை.சில நுட்பமான தாவரங்களின் விதைகள் மிக அபூர்வமானவை. அந்த வகையில் சிறுநீர்ப்பை பாதிப்பை சரிசெய்து, அதை மீண்டும் இயங்க வைக்கும் ‘அகக்குளகரணி’ எனும் தாவரம் கிட்னி பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அருமருந்து. இதன் விதைகளை பௌர்ணமி நாளன்று பிரம்ம முகூர்த்தத்தில் விதைத்து நீர் விடவேண்டும். ஏழாம் பௌர்ணமி இது பூக்கும். பூத்த நிலையில் இந்தச் செடியை அப்படியே பறித்து, அதன் வேரைக் கழுவி, பின் அரைத்து பால்விட்டுக் குடித்திட, கிட்னியின் இயக்கம் சீராகத் தொடங்கும்.

பூத்த பூவின் அடுத்த கட்டமே காய்... காய்க்குள்ளேதான் விதை இருக்கிறது. எனவே ஒரு செடியை விதைக்காக மட்டுமே வளர்த்து, இன்னொன்றை பூக்கும்போதே பறித்து விடுவது வழக்கம். இதனால் இது எப்பொழுதும் திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கே கிடைக்கும். வனத்தைப் பற்றிய பேரறிவு, பிரபஞ்சம் பற்றிய ஞானம், காலம் குறித்த கணக்கறிவு எனும் மூன்றும் உள்ள சித்தர்களுக்கே இது குறித்துத் தெரியும். பௌர்ணமி தவிர வேறு எப்போது விதைத்தாலும் இந்தச் செடி பெரிதாக எழும்பாது. இதை தேவதைத் தாவரம் என்பர். மருத்துவத்தின் கடவுள்களாக புராணத்தில் கருதப்படும் அஸ்வினி தேவர்களிடமிருந்து இதன் விதை பூமிக்கு வந்ததாகக் கூறுவர்...’

- இப்படி ஜோசப் சந்திரன் கூறிக்கொண்டே செல்லச் செல்ல எனக்குள் பிரமிப்பு.‘ஜோசப்... இந்த செய்திகள் எல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? நமது ஆர்க்கியாலஜிக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பது போலத் தெரியவில்லையே’ என்றேன்.‘நிலத்தோடுதான் நமக்கு உறவு. அது தொடர்பான அவ்வளவு ரகசியங்களையும் கண்டறிவதே நம் பணி நோக்கு. எனவே நான் நிறைய வாசித்தேன். அவ்வளவு ஏன்... ராமதேவர் என்கிற சித்தர் ‘யாக்கோபு’ என்று பெயர் மாறியவராக மக்கா, மதினா பக்கமெல்லாம் போய், அங்கிருந்து பல மூலிகைகளைக் கண்டறிந்து கொண்டு வந்த செய்திகளைக் கூறினால் உங்களுக்கு இன்னமும் ஆச்சரியம் ஏற்படும்.

இவை பெரும்பாலும் ரகசியமானவை. ஆராயும் நமக்கே கூட முழுமையாக அகப்படாதவை. முழுவதுமாக நமக்குப் புரிய வேண்டுமென்றால் ஒரு சித்தர் நமக்கு முழுமனதாக உதவிட வேண்டும்’ என்றார்.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...சுகுமார் பற்றி வர்ஷன் சொன்ன செய்தி கணபதி சுப்ரமணியனை கவலையில் ஆழ்த்த, ப்ரியாவும் ‘‘இப்ப என்ன செய்யலாம்?’’ என்று கேட்டாள்.‘‘என்ன செய்யலாம்னா... காலப்பலகணியைத் தேடத் தொடங்கின ஒரு கோஷ்டி கூண்டோட கைலாசம் போய்ட்ட நிலையில, அடுத்த கோஷ்டி சாதுர்யமா செயல்பட்டுக்கிட்டு இருக்குன்னு தெரியுது...’’
‘‘சாதுர்யமா செயல்பட்டா நீ எப்படி அவனைக் கண்டுபிடிச்சிருப்பே?’’

‘‘நான் கண்டுபிடிச்சது அவனுக்குத் தெரியாதே...’’‘‘இப்பதானே அவனை மிஸ்கைட் பண்ணிட்டு வந்தேன்னு சொன்னே?’’
‘‘நான் மிஸ்கைட் பண்ணினதை அவன் புரிஞ்சிக்கலைன்னு நல்லா தெரியுது. அவன் என்னை மிஸ் பண்ணிட்டதா நினைச்சு நான் எங்க போனாலும் வள்ளுவர் வீட்டுக்கு வந்தாகணும்ங்கறதை அனுமானிச்சு, அவர் வீடு இருக்கற தெருவுக்கு வந்து டீக்கடைலயும் நின்னுட்டான்...’’
‘‘அப்ப, நாம அவனைத் தெரிஞ்சிக்கிட்டோம்ங்கறது அவனுக்குத் தெரியாது. அப்படித்தானே?’’

‘‘நிச்சயமா?’’‘‘அப்ப ஒண்ணு பண்ணுவோம். வள்ளுவர் வீட்டு பின்பக்கமா சுவர் ஏறிக் குதிச்சா காலி பிளாட் ஒண்ணு இருக்கு. போன தடவை நான் வந்தப்பவே கவனிச்சிருந்தேன். அதன் வழியா நீயும் வள்ளுவரும் கம்பி நீட்டிடுங்க. உங்களை அவன் அங்க மிஸ் பண்ணினா... அடுத்து அவன் இங்க என் வீட்டு முன்னாலதான் வந்து நிப்பான். அவன் நோக்கம் நம்மைத் தேட விட்டு பின் தொடர்ந்து வருவதுதான். கடைசியா நாம காலப்பலகணியை அடையும்போது நம்மகிட்ட இருந்து அதை அடைய அவங்க ஏதாவது திட்டம் வெச்சிருக்கலாம்.’’

‘‘உன் யூகமும் சரி... ஐடியாவும் சரி... நாம இங்க இன்னும் அந்தப் பலகணி பற்றின எந்த ஒரு குறிப்பையும் தொட்டுக்கூடப் பார்க்கல. அதுக்குள்ள நாம கட்டாயமா அதை கண்டுபிடிச்சிடுவோம்னு நம்பி ஒருத்தன் ஃபாலோ பண்றதை நினைச்சா உனக்கு வியப்பா இல்லை..?’’
‘‘வியப்பா மட்டுமில்லை... இந்த சுகுமாரும் இவனுக்குப் பின்னால இருக்கற கோஷ்டியும் நம்மைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்களாகவும் இருக்கணும்னு தோணுது!’’
‘‘எதுவானாலும் சரி... இனி நாம இரண்டுல ஒண்ணு பாத்துடணும். முதல்ல பலகணி இருக்கற இடத்தைத் தெரிஞ்சுப்போம். அந்தக் குறிப்புகளை நீ படி... உன் தாத்தா கேட்டுக்கிட்டிருக்கார்தானே?’’

‘‘வர்ஷன்... கான்ஃப்ரன்ஸ்ல நான் மட்டும் எப்படி கேட்காம இருப்பேன். கேரி ஆன் யங்மேன்...’’‘‘வெரிகுட் அங்கிள்... இனி எங்களுக்கு வேலை இல்லை, வள்ளுவருக்கும் உங்களுக்கும்தான்...’’‘‘ரைட்! இதுக்கு முன்னால சொன்னபடி மண்டி போட்டு பதிமூணு பிராணாயாமம் செய்துட்டு அடுத்தடுத்து போவோம்...’’
‘‘ஓகே அங்கிள்... அங்க நீங்கதான் மண்டி போட்டு பிராணாயாமம் செய்யணும். வழிகாட்டு ஏடு உங்க கைலதான் இருக்கு...’’
‘‘வர்ஷன்... நீ பேசும்போதே நான் அதை செய்து முடிச்சு வழிகாட்டு ஏட்டோட அடுத்த
பக்கத்துக்குப் போயிட்டேன்...’’

‘‘நல்லதும்மா... அதை நிறுத்தி நிதானமா படி!’’
‘‘சரிங்கய்யா... படிக்கறேன்!’’
‘‘படி... படி...’’ - வள்ளுவர் ஆர்வமானவராக இயர்போனை காதுக்குள் நன்கு அழுந்தவிட்டுக் கொண்டு கண்களை விரித்துக் கொண்டார்.
‘‘திசையதும் தென்கிழக்கு... அவ்வழி ஆழி தொட்ட நாடு வந்து, ஆடி தொட்டு நூறு நோக்கி, பாதி வழி வந்தக்கால் மீதி வழி அறிய ஏடதன் மறு
பக்கம் காணுக பூதமுடன்...’’

- சற்று தடுமாற்றத்துடன் ப்ரியா அந்த ஏட்டின் வார்த்தைகளை வாசித்து முடித்தாள்.‘‘திசையதும் தென்கிழக்கு... ஒன் மினிட் என் செல்போன்ல பாக்கறேன்... ஆங், இது மகாபலிபுரம் போற பக்கம், அவ்வழி ஆழி தொட்ட நாடு வந்துன்னா..?’’- வர்ஷன் பாதி விளக்கம், பாதி குழப்பம் என்று தலையைச் சொறிந்து கொண்டான்.வள்ளுவர் அதற்கு பளிச்சென்று பதில் கூறலானார்.‘‘வர்ஷன்... ஆழின்னா கடல்... கடலைத் தொட்ட நாடுன்னா மகாபலிபுரமா இருக்கலாம். ஆனா இங்க மகாபலிபுரம் நிச்சயமா இல்லை. ஏன்னா மகாபலிபுரம்ங்கற பேர்ல ‘புரம்’ இருக்கு... ‘புரம்’னா அது ஒரு பகுதியைக் குறிக்கும்; முழுமையான நாட்டைக் குறிக்காது. ‘நாடு’ன்னே குறிப்பு இருக்கறதால ‘நாடு’ன்னு முடியற ஊர் ஏதாவது இருக்கா பார்... அதுவும் கடலோரமா கட்டாயம் இருக்கணும்...’’

‘‘ஒரு நிமிஷம்யா... ஆண்ட்ராய்ட் போன்ல இருக்கற கூகுள் எதுக்கு இருக்கு?. அதுக்குள்ள போய் அந்தப் பகுதி மேப்பை விரிச்சா முடிஞ்சது...
இதோ தெரிய ஆரம்பிச்சிடிச்சு... மகாபலிபுரம், கல்பாக்கம், செய்யூர், இடைக்கழி நாடு... இடைக்கழி நாடு! அய்யா, அனேகமா இதுவாதான் இருக்கணும்... சரியா?’’
‘‘சந்தேகமே வேண்டாம்... இடைக்கழி நாடேதான். அது ஒரு குட்டி கேரளம்... போகட்டும், அடுத்த வரி என்ன?’’
‘‘ஆடி தொட்டு நூறு நோக்கி...’’

‘‘ஆடி தொட்டுன்னா ஆடி மாசத்தைக் குறிக்குதா?’’‘‘இல்ல... இல்ல... ‘ஆடி’ன்னா கருவின்னும் ஒரு அர்த்தம் இருக்கு. கரெக்ட்... திசைகாட்டி கருவி! அதுல அங்க நாலு திசைகளுக்கு நடுவுல நின்னு அப்புறமா வட்ட வடிவ திசைகாட்டிக் கருவியில 360டிகிரி இருக்கறதா பாவிச்சு, அதுல பூஜ்யத்துல இருந்து நூறு டிகிரிக்குப் போய் அந்த டிகிரி காட்டற திசைன்னு அர்த்தம்...’’‘‘வள்ளுவரே... இவ்வளவு குழப்பமாவா ஒரு இடத்துக்கு அட்ரஸ் சொல்றது... ஏன் இப்படி தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும்?’’

‘‘ரகசியம்னா அது இப்படி மறைவாதான் இருக்கும். இப்படி இருக்கும்போதே டெல்லி வரை விஷயம் தெரிஞ்சு ஒரு கோஷ்டிக்கு இரண்டு கோஷ்டி நம்மை குறி வெச்சுட்டாங்களே... இதுல ‘பளிச்’னு குறிப்பு இருந்தா அவ்வளவுதான்!’’‘‘சரி, அடுத்த வரியைக் கேட்போம்... ப்ரியா, கமான்!’’
‘‘சொல்றேன் வர்ஷன்... நாம ரொம்பவே சீக்கிரமா கண்டுபிடிச்சுக்கிட்டு வரோம். எல்லாம் பிராணாயாமம் தந்த சக்தின்னு நினைக்கறேன்.’’
‘‘அவசரப்படாதே... அடுத்த வரிய சொல்!’’

‘‘பாதி வழி வந்தக்கால் மீதி வழி அறிய ஏடதன் மறுபக்கம் காணுக பூதமுடன்...’’
‘‘வள்ளுவரய்யா... நீங்கதான் சொல்லணும். பாதி வழி வந்தக்கால்னா எந்தப் பாதி வழி?’’
‘‘அது மட்டுமல்ல... மீதி வழி அறிய ஏடதன் மறுபக்கம் காணுக பூதமுடன்னா... பயமா இருக்கு வர்ஷன்!’’

ப்ரியா சற்று கிண்டலாக முணுமுணுக்க, வள்ளுவரிடம் முன் போன்ற ஒரு வேகமான பதிலில்லை. ஆழ்ந்த யோசனை அவர் முகத்தில்...
‘‘என்னய்யா... ஒண்ணும் பிடிபடலையா?’’‘‘அதான்பா யோசிக்கறேன். இடைக்கழிநாட்டுல இருந்து நம்ம திசைகாட்டிக் கருவியைக் கொண்டு 100 டிகிரி காட்ற திசைல ஏதாவது பாதை இருந்தா, அது போய் முடியற தூரத்துல சரிபாதின்னு அர்த்தமா? இல்லை, வேற ஏதாவதான்னு யோசிக்கறேன்...’’
‘‘ஒருவேளை அப்படிப் பாதை எதுவும் இல்லைன்னா?’’

‘‘எதையும் இங்க இருந்து முடிவு செய்ய முடியாது. நாம இடைக்கழி நாட்டுக்குப் போய் அங்க ஊர் நடுவுல நின்னு வடக்கை மையமா வெச்சு, மற்ற திசைகளைத் துல்லியமாக்கி - அப்புறம் அந்த நிலைல நூறாவது டிகிரி காட்ற திசையைப் பார்த்துட்டு முடிவு செய்வோம்.’’‘‘அப்ப போகப் போகத்தான் முடிவு செய்ய முடியுமா?’’‘‘அதுதான் சுலபம் தம்பி...’’‘‘எதுக்கும் அடுத்த வரியையும் அடுத்த பக்கத்தையும் பார்த்துடுவோமே...’’‘‘கரெக்ட் வர்ஷன்... அடுத்த வரி ‘ஏடதன் மறுபக்கம் காணுக பூதமுடன்’னு இருக்கு. எந்த பூதமுடன்..?’’

‘‘நீ மறுபக்கம் பார்...’’- வர்ஷன் கூறிட, ப்ரியா மறுபக்கம் பார்த்தாள். எறும்புகள் வரிசையாக ஊர்வது போல எழுத்துக்கள் ஏதோ கோடு போட்டது போலத்தான் இருந்தன. ஒன்றுமே புரியவில்லை.‘‘வர்ஷன்... ஆனாலும் பொடி எழுத்து! ஏதோ கோடு போட்ட மாதிரி இருக்கு... படிக்க முடியல.’’
‘‘அய்யா... என்னய்யா இது புதுக் குழப்பம்?’’‘‘ஒரு குழப்பமுமில்ல... அந்தப் பொடி எழுத்தைப் படிக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு. அதுக்கு நமக்கு என்ன வேணும்?’’‘‘பூதக்கண்ணாடியா?’’‘‘அதேதான்... அதுதான் அந்த பூதம்...’’‘‘வாவ்... இவ்வளவுதானா? இப்பவே பூதக் கண்ணாடி எடுத்துப் படிச்சா என்ன?’’
‘‘வேண்டாம். ஏட்டுல சொன்னபடி மிகச் சரியா நடந்துக்கிட்டா மட்டுமே அந்த காலப்பலகணியை நாம நெருங்க முடியும். இல்லன்னா இந்த முயற்சியில நமக்கெல்லாம் சித்தம் கலங்கவும் வாய்ப்பு உண்டு...’’

‘‘சித்தம் கலங்கன்னா... யூ மீன் பைத்தியம்?’’‘‘ஆமாம்ப்பா...’’‘‘பயமுறுத்தறீங்களேய்யா...’’
‘‘படிச்சது போதும். ப்ரியா நீ காலைல உன் கார்ல வர்ஷன் வீட்டுக்குப் போயிடு. காரை அங்க பார்க் பண்ணிட்டு, ஆட்டோவோ, கால் டாக்சியோ பிடிச்சு நேரா பீச் ரோட்ல உழைப்பாளர் சிலை கிட்ட வந்துடு. நானும் வர்ஷனும் அங்க இருப்போம். மணி ஒன்பதுன்னு வெச்சுக்கோ. வீட்ல டெல்லி போறோம்னு நம்ப வெச்சுடு - அது ரொம்ப முக்கியம்.’’- வள்ளுவர் சொல்லி முடித்தார். அடுத்து சுகுமார் கண்ணில் படாமல் பின் வழியாகத் தப்பிக்க வேண்டும்...

‘‘தலைவர் மாத்திரையை முழுங்க முடியாம தவிச்சாரு...’’
‘‘அப்புறம் என்னாச்சு?’’‘‘கட்சி நிதின்னு நினைச்சிக்கிட்டு முழுங்கச் சொன்னேன். உடனே முழுங்கிட்டாரு!’’

ஆழி தொட்ட நாடு
வந்து, ஆடி தொட்டு
நூறு நோக்கி, பாதி
வழி வந்தக்கால் மீதி
வழி அறிய ஏடதன்
மறுபக்கம் காணுக
பூதமுடன்...

‘‘ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பிச்சை கேட்டு வர்றியே... ஏன்?’’
‘‘இந்த ஏரியாவை
பத்து லட்சம் ரூபாய்க்கு
ஏலம் எடுத்து இருக்கேன்...’’

‘‘டிராபிக் போலீஸ் கண்ணுக்கு முன்னாலேயே வண்டி திருடினது உண்மையா..?’’
‘‘ஆமா எஜமான்! அவர்தான் ‘வண்டியை சீக்கிரம் எடு’ன்னு அவசரப்படுத்தினாரு..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்