கொழுப்பை எடு... கொண்டாடு!



ஆச்சரியமூட்டும் ஆதிகால டயட்

‘‘‘கொழுப்புதான் எல்லா நோய்களுக்கும் காரணம்’ - இப்படித்தான் இதுவரை படிச்சிருக்கோம். மருத்துவர்களும், டயட்டீஷியன்களும் இதையேதான் சொல்றாங்க. ஆனா, ‘கொழுப்பை மட்டுமே பிரதானமான உணவா சாப்பிடுங்க’ன்னு சொல்லுது இந்த டயட். தானியங்கள் கண்டுபிடிக்கப்படாத, நெருப்புன்னா என்னன்னு தெரியாத பேலியோலித்திக் என்ற கற்கால மனிதனோட உணவுமுறைதான் பேலியோ டயட்.

‘குகை மனிதன் டயட்’னு இதைச் சொல்றாங்க!’’ - ஆச்சரியம் விரிய ஆரம்பிக்கிறார் ஷங்கர். பேலியோவை நான்கு வருடங்களாகப் பின்பற்றி வரும் இவர், இதன் மூலம் ஒரே மாதத்தில் பத்து கிலோ வரை எடை குறைத்ததாகச் சொல்கிறார்!

பொதுவாக அமெரிக்காவின் செல்லக் குட்டி டயட்டாக கடந்த 13 வருடங்களாக கோலோச்சி வரும் இந்த டயட், இப்போது இந்தியாவில் காட்டுத்தீ. தமிழர்கள் மத்தியில் பேலியோ டயட்டிற்கென்றே ஃபேஸ்புக்கில், `ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற குழுமம் இயங்கி வருகிறது. 26 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவின் ஆரம்பகட்ட உறுப்பினர் எனும் முறையில் பேசுகிறார் ஷங்கர்...

``ஆரம்பத்துல நான்கூட இத நம்பலை சார்... ‘கொழுப்பை சாப்பிடுங்க... உடம்பு குறையும்’னு சொல்லிக் கேட்டப்போ அதிர்ந்து போயிட்டேன். ‘இதையெல்லாம் நம்பாதே! ஹார்ட் அட்டாக் வந்துடும்’னு நண்பர்கள் கூட பயமுறுத்தினாங்க. ஆனா, குகையில வாழ்ந்த ஆதி மனுஷன் நிறைய மாமிசமும், சில வகை பழங்களும்தான் உணவா சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கான். இதுல, கொழுப்பும், புரதமும் நிறைஞ்சு இருந்துச்சு.

அதனால, எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா இருந்தான். ஆனா, எல்லா வசதிகள் இருந்தும் நவீன வாழ்வில் ஏகப்பட்ட நோய்கள்... காரணம், ஆரோக்கிய உணவை விட்டு விலகிட்டதுதான். பேலியோவோட இந்த கான்செப்ட் எனக்கு நியாயமா பட்டுச்சு. அதனாலதான் துணிஞ்சேன்!’’ என்கிறார் ஷங்கர்.

இந்த வித்தியாச டயட்டைப் பொறுத்தவரை கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டைதான் பிரதானம். காலை உணவாக நூறு பாதாம் கொட்டைகளைப் பரிந்துரைக்கிறார்கள். பின்பு பால் - சர்க்கரைக்கு பதில் வெண்ணெய் கலந்த டீ அல்லது காபி.

மதியம் நான்கு முட்டை. அதோடு உப்பு, தக்காளி, வெங்காயம் சேர்க்கலாம். மாலையில், ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ பேலியோ காய்கறிகள். (மண்ணுக்குள் விளையும் கிழங்குகள் மற்றும் பீன்ஸ் தவிர்த்து மற்ற காய்கறிகள் அனைத்தும் இதில் அடங்கும்.) கீரை வகைகளையும் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

பருப்பு, பயிறு வகைகள், தானியங்கள் அறவே சேர்க்கக் கூடாது. இரவில், சோறு, குழம்பெல்லாம் இல்லாமல் இறைச்சியை மட்டுமே நெய்யில் வறுத்தோ கிரில் செய்தோ ஃபுல் கட்டு கட்டலாம். இவை அனைத்தையும் வீட்டில் செய்துதான் சாப்பிட வேண்டும்... ரீஃபைண்ட் ஆயில்களைத் தவிர்த்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது இவர்களின் கண்டிஷன். இவ்வளவு கொழுப்பும் சாப்பிட்டால் வெயிட் குறையுமாம். இதற்கும் அறிவியல் ரீதியாக விளக்கம் வைத்திருக்கிறார் ஷங்கர்...

‘‘பொதுவா, நம்ம உடல் இயக்கத்துக்கு ரெண்டு வித எனர்ஜி தேவை. ஒண்ணு, குளுக்கோஸ். அடுத்து, கொழுப்பு! குளுக்கோஸ்னு சொல்றப்போ அதிக கார்போ ஹைட்ரேட் இருக்குற உணவுகளான அரிசி, தானியங்கள், பேக்கரி அயிட்டங்கள், ஜங்க் புட், இனிப்புகள்னு எல்லாம் அடங்கும். உடலுக்கு இந்த உணவுகள் கிடைக்காதப்போ அது ஏற்கனவே உடம்பில் இருக்குற கொழுப்பில் இருந்து எனர்ஜி எடுத்துக்கும். இதனாலதான் பேலியோ டயட்ல உடம்பு குறையுது.

 கார்போஹைட்ரேட்டும் குளுக்கோஸும் இருக்குற உணவுகள் பசியைத் தூண்டி நிறைய சாப்பிட வைக்கும். அதனால்தான் உடம்பு போடுது; சுகர், பிரஷர் வருது. ஆனா, கொழுப்பு உள்ள உணவுகள் இப்படியில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே ‘போதும்’னு தோணும்.

ஆக்சுவலா இது சர்க்கரை நோய்க்காரங்களுக்காக ஆரம்பிச்ச டயட். இப்ப எல்லாருக்கும் பயன்படுது. நம்ம உடம்புல இருக்குற கார்போஹைட்ரேட்டை கொழுப்பா மாத்தி சேமிச்சு வைக்கிறதுதான் இன்சுலினோட வேலை. இந்த டயட்ல, இன்சுலினுக்கு வேலையே இருக்காது. காரணம், இறைச்சியிலோ, முட்டையிலோ சர்க்கரை அறவே இல்ல! கொழுப்பை எடுத்துக்கிறதால மாரடைப்பு வராதானு கேட்பீங்க.

நிச்சயம் வராது. காரணம், இந்த டயட்ல இருக்கறதெல்லாம் நன்மை செய்யும் கொழுப்புகள்தான். தேவையில்லாத கெட்ட கொழுப்பு சேராது. சேர்கிற நல்ல கொழுப்பும் எனர்ஜிக்கு யூஸாகிடும். இருந்தும், இந்த டயட்டை கடைப்பிடிக்கிறவங்ககிட்ட ‘உடற்பயிற்சி அவசியம்’னு வலியுறுத்துறோம்.

அப்புறம், வைட்டமின் `டி’க்காக குறிப்பிட்ட டைம் வெயில்ல உடல் படுற மாதிரி நிற்கச் சொல்றோம். தினமும் மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்றோம். இதெல்லாம் நோய்களை பக்கத்துல அண்ட விடாது. இருந்தும், மருத்துவ ஆலோசனையோடு இந்த டயட்டை பின்பற்றுவதே நல்லது!’’ என்கிறார் ஷங்கர் ஷார்ப்பாக.

மாமிசத்தை மையப்படுத்தியே இருக்கும் இந்த பேலியோ டயட்டை நம் ஊருக்கு ஏற்ப கொஞ்சம் பட்டி பார்த்து ‘சைவ பேலியோ’வை உருவாக்கியிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். இதன் மூலம் எடை குறைத்தவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் என்.சொக்கன்.

‘‘கடந்த அஞ்சு மாசமாதான் இந்த டயட்டை எடுத்திட்டு இருக்கேன். இப்போ, பதினெட்டு கிலோ குறைச்சிருக்கேன். சைவ பேலியோவைப் பொறுத்தவரை இறைச்சி - முட்டைக்கு பதில், பனீர் சேர்க்கணும். இந்த டயட் முன்பைவிட என்னை சுறுசுறுப்பா வச்சிருக்கு. இது கொஞ்சம் காஸ்ட்லி உணவுமுறைதான். ஆனா, நோய்க்கு செலவழிக்கிறதுக்குப் பதில் இப்படி ஆரோக்கிய உணவை எடுத்துக்கலாமே!’’ என்கிறார் அவர் வேண்டுகோளாக!

ஆனால், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், ‘`இது உடம்பைப் பாதிக்கும் உணவு முறை’’ என எச்சரிக்கிறார். ``நம்ம லைஃப்ஸ்டைல் வேற. பேலியோவை உருவாக்கின அமெரிக்கர்களோட லைஃப்ஸ்டைல் வேற. நம்ம உடம்புக்கு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால்-தயிர்னு அஞ்சு வகையான உணவுகள் தேவை. இதையெல்லாம் சரிவிகிதத்துல எடுத்தாலே நோயில்லாம வாழலாம்.

கொழுப்பில் இருந்து சக்தியை எடுத்துக்கணும்னா நம்ம உடம்பில் கீடோன் என்கிற வேதிப்பொருள் அதிகமா சுரக்கணும். அதைத் தூண்டுறதுதான் இந்த உணவு முறையோட முக்கிய வேலையா இருக்கு. இது அதிகமாகும் பட்சத்துல கீடோன் சார்ந்த பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கு. அதனால, பேலியோ டயட் பாதிப்பு நிறைஞ்சதே!’’ என்கிறார் அவர் முடிவாக!

மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் மாதவன், பேலியோ டயட்டை வரவேற்கவே செய்கிறார். ஆனால், நவீன காலத்துக்கு ஏற்றாற்போல் அதனை மாற்றி அமைக்க வேண்டியது கட்டாயம் என வலியுறுத்துகிறார். ``ஆதி மனுஷனோட இந்த டயட் நல்லதுதான். ஆனா, நாம ஆதி மனுஷன் இல்லையே. அந்தக் கால மனுஷனுக்கு இறைச்சி, பழங்கள் தவிர்த்து எதுவும் கிடைக்கலை.

அவன் ஓடியாடி வேட்டையாடினான். அதனால, ஆரோக்கியமா திரிஞ்சான். நமக்கு அவ்வளவு உடல் உழைப்பு இல்ல. அந்தக் கால மனுஷனுக்கு இறைச்சி, பழங்கள் தவிர்த்து எதுவும் கிடைக்கலை. ஆனா, அரிசி, கோதுமை, பால் பருப்பு வகைகள்னு எல்லாமே நமக்குக் கிடைக்குது. நாம அதை சரி விகிதத்தில் எடுத்துக்கணும்.

இல்லைன்னா, கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நோய்கள் தொற்றும். அதே மாதிரி உடலுக்கு கார்போஹைரேட்டும் தேவை. அதுக்கு, கேழ்வரகு மாதிரியான ஈஸியா செரிக்கிற தானியங்களைச் சாப்பிடணும்.

அப்புறம், மாரடைப்பு கெட்ட கொழுப்பு சேர்றதாலதான் ஏற்படுது. அதனால, நல்ல கொழுப்புள்ள உணவுகளான பாதாம், முந்திரி மாதிரியான அயிட்டங்களை எடுத்துக்கலாம். ஆனா, இறைச்சி எடுத்துக்குறதெல்லாம் ஓவர். அளவுக்கு மிஞ்சினா எதுவும் நஞ்சுதான். ஆதிகால மனுஷன்ட்ட இருந்த நல்ல விஷயத்தையும், நம்மட்ட இப்ப இருக்கிற நல்ல விஷயத்தையும் சேர்த்து ஒரு உணவுமுறை உருவாக்கினா அந்த பேலியோ பெஸ்ட்டா இருக்கும்!’’ என்கிறார் அவர் உறுதியாக!

நம்ம உடம்புக்கு தானியங்கள், பருப்பு  வகைகள், காய்கறிகள், பழங்கள், பால்-தயிர்னு அஞ்சு வகையான உணவுகள் தேவை.  இதையெல்லாம் சரிவிகிதத்துல எடுத்தாலே நோயில்லாம வாழலாம்!

- பேராச்சி கண்ணன்